search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 ரீவைண்ட்"

    • ஆர்சிபி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • சொந்த அணியின் ரசிகர்களால் ஹர்திக் பாண்ட்யா கேலிக்கு உள்ளானார்.

    ஐபிஎல் தொடர் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிரபலமான கிரிக்கெட் விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் எப்போது பல சுவாரஸ்யமான மற்றும் மிரட்டலான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் 2024-ம் ஆண்டிலும் சில சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் சிறப்பான சம்பவங்கள் இந்த செய்தியின் மூலம் காணலாம்.

    ஐ.பி.எலில் ரசிகர்கள் அதிகம் கொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய கேப்டன்களின் மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

    ஐபிஎல் தொடரில் மிரட்டல் அணியாக பார்க்கபடும் அணி மும்பை இந்தியன்ஸ். அந்த 2024-ம் ஆண்டில் கேப்டனான ரோகித் சர்மாவை அந்த அணியின் நிர்வாகம் நீக்கி ஹர்திக் பாண்ட்யாவை நியமித்தனர். இது பெரிய அளவில் வெடித்தது. இதனால் சொந்த அணியின் ரசிகர்களால் ஹர்திக் பாண்ட்யா கேலிக்கு உள்ளானார். இதனையடுத்து டி20 உலககோப்பை இறுதிபோட்டியில் சிறப்பாக விளையாடியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதோடு கேலி செய்தவர்களை தனக்கு புகழ் பாட வைத்தார்.

    2024-க்கு முன்பு ஐ.பி.எல். வரலாற்றில் ஆர்.சி.பி. அணி அடித்திருந்த அதிகபட்ச ரன்களான 263 ரன்களை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆர்.சி.பி. அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து ஆர்.சி.பி. அணியின் சாதனையை முறியடித்தது.

    ஐபிஎல் 2024-ன் 57-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. எல்எஸ்ஜி பிளேஆஃப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் சன்ரைசர்ஸ்-க்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.

    ஆனால் போட்டியின் முடிவு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது, ஏனெனில் ஐதராபாத் 62 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே. எல் ராகுல் மீது கோபமடைந்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடமும் பேசிய வீடியோ வைரலானது. இதனால், கிரிக்கெட் வல்லுநர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் வரம்பிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

    ஒரே பெயர் குழப்பத்தால் தவறுதலாக ரூ.20 லட்சத்துக்கு ஷஷாங் சிங் என்ற வீரரை ஏலத்தில் எடுத்ததாக பஞ்சாப் அணி நிர்வாகம் அறிவித்தது.

    இதற்கு பதில் தரும் விதமாக குஜராத் அணிக்கு எதிராக எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அவுட் ஆன நேரத்தில் பஞ்சாப் அணிக்காக நிதானத்துடன் ஆடிய ஷஷாங் சிங், 61 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக்கான், உள்ளிட்ட 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா ஐசிசிக்கு தலைவர் ஆனது சமூகவலைத்தளங்களில் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ஐபிஎல் 2024 பிளேஆஃப்களை அதிசயமாக அடைந்தது. ஆர்சிபி தனது முதல் எட்டு ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று முதல் அணியாக மாறியது. அதனை தொடர்ந்து ஆறு வெற்றிகளைப் பெற்றது. இது ஐபிஎல் தொடரில் ஆர்சிபியின் இரண்டாவது நீண்ட தொடர் வெற்றியாகும்.

    • இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் 2024-ம் ஆண்டில் உயிரிழந்தார்.
    • அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.

    நியூசிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக விளங்கிய மார்டின் குரோ, நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். 

    மார்டின் குரோ 1992 உலக கோப்பை போட்டிகளில் மிக சிறப்பாக தன் அணியை வழிநடத்தி, தன் அணி அரையிறுதி போட்டிக்கு இடம்பெற செய்தார். அவரின் மரணத்துக்கு உலகில் உள்ள பல விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆன கிரஹாம் தோர்ப் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.



    இங்கிலாந்தில் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் ஜோஸ் பாகர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


    அதிகாலையில் ஜோஸ் பாகர் தூக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாகருக்கு என்ன நடந்தது என்ற தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உலகின் நட்சத்திர கூட்டைப்பந்து விளையாட்டு வீரராக வளம்வந்தவர் லாக்கர்ஸ் அணியின் கோபி பிரையன்ட் இவர் ஞாயிற்றுக்கிழமை தனது மகள் ஜியானாவும் கலிஃபோர்னியாவிற்கு ஹெலிகாப்டரில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பிரைன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா பிரைன்ட் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.


    இந்தோனிசியாவில் 2 எஃப்.எல்.ஒ. பாண்டுங் மற்றும் எஃப்.பி.ஐ. சுபாங் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்தாட்ட போட்டியில் திடிரென மின்னல் தாக்கி 35 வயதான செப்டைன் ரஹர்ஜா என்பவர் உயிரிழந்தது.


    இளம் ரக்பி வீரரான கோகில சம்மந்தபெரும (28) கோர விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

    அண்மையில் ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ உயிரிழந்தார்.


    இது போன்ற மரணங்கள் அந்தந்த விளையாட்டு ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர்.
    • ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது.

    2024-ம் ஆண்டு முழுவதும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களால் ஏற்பட்ட சில டாப் உணர்ச்சிமிக்க தருணங்களைப் பற்றி பார்ப்போம்.

    2024-ம் ஆண்டு இந்தியாவுக்கு ஜாக்பாட் என்று சொல்லலாம், அந்தளவிற்கு அதிகமான பதக்கங்களையும், சாம்பியன் பட்டங்களையும் விளையாட்டு வீரர்கள் வென்றுள்ளனர். நெதர்லாந்து நாட்டில் நடந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான டிங் லிரனை வீழ்த்தி பெருமை சேர்த்தார். 

    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் ஐன் நகரில் ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 வயதான ஷர்வானிகா என்ற சிறுமி, யு-8 கிளாசிக்கல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் யு-8 ரேபிட் பிரவு மற்றும் பிளிட்ஸ் பிரிவில் தங்கம் பதக்கமும் பெற்றிருந்தார்.

    இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல், மெஹுலி கோஷ் ஜோடி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபில் 3 பொசிஷன் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அகில் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்று சாதித்தார்.

    குரோஷியா நாட்டில் நடைபெற்ற ஜாக்ரெப்பில் ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் அமன் ஷெராவத் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்தார். மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் அஸ்வின் புதிய சாதனை படைத்திருந்தார். ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தாய்லாந்தை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஹங்கேரியில் நடந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஆடவர் மற்றும் மகளின் அணி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி அதிலும் சாம்பியன் பட்டம் பெற்றார்.

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்று சாதித்தார்.

    பாரிஸில் நடைபெற்ற 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வீரர்கள் 6 பதக்கங்களை வென்றிருந்தனர். இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அதன் பின்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கல பதக்கம் வென்று சாதித்தனர். அதே நேரத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    57 கிலோ மல்யுத்தத்தில் அமன் செஹ்ராவத் போட்டியிட்டு வெண்கலம் வென்றார். 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் சுப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற ஸ்வப்னில் குசலே வெண்கல பதக்கம் வென்று சாதித்தார். இது அவரின் அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும்.

    அதே போல் பாரீசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 29 பதக்கங்களை வென்றது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேல்(உயரம் தாண்டுதல்), பாட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோர் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

    இதில் தொடர்சியாக பாராலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை மாரியப்பன் தங்கவேல் பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான காசிமா 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதித்திருந்தார்.

    பி.சி.சி.ஐ சார்பில் பிளேயர் ஆஃப் தி இயர் விருது நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

    இந்தியாவில் விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருதை முகமது ஷமி (கிரிக்கெட்), கிருஷ்ணன் பகதூர் பதக் (ஹாக்கி), பவன் குமார் (கபடி), ரித்து நெகி (கபடி), நஸ் ரீன் (கோ-கோ), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கி சுடுதல்), ஈஷா சிங் (துப்பாக்கி சுடுதல்), உள்ளிட்ட 27 பேருக்கு சிடைத்தது.

    மேலும் துரோணாச்சார்யா விருதை லலித்குமார் (மல்யுத்தம்), ஆர்.பி.ரமேஷ் (செஸ்), மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்), சிவேந்திர சிங் (ஹாக்கி), கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகம்ப்) ஆகியோருக்கு கிடைத்தது. துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் ஜஸ்கிரத் சிங் கிரேவால் (கோல்ப்), பாஸ்கரன் (கபடி), ஜெயந்த குமார் புஷிலால் (டேபிள் டென்னிஸ்) ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதை மஞ்சுஷா கன்வர் (பாட்மிண்டன்), வினீத் குமார் சர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    2019-ம் ஆண்டிலிருந்து 2023-ம் ஆண்டுவரை டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை முகமது ஷமி, அஸ்வின், பும்ரா, கில், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பெற்றுக்கொண்டனர்.

    கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு விளையாட்டு துறையில் அவர் அளித்த பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக தெலங்கானா அரசு டி.எஸ்.பி. பொறுப்பு வழங்கியது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்.சி.பி. அணி டபள்யூ.பி.எல். கோப்பை தட்டி சென்றனர்.

     பா.ஜ.க. எம்.பி-யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அப்போதைய தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் பஜ்ரங் புனியா ஆகியோர் போராட்டம் நடத்தியது, 100 கிராம் எடையை காரணம் கூறி பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது, இந்தியாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு வினேஷ் போகத் தனது ஓய்வை அறிவித்தார். 

    மத்திய அரசு சார்பில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருக்கான பெயர் பட்டியல் அண்மையில் வெளியானது இதில் பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டு முறை வெண்கலம் வென்ற மனு பாக்கர் பெயர் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ஆடவருக்கான யு(Under)-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. 

    • 2024-ம் ஆண்டில் மொத்தம் 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
    • 150 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்ட ஆண்டாக 2024-ம் ஆண்டு அமைந்துள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சுவாரசியமான போட்டிகளை 2024-ம் ஆண்டில் கொடுத்திருந்தது. குறிப்பாக இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

    2024-ம் ஆண்டில் மொத்தம் 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 150 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்ட ஆண்டாக 2024-ம் ஆண்டு அமைந்துள்ளது.

    இதில் இங்கிலாந்து 9 வெற்றிகளுடன் கடந்த ஆண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணியாக மாறியதோடு, அந்த அணி கடந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 823 ரன்கள் பெற்று, 2024-ல் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ரன்கள் குவித்த அணியாகவும் சாதனை செய்தது.

    இங்கிலாந்தினை அடுத்து அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்தியாக 8 வெற்றிகளுடன் நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் 6 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.

    இதில் தென் ஆப்ரிக்கா ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதியான முதல் அணியாகவும் உள்ளது.

    வங்கதேச அணி 2024-ம் ஆண்டிற்கு சிறந்த தருணமாக மாறியது. வங்கதேச வீரர்கள் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியினைப் பதிவு செய்ததோடு, பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியினையும் பதிவு செய்தது.

    இதேபோல ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்தியாவில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கையில் முதல் முறையாக இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

    2024-ம் ஆண்டு, டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏமாற்றமாக அமைந்திருந்தது. அவ்வணிகளினால் கடந்த ஆண்டில் எந்த டெஸ்ட் வெற்றிகளையும் பதிவு செய்ய முடியவில்லை.

    மறுமுனையில் 2024-ல் இந்திய, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைவான இன்னிங்ஸ் ரன்களை பதிவு செய்துள்ளது. இதில் இலங்கை தென் ஆப்பிரிக்காவுடன் 42 ரன்களையும் இந்தியா நியூசிலாந்துடன் 46 ரன்களையும் தென் ஆப்பிரிக்கா இந்தியாவுடன் 55 ரன்களையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    2024-ம் ஆண்டில் பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா (71) உள்ளார். பேட்டிங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் (1556 ரன்கள்) உள்ளார். அதிக சராசரியில் (74.92) இலங்கையின் இளம் நட்சத்திரமான கமிந்து மெண்டிஸ் உள்ளார்.

    • சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.
    • பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.

    இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றது. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

    இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதில், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

    அவ்வாறு சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எப்ஐஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெற தாமதம் ஏற்பட்டதை அடுத்து, முதல் நாளில் தகுதிச்சுற்று போட்டிகள் மட்டுமே நடைபெற்றன.

    இரண்டாவது நாளில் முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்த கார் பந்தயத்தில் ஃபார்முலா 4 கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.

    இந்த பார்முலா-4 கார் பந்தயத்தை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் கண்டு களித்தனர். இந்திய அணியின் முன்னள் கேப்டன் சவுரவ் கங்குலி, நடிகை த்ரிஷா, யுவன்சங்கர் ராஜா, நடிகர்கள் நாக சைதன்யா, பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் உள்பட பலரும் வருகை தந்து பார்வையிட்டனர்.

    கார் பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    • ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
    • 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக தயாரிக்கப்பட்ட ரூ.100 மதிப்பிலான நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

    மறைந்த தலைவர் கலைஞர் பெயரில், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    தொடர்ந்து, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.

    இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18ம் தேதி மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.

    அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

    • பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
    • விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகை ரசித்தார்.

    இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதற்கிடையே, தேர்தல் முடிவுற்ற நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 2 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார்.

    இதற்காக, கடந்த மே மாதம் 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு, படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.

    பின்னர், மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.

    இதைதொடர்ந்து, பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று தனது தியானத்தை தொடங்கி இரவு வரை ஈடுபட்டனார். பிறகு, அன்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.

    பிறகு மே 31ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.

    பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு, கையில்

    கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார்.

    மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார்.

    பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

    சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

    பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார்.

    விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார்.

    இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.

    அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. 

    இந்திய அளவில் சக்தி வாய்ந்த தலைவராகவும், சர்வதேச அளவில் மதிப்புமிக்கவராகவும் திகழ்ந்து வரும் பிரதமர் மோடி இங்கு தியானம் செய்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபம் சர்வதேச அளவிலான கவனத்தை பெற்றது.

    • வரலாறு படைக்கும் திராவிட மாடல் அரசு எனும் தலைப்பில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
    • இந்த வீடியோவில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் பல நிகழ்வுகள் உள்ளன.

    2024 ஆம் ஆண்டில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் அடங்கிய வீடியோ தொகுப்பை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    வரலாறு படைக்கும் திராவிட மாடல் அரசு எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், மகளிர் உரிமைத்தொகை திட்டம், சமத்துவ பொங்கல் விழா, கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், மக்களை தேடி மருத்துவம், காலை உணவுத்திட்டம், கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா உள்ளிட்ட திமுக அரசின் பல நிகழ்வுகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

    • 2003-ல் இருந்து பரிந்துரை பெயரில் இருவரில் ஒருவர் பெயராவது இடம் பிடித்து வந்தது.
    • முதன்முறையாக இருவருடைய பெயரும் பரிந்துரையில் இடம் பெறவில்லை.

    கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.

    2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.

    2003-ம் ஆண்டில் இருந்து பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.

    மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார். ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

    மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்ளனர்.

    இருவர் பெயர் இல்லாத நிலையில் ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர், இங்கிலிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியில் விளையாடும் ரோட்ரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக ரோட்ரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு வழங்கப்பட்டது.

    மேலும், 2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

    இதற்கிடையே பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் விழாவைப் புறக்கணித்தது.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
    • தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் களமிறங்கினார்.

    18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் ஜூன் மாதம் வரையில் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில், முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தேர்தலில் போட்டியிட்டு மக்களவை தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கின. மேலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பல்வேறு திருப்பங்களும் நடைபெற்றது.

    அந்த சமயம் யாரும் எதிர்பாராத நிலையில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்தார்.

    இதுகுறித்து கூறிய தமிழிசை, "தீவிரமான மக்கள் பணியை நேரடியாக செய்யவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆளுநராக இருந்தபோது மக்களுக்கான ஆளுநராகவே இருந்திருக்கிறேன். ஆளுநர் பதவி காலத்தில் அரசியல் அனுவபம் அதிகரித்திருக்கிறது. இந்த பதவி என்னுடைய அரசியல் பணியை தடுக்கவில்லை" என்று கூறினார்.

    தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலில் தமிழிசை போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார்.

    திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார்.

    ஆனால், தமிழிசை சவுந்தரராஜன் தோல்வியடைந்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    • டாப் 10 நிறுவனங்களில், முதலாவதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது.
    • டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது.

    சென்னையில் 2024 ஜனவரி மாதம் 7,8 ஆகிய தேதிகளில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசு சார்பில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்தன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

    மாநாட்டின் முதல் நாளில் தமிழகத்தில் முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்களில், முதலாவதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, 2வது நாளில் மிகப்பெரிய முதலீடாக டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.70,800 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம், 3800 வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உருவாகும் என கூறப்புடுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

    தொடர்ந்து, அதானி குழுமம் ரூ.24,500 கோடி முதலீடு- 4 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    மூன்றாவதாக சிபிசில் நிறுவனம் ரூ.17 ஆயிரம் கோடி முதலீடு- நாகப்பட்டினத்தில் 2400 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    அதானி குழுமம் ரூ.13,200 கோடி முதலீடு- 1000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    எல் அண்டு டி நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு- சென்னையில் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ராயல் என்ஃபீல்டு ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு- காஞ்சிபுரத்தில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    மைக்ரோசாப்ட் இந்தியா ரூ,2740 கோடி முதலீடு- சென்னையில் 167 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

     ஹிந்துஜா குழுமம் ரூ.2500 கோடி முதலீடு- செங்கல்பட்டு மாவட்டத்தில் 300 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    ஹைலி க்லோரி ஃபுட்வேர் நிறுவனம் ரூ.2302 முதலீடு- கள்ளக்குறிச்சியில் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    திருவள்ளூரில் ஸ்டெல்லண்டிஸ் குழுமம் ரூ.2000 கோடி முதலீடு செய்கிறது.

    இதன்மூலம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    • மே 31 அன்று பெங்களூரு விமானநிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.
    • மக்களவை தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

    2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    ஆனால் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்டபெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார். அந்த சமயத்தில் அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்தார்.

    இதுதொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், "எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. சட்ட ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாம் என் கவனத்திற்கு வந்தது. எனவே எங்கிருந்தாலும் நாடு திரும்பவேண்டும்" என்று கூறியிருந்தார்.

    பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.

    இதற்கிடையே மே மாதம் 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மே 31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார்.

    அதன்படி மே 31 அன்று பெங்களூரு விமானநிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வந்திறங்கியதும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் அவரை கைது செய்தனர்.

    இதனிடையே "எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை" என்று பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா கர்நாடக சட்டமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா முதற்கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இறுதி வாக்குகள் எண்ணப்படும் சமயத்தில் அவர் பின்னடைவை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

    இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் உள்ளடக்கிய 2,144 பக்கங்கள் அடங்கிய 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தனர்.

    அந்த குற்றப்பத்திரிகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி மீண்டும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதை நிரூபிக்கும் விதமாக அதில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக ரேவண்ணாவின் மனைவி பவானி மூலம் விடுதி ஒன்றும் பணியில் சேர்ந்த பெண் பின்னர் ரேவண்ணாவின் வீட்டில் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.

    பணியில் சேர்ந்த பெண்ணை 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. 2020 இல் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா அதை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த பெண், தான் இங்கு நடந்ததை வெளியே சொல்லப் போவதாகக் கூறியுள்ளார்.

    அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா, இதை நீ வெளியே சொன்னால் உனது கணவனை சிறையில் தள்ளுவேன், உனக்கு என்ன செய்தேனோ அதையே உனது மகளுக்கும் செய்வேன். எந்த வழக்காக இருந்தாலும் அதை எப்படி மூட வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு எம்.பி [பாராளுமன்ற உறுப்பினர்] என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு முறையும் அந்த பெண்ணை குறிப்பிட்ட உள்ளாடை [lingerie] அணியவைத்து தான் பலாத்காரம் செய்யும்போது சிரித்த மாதிரி இருக்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இந்த கொடூரங்களை அரங்கேற்றியுள்ளான். இதை வெளியில் சொன்னால் ஒவ்வொரு முறையும் தான் எடுத்த வீடியோ பதிவுகளை வெளியிட்டுவிட்டேன் என்று கூறி தொடர்ச்சியாக பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பிரஜ்வல் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து முதன்முதலில் தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்து இந்த கொடூரங்களை செய்துள்ளான் என்று அந்த நிகழ்ச்சியில் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ஒருவரின் வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

    வழக்கு விசாரணையின் இடையே ஜாமின் கோரி பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் விசாரணையில் தான் உள்ளது. 2025 ஆம் ஆண்டிலாவது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    ×