search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train driver"

    “கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்து விட்டேன்” எனக்கூறி சரக்கு ரெயிலை பாதியில் நிறுத்திய என்ஜின் டிரைவரால் சீர்காழி அருகே 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமாக வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் ரெயில்களில் வந்து செல்வர். பயணிகள் ரெயில் மட்டும் வைத்தீஸ்வரன்கோவில் ரெயில் நிலையத்தில் தினமும் 2 நிமிடம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது வழக்கம். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2 மட்டும் தினமும் 2 தடவை நின்று செல்லும்.

    இதேபோல் நெய்வேலியில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு தினமும் சரக்கு ரெயில்கள் நிலக்கரி ஏற்றி இவ்வழியே அதிகளவில் செல்லும். ஆனால் இந்த ரெயில்கள் எந்த ரெயில் நிலையத்திலும் நின்று செல்லாது.

    இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலைய மாஸ்டர் அந்த ரெயில் தடையின்றி செல்ல சிக்னலை மாற்றி விட்டு ரெயில் நிலையத்தை கடந்து செல்ல காத்திருந்தார்.

    ஆனால் அந்த ரெயில் எந்த முன்னறிவிப்புமின்றி வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஸ்டேசன் மாஸ்டர் உடனடியாக சரக்கு ரெயிலை இயக்கி வந்த என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் சென்று ‘எதனால் ரெயிலை நிறுத்தினீர்கள்’ என்று கேட்டார்.

    அப்போது அவர் “எனக்கு 12 மணிநேரம் மட்டுமே பணி. ஆனால் கூடுதலாக 15 நிமிடம் ரெயிலை இயக்கி வந்துள்ளேன். இதனால் மேற்கொண்டு என்னால் ரெயிலை இயக்க முடியாது” என்று கூறியதால் ஸ்டேசன் மாஸ்டர் அதிர்ச்சியடைந்தார்.

    இந்த சரக்கு ரெயில் திடீரென நிறுத்தப்பட்டதால் அங்கு புறப்பட தயாராக இருந்த திருப்பதி-காரைக்கால் ரெயிலும் இயக்க தாமதமானது. மேலும் அதிக பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சுமார் 100 மீட்டர் வரை பெட்டிகளுடன் நின்றதால் வைத்தீஸ்வரன்கோவில்-புங்கனூர் ரெயில்வே கேட்டை கடந்தும் பெட்டிகள் நின்றிருந்தது. இதனால் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் மினிபஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    இதனால் ஸ்டடேசன் மாஸ்டர் மற்றும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் சென்று என்ஜின் டிரைவர் முத்துராஜாவிடம் ரெயிலை இயக்கி செல்லுமாறு கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

    இதையடுத்து சுமார் 2 மணிநேரம் வரை ரெயில் வைத்தீஸ்வரன் கோவிலில் நிறுத்தப்பட்டது. பின்னர் ‘அருகிலுள்ள மாயவரம் ரெயில் நிலையத்திலாவது தற்சமயம் சரக்கு ரெயிலை கொண்டு சென்று நிறுத்துங்கள்’ என்று ஸ்டேசன் மாஸ்டர் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து சற்று இறங்கி வந்த டிரைவர் 2 மணி நேர தாமதத்துக்குப்பிறகு சரக்கு ரெயிலை அங்கிருந்து இயக்கி சென்றார். இதன் காரணமாக இவ்வழியே செல்ல வேண்டிய மற்ற ரெயில்கள் அருகில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

    அப்போது ரெயில் பயணிகள் ஆவேசத்துடன், ‘இதுபோன்ற ரெயில்வே ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக அக்கறை கூட இல்லாத இவரை போன்ற சிலரால் பல்வேறு பொதுப்பணிகள் பாதிக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #VaitheeswaranKoilRailwayStation

    பரங்கிமலை ரெயில் விபத்து விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. விபத்தில் தொடர்புடைய மின்சார ரெயில் டிரைவர், ‘கார்டு’ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Parangimalai #TrainAccident #StThomas
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பான விசாரணையை ரெயில்வே போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு எண் 174(மர்ம சாவு, சந்தேக மரணம்) பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி (சனிக்கிழமை) முதற்கட்ட விசாரணை சென்டிரல் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. இரா.ரவி தலைமையில் நடந்தது. இதில் ரெயில் விபத்து நடந்தபோது அந்த மின்சார ரெயிலை இயக்கிய டிரைவர், ‘கார்டு’ மற்றும் கடற்கரை, மாம்பலம், பரங்கிமலை ரெயில் நிலைய அதிகாரிகள் என 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    அன்றைய தினம் ரெயில் விபத்து எப்படி ஏற்பட்டது? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நடந்து முடிந்த முதற்கட்ட விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அன்றைய தினம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில் டிரைவர், ‘ரெயிலை இயக்குவது மட்டும் தான் என்னுடைய வேலை. கூட்டம் அதிகமாக இருப்பது குறித்தும், பயணிகள் படிக்கட்டில் தொங்கி வருவது குறித்தும் ‘கார்டு’ தனக்கு தகவல் அளிக்கவில்லை என்றும், அவர் தகவல் அளித்து இருந்தால் பக்கவாட்டு சுவர் இருந்த இடத்தில் வேகத்தை குறைத்து இருப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இந்திய குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழான வழக்கை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(ஏ)-க்கு (உள்நோக்கம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல்) மாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மின்சார ரெயில் டிரைவர், கார்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதையடுத்து வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட விசாரணையில் ஆஜரான 5 பேரும் மீண்டும் ஆஜராகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அன்றைய தினம் சாதாரண பாதையில் இருந்து விரைவு பாதையில் செல்வதற்கு அதிகாரம் அளித்த அதிகாரியையும், மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைத்து இருக்கின்றனர்.

    இந்த விசாரணையில் ரெயில் விபத்து குறித்து முழு தகவல்களும், என்னென்ன மாதிரியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்ற தகவல்களும் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
    ×