என் மலர்tooltip icon

    இந்தியா

    • குஜராத்தில் ஜாகுவார் போர் விமானத்தில் விமானிகள் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
    • ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் திடீரென வெடித்துச் சிதறியது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.

    தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு பைலட்டை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரவு நேரத்தில் பயிற்சி விமானம் வெடித்துச் சிதறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 169 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய குஜராத் 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் லிவிங்ஸ்டன்-சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடியது.

    லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார். சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. சுப்மன் கில் 14 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சாய் சுதர்சன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 31 பந்தில் அரை சதம் கடந்தார். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் குஜராத் பெறும் 2-வது வெற்றி இதுவாகும். இது ஆர்சிபி அணி பெற்ற முதல் தோல்வி ஆகும்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார்.
    • அங்கு அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்ற அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

    வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக இருதரப்பினரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.

    அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதி. அதற்கு வசதியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை இன்று சந்தித்துப் பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    கடந்த சில நாட்களாக பா.ஜ.க-அ.தி.மு.க. தலைவர்கள் இடையேயான சந்திப்பு தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.

    • மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
    • வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தங்களது உரையை நிகழ்த்தி வருகின்றனர்.

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி தாக்கல் செய்தது. பின் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தங்களது உரையை நிகழ்த்தி வருகின்றனர்.

    மக்களவையில் வக்ஃப் மசோதாவை எதிர்த்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.,"இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மக்களவையில் வக்ஃப் மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி," இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி இது. நீதித்துறையின் மீது நேரடித் தாக்குதல் இது.." என்று கூறினார்.

    மக்களவையில் தனது எதிர்ப்பை பதிவு செய்த இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன்," பாஜக ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த வக்ஃப் மசோதாவை கொண்டு வருகிறது என்பது புரிகிறது. 2 காரணங்களுக்காக இந்த வக்ஃப் மசோதாவை நான் எதிர்க்கிறேன்" என்றார்.

    • நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம் புரண்டன.
    • விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

    ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையம் அருகே நான்டெட்-சம்பல்பூர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ரயிலின் பின்புறத்தில் உள்ள சிட்டிங் கம் லக்கேஜ் ரேக் (SLR) க்கு அருகில் அமைந்துள்ள ஜெனரல் சிட்டிங் (GS) பெட்டியின் சக்கரங்கள், இன்று (புதன்கிழமை) காலை 11:56 மணிக்கு ரயில் புறப்படும்போது விஜயநகரம் ரெயில் நிலைய யார்டில் தடம் புரண்டன.

    அதிர்ஷ்டவசமாக, சம்பவம் நடந்தபோது ரெயில் மிகவும் மெதுவான வேகத்தில் நகர்ந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம்புரண்ட பெட்டிகள் பிரிக்கப்பட்டு தேவையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு, ரெயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது என்று தெரிவித்தனர்.

    முன்னதாக கடந்த திங்கள்கிழமை இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்ட பெங்களூரு-காமாக்யா ஏசி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் 11 பெட்டிகள் அசாம் மாநிலத்தில் தடம் புரண்டன. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 

    • லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு (76 வயது) திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அவரின் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

    எனவே பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு லாலு பிரசாத் யாதவ் புறப்பட்டுச் சென்றார். இரவு ஏழு மணிக்கு டெல்லிக்கு விமானம் மூலம் லாலு புறப்பட்டார்.  

    • ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு.
    • தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    டி.என்.பி.எஸ்.சி.யில் ஒருமுறை பதிவிற்கான கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    அதன்படி, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டணத்தைச் செலுத்த யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று கூறி உள்ளதாவது:

    2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தேர்வர்களின் நலன் கருதியும் தெரிவுப் பணிகளை விரைவுபடுத்தவும் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் 7557 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்குத் தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த 441 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப் பணியிடங்கள் (shortfall vacancies) நிரப்பப்பட்டுள்ளன. கட்டணங்களை UPI மூலம் செலுத்தலாம்

    ஒருமுறை பதிவிற்கான கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் செலுத்துவதை எளிமைப்படுத்தும் விதமாக, UPI மூலம் செலுத்தும் வசதியை தேர்வாணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இந்த மனுக்கள் இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • 6 வாரத்திற்கு பின் பைக் டாக்சிகள் இயக்கம் நிறுத்தப்பட்டதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்

     ஓலா, ரேபிடோ, உபேர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகளை நிறுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக அங்கீகரிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு உபர் இந்தியா மற்றும் பிற நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன.

    இந்த மனுக்கள் இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.

    மேலும் மாநில அரசு மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் பொருத்தமான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இயற்றும் வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகளை 6 வாரங்களுக்குள் தடை செய்ய உத்தரவிட்ட அவர், 6 வாரத்திற்கு பின் பைக் டாக்சிகள் இயக்கம் நிறுத்தப்பட்டதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    • வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
    • லாலு பிரசாத்தின் விருப்பங்களை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை

    வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி தாக்கல் செய்தது. பின் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சிகள் மசோதா தொடர்பான தவறான கருத்துக்களை நாடு முழுவதும் பரப்ப முயற்சிக்கிறது என்று பேசினார்.

    தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆசையை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் என்று அமித் ஷா தெரிவித்தார்.

    கடந்த 2013 இல் காங்கிரஸ் கூட்டணி அரசு வக்பு திருத்தங்கள் கொண்டுவந்தத்து. அந்த சமயத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், "அரசு முன்வைத்த திருத்த மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். பெரும்பாலான நிலங்கள், அது அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருந்தாலும் சரி, வேறுவிதமாக இருந்தாலும் சரி, அபகரிக்கப்பட்டுள்ளன.

    வக்பு வாரியத்தில் உள்ளவர்கள் அனைத்து பிரதான நிலங்களையும் விற்றுவிட்டனர். பாட்னாவில், டாக் பங்களா சொத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    இது போன்ற ஏராளமான கொள்ளை நடந்துள்ளது. நாங்கள் திருத்தங்களை ஆதரிக்கிறோம், ஆனால் அரசாங்கம் எதிர்காலத்தில் ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்து அத்தகையவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

    இதை இன்று அவையில் மேற்கோள் காட்டிய அமித் ஷா, எதிர்க்கட்சி இருக்கைகளை சுட்டிக்காட்டி, "லாலு பிரசாத்தின் விருப்பங்களை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அதைச் செய்கிறார். லாலு ஜி கடுமையான சட்டம் வேண்டும் என்று கேட்டிருந்தார்" என்றார். லாலு பிரசாத் அப்போது பேசிய வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • திருச்சி- 37.1 டிகிரி செல்சியஸ், தர்மபுரி- 36.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. இந்த நிலை இன்னும் சில தினங்களில் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதாவது, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் சதம் அடித்து வந்த வெயில் சற்று குறைந்துள்ளது.

    இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 99.68 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து, கரூர் பரமத்தியில் 37.5 டிகிரி செல்சியஸ், சேலம்- 36.6 டிகிரி செல்சியஸ், மதுரை- 36.5 டிகிரி செல்சியஸ், வேலூர் 36.2 டிகிரி செல்சியஸ், திருத்தணி 35.8 டிகிரி செல்சியஸ், சென்னை மீனம்பாக்கம்- 35.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

    திருச்சி- 37.1 டிகிரி செல்சியஸ், தர்மபுரி- 36.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

    • அராஜகம் அரசியல், கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்.
    • கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    9.ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத் தொண்டன் என்பதிலும், அண்ணா தி.மு.க.-வின் முதல் தியாகி என்பதிலும் பெருமை கொண்டவன்.

    பதவிக்காகவும் ஆதாயத்துக்காகவும் நான் அதிமுக-வில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத்தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜா.அணி- ஜெ.அணி இணைப்புக்கும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க. ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில்தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுகவுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.

    1. எம்.ஜி.ஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசுவது, சுவரொட்டி மற்றும் பேனர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்துவது.

    2. பிரிந்து கிடக்கும் அதிமுக-வினரை ஒற்றுமைப்படுத்துவது.

    3. பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது

    அண்ணா திமுக-வின் குலதெய்வம் புரட்சித்தலைவர். அந்தக் குலதெய்வத்தின் கொள்கை வழி நின்று அவரது புகழை, சிறப்பை இன்னும் அதிகமாக முதன்மைப்படுத்த வேண்டும். திரைப்படத்தில் சொன்ன கருத்துக்களை எல்லாம் ஆட்சியில் செய்துகாட்டியவர். இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார்.

    அராஜகம் அரசியல், கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

    கட்சிக்கு ஏன் இந்த தொடர் தோல்விகள், தொண்டனுக்கு ஏன் இந்த சோர்வு, இந்த தோல்வியை எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்தால் கட்சியின் ஒற்றுமை, கூட்டணி பலம் ஆகியவற்றின் தேவை புரியும்.

    தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல புரட்சித்தலைவர் மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

    1. மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    2. இந்திரா காந்தி தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான அண்ணா திமுக அனுமதி கொடுக்காததால் உறவு முறிந்தது. பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணா திமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்லி அடைந்தது.

    3. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் சென்று என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார்.

    4. அதன் பிறகு, காங்கிரஸ் உடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து திமுக-வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

    5. அதன் அடையாளமாக திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலிய சென்று ஆதரவு கொடுத்தார்.

    7. திமுக கூட்டணியை பிரிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரசாரம் செய்து வெற்றிபெற வைந்தார். இது அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.

    8. 1981-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடல்நலம் பாதித்திருந்தபோது இந்திரா காந்தி நேரடியாக வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தர சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளை செய்து தந்தார்.

    1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்ணா திமுக-வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பயன்தந்தது.

    இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்றபோது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்ஜிஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.

    இவ்வாறு சைதை துரைசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2005) வழங்கினார்.
    • 2ம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்னை முதல் சிறுசேரி சிப்காட் மெட்ரோ வரை).

    வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) மற்றும் வழித்தடம் 5 மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) ஆகிய முன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம் பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 1,189 கி.மீ நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் (Letter of Acceptance) டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பு கடிதத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2005) வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் அபித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணியின் நோக்கம் இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள் மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் இதில் அடங்கும்.

    இதற்கான ஒப்பந்த காலம். இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×