என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெயில் தாக்கம், ரம்ஜான் எதிரொலி: நாமக்கல் பண்ணைகளில் 15 கோடி முட்டைகள் தேக்கம்- விலை தொடர் சரிவு
- முட்டை விலை கடந்த வாரம் 40 காசுகள் சரிந்த நிலையில் 500 காசுகளாக நீடித்தது.
- 6 மாதங்களாக 500 காசுகளுக்கு மேல் இருந்த முட்டை விலை நேற்று 480 காசுகளாக குறைந்து நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினசரி 7 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகள் தமிழகத்தின் சத்துணவு திட்டம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் முட்டையின் நுகர்வு அதிகரிப்பதும், கோடை காலங்களில் அதன் நுகர்வு குறைவதும் வாடிக்கை.
அதன்படி தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் முட்டையை பொது மக்கள் சாப்பிடுவது குறைந்துள்ளதால் முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. மேலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளது. இதனால் மற்ற மண்டலங்களில் முட்டை விலை சரிந்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.
540 காசுகளாக இருந்த முட்டை விலை கடந்த வாரம் 40 காசுகள் சரிந்த நிலையில் 500 காசுகளாக நீடித்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும் பண்ணைகளில் தேங்கி உள்ள 15 கோடிக்கும் அதிகமான முட்டைகள் குறித்தும் விரிவாக ஆலோ சிக்கப்பட்டது.
அப்போது ரம்ஜான் பண்டிகை மற்றும் கோடை காலம் தொடங்கி உள்ளதையொட்டி முட்டைகள் நுகர்வு குறைந்துள்ளதை அடுத்து கோழிப்பண்ணைகளில் முட்டைகள் தேங்குவதை தடுக்க முட்டை விலையை மேலும் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களாக 500 காசுகளுக்கு மேல் இருந்த முட்டை விலை நேற்று 480 காசுகளாக குறைந்து நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் இனி வரும் நாட்களில் பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் சில்லரை விற்பனை கடைகளில் முட்டை விலை 600 காசுகளுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே முட்டை விலை 500 காசுகளுக்கும் கீழ் குறைந்துள்ளதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.






