என் மலர்tooltip icon

    இந்தியா

    • அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
    • உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தன. பிளஸ்-1 தேர்வு 5-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

    இதைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (28-ந் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும், உற்சாகத்தோடும், துணிவுடனும் தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவிற்கு பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    இந்த நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    நான் மதம், சாதி பிரிவினையை நம்பவில்லை. நான் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மதசாரபற்ற நிலைக்கு இதுவே சான்று.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் மத்திய அரசு 44 பரிந்துரைகளை முன்வைத்தது. இறுதியாக பாராளுமன்ற நிலைக்குழு அதை 23 ஆக குறைந்தது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை 14 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    வக்பு வாரிய மசோதா அரசியலமைப்பிற்கு எதிரானது. இது மைனாரிட்டி சமூகத்தினருக்கு எதிராக குறிவைக்கப்படுகிறது. பீகார் மற்றும் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை தீர்க்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக அவர் சமூகத்தை பிளவுப்படுத்தும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

    அவர்கள் எப்போதும் சமூகத்தை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் சட்டத்தை கொண்டு வருகிறார்கள். ஆனால் பீகார் மக்கள் புத்திசாலிகள். அவர்கள் இதை புரிந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

    • விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும்
    • என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று வினேஷ் போகத்திடம் கேட்க அரசாங்கம் முடிவு

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்கா தேர்வானார்.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் வினேஷ் போகத்துக்கும் வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

    ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது ஹரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' வேலை ஆகிய மூன்றில் எதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது.

    ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு பேசிய பேசிய நயாப் சிங் சைனி , "வினேஷ் போகட் இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பினார். இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு விளையாட்டுக் கொள்கையின் கீழ் சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வாக இருப்பதால், அவர் என்ன சலுகைகளைப் பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது" எனறு தெரிவித்தார்.

    • ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை எண்ணூர் ரெயில் நிலையத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதனால், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    • 14.2 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது பிடிபட்டார்.
    • அவரது தந்தை போலீசார் அதிகாரி என்பதால் பாதுகாப்பு விதிமுறையை தவறாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்.

    கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை மீட்டு இருந்தார்கள்.

    கைது செய்யப்பட்ட அவரை காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவரது காவல் கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் தருண் ராஜு அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஜாமின் கேட்டு ரன்யா ராவ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

    • ரெயில் நிலைய அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள டெலிகாம் அலுவலகத்தின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

    அலுவலகத்தில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக, முதற்கட்ட தகவல் வெளியானது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வேப்பேரியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

    பின்னர், தண்ணீரை பீய்த்து அடித்த தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

    மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
    • மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அரசுப் பள்ளியில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது. காலை உணவை 80 மாணவர்கள் சாப்பிட்டனர்.

    சிறிது நேரம் கழித்து காலை உணவு சாப்பிட்ட 16 மாணவர்கள் வயிறு வலிப்பதாக கூறினர். மற்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதையடுத்து உணவு மாதிரியை பரிசோதனைக்காக உணவு பாதுகாப்புத்துறைக்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர்.

    • மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
    • தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

    தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களில் 29ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுக்கவில்லை என்றும் சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே கொள்கையாக மத்திய அரசு வைத்துள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆர்ப்பாட்ட அழைப்பு மடல்.

    தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் நம்மிடம் வழங்கிய ஆட்சியை அனைவருக்கும் பலனளிக்கும் சாதனைத் திட்டங்களுடன் நாம் நடத்திக் கொண்டிருந்தாலும், நாளொரு போராட்டத்தை முன்னெடுத்தே நம் உரிமைகளைப் பெறக்கூடிய வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    ஒன்றிய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரும் இல்லை, தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை, தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியும் ஒதுக்கவில்லை. இதனைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த பிப்ரவரி 8-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

    ஆவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினேன்.

    தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கையாக விளங்கும் பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய - முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆதிக்கப் போக்கையும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மார்ச் 12-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. உங்களில் ஒருவனான நான் திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை முறையாக நிறைவேற்றி, மக்கள் தொகையை மனிதவள ஆற்றலாகச் சிறப்பாக மாற்றியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களும், ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் தங்கள் ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் மார்ச் 5-ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள 54 கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் நடத்தியதுடன், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை கடந்த 22-ஆம் தேதி சென்னையில் நடத்தி, ஒருமித்த உணர்வுடன் ஜனநாயகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தோம். இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்திடச் சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

    மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களே தங்களின் நியாயமான உரிமைக்காகவும், மாநிலத்திலிருந்து வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து உரிய பங்கு கிடைப்பதற்காகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் ஏழை - எளிய தொழிலாளர்களின் வாழ்வு, பா.ஜ.க. ஆட்சியில் அவலமான நிலையில் உள்ளது.

    திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், பொதுவுடைமை அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களின் ஆதரவுடன் 2004-இல் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவைத் தடுத்திடும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 100 நாள் வேலை உறுதி செய்யப்பட்டது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்றக்கூடிய மாநிலமான தமிழ்நாடு, 100 நாள் வேலைத் திட்டத்தையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.

    சிறப்பாகச் செயல்படுகின்ற மாநிலங்களைத் தண்டிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருக்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 13-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி, கிராமப்புற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட ஏதுவாக அந்த நிதியினை விடுவிக்கக் கோரியிருந்தேன்.

    அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி அவர்களுடன் கடந்த ஜனவரி 27-ஆம் நாள் டெல்லியில் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களைக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்களுடன் நேரில் சந்தித்து, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தார்கள். தொடர்புடைய துறையின் அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டது.

    ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதி தொடங்கி, ஒவ்வொரு திட்டத்திலும் தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய பா.ஜ.க. அரசு உரிய அளவிலும், உரிய நேரத்திலும் ஒதுக்குவதில்லை. அரசியல் பார்வையுடன் தமிழ்நாட்டை ஓரங்கட்ட நினைக்கிறது. இந்த நிலையிலும், உங்களில் ஒருவனான என் தலைமையிலான தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு, 100 நாள் வேலைத்திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்புக்குரிய நிதியின் மூலம் ஊதியத்தை வழங்கி வருகிறது.

    எனினும், ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பே இதில் முதன்மையானது என்பதால் உழைக்கும் ஏழை - எளிய மக்களுக்கு முழுமையான அளவில் ஊதியம் வழங்கிட இயலவில்லை. தமிழ்நாட்டைப் போலவே கேரளா, மேற்கு வங்கம் போன்ற பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்ற முறையீடுகள் வைக்கப்பட்டுள்ளன.

    உங்களில் ஒருவனான என் தலைமையில் நடைபெற்ற கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குரிய நிலுவைத் தொகையான 4,034 கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும், 5 மாதங்களாக இந்தத் தொகை விடுவிக்கப்படாமல் இருப்பதால் கிராமப்புற ஏழைத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதையும் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. மக்களவையில் எடுத்துரைத்தார்.

    மாநிலங்களவையிலும் திருச்சி சிவா எம்.பி. இது குறித்துப் பேசினார். இரு அவைகளிலும் கழகத்தினரும் தோழமைக் கட்சியினரும் இது குறித்து வலியுறுத்தியும், நிலுவைத் தொகையை வழங்குவதற்குப் பதில், "உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டிற்குக் கூடுதல் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது" என்று திசைதிருப்பும் பதில்களே ஒன்றிய பா.ஜ.க அரசிடமிருந்து கிடைத்தது.

    மாநிலங்களின் பரப்பளவையும் மக்கள்தொகையையும் காரணம் காட்டி, திறமையாகத் திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலங்களின் உரிமைகளை நசுக்கி, மக்களை வஞ்சிக்கும் போக்கைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

    மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது உரிமைக்கான குரல் எழுப்பி வரும் நிலையில், மக்கள் மன்றத்திலும் அதனை எதிரொலித்திடச் செய்யும் வகையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்கக்கோரி, தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அளவில் மார்ச் 29-ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரண்டு இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, நாள்தோறும் உழைத்து நாட்டை முன்னேற்றிடும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். எனவே, ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில், பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை ஆண் - பெண் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்திட வேண்டும். அவர்களின் உரிமை முழக்கமாக உடன்பிறப்புகள் களம் காண வேண்டும்.

    வியர்வை காய்வதற்கு முன்பே உழைப்பிற்கான ஊதியத்தை வழங்குவதுதான் நியாயமான செயலாகும். உழைத்தவர்கள் ஓடாய்த் தேய்கிற வரை, அவர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதன் உழைப்புச் சுரண்டலையும், உரிமைப் பறிப்பையும் உரக்க முழங்கிடுவோம். உரிமைகளை வென்றிடுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
    • ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    தானே:

    சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளை கும்பலை சேர்ந்த ஜாபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள இரானி பகுதியில் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

    சென்னையில் கொள்ளையன் ஜாபர் கொல்லப்பட்டதையடுத்து இரானி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜாபர் கொல்லப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இரானி கும்பலை சேர்ந்தவர்கள் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயின் பறிப்பு, மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க இரானி பகுதிக்கு போலீசார் செல்லும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது.
    • போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன் தீர்த்தம் மேம்பாலத்திற்கு கீழே சடலம் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த சந்திரன்-கோவிந்தம்மாள் தம்பதியின் 22 வயதான அஞ்சலி என்கின்ற திருநம்பி சஞ்சய் என்பதும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணாக இருந்தவள் ஆணாக மாறி வீட்டை விட்டு வெளியேறி ஆங்காங்கே சுற்றி திரிந்து வந்தது தெரியவந்தது. ஆடைகள் கலைந்து இருந்தது.

    இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் திருநம்பி அஞ்சலி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன.
    • நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்?

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சியில், பள்ளிக்கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதைப் பார்த்தோம். இதோ, அதற்கு அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், பொன்னகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் இது போல எத்தனை பள்ளிகள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

    தமிழகத்தில் திமுக ஆட்சியில், 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவையில், அமைச்சர் பெரியசாமி கூறியிருந்தார். பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கும், தரம் உயர்த்துவதற்கும் மொத்தம் ரூ. 7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 2497 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், இந்த ஆண்டும், ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.

    தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் கட்டிடம் இல்லாமல் இருப்பதும், மேற்கூரைகள் இடிந்து விழுவதும் தொடர்ந்து செய்திகளில் வெளிவருகின்றன. நாங்கள் கேட்பதெல்லாம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வகுப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன, குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்படி எத்தனை வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை, திமுக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான். ஆனால் பல நாட்கள் கடந்தும் இதுவரை அதற்கு பதில் இல்லை.

    திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் வெள்ளை அறிக்கை வெளியிடக் கேட்கிறோம். உண்மையில் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கட்டிடங்கள் கட்டியிருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் இத்தனை தாமதம், தயக்கம்? என வினவியுள்ளார். 



    • இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.
    • 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை.

    சென்னை:

    இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ந்தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். அந்த இசையை தமிழ்நாடும் ரசிக்க வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு இளையராஜா சிம்பொனியை இசையை இசைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் இளையராஜாவை சந்திக்கும் போது இதே கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால் விரைவில் அதை கண்டிப்பாக செய்வதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார்.

    மேலும், தமிழக அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் மாதம் 2-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவித்தார்.

    முன்னதாக, லண்டனில் சிம்பொனியை நிகழ்ச்சியை அரங்கேற்றுவதற்கு முன்னதாக இளையராஜாவை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×