என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.
    • மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

    இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவியது. ஆனால், எந்த கட்சியில் யார் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்கிற கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.

    அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், பார்வர்ட் ப்ளாக் கட்சிகள், தேமுதிக ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.

    பாஜக கூட்டணியில் தமாகா, பாமக, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்தன.

    ஆனால், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைவதற்கான முடிவு எடுப்பதில் இழுப்பறியாக இருந்தது.

    தி.மு.க. தவிர அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தனித் தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன. ஆனால், சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த கட்சியின் தலைவர் சரத்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தனது கட்சியை கடந்த மார்ச் 12ம் தேதி திடீரென பாஜகவுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து, பாஜக வேட்பாளராக விருதுநகர் தொகுதியானது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர் போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் ராதிகா சரத்குமார் தோல்வியடைந்தார்.

    இதேபோல், 2024 மக்களவை தேர்தலுக்கான கூட்டணியில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்தது.

    இந்த தேர்தலில் போட்டியிட தென் சென்னை, கோவை ஆகிய தொகுதிகளை கமல் கேட்டதாகவும் அதற்கு திமுக மறுத்ததாகவும் கூறப்பட்டது.

    ஆனால், அதற்கு பதிலாக மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

    இதற்கு மக்கள் நீதி மய்யம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தேர்தலில் பரப்புரை மேற்கொண்டது.

    கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார்.

    இறுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

    • வள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இணைக்கும் கண்ணாடி இழை பாலம் இன்று திறப்பு.
    • கல்வெட்டினையும் - அலங்கார வளைவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்நிலையில், "வள்ளுவம் வலியுறுத்தும் சமத்துவத்தை அடைவதில் உறுதியாக இருக்கிறது தமிழ்நாடு அரசு" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வான்புகழ் வள்ளுவருக்கு சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டில், இச்சிலைக்கு 'பேரறிவுச் சிலை' - #StatueofWisdom என்று பெயர்ச்சூட்டி, இதற்கான கல்வெட்டினையும் - அலங்கார வளைவையும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் வகையில் ரூ 37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தினையும் நம் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.

    நாமும், அமைச்சர் பெருமக்களும், தமிழ் ஆர்வலர்களும் உணர்ச்சிப்பெருக்குடன் கலந்துகொண்ட வரலாற்று நிகழ்வு இது!

    ஆழிப்பேரலை தாக்குதலிலும் நிலை குலையாமல் இருந்த இச்சிலையின் உறுதி போல், வள்ளுவம் வலியுறுத்தும் சமத்துவத்தை அடைவதிலும் உறுதியாக இருக்கிறது தமிழ்நாடு அரசு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விபத்து தொடர்பான விசாரணையில், நட்டுகளில் சுத்தியலால் அடித்த தடங்கள் காணப்படுவதாக கூறப்பட்டது.
    • சதிச் செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் கூடுதலாக சேர்த்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு கடந்த அக்டோபர் மாதம் 11-ந்தேதி இரவு 8.30 மணியளவில் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 13 பெட்டிகள் கவிழ்ந்தன. அதில் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள தண்டவாளத்தில் நட்டுகள் கழன்று கிடந்தன. ரெயில் தண்டவாளங்களை இணைக்கும் 'டி' வடிவ கம்பி இணைப்பு தளர்வாகவும், சில இடங்களில் இணைப்பு இடம் மாறி இருந்தாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நட்டுகளில் சுத்தியலால் அடித்த தடங்கள் காணப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். மேலும், ரெயில்வே போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படைகளை அமைத்தும் விசாரணை நடத்தினார்கள். விபத்தின்போது பணியில் இருந்த பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில், தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரி அருகே 6 நட்டுகளும் கழற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரெயில் லூப் பாதையில் சென்று விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

    பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில், விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ரெயில் விபத்து குறித்து, பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரெயில் பாதுகாவலர், பயணச்சீட்டு பரிசோதகர், ஏ.சி. பெட்டி பணியாளர்கள், அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 13 பிரிவுகளை சேர்ந்த 40 ரெயில்வே அலுவலர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை சார்பில் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், ரெயில் தடங்களில் இருந்த போல்ட்டுகள் மற்றும் நட்டுகள் கழட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இது சதிச் செயல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்ற பிரிவில் இந்திய ரெயில்வே சட்டத்தின் 150வது பிரிவை (ரெயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயற்சித்தல்) இவ்வழக்கில் ரெயில்வே போலீசார் கூடுதலாக சேர்த்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
    • இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்கியது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஒட்டி ஜனவரி 10ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

    • மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை.
    • நாளை இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகிறது.

    புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

    அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலை நாளை இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

    மெரினா, எலியட்ஸ் கடற்கரை சாலைகளில் போக்குவரத்துக்கு தடை. முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.

    நாளை இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகிறது.

    கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வருவோருக்கான வாகன நிறுத்தங்களுக்கான இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது.
    • தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்தியாவின் 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பின்னர், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி, நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    தொடர்ந்து, ஏப்ரல் 20ம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

    மூன்றாவது முறையாக வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.

    • டி.டி.எஃப். வாசன் தனது கையில் பாம்பு ஒன்றுடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
    • திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் கடையில், வனத்துறையினர் சோதனை செய்தனர்.

    வீடியோ வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் டி.டி.எஃப். வாசன். பைக் ரைடிங் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பிரபலமான இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். சமயங்களில் சிறைவாசம் வரை சென்று வந்துள்ள டி.டி.எஃப். வாசன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    புதிய வீடியோவில் காரில் பயணம் செய்த டி.டி.எஃப். வாசன் தனது கையில் பாம்பு ஒன்றுடன் விளையாடுகிறார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து வனத்துறை விசாரணை செய்வதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், தான் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்றிருந்த பாம்பு வளர்க்க முறையாக உரிமம் பெற்று இருப்பதாகவும் திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் கடையில் பாம்புக்கு கூண்டு வாங்கியதாகவும், பாம்பு விற்கப்படுவதாகவும் டி.டி.எப். வாசன் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் கடையில், வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்த அரியவகை கிளி மற்றும் ஆமையை வனத்துறையினர் கைப்பற்றினர்

    • எது பாசிசம் தெரியுமா மதிப்புகுறிய விஜய் அவர்களே?
    • பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை.

    திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி த.வெ.க தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எது பாசிசம் தெரியுமா மதிப்புகுறிய விஜய் அவர்களே!?

    தாங்கள் ஆளுனரிடம் கொடுத்த கடிதத்தில் உங்கள் பெயர் விஜய் என்று தான் உள்ளது!!

    ஆனால் கமலாலயத்தின் ஒரு பிரிவாக இயங்கும் தமிழ்நாட்டின் ஆளுனர் மாளிகையின் செய்தி குறிப்பில் உங்கள் பெயர் ஜோசப் விஜய் என்று உள்ளது!!

    இது பாசிசம்!!

    பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத உங்களுக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை!!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்த நிலையில் தற்போது அண்ணாமலையும் சந்தித்துள்ளார்.
    • மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முறையிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார்.

    பல்கலை மாணவி விவகாரம், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இன்று மதியம் தவெக தலைவர் விஜய், ஆளுநரை சந்தித்தார்.

    இந்த நிலையில் தற்போது அண்ணாமலையும் ஆளுநரை சந்தித்து பேசி வருகிறார்.

    ஆளுநருடனான சந்திப்பின்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து முறையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.
    • இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

    இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர்.

    ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வதுதான் ஜனநாயகமா?

    இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

    • தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    • சுமார் 7 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குழு விசாரணை மேற்கொண்டது.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

    மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அண்ணா பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பல்கலைகழக நிர்வாகம் மற்றும் மாணவிகளிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் தேசிய மகளிர் ஆணைய விசாரணை நிறைவு பெற்றது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை முதல் சுமார் 7 மணி நேரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குழு விசாரணை மேற்கொண்டது.

    அப்போது,, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி விவரத்துடன் எப்ஐஆர் வெளியானது குறித்தும் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

    மம்தா குமாரி தலைமையிலான தேசிய மகளிர் ஆணையக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கிண்டியில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்துப் பேசியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

    • திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
    • கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகா னந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.

    வருகிற 1-ந் தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா, 30-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து, விழா 2 நாட்களாக மாற்றப்பட்டு 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருவள்ளுவர் சில வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    அதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி கடலில் படகு மூலம் திருவள்ளுவர் சிலையை அடைந்தார். அங்கு, திருவள்ளுவரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு, திருவள்ளுவர் சிலை அருகே Statue of wisdom தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதைதொடர்ந்து, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.

    பின்னர் அனைவரும், கண்ணாடி இழை பாலத்தின் மீது நடந்து சென்றனர்.

    திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×