என் மலர்
இந்தியா
- சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
- அமைச்சரவை மாற்றம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்-மந்திரியாவும் அறிவித்தது.
இதையடுத்து சித்தராமையா முதல் 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்றும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இந்த மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதனால் டி.கே. சிவக்குமார் கர்நாடக முதலமைச்சராவார் என சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தொடர்ந்து நான்தான் முதல்வராக இருப்பேன். மாற்றம் செய்வது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என சித்தராமையா தெரிவித்தார்.
நேற்று சித்தராமையா டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்தார். பீகார் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதேவேளையில் அமைச்சரவையை மாற்றம் செய்து கொள்ள அனுமதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மாற்றம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா கூறியதாவது:-
அமைச்சரவை மாற்றம் குறித்து சித்தராமையா மற்றும் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அகில இந்திய தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் இதைத்தான் சொல்கின்றன, இந்த விஷயம் இப்போது வெளிப்படையாகி வருகிறது. பொதுவாக, அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது தலைமை மாற்றங்கள் ஏற்படாது.
அமைச்சரவை மாற்றத்திற்கான அனுமதி பெற்ற பிறகு சித்தராமையா மற்றும் உயர்மட்டக்குழு முடிவு செய்யும். இதில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
- புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
- பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.
ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.
தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.
- மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேசத்தில் கல் குவாரி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சோன்பத்ரா மாவட்டத்தில் ஓப்ராவில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இடிபாடுகளுக்கு அடியில் ஒரு தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
- தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான்.
- மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும். அப்போது உறுதி செய்யப்படும்.
மதுரையில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
* தே.மு.தி.க.வான நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.
* எங்களுக்கான பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை செய்வது, கேப்டனின் குரு பூஜை, மாநாடு ஆகியவைதான் எங்களுடைய ஒரே கவனம்.
* ரத யாத்திரை மற்றும் எங்களுடைய கட்சி வளர்ச்சி ஆகியவற்றை பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.
* தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள்தான். யாரும் தோழமை இல்லை எனச் சொல்ல முடியாது.
* தே.மு.தி.க. அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை.
* மாநாடு நடைபெறும்போது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை வரும். அப்போது உறுதி செய்யப்படும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தே.மு.தி.க. சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையிலிருந்து தொடங்குகிறோம். வருகிற டிசம்பர் 2-ந்தேதி ஈரோட்டில் நிறைவு பெறும் என அறிவித்தார்.
- உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை.
- ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் அண்மையில் ஆதரித்து பேசியிருந்தார்.
இது முறைகேடுகளை நீக்கி, தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பீகார் தேர்தல்கள் SIR-க்கு பரந்த அளவிலான மக்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆனந்தா போஸை விமர்சித்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற எம்.பி கல்யாண் பானர்ஜி, "முதலில், ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் குற்றவாளிகளை அங்கேயே வைத்திருக்கிறார்.
அவர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வழங்குகிறார். திரிணாமுல் தொண்டர்களை தாக்கச் சொல்கிறார். முதலில் இதை அவர் நிறுத்தட்டும். உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை" என்று கூறினார்.
ராஜ்பவனில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதாக கூறும் எம்.பி மாநில காவல்துறை மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாரா, கல்யாண் பானர்ஜி, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு ராஜ்பவன் திறந்திருக்கும். அனைவரும் வந்து பார்க்க வரவேற்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே ஆளுநர் மாளிகையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் இருப்பதாக கல்யாண் பேனர்ஜி கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுநர் மாளிகையான ராஜபவன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
- குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் தாலுகாவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததற்காக தண்டனையாக 100 முறை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் 13 வயது சிறுமி உயிரிழந்தார்.
கடந்த வாரம், ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் மாணவி அன்ஷிகா கவுட்-க்கு, பள்ளிப் பையுடன் 100 முறை சிட்-அப்கள் செய்து முடித்த சிறிது நேரத்திலேயே கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டது.
மாலை வீடு திரும்பியபோது சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நிலைமை மேலும் மோசமடைந்து சிறுமி மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஒரு வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் பலனளிக்காமல் நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டனைக்குப் பிறகு, தங்கள் மகளின் கழுத்து மற்றும் முதுகில் கடுமையான வலி ஏற்பட்டதாகவும், குழந்தையால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அன்ஷிகாவின் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக வட்டார கல்வி அதிகாரி பாண்டுரங் கலங்கே தெரிவித்தார்.
- நாளைமுதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.
- மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு 60 நாட்கள் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். பிறகு இருமுடி கட்டியபடி சபரிமலைக்கு வந்து ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
நாளைமுதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி தலைமையில் தினசரி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.
நடப்பு சீசனையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
- பசுவமுபண்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம்,
காங்கயம்:
காடையூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமுபண்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாரை,
பொன்னாங்காளி வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
- அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பூத் ஏஜெணடுகள் தினமும் 50 படிவங்களை பெற்று வழங்க அனுமதி.
- பூத் ஏஜெண்டுகள் நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்வாடி நிலை அலுவலர்களிடம் அளிப்பர்.
தமிழகத்தில் SIR பணி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் கட்சிக்காரர்கள் படிவங்களை பெற்று விண்ணப்பித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன. குறிப்பாக திமுக-வினர் மொத்தமாக படிவங்களை பெற்று நிரப்பி வருவதாக அதிமுக மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இந்த தீவிர திருத்த செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது ஆகும். அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பினை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தனது 27.10.2025 ஆம் நாளிட்ட 23/2025-ERS (Vol II) எண்ணிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பெற்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும் போது வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அந்த படிவங்களில் உள்ள விவரங்கள் தன்னால் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என்ற கீழ்கண்ட உறுதிமொழியினையும் வழங்க வேண்டும்.
"என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன் எனவும் மேலும் தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1950 பிரிவு 31 ன் படி தண்டனைக்கு உரியது என்பதையும் அறிவேன்"
இவ்வாறு பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்த்து அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர்க்கு சமர்ப்பிப்பார்.
வாக்காளர் பதிவு அலுவலர் அப்படிவங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
- அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
- 2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "மாவோயிஸ்டுகள் இருப்பது குறித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்" என்றார்.
2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை அழிக்க 2026 மார்ச் மாதத்தை இலக்காக த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார்.
- நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
- ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்
சென்னை:
வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாக்குரிமையை தடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாம் நதி போல பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அசிங்கமும் வரும் நல்லதும் வரும். நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
நமது செயல்பாடுகள் மூலம் தி.மு.க.வினர் இன்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. ஏன் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவில்லை. கிராமப்புறங்களில் காலையில் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் இரவில் தான் வீடுகளுக்கு வருவார்கள். இதுபோன்ற நபர்களிடம் எப்படி விண்ணப்பங்களை கொடுத்து பூர்த்தி செய்வது என்கிற சிக்கல்கள் உள்ளன.
இது போன்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாம் இப்போது வைத்திருக்கும் வாக்காளர் அட்டை இனி செல்லுபடியாகாது. அது போன்ற சூழல் ஏற்படும்போது ஆதார் அட்டையும் செல்லுபடியாகாமல் போகலாம். பின்னர் இந்திய குடிமகனா என்று நம்மை பார்த்து கேள்வி எழுப்புவார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இன்று இந்தியாவிலேயே இந்த தலைவரும் செய்யாத செயலை நேற்று வெளியிட்ட எஸ்ஐஆர் தொடர்பான வீடியோ மூலமாக நமது தலைவர் விஜய் செய்து உள்ளார்.
நேற்று இரவு 12 மணிக்குள் மூன்று கோடி பேர் அதனை பார்த்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலையை நமது தலைவர் செய்துள்ளார். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோதும் அவரிடம் எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்கள். ஆனால் அவர் மக்கள் ஆதரவை பெற்று முதலமைச்சரானார்.
தற்போது நம்மை பார்த்தும் அதே குற்றச்சாட்டை கூறுகிறார்கள். ஆனால் நமது தலைவரோ மக்களையே கட்டமைப்பாக உருவாக்கி வைத்திருக்கிறார். இருப்பினும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இளம் வாக்காளர்கள் முதல் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் வகையில் நாம் அனைவருமே வீடு வீடாக செல்ல வேண்டும்.
இப்படி அனைவரது வாக்குரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதனை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் 2026 தேர்தலில் நமது தலைவர் தான் முதலமைச்சராக அமருவார்.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.
- இந்துக்களும் நக்சல்களாக உள்ளனர். பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
டெல்லி கடந்த திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு பரவிய வதந்திகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்த் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா ஒரு கூட்டத்தை கூட்டினார்.
கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் நரேந்திர குமார் சர்மா, "மக்கள் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்றார். சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை மக்கள் நம்பக்கூடாது.
பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் மதம் இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று நினைப்பது தவறு. இதுபோன்றவர்கள் எல்லா மதங்களிலும் உள்ளனர்.
இந்து சமூகத்தை சேர்ந்தவர்களும் நக்சல்களாக உள்ளனர். கடற்படையில் பல பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர். ராணுவத்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் பல இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு. எந்த மத வேதமும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஊக்குவிக்கவில்லை.
இந்த நாற்காலி எனக்கு தாய் போன்றது. நான் 34 ஆண்டுகளாக பாகுபாடு இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.
மாணவனாக இருந்தபோது நான் கண்டு வியந்த போலீஸ் அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் காவல் துறையில் சேர்ந்தேன்." என்று பேசினார்.
மேலும் காவல் நிலையத்திற்குள் ஏழைகள் சுரண்டப்படும் போக்கு நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நரேந்திர குமார் இவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் களப் பணியில்(Field of duty) இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






