என் மலர்
ஆசிரியர் தேர்வு
- உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் நடந்து வருகிறது.
- இந்தப் போரை நிறுத்த 28 அம்சம் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரை செய்தார்.
வாஷிங்டன்:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதாக உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. மூன்றரை ஆண்டுகளைத் தாண்டியும் இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே போரை நிறுத்த 28 அம்சம் கொண்ட ஒரு அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி அந்த ஒப்பந்தத்தை உக்ரைன் நிராகரித்தது.
இந்நிலையில், ரஷியா-உக்ரைன் போரில் கடந்த மாதம் மட்டும் இரு தரப்பைச் சேர்ந்த 25 ஆயிரம் வீரர்கள் பலியாகினர் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
எனவே இந்தப் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய தூதுக்குழுவை அமெரிக்க அதிகாரிகள் அபுதாபியில் சந்தித்துப் பேசினர். இதன்மூலம் போர் நிறுத்தத்துக்கான அமைதி ஒப்பந்தத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான ஷ்ரேயா லீலேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன.
- பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு அரியானா போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.
சண்டிகர்:
எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.
இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
இதற்கிடையே, வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு அரியானா போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.
இந்நிலையில், அரியானாவில் ஒவ்வொரு வாரமும் விஐபி மற்றும் பேன்சி எண்கள் ஏலம் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஏலம் நடைபெறும்.
இந்த ஏலம் அதிகாரப்பூர்வ fancy.parivahan.gov.in போர்ட்டலில் முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த வாரம், ஏலத்திற்கு வந்த அனைத்து எண்களிலும், HR88B8888 என்ற பதிவு எண்ணின் அடிப்படை ஏல விலை ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டது. இது ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது, பின்னர் மாலை 5 மணிக்கு ரூ. 1.17 கோடிக்கு முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் HR88B8888 என்ற எண் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண்ணாக ரூ.1.17 கோடிக்கு மாறியுள்ளது.
இதுபோன்ற எண்களை பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஏலத்தில் எடுப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
- தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருகிறது
தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சீனாவின் அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்து வருவதால், 2027ம் ஆண்டுக்குள் தைவான் உயர்மட்ட போர் தயார்நிலையை அடையும் என்று அந்நாட்டு அதிபர் லாய் சிங்-டே அறிவித்துள்ளார்.
மேலும்,தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருவதாக கூறிய லாய் சிங்-டே, ராணுவத்தை பலப்படுத்த $40 பில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
- காமன்வெல்த் போட்டி நிர்வாகக்குழு அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த பரிந்துரை செய்தது.
- இன்று கிளாஸ்கோ நகரில் காமல்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியா நடத்த ஆர்வம் காட்டி வந்தது. அதன்படி இந்தியா சார்பில் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனையடுத்து காமன்வெல்த் போட்டி நிர்வாகக்குழு அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த பரிந்துரை செய்தது.
இன்று கிளாஸ்கோ நகரில் காமல்வெல்த் விளையாட்டின் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், .2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்தியா 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை போட்டியை அகமதாபாத்தில் நடத்த விரும்புகிறது. காமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஒலிம்பிக் போட்டிக்கான முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது. .
இந்தியா கடைசியாக 2010ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் WAVES Film Bazaar பிரிவின் கீழ் "சிறந்த திரைப்பட அடையாள விருதை ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது.
படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.
தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது.

ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன் 6 போட்டியில் பங்கேற்று, அதில் அடாப்ட் செய்யப்பட்ட குறும்பட திரைக்கதைக்கான இறுதிப்போட்டி விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நடிப்பின் மூலம் கவனம் பெற்ற ஆண்டனி மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் முல்லையரசி , சிறுவனாக சுபாஷ் ஆகியோர் கதையின் மாந்தர்களாக நடித்து உள்ளனர்.
ஆக்காட்டி திரைப்படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கவிஞர் கார்த்திக் நேத்தா இரு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்ப பட்டிருக்கும் ஆக்காட்டி திரைப்படம், விரைவில் நற்செய்தியுடன் முதல் பார்வையை வெளியிடும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.
- செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
- த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் இன்று சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினர். இதுகுறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் நாளை த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இன்று அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயை செங்கோட்டையன் இன்று சந்தித்து பேசினார். இதனால் த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதே சமயம், ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரனும் த.வெ.க. கூட்டணியில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், மேலும் சில அ.தி.மு.க. முக்கிய புள்ளிகளும் த.வெ.க.வில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்தால்?
தற்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. அதே சமயம் த.வெ.க. கட்சியுடன் கூட்டணி அமையவேண்டும் என்ற தனது ஆசையை எடப்பாடி அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார். ஆனால் கொள்கை எதிரி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார்.
அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க.வும் இருப்பதால் அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணிக்கான சாத்தியக்கூறு இப்போதைக்கு இல்லை என்று கூறப்பட்டது.
தற்போது த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்தால் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறு கிட்டத்தட்ட இல்லை என நிலை உருவாகியுள்ளது.
பாஜகவின் மாஸ்டர் பிளான்:
த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை கழட்டிவிடலாம் என்று அ.தி.மு.க. திட்டமிட்டிருந்ததாக தகவல் கசிந்தன. இந்நிலையில், செங்கோட்டையனை வைத்து அ.தி.மு.க. வின் இந்த 'ரகசிய' திட்டத்திற்கு பா.ஜ.க. முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை பா.ஜ.க. இறுக்கி பிடித்துள்ளது. மேலும், ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரன் என முக்கிய புள்ளிகளை அ.தி.மு.க.வில் இணைக்க விடாமல் விஜயின் பக்கம் பாஜக தள்ளியுள்ளது.
இதன்மூலம் ஏற்கனவே 'பலவீனப்பட்டு' இருக்கும் அ.தி.மு.க.வை மேலும் பலவீனப்படுத்தும் வேலையை பா.ஜ.க. செய்துள்ளது.
செங்கோட்டையன் மூலம் கொங்கு மாவட்ட வாக்குக்களையும் ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரன் மூலம் தென் மாவட்ட வாக்குகளையும் அறுவடை செய்ய த.வெ.க.விற்கு இது நல்ல வாய்ப்பாக மாறியுள்ளது.
இதன்மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க. - த.வெ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒருவேளை தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. என்ற கட்சியை பலவீனப்படுத்துவதன் வழி 2031 இல் தி.மு.க.வுக்கு போட்டியாக உருவெடுக்க பா.ஜ.க.வுக்கு இந்த திட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ பா.ஜ.க.வின் இந்த மாஸ்டர் பிளான் 50 ஆண்டுகால வரலாறு கொண்ட அ.தி.மு.க.விற்கு முடிவுரையும் புதிய குழந்தையான த.வெ.க.விற்கு புதிய வழியையும் ஏற்படுத்தும். இதன்மூலம் தமிழ்நாட்டிலும் 'கூட்டணி ஆட்சி' என்ற தனது அஸ்திரம் மூலம் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. காய் நகர்த்தி வருகிறது.
- இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும்
- இதற்கு மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும்
புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கம் மொத்தம் 31.636 கிலோமீட்டர் நீளத்திற்கு 28 உயர்த்தப்பட்ட நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்து ஆவணங்களை தமிழக அரசுக்கு, மத்திய அரசு திருப்பி அனுப்பி இருந்தது பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த மாதம் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
- 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்துகிறதோ, அப்போதெல்லாம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடந்த 18-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், இலா.தியோடர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த கூட்டத்தின் முடிவில், அடுத்தகட்ட போராட்டமாக அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டார அளவில் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 27-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாக மாற்றுகிறது.
- காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்றும் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (UNCTAD) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.
காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
மேலும், 2023-24 ஆம் ஆண்டில் காசாவின் பொருளாதாரம் 87% சுருங்கியது என்றும், காசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 161 டாலர் ஆக இருந்தது என்றும், இது உலகளவில் மிகக் குறைவு என்றும் அறிக்கை கூறியுள்ளது.
பாலஸ்தீன சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்களின்படி கடந்த 2 ஆண்டுகளில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 69,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே கடந்த மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் கடந்த 44 நாட்களில் 500 க்கும் அதிகமான முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஜனநாயகன் டிரெய்லர் புத்தாண்டு தினமான ஜனவரி 1, 2026 இல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
- ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மௌல்வி இர்பான் அகமது மூலம் முதன்முதலில் உமர் உடன் அமீருக்கு தொடர்பு கிடைத்துள்ளது.
- அவர் தன்னைத் தானே எமிர் (மன்னர்) என்று அழைத்துக்கொண்டார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே 15 பேர் உயிரிழந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.
அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீரை டாக்டர் உமர்-உன்-நபி இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியதாக அறியப்படுகிறது.
உமர் உடன் தொடர்புடைய 3 மருத்துவர்கள், தாக்குதலுக்கு பயனப்டுத்தப்பட்ட காரை வாங்கி தந்த டீலர் உட்பட 6 பேரை கைது செய்து என்ஐஏ விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான முசாமில் ஷகீல் விசாரணையின்போது அமீர் பற்றிய சில தகவல்களை என்ஐஏவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மௌல்வி இர்பான் அகமது மூலம் முதன்முதலில் உமர் உடன் அமீருக்கு தொடர்பு கிடைத்துள்ளது.
விசாரணை வட்டாரங்களின்படி, "உமர்-உன்-நபி ஒன்பது மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அணு விஞ்ஞானியாக எளிதில் மாறும் அளவுக்கு அவர் புத்திசாலி. அவர் தன்னைத் தானே எமிர் (மன்னர்) என்று அழைத்துக்கொண்டார். மதத்திற்காக இதையெல்லாம் செய்கிறேன் என்று இறுதிவரை என்னை நம்ப வைத்தார்" என்று முசாமில் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் விசாரணை வட்டாரங்களின்படி, 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் உமர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அரியானாவில் மேவாட்-நூ பகுதியில் வகுப்புவாத மோதல்கள் மற்றும் பசு பாதுகாவலர்களால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக உமர் அடிக்கடி கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலைத் தாக்குதலுக்கு, அசிட்டோன், சர்க்கரைப் பொடி மற்றும் யூரியாவைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சூடேக்சில் வைத்து அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும்,அல் பாலா பல்கலைக்கழகத்தில் உள்ள தனது அறையில் வெடிகுண்டு தயாரிக்கும் பரிசோதனைகளை உமர் செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.






