என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.
- 22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை, டிச.31-
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சக்தி குரூப் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பைக் கான 15-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
சென்னை ஓபன் செஸ் போட்டி ஏ, பி மற்றும் சி என 3 வகை பிரிவுகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 2 ஆயிரத்துக்கு மேல் ரேட்டிங் புள்ளிகளை பெற்ற முன்னணி வீரர்கள் ஏ பிரிவில் இடம் பெறு வார்கள். 2 ஆயிரம் ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் பி பிரிவிலும், 1800 ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் சி பிரிவி லும் ஆடுவார்கள்.
ஏ பிரிவினருக்கான போட்டி எழும்பூரில் உள்ள ராம்தா ஓட்டலில் நடை பெறும். 'பி' பிரிவினருக்கும், (2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை) 'சி' பிரிவினருக்கும் (6-8), நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். 17 கிராண்ட் மாஸ்டர்கள், 27 சர்வதேச மாஸ்டர்கள், 5 பெண் சர்வதேச மாஸ்டர் கள் இந்த போட்டியில் பங்கேற்பதை உறுதி செய் துள்ளனர்.
ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ஆரோன்யக் கோஷ் இந்தப் போட்டியின் முதல் நிலை வீரராக உள்ளார். ஈரோட்டை சேர்ந்த இனி யன், சித்தார்த் ஜெகதீஷ் (சிங்கப்பூர்), ஷியாம் சுந்தர் (சென்னை) ஆகியோர் அதற்கு அடுத்த வரிசையில் உள்ளனர்.
'ஏ' பிரிவில் 167 வீரர், வீராங்கனைகள் பங்கேற் கிறார்கள். இதில் 44 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர் கள். கொலம்பியா, பெலா ரஸ், கிர்கிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந் தவர்கள் விளையாடுகிறார் கள்.
10 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெறும். மொத்த பரிசு தொகை ரூ.40 லட்சமாகும். 'ஏ' பிரிவில் ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. சாம்பி யன் பட்டம் பெறுபவருக்கு ரூ.4 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.3 லட்சமும் கிடைக்கும்.
சென்னை ஓபன் சர்வ தேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை சக்தி குரூப் நிறுவனத்தின் சேர்ம னும், தமிழ்நாடு செஸ் சங்க தலைவருமான எம்.மாணிக் கம் தொடங்கி வைக்கிறார். பீடே முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர், இந்தியாவின் முதல் சர்வ தேச மாஸ்டர் மானுசெல் ஆரோன் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொள் கிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி தெரி வித்துள்ளார்.
* * *இலங்கை அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்திலும் வென்று இருந்ததால் அந்த அணி தொடரை கைப்பற்றியது. இலங்கை வீரர் குஷால் மெண்டீஸ் அடித்த பந்தை நியூசிலாந்து வீரர் மிச்சேல் கேட்ச் பிடிப்பதை படத்தில் காணலாம்.
- மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது.
- மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது.
சென்னை:
பருவமழை காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம். எனவே, இந்த காலகட்டங்களில் பொதுமக்களும் உஷாராக இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் பருவமழை தொடங்கி முடியும் தருவாயை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த காலகட்டத்தில் வழக்கமான நோய் தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் வடகிழக்கு பருவமழையால் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை போன்றவற்றால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உடல் நல பிரச்சினைகளால் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 40 சதவீதம் பேர் இத்தகைய பாதிப்புகளால் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜீரண மண்டலத்தை பாதிக்கும் இ-கோலி எனப்படும் பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பாக்டீரியாக்கள் அசுத்தமான இறைச்சி, காய்கறி, பழங்கள், குடிநீர், பால் உள்ளிட்டவற்றின் மூலமாக மனித உடலுக்குள் புகுந்து விடுவதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
மதுரை சுற்று வட்டாரங்களில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாக்கிங் நிமோனியா என்ற புதியவகை தொற்றுபரவி தாக்கி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி என்று மருத்துவமனைக்கு வரும் சிறுவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மைக்ரோ பிளாஸ்மா நிமோனியா, கிளாடிமியா நிமோனியா, லெஜியோனல்லா வகை பாக்டீரியாக்கள்தான் காய்ச்சலை உருவாக்குகின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் வழியே இந்த வகை பாக்டீரியாக்கள் பரவுவதாக கூறப்படுகிறது.
இந்த நோய் பெரியவர்களை தாக்கினால் ஆபத்தையும் பெரிய அளவில் ஏற்படுத்தும். சிறியவர்களை தாக்கினால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் ஆபத்து குறைவு என்கிறார்கள்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, மழைக்காலங்களில் நோய் தொற்றுகள் ஏற்படுவது வழக்கம்தான். பொது சுகாதாரத் துறையினரின் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தேவையான மருந்து, மாத்திரை கையிருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
- சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு வருவதற்காக விஜய் கவர்னர் சந்தித்ததை வலிய சென்று வரவேற்று இருக்கின்றார்.
- கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வரக்கூடியவர்.
சென்னை:
விடுதைல சிறுத்தைகள் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்ததை வைத்து அவருக்கு வலிய வாழ்த்துச் சொல்லி அரசியல் செய்கிறார் அண்ணாமலை
ஏற்கனவே, தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட சாட்டையடியால், ஏற்பட்ட விமர்சனங்களால் சற்று சுருண்டு போய் கிடந்த அண்ணாமலை அதில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு வருவதற்காக விஜய் கவர்னர் சந்தித்ததை வலிய சென்று வரவேற்று இருக்கின்றார்.

நடிகர் விஜய் திராவிட மாடல் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்ததால், அவரால் திமுகவிற்கு கோரிக்கை வைக்க முடியவில்லை.
ஆகவே ,அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த துயரத்தை முன்னிட்டு கவர்னரை சந்தித்து முறையிட்டிருக்கிறார் . இது அவரது அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், கவர்னர் ஒரு சூழ்ச்சிக்காரர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வரக்கூடியவர். அந்த சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்கிக் கொள்ளக் கூடாது.
பா.ஜ.க. சூழ்ச்சி வலைக்குள் விஜய் சிக்க வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் பேராசை*. அதனால் தான் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து இருக்கின்றார்.
மாணவிக்கு நீதிகேட்டு போன விஜய்
மகுடிக்கு மயங்க மாட்டார் என நம்புவோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- திமுக அரசின் பொய்முகங்கள் தோலுரிவதும், பொய் விளம்பர மாடல் ஸ்டாலினின் அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அதிமுக இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வழக்கில் #யார்_அந்த_SIR என்ற கேள்வியுடன், #SaveOurDaughters என்ற விழிப்புணர்வு வாசகத்துடன், சென்னையில் பிரபல வணிக வளாகம் ஒன்றில் மக்களிடையே மிகவும் அமைதியாக, ஒழுக்கத்துடன் கவன ஈர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுகவை சேர்ந்த இளைஞர்களை கண்டு பதற்றம் அடைந்த விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிந்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.
தேசிய ஊடகம் வரை கவனத்தை ஈர்த்து, பொதுமக்களின் பேராதரவை அதிமுக-வின் போராட்டங்கள் பெறுவதும்,
இந்த விடியா திமுக அரசின் பொய்முகங்கள் தோலுரிவதும், பொய் விளம்பர மாடல் ஸ்டாலினின் அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள இந்த வழக்கு குறித்த ஒரு முக்கியமான கேள்வியையும், பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், பொதுமக்கள் கூடும் இடத்தில், எவ்வித இடையூறும் இன்றி சமூக அக்கறை கொண்டு அறவழியில் மேற்கொண்ட அதிமுக இளைஞர்களை வழக்குப் போட்டு, கைது செய்து அடக்கிவிடலாம் என்று விளம்பர மாடல் ஸ்டாலினின் திமுக அரசு எத்தனிப்பது, கண்டிக்கத்தக்கது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்ட இவ்வழக்கை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்.
- இலவச வேஷ்டி-சேலைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் தொகுப்பு கிடைக்கும் என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.
இதற்காக அரசு 250 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. பொங்கல் தொகுப் புடன் இலவச வேஷ்டி-சேலைகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் ஜன வரி 9-ந்தேதியில் இருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முன்கூட்டியே டோக்கன் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வினியோகிக்க டோக்கன் அச்சடிக்கப்பட்டு தயாராகி வருகிறது. இன்றைக்குள் அந்த பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நியாயவிலை கடைக்காரர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும்.
இதுபற்றி கூட்டுறவுத் துறை அதிகாரியிடம் கேட்டதற்கு வருகிற 3 அல்லது 4-ந்தேதியில் இருந்து வீடு வீடாக டோக்கன் வினியோகிக்கப்பட இருப்பதாகவும் அதில் நாள், நேரம் குறிப்பிட்டு வழங்கப்படும். பொங் கல் தொகுப்பை காலையில் 100 பேர், மாலையில் 100 பேர் வாங்கிடும் வகையில் டோக்கன் வினியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மண்டல அளவிலான கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் ரேஷன் கடை அதிகாரிகளுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
- தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.
- வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் நடக்கிறது.
சென்னை:
9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்கள் தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல்-ரவுண்டர் அபிஷேக் தன்வரை ரூ.12 லட்சத்துக்கும், பாபா அபராஜித்தை ரூ. 8 லட்சத்துக்கும், என்.ஜெகதீசனை ரூ.6 லட்சத்துக்கும், லோகேஷ் ராஜ், சிலம்பரசன் ஆகியோரை தலா ரூ.2.4 லட்சத்துக்கும் தக்கவைத்துள்ளது. 5 வீரர்களை மொத்தம் ரூ.30.8 லட்சத்துக்கு தக்க வைத்துள்ளது.
நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (ரூ.16 லட்சம்), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 லட்சம்), சந்தீப் வாரியர் (ரூ.8 லட்சம்), பாபா இந்திரஜித் (ரூ.6 லட்சம்), ஷிவம் சிங் (ரூ.2.4 லட்சம் ) ஆகியோரை தக்க வைத்துள்ளது.
திருச்சி கிராண்ட்சோழாஸ் அணியில் சஞ்சய் யாதவ் (ரூ.6 லட்சம்), ஜாபர் ஜமால் (ரூ.2.4 லட்சம்), ராஜ்குமார் (ரூ.2.4 லட்சம்), வாசீம் அகமது (ரூ.2.4 லட்சம்), அதிசயராஜ் டேவிட்சன் (ரூ.2.4 லட்சம்), திருப்பூர் தமிழன்ஸ் அணியில் சாய் கிஷோர் (ரூ.16 லட்சம்), டி.நடராஜன் (ரூ.12 லட்சம்), துஷர் ரஹேஜா (ரூ.8 லட்சம்), முகமது அலி (ரூ.6 லட்சம்), அமித் சாத்விக் (ரூ.2.4 லட்சம்), கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான் (ரூ.16 லட்சம்), சாய் சுதர்சன் (ரூ.12 லட்சம்), எம். சித்தார்த் (ரூ.8 லட்சம்), சச்சின் (ரூ.6 லட்சம்), ஜதாவேத் சுப்ரமணியன் (ரூ.2.4 லட்சம்).
நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் சோனு யாதவ் (ரூ.16 லட்சம்), அருண் கார்த்திக் (ரூ.12 லட்சம்), அஜிதேஷ் (ரூ.8 லட்சம்), ரித்திக் ஈஸ்வரன் (ரூ. 6 லட்சம்), ஹரிஷ் (ரூ.2.4 லட்சம்), மதுரை பாந்தர்ஸ் அணியில் முருகன் அஸ்வின் (ரூ.8 லட்சம்), குர்ஜப்னீத் சிங் (ரூ. 6 லட்சம்), சரவணன் (ரூ.2.4 லட்சம்), சதுர்வேத் (ரூ.2.4 லட்சம்), சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் அபிஷேக் (ரூ.2.4 லட்சம்), சன்னி சந்து (ரூ.2.4 லட்சம்), விவேக் (ரூ.2.4 லட்சம்), ஹரிஷ்குமார் (ரூ.2.4 லட்சம்), பொய்யாமொழி (ரூ.2.4 லட்சம்) ஆகியோர் நீடிக்கிறார்கள்.
8 அணிகளிலும் 39 வீரர் கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளிலும், மாநில அணிக்காக விஜய் ஹசாரே, ரஞ்சி, முஷ்டாக் அலி போன்ற போட்டிகளிலும் விளையாடிய வீரர்களுக்கு தக்கவைப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய எந்த போட்டிகளிலும் ஆடாதவர்கள் உள்ளூர் வீரர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு ரூ.2.4 லட்சம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் டி.என்.பி.எல்.-ல் புதிதாக விளையாட விரும்பும் வீரர்கள் தங்களது பெயரை ஜனவரி 30-ந்தேதிக்குள் www.tnca.cricket மற்றும் www.tnpl.cricket ஆகிய இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் நடக்கிறது.
ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.80 லட்சம் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்க வைத்துள்ள வீரர்களுக்குரிய ஊதியம் போக மீதமுள்ள தொகையை வைத்து தான் எஞ்சிய வீரர்களை எடுக்க முடியும்.
- ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
- தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து பேசிய சீமான், அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என கூறினார்.
இதனையடுத்து வள்ளுவர்கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏசி எந்திரத்தில் இருந்து தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று பரவியது.
- ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது.
மதுரை:
மதுரை மாநகர் புதூர் அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே புதூர் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மருத்துவமனை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தற்காலிகமாக பிளாஸ்ட் ஆப் பாரிஸ் மூலம் செட் அமைக்கப்பட்டு அதில் செவிலியர்கள் சிலர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை செவிலியர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
முதலில் புகை வெளியேறிய நிலையில் அதன் மூலம் தீப்பொறி உருவாகி தீயானது மளமள வென்று அனைத்து அறைகளுக்கும் பரவத்தொடங்கியது.
இதனையடுத்து அங்கு தங்கியிருந்த ஐந்து செவிலியர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இதற்கி டையே தீ விபத்து ஏற்பட்ட மூன்றாவது மாடியில் இருந்து வானுயர எழுந்த புகையை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்கள் உடனடியாக கீழே இறங்கி வந்த செவிலியர்களை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு நர்சிங் மாணவி மயக்கம் அடைந்ததார். பின்னா் இயல்பு நிலைக்கு மாணவி திரும்பிய நிலையில் அருகில் உள்ள விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே தீயானது வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் ஷெட் முழுவதிலும் கரும்புகை ஏற்பட்டு வெளியேறியது. தகவல் அறிந்த மதுரை தல்லாகுளம் தீய ணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைத்து, செவிலியர்கள் தங்கும் அறையில் உள்ள கண்ணாடி மற்றும் ஷெட் ஆகியவற்றை உடைத்து கரும்புகையை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் செவிலியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அவர்களின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆக்சிஜன் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மதுரை புதூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் தங்கி இருந்த செவிலியர்கள் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் இன்றி தப்பினர். தீ விபத்து தொடர்பாக புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
- மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* குமரி முனையில் முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலைக்கு வெள்ளி விழா. தமிழின் பெருமையை குறளின் அருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் மகிழ்ச்சியை அடைந்த நாள் இன்று.
* வான் புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை வைத்த மகிழ்ச்சி கலைஞருக்கு இருந்தது. வெள்ளிவிழா கொண்டாடிய பெருமை எனக்கு. அப்பா என்ன வைத்துவிட்டு போனார் எனக்கேட்போருக்கு தமிழகத்தின் குமரிமுனையில் உள்ள வள்ளுவர் சிலை பதில் சொல்லும்.
* வள்ளுவர் சிலை வைத்து 25 ஆண்டுகள் ஆனதற்கு பெரிய விழா எடுக்க வேண்டும் என்பதை சொன்னதற்கு விமர்சனம் எழுந்தது. அமைத்ததற்கு எதற்கு விழா என சில அதிமேதாவிகள் கேள்வி எழுப்பினர்.
* திருவள்ளுவர் தமிழகத்திற்கும், திருக்குறள் தமிழரின் பண்பாட்டுக்கும் அடையாளம் என்பதால் கொண்டாடுகிறோம். வள்ளுவரை கொண்டாடுவோம், கொண்டாடி கொண்டே இருப்போம்.
* அய்யன் வள்ளுவர் சிலை வெள்ளி விழா, விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும் கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைத்து கொண்டே இருப்பது வாழ்நாள் கடமை.
* ஆட்சிக்கு வரும் முன்னரே சட்டமன்றத்தில் வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி. திருக்குறளாகவே வாழ்ந்தார் கலைஞர் கருணாநிதி.
* நமது மதம் குறள் மதம் என்றும் நமது நெறி குறள் நெறி என்றும் பெரியார் சொன்னார்.
*காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் பெயரில் படகுகள் வாங்கப்படும்.
* குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
*மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
*கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
* இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என்றார்.
- நேற்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
வருகிற 1-ந்தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளுவர் சில வெள்ளி விழாவை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.
இதையடுத்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் இன்று 2-வது நாள் நிகழ்ச்சியில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தோரண வாயிலுக்கும் அடிக்கல் நாட்டினார். திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பரிசு வழங்கி வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார்.
- பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் விழா நடைபெறும்.
- 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
திருச்சி:
108 திவ்ய தேசங்களில் முதன்மையான பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடை பெறும்.
மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. இதை யொட்டி நம்பெருமாள் காலை 7.45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்சுன மண்டபம் வந்தடைந்தார்.
மஞ்சள் நிற பட்டு (பீதாம்பரம்) அணிந்து ரத்தின பாண்டியன் கொண்டை அணிந்து, நெற்றி பூ சாற்றி, வைர அபய ஹஸ்தம், பதக்கம், அடிக்கை, ஒட்டியா ணம், கைகளில் தாயத்து சரம் , திருவடியில் தண்டை அணிந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
மதியம் 12 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

இரவு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடை கிறார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
இதே போல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்ச வத்தின் 10-வது நாள் (9-ந்தேதி) நம்பெருமாள் நாச்சி யார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 10-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும்.
அன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவா சலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்த ர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 11-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். 16-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திரு க்கும். 17-ந்தேதி சொர்க்க வாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 10-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திரு நாளான 16-ந்தேதி நம்பெரு மாள் திருக்கைத்தல சேவை யும், எட்டாம் திருநாளான 17-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 19-ந்தேதி தீர்த்தவாரியும், 20-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சி யும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
விழாவிற்கான ஏற்பா டுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்மு ருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன.
- விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ‘எச்.டி.டி.-40’ என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது.
இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 92-ம் ஆண்டு நிறைவடைந்து 93-ம் ஆண்டில் இந்திய விமானப்படை அடியெடுத்து வைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை தினம் நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டுக்கான விமானப்படை தினம் சென்னையில் கடந்த அக். 6-ந்தேதி மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சியுடன் நடந்தது.
மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்டு களித்தனர்.
இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. முதல் நிகழ்வாக, ஆக்ரா விமானப்படை பிரிவின் கீழ் செயல்படும் பாராசூட் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 5 வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.
அதற்கு அடுத்ததாக, எம்.ஐ.70 ரக ஹெலிகாப்டரில் இருந்து 28 கமாண்டோ வீரர்கள் மெரினா கடற்கரை மணல் பகுதியில் குதித்தனர். அங்கு தேசவிரோத சக்தியால் பிடித்து வைத்திருந்த பணயக்கைதிகளை மீட்கும் சாகச நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு சாகச நிகழ்ச்சியை நடத்தி காண்பித்தனர்.
இதில், விமானப்படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் குட்டிக்கரணம் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி 'ஸ்கை டைவிங்' கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின. சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனமும் நடைபெற்றது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட 'டகோட்டா' மற்றும் 'ஹார்வர்ட்' ஆகிய பழங்கால விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம், கார்கில் போரில் பங்கேற்ற விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வானில் சாகசத்தை வெளிப்படுத்தின.
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 'சேத்தக்' ரக ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மூவர்ணக்கொடியை ஏந்தியபடி பாராசூட் மூலம் கீழே குதித்து சாகசம் செய்து அசத்தினர். அடுத்ததாக, இந்திய விமானப்படையில் அதிவேகமாக செல்லும் போர் விமானமான ரபேல் வானில் தீப்பிழம்புகளை கக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுக்க செய்தது.
இந்திய விமானப்படையின் பழமையான விமானமான 'டகோட்டா', 'ஹார்வர்டு' விமானங்கள் பட்டாம்பூச்சிகள் போல் பறந்து வந்து தங்களது திறமையை பறைசாற்றின. இந்தவகை விமானங்களில் 1947-ம் ஆண்டில் இருந்து 1989-ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றின. பழமையான விமானம் தாழ்வாக பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது, வர்ணணையாளர்கள், என்னதான் வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் மாறவில்லை' என்றதும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள 'எச்.டி.டி.-40' என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது. மிராஜ் போர் விமானம் பின்னால் வந்த இரு விமானங்களுக்கு நடுவானில் எரிபொருளை நிரப்பி காட்டி சாகசத்தில் ஈடுபட்டன. அத்துடன் இதய வடிவை வானில் வரைந்து காண்பித்தது வேறுவிதமாக அமைந்தது.

சென்னையை கலக்கிய விமான சாகச நிகழ்ச்சி குறித்து, விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எச்.அசுதானி, கூறும்போது, 'சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்துவது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே மெரினா கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தோம். இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசும், சென்னையில் உள்ள இந்திய விமான ஆணையமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள் தாம்பரம் அரக்கோணம், கோவை சூலூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய 7 இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து சாகசத்தில் ஈடுபட்டன. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சி எங்களுக்கு சவாலாக இருந்தது. காரணம், விமானிகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது' என்றார்.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பார்கள் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 மணி நேரம் நடந்த விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர் மாவட்டம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த சுமார் 15 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் உலகிலேயே அதிக பொதுமக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதற்காக நிகழ்ச்சி முடிவடைந்ததும், லிம்கா புத்தகத்திற்கு அனுப்புவதற்காக கழுகு பார்வையில் ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள் மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்களை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த குடை, குடிநீர் பாட்டில்களால் அசைத்து ஆரவாரம் செய்தனர்.
சென்னை மெரினாவில் விமான சாகசத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். மொத்தம் 63 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் 36 பேர் வீட்டுக்கு சென்றனர். 27 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இதற்கிடையே வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.






