என் மலர்
உள்ளூர் செய்திகள்
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
- ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு மார்கழி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, அங்காளம்மா! என்று பக்தி கோஷத்துடன அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இரவு 12.30 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு பூக்காளால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் அம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விழாவில் செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன.
- நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.
- காழ்ப்புணர்ச்சி, தனி நபர் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை:
பிரபல நகைச்சுவை நடிகர் சூரி சினிமா துறை மட்டுமின்றி உணவகம் உள்ளிட்ட தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது சொந்த ஊரான மதுரையில் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான உணவகங்கள் முக்கிய சந்திப்பு பகுதிகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ்லைன், திருநகர் மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் உணவகம் மீது வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார்.
அதில் நடிகர் சூரியின் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த 24.06.2022 அன்று தொடங்கப்பட்ட இந்த உணவகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
பொதுப்பணித் துறையினரால் இந்த உணவகம் செயல்பட 434 சதுரடி பரப்பு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உணவக நிர்வாகத்தினர் அருகில் அமைந்துள்ள செவிலியர் விடுதியில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக விதிமுறைகளை மீறி 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.
கழிவு நீர் தேங்கும் செப்டிக் டேங்குகளின் மேற்பரப்பில் அமர்ந்து காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகளை இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் அதிக அளவில் தொற்று நோயை உண்டாக்கும் பெருச்சாளிகள், கரப்பான் திரிகின்றன.
செவிலியர் விடுதிக்கு காற்றோட்டம், சூரிய ஒளி வரும் விதமாக அமைக்கப்பட்ட ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து இந்த உணவக நிர்வாகத்தினர் மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர்.
எனவே செவிலியர்கள் ஜன்னலை கூட திறக்க முடியாமல் எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர். அத்துடன் இந்த உணவகத்தின் அருகில்தான் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது.
இவ்வாறு கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் ஏற்படும் நோய் தொற்றின் தீவிரம் பற்றி தெரியாமலேயே தினமும் ஏராளமான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவர்கள் உடன் தங்கியிருப்பவர்கள் இங்கு உணவு வகைகளை வாங்குகிறார்கள்.
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணித் துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் உணவகத்தில் அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சூரிக்கு சொந்தமான உணவக நிர்வாகத்தினர் கூறுகையில், இந்த புகார் மனு காழ்ப்புணர்ச்சி, தனி நபர் தூண்டுதலால் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரிய அளவில் மாற்றமில்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,880-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,110-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
30-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
29-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
28-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
27-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
26-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
30-12-2024- ஒரு கிராம் ரூ. 100
29-12-2024- ஒரு கிராம் ரூ. 100
28-12-2024- ஒரு கிராம் ரூ. 100
27-12-2024- ஒரு கிராம் ரூ. 100
26-12-2024- ஒரு கிராம் ரூ. 100
- கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
- வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்.
கன்னியாகுமரி:
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-வது நாள் நிகழ்ச்சியில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தோரண வாயிலுக்கும் அடிக்கல் நாடுகிறார். திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பரிசு வழங்க உள்ளார். மேலும் வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்.
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
போராட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற இருந்த நிலையில் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
நா.த.க.வினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
- தமிழக அரசியல் சூழல், அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாகவும் பேச உள்ளேன்.
பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்திப்பதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லிக்கு புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
* இன்னும் 10 நாட்களில் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
* தமிழக அரசியல் சூழல், அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடர்பாகவும் பேச உள்ளேன் என்று அவர் கூறினார்.
- தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குழுவினர் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
- வன்கொடுமை நடைபெற்ற இடத்திலும் விசாரணை குழு நேரில் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குழுவினர் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது, பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், போஷ் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தி உள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் குறித்து விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளிடமும், பல்கலைக்கழக காவலாளிகள், விடுதி காப்பாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர், மாணவியின் ஆண் நண்பரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வன்கொடுமை நடைபெற்ற இடத்திலும் விசாரணை குழு நேரில் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் விசாரணை தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி நேற்று கூறியதாவது:- 'விசாரணை இன்னும் முடியவில்லை, செவ்வாய்க்கிழமையும் (இன்று) நடைபெறும். இந்த விசாரணைக்கு பிறகு, மத்திய அரசிடம் இறுதிக்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றார்.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆய்வறிக்கை விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கூறியுள்ளார்.
மேலும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டோம். குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட அரசு எப்படி அனுமதித்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- செம்மொழி பூங்காவில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது.
- வருகிற 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார்.
சென்னை:
சென்னை அண்ணா மேம்பாலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சூழ்ந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த கருணாநிதி திறந்து வைத்தார்.
ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. அரிய வகை மரங்களும் உள்ளன. ஊட்டியை போன்றே இங்கும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சிக்கு போக முடியாதவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் இந்த பூங்கா. பூத்துக்குலுங்கும் மலர்களுடன் செம்மொழி பூங்கா இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டில் 10 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை லட்சக்கணக்கானவர்கள் கண்டு ரசித்தனர்.
கடந்த ஆண்டில் மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை தொடர்ந்து இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் வித, விதமான மலர்கள் அலங்கரிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது.
பெண்கள், குழந்தைகளை கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள், செடிகளின் தோற்றங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மலர் கண்காட்சிக்காக கோவை, ஊட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. பெட்டூனியா, ரோஜாக்கள், துலிப், ஜின்னியா, லில்லி, சாமந்திப்பூக்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது.
வேளாண்மைத் துறையின் தோட்டக்கலைத் துறையிலிருந்து சுமார் 30 லட்சம் மலர்கள் கொண்டு வரப்படுகிறது. ஓசூரில் இருந்து பிரத்யேக ரோஜா செடிகள் கொண்டு வரப்பட உள்ளது.
வருகிற 2-ந்தேதி மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிடுகிறார். தொடர்ந்து ஜனவரி 18-ந்தேதி வரை மலர் கண்காட்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம்.
மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக கடந்த ஆண்டை போலவே ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ, போட்டோ கேமரா கொண்டு செல்பவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
தற்போது மலர் கண்காட்சிக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பூங்காவுக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
- ராஜவாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் திரும்ப கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
- பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தேனி:
தேனி நகரில் கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து கலெக்டர் அலுவலகம் அருகில் தாமரைக்குளம் கண்மாய் வரை ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் தூர்ந்து போனதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய பஸ் நிலையத்தில் இந்த வாய்க்கால் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல முடியாமல் திரும்பி கொட்டக்குடி ஆற்றுக்கே செல்கிறது.
இதையடுத்து பழைய பஸ் நிலையம் அருகில் கம்பம் சாலையில் ராஜவாய்க்கால் மேல் உள்ள பழைய தரைப்பாலத்தை இடித்து அகற்றி, ராஜவாய்க்காலை தூர்வாரிவிட்டு புதிதாக பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளதால் பழைய பஸ் நிலையம் பகுதியில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்படவுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராஜவாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் திரும்ப கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்வதற்காக தேனியில் இருந்து கம்பம், போடி செல்லும் வாகனங்கள் ஒருவழிப்பாதையாக பழைய பஸ் நிலையத்துக்குள் சென்று வெளியேற வேண்டும். கம்பம் மற்றும் போடியில் இருந்து தேனி நகருக்கு வரும் வாகனங்கள் தற்போது உள்ள வழித்தடத்திலேயே வந்து பழைய பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் நேரு சிலை சிக்னல் வழியாக மதுரை சாலைக்கு செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து வழித்தட மாற்றம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. பாலம் கட்டும் பணிகள் முடியும் வரை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- கடந்த வாரம் மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திய ரூ.1.5 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அடுத்த மாதவரம் ரோஜா நகரில் 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மியான்மரிலிருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்திய ரூ.1.5 கோடி மதிப்பு போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கார்த்திக், வெங்கடேசன் ஆகியோர் கைதானார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஹாகுல் ஹமீது, லாரன்ஸ், சரத்குமார், ஜான்சி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்ததாகவும் தெரியவந்தது.
தமிழகத்திலேயே அதிகபட்ச அளவாக மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும்.
- டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்காக மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியான செய்திகளுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தது.
ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






