என் மலர்
ஆசிரியர் தேர்வு
- மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன.
- 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. அப்போது கும்புக்கனை நகர சாலையில் சென்ற ஒரு பஸ்சை வெள்ளம் அடித்துச் சென்றது.
தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் பஸ்சை மீட்டு பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அதேசமயம் அம்பாறை பகுதியில் கார் அடித்துச்செல்லப்பட்டு 3 பேர் இறந்தனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் அங்கு சென்றதும் அவர்களை தேடும் பணி நடைபெற்றது.
எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. 6000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்துள்ளனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. மட்டக்களப்பின் தென் கிழக்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. எனவே 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
இதனால் வெள்ள பாதிப்பை எதிர்கொள்வது குறித்து அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் ‘பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.
- விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்களில் ஒருவர் முரளி. அவரது மூத்த மகனான அதர்வா வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிக்கிறார். அதர்வாவின் நடிப்பில் இந்தாண்டு வெளியான டி.என்.ஏ. படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகனுடன் 'பராசக்தி' படத்திலும் நடித்துள்ளார்.
அதர்வாவிடம் 'வாரிசு நடிகர் என்ற விமர்சனத்தை எப்படி எதிர்கொண்டீர்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா பதிலளிக்கையில் ''விமர்சனங்கள் பெரியளவில் வரவில்லை என்றாலும், எனக்கும் சவால்கள் என்பது இருந்தது. என்னதான் ஒரு அடையாளத்துடன் வந்தாலும், நான் சந்தித்த ஒவ்வொரு களமும் எனக்கென உத்வேகத்தை தந்தது. அடையாளத்தை ஏற்படுத்தியது. எனவே விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை'', என்றார்.
- கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
- உரிமை கோரல் காலம் டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை:
வருகிற 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
* சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க வரும் 4-ந்தேதி வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 9-ந்தேதி அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
* 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில் 4-ந்தேதிக்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயர் 9-ந்தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். ஆனால் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
* மூன்று முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
* வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோருதல் காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
* உரிமை கோரல் காலம் டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க மனு கொடுக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
* அறிவிப்புக் காலம் வருகிற 9-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அந்த வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விசாரணை நடத்தப்படும்.
* வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரை பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் இடத்தில் லண்டன் இடம்பிடித்துள்ளது.
- கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.
புதுடெல்லி:
கனடாவை தலைமையிடமாக கொண்ட ரெசோனன்ஸ் கன்சல்டன்சி என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
சுமார் 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களை மதிப்பீடு செய்து இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் முதல் இடத்தில் லண்டன், 2-வது இடத்தில் நியூயார்க், 3-வது இடத்தில் பாரிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் இருந்து பெங்களூரு 29-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும், டெல்லி 54-வது இடத்திலும், ஐதராபாத் 82-வது இடத்திலும் உள்ளது.
தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, பெரு நிறுவன தளங்கள் விரிவுபடுத்தப்படுவது போன்றவற்றுக்காக பெங்களூரு நகரத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
- இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன.
- இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.
புதுடெல்லி:
இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை முதல் சீசன் நடைபெற்றது.
இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.
இந்நிலையில், பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்த அவர், கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு. அணியின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் எடுத்துள்ளது.
- நியூசிலாந்தின் அமெலியா கெரை ரூ.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.
புதுடெல்லி:
4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீராங்கனைகள் விவரம் வருமாறு:
தீப்தி சர்மா: ரூ.3.20 கோடி- உபி வாரியர்ஸ்
அமெலியா கெர்: ரூ.3 கோடி-மும்பை இந்தியன்ஸ்
ஷிகா பாண்டே: ரூ.2.40 கோடி-உபி வாரியர்ஸ்
சோபி டிவைன்: ரூ.2 கோடி- குஜராத் ஜெயண்ட்ஸ்
மெக் லானிங்: ரூ.1.9 கோடி - உபி வாரியர்ஸ்
- தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.
- பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது.
பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'.
தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. குந்தன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்திருந்தார். படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.
இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein). இதில் ஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. அந்த கதையோடு தொடர்புடையது என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் நாளை, 28ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான 'உசே கெனா' மனதை உருக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில் ரே இஷ்க் மெய்ன் புரமோஷனுக்காக வாரணாசி சென்றுள்ள தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நினைவுப் பாதையில் ஒரு நடை. இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது. குந்தன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும் என்னை விட்டு விலக மறுக்கும் ஒரு கதாபாத்திரம்.
பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது. மக்கள் என்னை அழைக்கும்போது நான் இன்னும் திரும்பிச் சிரிக்கிறேன்.
எனக்கு குந்தனைக் கொடுத்த மனிதருடன் இப்போது அதே பாதைகளில் நடந்து, அதே வீட்டின் முன் அமர்ந்து, அதே தேநீர் கடையில் இருந்து தேநீர் அருந்தி, புனித கங்கைக் கரையில் நடந்து, ஒரு முழு வட்டம் பூர்த்தியானது போல் உணர்கிறேன். இப்போது ஷங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன்… நாளை வெளியாகிறது. ஹர் ஹர் மகாதேவ்" என்று பதிவிட்டுள்ளார்.
- அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்
- ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.
கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.
தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர். இந்த பிரச்சனைக்கு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய டிகே சிவகுமார் "வார்த்தையின் சக்தி தான் உலகத்தின் சக்தி. உலகின் மிகப்பெரிய சக்தி ஒருவரின் வார்த்தையைக் காப்பாற்றுவதாகும். அது ஒரு நீதிபதியாக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, நான் உட்பட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் சொன்னபடி நடக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதிலளித்த சித்தராமையா, "கர்நாடக மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒரு குறிப்பிட்ட கணதிற்கு அல்ல, ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் ஒரு பொறுப்பு.
நான் உட்பட காங்கிரஸ் கட்சி, நமது மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் நடந்து வருகிறது. கர்நாடகக்கு நாம் கோடுத்த வாக்கு வெறும் முழக்கம் அல்ல. அந்த வார்த்தை தான் நமது உலகம்" என்று தெரிவித்துள்ளார்.
இரு தலைவர்களிடையே வெளிப்படையாக வார்த்தை மோதல் உருவாகி உள்ளது காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
- உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரேசில் அரசாங்கம் புதன்கிழமை உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சாவ் பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'புட்டான்டன்-டிவி' எனப்படும் இந்த தடுப்பூசி 12 முதல் 59 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட தகுந்தது.
தற்போது கிடைக்கக்கூடிய டெங்கு தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது.
பிரேசிலில் 16,000 தன்னார்வலர்களிடம் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
2024 ஆம் ஆண்டில் உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பாதி பிரேசிலில் நிகழ்ந்தன.
- விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.
- தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம்.
தமிழகத்தில் 6.24 கோடி வாக்காளர்களுக்கு 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களிடம் பெறப்பட்ட 4.53 கோடி (70.70%) விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.
- முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது புகழ் ஓங்குக!
தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!
பதவிகளைத் துச்சமாக நினைத்து, #SocialJustice-ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர்!
தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!
#EWS, #NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.
சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்! என்று கூறியுள்ளார்.
- இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'LIK' படத்தின் 2வது பாடல் 'பட்டுமா' இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதுதொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு முன்னதாகவே தெரிவித்து இருந்த நிலையில், தற்போது ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.
அனிருத் இசையில் உருவாகி உள்ள 'பட்டுமா' பாடல் வரிகளை படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






