என் மலர்
இந்தியா
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 256 ரன்கள் குவித்தது.
- ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்கள் குவித்தார்.
சென்னை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 24 ரன்னும், இஷான் கிஷன் 38 ரன்னும் எடுத்தனர். அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 30 பந்தில் 55 ரன்கள் குவித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தார்.
5வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்னும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
- தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
- சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
சென்னை:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தின் பெண்ணாடம் மற்றும் கடம்பூர் போன்ற ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்ற இரண்டு விரைவு ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமென்கிற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நமது மத்திய ரெயில்வே அமைச்சகம், சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு ரெயில் பெண்ணாடம் ரெயில் நிலையத்திலும், தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்கிற அறிவிப்பை வழங்கியுள்ளது.
இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின், பொது போக்குவரத்து மற்றும் தொழில் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். இதற்காக தமிழக மக்கள் சார்பில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மற்றொரு பதிவில்,
தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்களை, வழக்கமாக இயங்கும் வகையிலான விரைவு ரெயிலாக மாற்றுவது தொடர்பான கோரிக்கையை, மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.
அவ்வகையில், கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஐதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற ரெயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.
தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
- இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தனது 101-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார். சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்த நல்லகண்ணு எளிமையின் சிகரமாக விளங்கியவர் ஆவார்.
பணம், பொருள் என எதற்கும் ஆசைப்படாமல் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து மிகவும் சாதாரணமாக எளிய வாழ்க்கையை வாழ்ந்துள்ள நல்லகண்ணு அனைவருக்கும் முன்னுதாரணமாகவே போற்றப்பட்டு வருகிறார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு முதுமை காரணமாக உயிர் இழந்ததை தொடர்ந்து தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நல்லகண்ணு உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய்யும் நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நல்லகண்ணுவை பற்றி உருக்கமான கருத்துக்களையும் தெரிவித்தார்.
கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சத்யராஜ், நாசர், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், திரைப்பட இயக்குநர்கள் ரவிக்குமார், வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் திரை உலகை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ எம்.பி., தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் இன்று நல்ல கண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது வைகோ நல்ல கண்ணுவின் புகழை போற்றும் வகையில் கைகளை உயர்த்தி கோஷங்களையும் எழுப்பி கண்ணீர் வடித்தார். இதனை தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நல்லகண்ணு தனது உடலை ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் உயிர் இழந்தவுடன் நேற்று உடனடியாக பதப்படுத்தப்பட்டது. இதன் பிறகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணி வரையில் நல்லகண்ணு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக, 'வீர வணக்கம் வீர வணக்கம் ! வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்! தகைசால் தமிழருக்குச் செவ்வணக்கம்!' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட மற்றவர்கள் அதனை கூறினர். இதன் பிறகு நல்லகண்ணுவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊர்வலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியை சென்றடைகிறது.
பின்னர் முறைப்படி நல்லகண்ணுவின் உடல் ஆஸ்பத்திரி தலைமை நிர்வாகிகளிடம் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.
- கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது.
- இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதை அடுத்து மின்சார ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் சேவைகளையும் தற்போது கூட்டி உள்ளது.
அதன்படி தாம்பரம்- கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த சேவை அளிக்கப்படுகிறது.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணி முதல் 8.43 மணி வரை 7 நிமிட இடைவெளியில் கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம், தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது. மாலையில் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்கு வசதியாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.

இதனிடையே, கூடுதலாக இயக்கப்பட்டுள்ள சிறப்பு பஸ்களில் ரெயில்வே மாதாந்திர பாஸ் வைத்திருப்போர், ரெயில் டிக்கெட் வைத்திருந்தாலும் இந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பேருந்துகளின் கண்ணாடிகளில் SOUTHERN RAILWAY CHARTERED BUS என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
- அவர் தலைக்கு ரூ. 22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
- போலீசாரிடம் சரணடைவது தொடர்பாக மாவோயிஸ்ட் குழுக்களுக்கு இடையே முரண்பட்டு நிலவுகிறது.
நாடு முழுவதும் நக்சலைட்டுகள் என்கவுன்டரும் சரணடைதலும் அண்மைக் காலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சரணடைய முயன்ற மாவோயிஸ்ட் தலைவரை உடன் இருப்பவர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்திலுள்ள பாகரி காப்புக்காடு பகுதியில், அன்வேஷ் (என்கிற ரேணு) என்பவரின் சிதைந்த உடலை போலீசார் நேற்று தோண்டி எடுத்தனர்.
கொல்லப்பட்ட அன்வேஷ், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கலகாண்டி-கந்தமால் நக்சல் பிரிவின் படைத் தளபதியாக இருந்தார். அவர் தலைக்கு ரூ. 22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்வேஷ் மற்ற சில மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஒடிசா போலீசாரிடம் சரணடையத் திட்டமிட்டிருந்தார். இந்த முடிவை மாவோயிஸ்ட் தலைமை எதிர்த்ததால், அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மாநில மண்டலக் குழு தலைவர் சுக்ரு, கூட்டாளிகள் சிலா மற்றும் ஜாகேஷ் உதவியுடன் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
இதில் ஜாகேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம், போலீசாரிடம் சரணடைவது தொடர்பாக மாவோயிஸ்ட் குழுக்களுக்கு இடையே நிலவும் முரண்பாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மறுநாள் முதல் 1-ந்தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
2-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
3-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகள்) ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
4-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும்.
- வாக்குச்சாவடி மையங்களின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு குறித்து இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் 12 நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்தல் முன்னேற்பாடு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் உடனான ஆலோசனைக்குப் பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நியாயமான, வெளிப்படைத்தன்மையான தேர்தலை நடத்த வேண்டும்.
* தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் காட்டக்கூடாது.
அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும்.
* வாக்குச்சாவடி மையங்களின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.
* தேர்தல் அதிகாரி கையெழுத்திட்ட 17சி படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார்.
- உப்பள பாத்திகளில் இருந்து உப்புவாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொடர்ந்து மழை இல்லாமல் வெயில் அடித்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேதாரண்யம்:
தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் 2-வது இடத்தில் உள்ளது. வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் பகுதியில் இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கான பராமரிப்பு பணி இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவுற்ற நிலையில் தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகளவில் அடிக்க தொடங்கிய நிலையில் இன்று முதல் உப்பு உற்பத்தி தொடங்கி உள்ளது. இதையொட்டி உப்பு பாத்திகளில் உப்பு வார் முதல் தொடங்கப்பட்டுள்ளது.
உப்பள பாத்திகளில் இருந்து உப்புவாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வார்முதல் செய்த உப்பை சேமிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை இல்லாமல் வெயில் அடித்தால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக இருக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
- திமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுகவில் இருந்து நிறைய தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் மற்றும் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், கோவையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் தற்போது அங்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
எஸ்.பி. வேலுமணியின் ந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான்.
- தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது.
கோவில்பட்டி:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நம் கூட ஒருவர் இருந்தார், அவர்கள் தற்போது திசை மாறிப் போய்விட்டார்கள். திசை மாறி போனார்கள். இன்று அவர்கள் திக்குத் தெரியாமல் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு போய் விடுவார்கள். திசை மாறியவர்கள் திக்குத் தெரியாமல் போகும் நிலையை இந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் பார்க்கப் போகிறோம்.
சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வில் அண்ணாவில் இருந்து கருணாநிதி வரை கட்சியில் உழைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாண்ட முடியவில்லை. கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என ஒரே வீட்டுக்குள்ளே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உள்ளனர்.
இந்தத் தேர்தலில் நீங்கள் "டப்பு டப்புன்னு" இரட்டை இலையை பார்த்து வாக்களித்தால் ,தேர்தல் முடிந்த பிறகு "பட்டு பட்டுன்னு" உங்க வீட்டில ரூ.10 ஆயிரம் வந்து விழும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் என்று பெரிய அறிவாளியாக இவர்தான் கண்டுபிடிச்சிருக்காரு. 0+0 = 0, ஆமா நாங்க 2 பூஜ்ஜியம் வாங்குவோம். அந்த 2 பூஜ்ஜியத்திற்கு முன்னாடி 2 சேர்த்து 200 வாங்குவோம்.
தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விடுவார்கள். தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக கூறி தற்போது 50 நாள் கூட ஒழுங்காக வேலை வழங்கவில்லை.
இன்று 100 நாள் வேலையை 125 நாளாக அறிவித்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அதையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 125 நாளை கூடுதலாக 25 நாள் சேர்த்து 150 நாளாக உயர்த்த உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் இறந்து கிடந்தன.
- இதனை உணவாக சாப்பிட்ட கோழிகளும் இறந்து காணப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்ததா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் இறந்து கிடந்தன.
இதனை உணவாக சாப்பிட்ட கோழிகளும் இறந்து காணப்பட்டது. இந்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மட்டுமின்றி தற்போது பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் காகங்கள் காரணம் இன்றி இறந்து காணப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்து உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது புரியாமல் பொதுமக்கள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.
ஆகையால் மாவட்ட நிர்வாகத்தினர் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக காகங்கள் மற்றும் கோழிகளை உடற்கூறாய்வு செய்து பறவைகள் இறப்பது ஏன்? என விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- அனிதா மற்றும் அவரின் 5, 4 மற்றும் 3 வயதுடைய மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
- நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அனிதா (27) என்ற பெண் தனது கணவர் முன்சுன் கெவாட் மற்றும் 5, 4 மற்றும் 3 வயதுடைய மூன்று மகள்களுடன் டெல்லியில் வசித்து வந்தார்.
முன்சுன் கெவாட் ஆசாத்பூர் மண்டியில் காய்கறி வியாபாரியாகப் பணியாற்றி வந்தார். அனிதா 2 மாத கர்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 8:07 மணியளவில் காவல்துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அனிதா மற்றும் அவரின் 3 மகள்கள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
நான்கு பேரின் கழுத்தும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு பெண்ணின் கணவரான முன்சுன் கெவாட் தலைமறைவாகியுள்ளார். அவரே இந்த கொலையை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கொலை செய்வதற்கு முன்னதாக, மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கணவர் மது அருந்தச் செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆண் குழந்தை இல்லை என்ற ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் புலனாகி உள்ளது.
கொலை வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான முன்சுன் கெவாட்டை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.






