என் மலர்
ஆசிரியர் தேர்வு
- பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைகள் இடையே மோதல் இருந்து வந்தது.
- பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் வெளிப்படையாக போர்ப் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த எல்லை மோதலால இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
தலிபான் ஆட்சியின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டது எனவும், இப்போது நேரடிப் போர் நடத்துவோம் எனவும் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
- இதுதொடர்பாக பேசிய கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது என்றார்.
புதுடெல்லி:
டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், அரசுத்தரப்பு அதன் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது என தீர்ப்பில் குறிப்பிட்டது.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தலைநகர் டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்த பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கிறேன். இப்போது தேர்தல் நடந்து, அதில் பா.ஜ.க. 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன் என தெரிவித்தார்.
பா.ஜ.க. ஆட்சியில் முழு டெல்லியும் பாழடைந்துவிட்டது. இன்று நான் மோடிக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், டெல்லியில் மீண்டும் தேர்தலை நடத்துங்கள். பா.ஜ.க. 10-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவேன். நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் முழு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க, அவர்கள் ஒன்றாக இந்த சதியை செய்தனர் என தெரிவித்தார்.
- வெறும் யூகங்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருந்ததாக சிபிஐ-யை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது.
- விசாரணையின் பல முக்கிய அம்சங்கள் நீதிமன்றத்தால் கவனிக்கப்படவில்லை
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரை டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் உடனடியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்றும் கூறி கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்தார்.
விசாரணையில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், வெறும் யூகங்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் சிபிஐ-யை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. மேலும், இது தொடர்பாக விசாரணை அதிகாரிக்கு எதிராகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு "சட்டரீதியாக தவறானது" என்றும், விசாரணையின் பல முக்கிய அம்சங்கள் நீதிமன்றத்தால் கவனிக்கப்படவில்லை என்றும் கூறி சிபிஐ மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- விஜய் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை
- கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பிரபல நடிகை ஒருவருடன் விஜய்க்கு தகாத உறவு இருப்பதே இந்த முடிவுக்கு காரணம் எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சுமூகமாகப் பிரிய பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு விஜய் தரப்பிலிருந்து எந்தப் பதிலும், மறுப்பும் வரவில்லை. இந்த வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருக்கு 1999-இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
- படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்
- பன்மொழி திரைப்படமாக உருவாகிறது
3, வை ராஜா வை, லால் சலாம் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் தற்போது பன்மொழி திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனத்தின் 9வது படமான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வெளியாகிறது. படத்திற்கு டெக்ஸ்லா என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் அனிரூத் ரவிச்சந்தர் டீசரை வெளியிட்டுள்ளார்.
இந்த டீசர் தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது.
- ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி கடந்த முறை 7-வது இடத்தை பிடித்தது.
- 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர், 2026 ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்க இருக்கிறது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன.
டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தொடர் முடிவடைந்த பின்னர், ஐபிஎல் அணியின் முகாம்களில் பங்கேற்பார்கள். உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்காத வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, வீரர்களுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
2025 தொடரில் லக்னோ 14 போட்டிகளில் 6-ல் வெற்றி, 8-ல் தோல்வி மூலம் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்தது. அந்த அணி 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்-ஐ வாங்கியுள்ளது. இவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணியில் ரிஷப் பண்ட் உடன் மார்க்கிராம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் முகமது ஷமி, நோர்ஜே உள்ளிட்டோர் உள்ளனர்.
- பிரான்ஸ் போர்க்கப்பல் பயிற்சிக்காக சுவீடன் சென்றுள்ளது.
- திடீரென டிரோன் தென்பட்டதால், அதை இடைமறித்து தாக்குதல் நடத்த ராணுவம் தயாரானது.
உக்ரைன்- ரஷியா இடையே 4 வருடங்களை கடந்து சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. சில சமயம் ரஷியாவின் அண்டை நாடுகளின் வான் பகுதிகளிலும் ரஷியாவின் டிரோன்கள் பறப்பதாக நேட்டோ உறுப்பினர் நாடுகளான டென்மார்க் போன்றவை குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் சுவீடன் நாட்டில் உள்ள மல்மோ துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேட்டோ நாடுகளின் பயிற்சிக்காக பிரான்ஸ் போர்க்கப்பல் வந்துள்ளது.
டென்மார்க்கில் இருந்து சுவீடனை பிரிக்கும் ஒரேசுந்த் ஜலசந்தியில் சுவீடன் ராணுவம் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது டிரோன் ஒன்று வருவதை கண்டறிந்தனர். உடனடியாக அந்த டிரோனை சுட்டு வீழ்த்துவதற்கு சுவீடன் ராணுவம் தயாரானது. அதற்குள் அந்த டிரோன் மாயமானது. ஒருவேளை ரஷியா இந்த டிரோனை ஏவியிருக்கலாம் என சுவீடன் ராணுவம் சந்தேகிக்கிறது.
பால்டிக் கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் உள்ளது. அதில் இருந்து டிரோன் ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் சுவீடன், டென்மார்க் உடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று முன்தினம் இரவு உக்ரைன் மீது ரஷியா நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
- அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.
- உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தலைவர் கலைஞர் - அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்து; பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின் சுடரொளி ஸ்டாலின் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு, கொள்கைக் கோட்டமாம் கோபாலபுரத்தில் வளர்ந்து, இளமையிலேயே இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தை நோக்கி இளைஞர்களைத் திரட்டிடும் இனிய பணியைச் சுமந்து, கடந்து வந்த மேடு - பள்ளங்களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு; தலைவர் கலைஞர் அவர்களிடம் பயின்ற பண்புகளோடும், கடமை உணர்வோடும் கழகத்தைக் கண்களாகவும் தலைவர் கலைஞர் அவர்களை கதிரொளியாகவும் கொண்டு, என்னால் இயன்றவரை எல்லோருக்கும் பயனுள்ள வகையில், கனிவு - துணிவு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, தொண்டூழியம் ஆற்றி வரும் எனக்கு மார்ச்-1 அன்று 73-ஆவது பிறந்தநாள்!
1-3-2026 அன்று எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களைக் கட்டாயம் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.
பிறந்தநாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளைச் செய்வது; கழகக் கொடிகளைப் புதுப்பிப்பது - புதிய கொடிகளை ஏற்றி வைப்பது - கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது - கழகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக இரத்தத் தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை. இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே என்னரும் தோழர்களின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன்!
இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும். நாட்கள் இருக்கிறதே - என்ன அவசரம் என்று எண்ணிடாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுத் தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால் "ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, ஏழாவது முறையும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும்! அதுவே எனக்கு நீங்கள் வழங்கிடும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து!
ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்! என்று கூறியுள்ளார்.
- ‘முஸ்தபா முஸ்தபா’ படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது சுரேஷ் ரவியுடன் இணைந்து 'முஸ்தபா முஸ்தபா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார்.
பிரவீன் சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள 'முஸ்தபா முஸ்தபா' படத்திற்கு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த நிலையில், 'முஸ்தபா முஸ்தபா' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் இப்படம் வருகிற 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எங்களைத் தாக்கினால், எங்களின் அணு ஆயுத பலத்தைக் கொண்டு தென்கொரியாவை முழுமையாக அழிப்போம்.
- எங்களை ஒடுக்க நினைக்கும் 'விரோதப் போக்கு' கொள்கைகளை அமெரிக்கா கைவிட்டால். அவர்களுடன் கைகோர்க்க நாங்கள் தயார்.
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்க இருக்கின்றனர்.
இந்நிலையில் வடகொரியாவின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாடு பியாங்யாங் நகரில் கடந்த 7 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு நாளில் கிம் ஜாங் அன் பேசிய உரை, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியதாவது:-
"தென்கொரியா எங்களின் தீராத எதிரி நாடு. அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இனி எதுவுமே இல்லை. ஒரே நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களைத் தாக்கினால், எங்களின் அணு ஆயுத பலத்தைக் கொண்டு தென்கொரியாவை முழுமையாக அழிப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் தென்கொரியாவை குறிவைக்கும் வகையிலான நவீன ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை தயாரிப்பதே எங்கள் இலக்கு.
அதே நேரத்தில், அமெரிக்காவுடன் நாங்கள் சுமூகமான உறவை மேற்கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. வடகொரியாவை அடைஅயத நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும். எங்களை ஒடுக்க நினைக்கும் 'விரோதப் போக்கு' கொள்கைகளை அமெரிக்கா கைவிட்டால். அவர்களுடன் கைகோர்க்க நாங்கள் தயார்.
அமெரிக்காவுடனான உறவு அவர்களின் கைகளில்தான் உள்ளது. அமைதியாக வாழ்வதா அல்லது மோதிக் கொள்வதா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.
இவ்வாறு கிம் ஜாங் அன் ஆவேசமாக பேசினார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில், கிம் ஜாங் அன் தனது 13 வயது மகள் கிம் ஜூ ஏ-வுடன் கலந்து கொண்டார். இருவரும் கருப்பு நிற 'லெதர்' கோட் அணிந்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பை ரசித்தனர். இந்த ராணுவ அணிவகுப்பில் அமெரிக்காவைத் தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்படவில்லை. இது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு கிம் ஜாங் அன் தயாராக இருப்பதையே காட்டுகிறது என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தண்ணீருக்கு அடியிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் டிரோன்கள் மற்றும் விண்ணில் உள்ள எதிரி நாட்டு செயற்கைக்கோள்களைத் தாக்கி அழிக்கும் ஆயுதங்களை அடுத்த 5 ஆண்டுகளில் தயாரிக்கப் போவதாக கிம் அறிவித்துள்ளார். தென்கொரியாவை எதிரியாக அறிவித்துவிட்டு, அமெரிக்காவுடன் மட்டும் பேச்சுவார்த்தைக்கு கதவைத் திறந்து வைத்துள்ள கிம் ஜாங் அன்னின் இந்த புதிய பாதை ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
- இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பைக்கான சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறாமல், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், இலங்கை அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்ல முடியாததற்காக ரசிகர்களிடம் அந்நாட்டு கேப்டன் தசுன் ஷனகா மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஷனகா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நீங்கள் விரும்பியதை எங்களால் வழங்க முடியவில்லை. அதற்காக நாங்கள் வருந்துகிறோம். தற்போதைய நிலைமையை எங்களால் நிச்சயம் மாற்ற முடியும்.
என் மீதும், இலங்கை அணி மீதும் உங்களுக்கு இருக்கும் வேதனை, கோபத்தை நன்கு அறிவேன். இதனால் எழுந்துள்ள அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட்டு விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.
- இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர், அவரது மனைவி வழியனுப்பி வைத்தனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக இஸ்ரேல் சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நேரில் வரவேற்றார். ஜெருசலேம் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடிக்கு நெசெட் சபாநாயகர் விருது வழங்கப்பட்டது. இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இந்த விருதை மோடிக்கு அணிவித்தார்.
ஜெருசலேமில் நடந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியில் மோடியும், நேதன்யாகுவும் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
இரண்டாம் நாளான நேற்று பிரதமர் மோடி யாத் வாஷேம் பகுதியில் நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிற்பகலில் பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்தித்தனர். இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 27 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மாலையில் பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அதன்பின் இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அவரது மனைவி சாரா ஆகியோர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மாலை 5.50 மணிக்கு இந்தியா புறப்பட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.






