என் மலர்
இந்தியா
- நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தானே:
சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள இரானி பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
சென்னையில் கொள்ளையன் ஜாபர் கொல்லப்பட்டதையடுத்து இரானி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இரானி கும்பலை சேர்ந்தவர்கள் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க இரானி பகுதிக்கு போலீசார் செல்லும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது.
- போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த சந்திரன்-கோவிந்தம்மாள் தம்பதியின் 22 வயதான அஞ்சலி என்கின்ற திருநம்பி சஞ்சய் என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாக இருந்தவள் ஆணாக மாறி வீட்டை விட்டு வெளியேறி ஆங்காங்கே சுற்றி திரிந்து வந்தது தெரியவந்தது. ஆடைகள் கலைந்து இருந்தது.
இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருநம்பி அஞ்சலி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன.
- நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்?
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சியில், பள்ளிக்கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்தோம். இதோ, அதற்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இது போல எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார். பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் மொத்தம் ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 2497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன. நாங்கள் கேட்பதெல்லாம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனால் பல நாட்கள் கடந்தும் இதுவரை அதற்கு பதில் இல்லை.
திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்கிறோம். உண்மையில் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்? என வினவியுள்ளார்.
- இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.
- 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை.
சென்னை:
இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ந்தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். அந்த இசையை தமிழ்நாடும் ரசிக்க வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு இளையராஜா சிம்பொனியை இசையை இசைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் இளையராஜாவை சந்திக்கும் போது இதே கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால் விரைவில் அதை கண்டிப்பாக செய்வதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் மாதம் 2-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவித்தார்.
முன்னதாக, லண்டனில் சிம்பொனியை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்னதாக இளையராஜாவை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
- ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.
திருச்சி:
சக்தி தலங்களில் முதன்மையான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வருடந்தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.
உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சவுபாக்கி யங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான அம்மனின் பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.
சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினந்தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நை வேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களையே 'தளிகை' என்று என்று சொல்வார்கள்.
ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்மனுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படுவதில்லை. இளநீர், பானகம், உப்பில் லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது.
அம்மன் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வு டன் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் அம்மனை குளிர்விப்பதற்காக கூடை கூடையாக மலர்களை கொண்டு வந்து பூச்சொரி தல் விழா நடத்துகின்றனர்.
அம்மன் விரதம் இருக்கும் காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூச்சொரிதல் விழா நடக்கிறது. அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4-வது வார பூச்சொரிதல் விழா வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.
இதில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் குழு, குழுவாகப் பிரித்து பூக்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் விதத்தி லும், அவர்களின் பாது காப்பு கருதியும், சன்னதி வீதியின் நுழைவு வாயிலில் இருந்து ராஜகோபுரம் வரை 10 இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.
- பாமக எம்.எல்.ஏக்களுடன் பேசிக்கொண்டே அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவைக்கு வந்தார்.
- கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்.
சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோருடன் அதிமுக எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டே வந்தார்.
அப்போது "பாஜக, நம்ம (அதிமுக), அப்புறம் பாமக" என சிரித்துக்கொண்டே பேசி வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது "நாங்க கூட்டணிங்க" எனச் சொல்லிச் சென்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மதியம் திண்டுக்கல் சீனிவாசனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "பாமகவுடன் கூட்டணி என நான் யாரிடமும் கூறவில்லை. கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டு சென்றார்.
- டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி கொள்ளையடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
- ஒத்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம்.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
நேற்று முன்தினம் உள்துறை மந்திரியை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவை தொகையை பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வர வேண்டிய நிதி தாமதமாகி உள்ளது. அதுதொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தான் தொடர வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. அதனை வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளோம்.
எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் முக்கியமான நிகழ்வுகளை சுட்டிக்காட்டினோம். தமிழ்நாட்டில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் மனு அளித்தோம்.
ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது பிரிந்ததுதான். பிரிந்தது மட்டுமல்ல, இந்த கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.
என்றைக்கு அ.தி.மு.க.வின் கோவிலாக இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் இவர் தலைமையில் ரவுடிகள் மூலம் தாக்கினார்களோ அன்றைக்கே அவர் இந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. அந்த அடிப்படை யில் அவர் இணைத்து கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே கிடையாது.
அவர் தவிர, நிறைய பேர் இந்த கட்சியில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் கூட பல பேர் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் பலர் இணைந்து வருகிறார்கள்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அந்த மீனவர்களை காக்க வேண்டும். மீனவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும்போதும், அம்மாவின் ஆட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இலங்கை அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய மீனவர்களை தாக்குவது, அவர்களுடைய பொருட்களை கொள்ளையடிப்பது, படகுகளை சேதப்படுத்துவது, அவர்களை கைது செய்வது எல்லாம் கண்டனத்துக்குரியது. அதை நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.
நான் முதலமைச்சராக இருக்கும்போதும், அம்மா முதலமைச்சராக இருக்கும் காலத்திலும் சரி, கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களை விடுதலை செய்து அழைத்து வந்திருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையால் எடுத்து செல்லப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுத்திருக்கிறோம்.
நாங்கள் எதிர் கட்சிதான். ஆட்சியில் இல்லாத போது உருட்டல், மிரட்டல்கள் எல்லாம் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஆளும் கட்சியல்ல.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி கொள்ளையடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு அளவே இல்லை.
காவல்துறைக்கு அவர்கள் அச்சப்படவில்லை. சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது.
தி.மு.க. மட்டும்தான் அ.தி.மு.க.வின் ஒரே எதிரி. தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல. ஒத்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது.
- மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்த சமயத்தை பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.
இதனால் வேறு வழியில்லாமல் காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
நேற்று கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்து சென்றார்.
- சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார்.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவுடன் பேரவைக்கு வந்திருந்தார்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். இதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறையான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை-சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மானிய கோரிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டசபைக்கு வராதது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று உடல்நலக்குறைவுடன் பேரவைக்கு வந்திருந்தார். இன்று கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர். எனவே, நான் மானியக் கோரிக்கையை முன் வைக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
- குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது.
- வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி சுற்றித்திரிகின்றன.
அந்த வகையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது.
அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர்.
அதனைத்தொடர்ந்து குட்டையில் இருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது. அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் புதிய போதைப்பொருள்.
- மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து மீள முடியாது.
தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் இருக்கும் பகுதிகளில் சாக்லேட் வடிவில் புதுவகை போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

"ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள். பள்ளி கூடங்களின் அருகில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டு அது வேகமாக பரவி வருகிறது.
வாயில் போட்டால் வெடித்து சிதறுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த போதைப் பொருளில் மெத்த பெட்டமின் போதைப் பொருள் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ட்ராபெரி வாசனையுடன் கூடிய இந்த வகை சாக்லேட் போதைப் பொருள் மாணவப் பருவத்தில் இருந்தே மாணவர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் பள்ளிக்கூடங்களில் அருகில் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இந்த போதைப் பொருளை மிட்டாய் என்று நினைத்து மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து அவர்கள் மீள முடியாது என்கிற எச்சரிக்கை தகவலும் வெளியாகி உள்ளது.
இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் இந்த போதைப் பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களில் அருகில் அறிமுகமில்லாத நபர்கள் எந்தவித சாக்லேட்டுகளை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
எனவே உஷாராக செயல்பட்டு போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
- பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரெயில் பாலத்தை பார்வையிட உள்ளார்.
- கத்ராவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு- காஷ்மீருக்கு முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பிரதமர் மோடி இந்த ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.
கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாரமுல்லா இடையே முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்படலாம் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அம்மாநில முதல்- மந்திரி உமர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பின்னர் பிரதமர் மோடி உலகின் மிக உயரமான செனாப் ரெயில் பாலத்தை பார்வையிட உள்ளார். கத்ராவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.






