என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வள்ளுவம் வலியுறுத்தும் சமத்துவத்தை அடைவதில் உறுதியாக இருக்கிறது தமிழ்நாடு அரசு- உதயநிதி ஸ்டாலின்
- வள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இணைக்கும் கண்ணாடி இழை பாலம் இன்று திறப்பு.
- கல்வெட்டினையும் - அலங்கார வளைவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு இன்று வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில், "வள்ளுவம் வலியுறுத்தும் சமத்துவத்தை அடைவதில் உறுதியாக இருக்கிறது தமிழ்நாடு அரசு" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வான்புகழ் வள்ளுவருக்கு சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டில், இச்சிலைக்கு 'பேரறிவுச் சிலை' - #StatueofWisdom என்று பெயர்ச்சூட்டி, இதற்கான கல்வெட்டினையும் - அலங்கார வளைவையும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையையும் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறையையும் இணைக்கும் வகையில் ரூ 37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தினையும் நம் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.
நாமும், அமைச்சர் பெருமக்களும், தமிழ் ஆர்வலர்களும் உணர்ச்சிப்பெருக்குடன் கலந்துகொண்ட வரலாற்று நிகழ்வு இது!
ஆழிப்பேரலை தாக்குதலிலும் நிலை குலையாமல் இருந்த இச்சிலையின் உறுதி போல், வள்ளுவம் வலியுறுத்தும் சமத்துவத்தை அடைவதிலும் உறுதியாக இருக்கிறது தமிழ்நாடு அரசு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






