search icon
என் மலர்tooltip icon

    Recap 2023

    2023 ரீவைண்ட்: புயலை கிளப்பிய உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சு
    X

    2023 ரீவைண்ட்: புயலை கிளப்பிய உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த பேச்சு

    • சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்பது குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது.
    • சனாதன சர்ச்சைக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மோடி 6-ந்தேதி பேசினார்.

    பருவம் தவறி பெய்த மழை

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பிப்ரவரி 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காவிரிடெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர் சேதமடைந்தன.

    பிப்.5-ல் சேதங்களை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா மாவட்டங்களில் 2.17 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார். மறுநாள் தமிழக அரசு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு அறிவித்தது.

    பிளஸ்-2 மாணவியின் வரலாற்று சாதனை

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே.8-ல் வெளியானது. இதில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு-600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். மே.11-ந்தேதி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து திண்டுக்கல்லுக்கு நேரில் சென்று தங்கப் பேனா வழங்கினார்.

    அமைச்சரவை மாற்றம்

    பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் (மே.9) இருந்து விடுவிக்கப்பட்டார். தமிழக அமைச்சரவை மே.11-ல் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு துறை மாற்றப்பட்டார்.

    மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராகவும், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டனர். தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா புதிதாக பதவி ஏற்றார்.

    விச சாராயத்துக்கு 22 பேர் பலி

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மே.14-ல் விச சாராயம் குடித்த 10 பேர் பலியாகினர். அடுத்த 2 நாட்களில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. விச சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய 7 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கமும், சாராய வியாபாரி அமரன் கைதும் செய்யப்பட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மே.17-ல் விழுப்புரம் மாவட்டத்தில் விச சாராயம் சாப்பிட்ட 15 பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டது.

    தக்காளி, தங்கம் விலை உயர்வு

    இந்த ஆண்டில் அடிப்படை காய்கறியான தக்காளியும், மக்களின் பேராதரவு பெற்ற ஆபரணமான தங்கமும் வழக்கம்போல விலையேற்றத்துடன் காணப்பட்டு, மக்களை ஏக்கம் கொள்ளச் செய்தன. குறிப்பாக தக்காளி விலை ஜூன், ஜூலை மாதத்தில் கிலோ ரூ.200 என்ற அளவில் உச்சம் தொட்டு மக்களை வாட்டி வதைத்தது. இதனால் தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60 என்ற விலையில் தக்காளியை விற்பனை செய்ய ஆரம்பித்தது. செப்டம்பரில் இருந்து தக்காளி விலை சரிந்து காணப்பட்டது.

    விலை உச்சத்தில் இருந்தபோது கிலோ ரூ.20-க்கு விற்ற வியாபாரி ஒரு டீ குடித்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பிரபலம் ஆனார்கள். அதேபோல சென்னை தம்பதி ஒன்று, கர்நாடகாவில் இருந்து வந்த தக்காளிகளை கடத்தி விற்பனை செய்து லாபம் பார்த்ததாக கைதான சம்பவமும் அரங்கேறியது.

    தங்கம் விலை ஆண்டின் தொடக்கத்தில் 44 ஆயிரத்திற்கு கீழ் இருந்தது. பின்னர் அவ்வப்போது விலையேற்ற இரக்கமாக இருந்தது. அக்டோபரில் இஸ்ரேல் போர் மூண்ட பின்பு தங்கம் விலை சரசரவென்று உயர்ந்து 46 ஆயிரத்தை எட்டிப்பிடித்தது. உச்சபட்சமாக 47 ஆயிரத்தை தொட்டு புதிய வரலாறு படைத்தது.

    எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு

    புதிய ரக கோதுமை மற்றும் நெல் ரகங்களை அறிமுக செய்த இந்தியாவில் உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற செய்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன். இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் என அழைக்கப்பட்ட எம்.எஸ். சுவாமி நாதன் (வயது 98) செப்.28-ல் மரணம் அடைந்தார். தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் (செப்.2) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சனாதனத்தை ஒழிப்பது குறித்து அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியது. அவரது தலைக்கு அயோத்தி சாமியார் ரூ.10 கோடி பரிசு அறிவித்து அவரது உருவப்படததை கத்தியால் கிழித்து போராட்டம் நடத்தினார். 5-ந்தேதி தி.மு.க.வினர் இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சனாதன சர்ச்சைக்கு மத்திய மந்திரிகள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மோடி 6-ந்தேதி பேசினார்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்தது

    செப்.25ல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. பின்னர் அ.தி.மு.க. பாஜனதா கூட்டணி முறிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    பங்காரு அடிகளார் மரணம்

    மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் அக்.19-ல் மரணம் அடைந்தார். மறுநாள் அவரது உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. கருவறையில் பெண்களும் பூஜை செய்யலாம் என்ற மாற்றத்தை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார்.

    கவர்னர்களுக்கு கண்டனம்

    பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற கோர்ட்டுக்கு வரும் நிலையை உருவாக்குவதா என்று கவர்னர்களுக்கு (நவ.6) சுப்ரீம் கோர்ட்டு கண்டனம். தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

    இதேபோல் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கவர்னரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள அதேசமயம் 10 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நவ.16-ல் திருப்பி அனுப்பினார். நவ 18-ல் தமிழக சட்டசபையில் அந்த 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப் பட்டு உடனடியாக கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து மறுநாளே சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க தமிழக கவர்னர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வழக்கு நவ.20ல் விசாரணைக்கு வந்தது. அப்போது மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன், 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் என கவர்னருக்கு நீதிபதி சரமாரி கேள்விகேட்டது.

    சங்கரய்யா மறைந்தார்

    முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா 102 வயதில் (நவ.15) மரணம் அடைந்தார். மறுநாள் அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடந்தது.

    சுதந்திர போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், 4 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார்.

    1964-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி இரண்டாக பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உருவான போது அதில் முக்கிய பங்காற்றியவர். 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், ஆலய நுழைவு போராட்டங்களில் முக்கிய தலைவராக பங்கு பெற்றவர்.

    சங்கரய்யாவுக்கு, கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவித்தது. அந்த விருதுத்தொகை ரூ.10 லட்சத்தையும் கொரோனா நிதியாக தமிழக அரசுக்கே அவர் திருப்பி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரேமலதா பொதுசெயலாளர் ஆனார்

    விஜயகாந்த் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க. பொது செயலாளராக பிரேமலதா (டிச.14) தேர்வு செய்யப்பட்டார்.

    Next Story
    ×