என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரஞ்சிக் கோப்பையில் வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர் அணி.. மோடி வாழ்த்து - உமர் அப்துல்லா ரூ.2 கோடி பரிசு
    X

    ரஞ்சிக் கோப்பையில் வரலாறு படைத்த ஜம்மு காஷ்மீர் அணி.. மோடி வாழ்த்து - உமர் அப்துல்லா ரூ.2 கோடி பரிசு

    • ஜம்மு-காஷ்மீர் அணியின் அகிப் நபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • போட்டியை அத்துடன் முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர்.

    ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நேற்று நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

    ஷுபம் பண்டிர் (121), யாவெர் ஹசன் (88), பராஸ் டோக்ரா (70), அப்துல் சமாத் (61), கணையா வதாமேன் (70), சஹில் லோத்ரா (72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் ஜம்மு-காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகாவை 293 ரன்னில் சுருட்டியது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 160 ரன்கள் சேர்த்தார். ஜம்மு-காஷ்மீர் அணியின் அகிப் நபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    291 ரன்கள் முன்னிலையுடன் ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தொடக்க வீரர் இக்பால் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடிக்க, ஜம்மு-காஷ்மீர் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது.

    477 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்று கடைசி ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. இக்பால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

    மற்றொரு முனையில் சஹில் லோத்ராவும் சதம் விளாசினார். 4 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இக்பால் 160 ரன்களுடனும், லோத்ரா 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    மொத்தமாக 633 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், 634 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்கோரை கர்நாடகா அணியால் எட்டுவது மிகவும் கடினம். எனவே, போட்டியை அத்துடன் முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

    முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ள ஜம்மு காஷ்மீர் அணிக்கு ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்குவதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

    முன்னதாக, நேற்று காலை அவர் நடைபெற்ற மைதானத்துக்கு சென்று வீரர்களை உமர் அப்துல்லா உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள வாழ்த்து பதிவில், ரஞ்சி கோப்பையை முதன்முறையாக வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு வாழ்த்துக்கள்! இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி அணியின் குறிப்பிடத்தக்க மன உறுதி, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

    இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஒரு பெருமையான தருணம், மேலும் இது அங்கு வளர்ந்து வரும் விளையாட்டு ஆர்வத்தையும் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது.

    இந்த சாதனை பல இளம் விளையாட்டு வீரர்களை பெரிய கனவுகள் காணவும் மேலும் விளையாடவும் ஊக்குவிக்கட்டும்." என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×