என் மலர்tooltip icon

    இந்தியா

    • சீர்காழியில் ஒரு தொழிற்பயிற்சி மையமாவது அமைத்து தர வேண்டும்.
    • சீர்காழியில் புதிய தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி அளித்தார்.

    தமிழக சட்டசபையில் இன்று சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தனது தொகுதி முன்னேற்றத்திற்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

    அப்போது அவர், " சீர்காழி இன்னும் வளர்ச்சி பெறாத தொகுதி. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், முதல்வர் ஸ்டாலினே சீர்காழி மாப்பிள்ளை தான்.

    அதேபோல், வேளாண்துறை அமைச்சர் அவர்களும் சீர்காழி தொகுதி மாப்பிள்ளை, போக்குவரத்துத்துறை அமைச்சரும் சீர்காழி தொகுதியின் மாப்பிள்ளை.

    இவ்வளவு பேர் இருந்தும் சீர்காழி தொகுதியில் ஒரு தொழிற்பயிற்சி மையம் கூட கிடைக்கவில்லை என்றால் மக்கள் என்ன சொல்வார்கள்.

    அதனால், அமைச்சர் இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்து ஒரு தொழிற்பயிற்சி மையமாவது அமைத்து தர வேண்டும்" என்று கூறினார்.

    இதற்கிடையே, சீர்காழி மாப்பிள்ளை என்று சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் சொன்னதும் முதல்வர் ஸ்டாலின் புன்னகைத்தார்.

    இறுதியில் சீர்காழியில் புதிய தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி அளித்தார்.

    • மதியம் 12 மணி முதல் விவாதம் நடந்து வருவதை நான் கவனமாகக் கேட்டு வருகிறேன்.
    • பல உறுப்பினர்களிடையே உண்மையாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பல தவறான கருத்துக்கள் இருப்பதாக நான் உணர்கிறேன்.

    பாராளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது கூறியதாவது:-

    அமைச்சரவையின் எனது சக அமைச்சர் அறிமுகப்படுத்திய மசோதாவை நான் ஆதரிக்கிறேன். மதியம் 12 மணி முதல் விவாதம் நடந்து வருவதை நான் கவனமாகக் கேட்டு வருகிறேன்.

    பல உறுப்பினர்களிடையே உண்மையாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பல தவறான கருத்துக்கள் இருப்பதாக நான் உணர்கிறேன்.

    மேலும், இந்த அவையின் மூலம் அந்த தவறான கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • அந்த உடல் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது
    • உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

    பஞ்சாபை சேர்ந்த 17 வயது சிறுவன் வைத்திருந்த ஐபோன் 11க்காக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை ஒன்றைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நவ்ஜோத் சிங். மார்ச் 24 அன்று நவ்ஜோத்தின் பிறந்தநாள். அதற்கு அடுத்த நாள் மார்ச் 25 அன்று தனது நண்பர்களுடன் ஹரித்வார் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.

    ஆனால் சிறிது நேரம் கழித்து தான் ஹரித்வார் செல்லவில்லை என்றும், மீண்டும் வீட்டுக்கு திரும்புவதாகவும் பெற்றோரிடம் போன் செய்து கூறியுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.

    அதே இரவு ரயில் நிலையத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த உடல் வயிற்றில் இருந்து இரண்டு துண்டுகளாக கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மார்பில் பல வெட்டுக் காயங்கள் இருந்தன. உடலை அடையாளம் காண முடியவில்லை.

    உடலை அடையாளம் காண ஊர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இதற்கிடையே மார்ச் 30 அன்று, ஹர்ஜிந்தர் சிங் தனது மகனைத் காணவில்லை என போலீசிடம் சென்றுள்ளார். அதன்பின் அந்த உடல் நவ்ஜோத் சிங் உடையது தான் என்று உறுதி செய்யப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில், நவ்ஜோத் அவரது நண்பர் அமன்ஜோத்தால் கொலை செய்யப்பட்டதைக் கண்டுபிடித்தனர். காரணம் நவ்ஜோத்தின் ஐபோன்-11. நவ்ஜோத்தை கொலை செய்து மற்றொரு நண்பன் உதவியுடன் உடல் ரெயில் பாதையில் கிடத்தப்பட்டுள்ளது. நவ்ஜோத்தின் மொபைலை அமன்ஜோத்திடமிருந்து போலீசார் மீட்டனர். அமன்ஜோத் கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • தவெக பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
    • சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார்.

    தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரம் முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.

    பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது.

    சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சிகளில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளி தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்து வழங்குவார் என கூறினார்.

    சுசித்ராவின் குற்றச்சாட்டிற்கு விஜய் அமைதியாக இருக்கிறார். காவல் துறையும் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்?

    இப்படி ஒரு சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து போதைப் பொருள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வக்ஃபு மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டப்பிரிவு 14, 25 மற்றும் 26-ஐ முற்றிலுமாக மீறிவது ஆகும். இது அரசியலமைப்பு எதிரானது.
    • மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சந்திராபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் சந்திராபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

    இந்த நிலையில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் (AIMIM) தேசிய செய்தி தொடர்பாளர் வரிஸ் பதான் கூறியதாவது:-

    இந்த மசோதா அரசியலமைப்பு எதிரானது. சட்டப்பிரிவு 14, 25 மற்றும் 26-ஐ முற்றிலுமாக மீறிவது ஆகும். இது அரசியலமைப்பு எதிரானது.

    மக்களவையில் பாஜக-வுக்கு மெஜாரிட்டி இல்லை. அவர்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற விரும்பினால், அவர்களுக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் மற்றும் ஜெயந்த் சவுத்ரியிடம் இருந்து ஆதரவு தேவை. இவர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தால் இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அவர்களை மன்னிக்கமாட்டார்கள்.

    இவ்வாறு வரிஸ் பதான் தெரிவித்தார்.

    • நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்தது
    • இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வார வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டன.

    ஆனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்து 76,024.51 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 353.654 புள்ளிகள் சரிந்து 23,165.70 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 592.93 புள்ளிகள் உயர்ந்து 76,671.44 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    நிஃப்டி 166.65 புள்ளிகள் உயர்ந்து 23,332.35 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.
    • முஸ்லிம் மற்றும் சிறுபான்மை நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

    வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவைப் பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசினார். இந்த திருத்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

    அக்கட்சியை சேர்ந்த எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி இன்று பாராளுமன்ற விவாதத்தின்போது பேசியதாவது, "இந்த மசோதாவை வடிவமைப்பதில் தெலுங்கு தேசம் கட்சியின் பங்கு, முஸ்லிம்களமற்றும் சிறுபான்மையினரின்  நலனுக்கான எங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

    எங்கள் கட்சி உருவானதிலிருந்து சிறுபான்மையினரின் நலனை உறுதி செய்வது எப்போதும் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது" என்று மசோதாவை ஆதரித்துப் பேசினார். 

    • நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.
    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்து கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கச்சத்தீவை மீட்டெடுப்பதாக இன்று (02.04.2025) தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுப்பதாக தமிழக அரசு சட்டசபையில் இன்று (02.04.2025) தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது.

    இதை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக இணைந்து நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும்.

    அனைவரும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், தடையையும் ஏற்படுத்தாமல், உடனடியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒருமனதாக நடைமுறைக்கு கொண்டு வந்து கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு ஒன்றையே கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை முறைப்படுத்தி, ஏற்கனவே கச்சத்தீவிற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, மீண்டும் கச்சத்தீவை நமது இந்தியாவுடன் இணைக்க வேண்டும்.

    பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை செல்லும் பொழுது கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும்.

    மீனவர்களுக்காக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மேலும் நீட்டிக்காமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த முழுமையான உண்மைகளை மத்திய பாஜக அரசு கூறவில்லை.
    • அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வக்பு மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தி.மு.க எம்.பி ஆ.ராசா கூறியுள்ளார்.

    மேலும், அரசியல் நிர்ணய சபைக்கு வல்லபாய் பட்டேல் அளித்த அறிக்கையை மேற்கோள் காட்டி மக்களவையில் எம்.பி ஆ.ராசா பேசியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்த முழுமையான உண்மைகளை மத்திய பாஜக அரசு கூறவில்லை.

    பாராளுமன்ற கூட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் வக்பு மசோதாவில் பிரதிபலிக்கவில்லை.

    சிறுபான்மையினருக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர்.

    ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 5 ரெயில்வே பணியாளர்கள், 4 CISF வீரர்கள் காயமடைந்தனர்.

    தகவலின்படி, ஆலைகளுக்காக தனியாரால் இயக்கப்படும் ரெயில்வே தடத்தில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இரண்டு ரெயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் உயிரிழந்த நிலக்கரி ஏற்றிவந்த ரெயிலின் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் நேற்றைய தினத்துடன் ஓய்வு பெற இருந்தார். மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் கங்கேஸ்வர் மால்.

    நேற்று ஓய்வு பெறுவதற்கு முன் தனது கடைசி பயணத்தின்போதுதான் இந்த துயர சம்பவம் அவருக்கு நேர்ந்திருக்கிறது. நேற்று அந்த பயணம் முடிந்த பின் இரவில் தனது வீட்டில் ஓய்வு பெறுவதை கொண்டாடும் விதமாக விருந்தில் கலந்து கொள்ள இருந்தார்.

    அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர். கடைசியாக தான் சீக்கிரம் வந்து விருந்தில் கலந்துகொள்வேன் என அவர் போனில் கூறியிருக்கிறார்.

    ஆனால் அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் அவரது குடும்பத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறது. இறந்த கங்கேஸ்வர் மால் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களின் மொத்த உலகமும் நொறுங்கிவிட்டது என கங்கேஸ்வர் மாலின் மகள் துயரத்துடன் தெரிவிக்கிறார். 

    • உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி என அழைத்துக் கொள்கிறது.
    • ஆனால், இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது- அகிலேஷ்.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது சமாஜ்வாடி கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் பேசும்போது "பாஜக கட்சி உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி என தாங்களாகவே கொள்கிறது. ஆனால், இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது" என கிண்டல் செய்யும் வகையில் கூறினார்.

    அதற்கு பதில் அளித்த அமித் ஷா "இங்கு என் முன் அமர்ந்துள்ள அனைத்து கட்சிகளிலும், அவர்களுடைய தேசிய தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

    நாங்கள் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து, 12 முதல் 13 கோடி உறுப்பினர்களிடமிருந்து தேர்வு செய்வோம். இதனால் கொஞ்சம் நேரம் பிடிக்கும். உங்களுடைய முறையில் அதிக நேரம் எடுக்காது. நீங்கள் இன்னும் 25 வருடத்திற்கு தலைவராக இருப்பீர்கள் எனச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார்.

    பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். பாஜக கட்சி விதிப்படி பாஜக தலைவர், அரசு பதவியில் இருக்கக் கூடாது. இதனால் விரைவாில் பாஜக புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 4 பேருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் ஊராட்சி, பாலமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 34). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகந்தி (33), மகன்கள் லியோ டேனியல் (10), ஜோ டேனியல் (5). நேற்று மாலை ஹரிதாஸ், திருப்போரூரை அடுத்த காயார் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனைவி மற்றும் 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 11 மணி அளவில் ஹரிதாஸ் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் தையூர் நோக்கி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே வந்தபோது எதிரே காயார் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரிதாஸ், அவரது மனைவி சுகந்தி, மகன் லியோ டேனியல் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மகன் ஜோ டேனியல் படுகாயம் அடைந்தார்.

    தகவல் அறிந்ததும் காயார் போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காயார் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார், அவரது மனைவி பிந்து, மகன் அபினேஷ் பால்மோனி ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அஸ்வின்குமார் கேளம்பாக்கத்தில் செருப்பு கடை வைத்துள்ளார். அவர் இரவு கடையில் வியாபாரம் முடிந்து காரில் குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி உள்ளார்.

    விபத்தில் காயம் அடைந்த சிறுவன் ஜோ டேனியல், அஸ்வின் குமார் உள்பட 4 பேருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×