என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.
    • கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

    'குடும்ப அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

    அதில், "அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். குடும்ப ஆட்சியிலிருந்து இந்தியா விலகி தகுதி அடிப்படையிலான தலைமைக்கு மாற வேண்டும்.

    குடும்ப அடிப்படையிலான அரசியல் பொறுப்புணர்வை பலவீனப்படுத்துகிறது. நிர்வாகத்தின் தரத்தை குறைக்கிறது மற்றும் தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.

    இத்தகைய குடும்பங்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய நிதி ஆதாயங்களை ஈட்டியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

    149 அரசியல் குடும்பங்கள் மாநில சட்டமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்றும், 11 மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒன்பது முதலமைச்சர்கள் குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளனர் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளதாக தரூர் சுட்டிக்காட்டுகிறார்.

    மேலும் தனது கட்டுரையில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்யை தொடர்ந்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட வாரிசுகளின் செல்வாக்கு, அரசியல் தலைமை என்பது மரபுரிமையாகக் கிடைத்த ஒரு உரிமை என்ற கருத்தை வளர்த்துள்ளது.

    காங்கிரஸ் மட்டுமின்றி, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, லோக் ஜனசக்தி கட்சி, சிரோமணி அகாலிதளம், மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக மற்றும் பாரத ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளும் இதற்கு சான்று என்றும் தரூர் குறிப்பிட்டுள்ளார்.

    கட்சிகளில் வெளிப்படையான உள்கட்சித் தேர்தல்கள், சட்டப்பூர்வ கால வரம்புகள் மற்றும் தகுதி அடிப்படையிலான தலைமையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் தேவை என்றும் சசி தரூர் தனது கட்டுரையில் வலியுறுத்தி உள்ளார். இந்த கட்டுரை காங்கிரசார் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

    • 2008 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் ஒருநாள் போட்டியில் விளையாடியது.
    • அதன்பிறகு நாளை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கிறது.

    பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளது. 2008 ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் பேருந்தில் செல்லும்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு முன்னதாக இக்பால் மைதானத்தில் பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்டின. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்களது போட்டிகளை பாகிஸ்தான் விளையாடியது. சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு படிப்படியாக பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

    கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, முல்தானில் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் பைசலாபாத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை. மோசமான கட்டமைப்பு வசதிகள் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. சில வருடங்களாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை பைசலாபாத் இக்பால் மைதானத்தில் நடக்கிறது.

    தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமன் பெற்றது. டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 எனக் கைப்பற்றியது. இந்த நிலையில்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    • சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது.
    • சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தை கொண்டிருக்க வேண்டும்.

    அசாம் மாநில முதல்வராக இருக்கும் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மாநிலம் முழுவதும் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தும் பணி தொடரும், நான் முதல்வராக இருக்கும் வரை மியாக்கள் நிம்மதியாக இருக்க முடியாது.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "வெளியேற்றுதல் தொடரும். இன்று கூட பிஸ்வானாத் மாவட்டத்தில் உள்ள பெஹாலி பகுதியில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வராக இருக்கும் வரை, சட்டவிரோத மியாக்கள் அமைதியாக இருக்க முடியாது.

    சமாதியில் பிரார்த்தனை செய்தாலும் அமைதி இருக்காது. சட்டவிரோத மியாக்கள் நான் முதல்வராக இருக்கும்வரை பதற்றத்தில் இருக்க வேண்டும். நான் அங்கு இல்லையென்றால், அது வேறு விஷயம்.

    நவம்பர் 25ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரின்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வது தடை என்ற புதிய சட்டசம் கொண்டு வரப்பட இருக்கிறது. யாராவது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்" என்றார்.

    மியா என்பது அசாமில் பெங்கால் மொழி பேசும் முஸ்லிம்களை அழைக்கும் இழிவான சொல். பெங்காலி பேசாத முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்கள் என பொதுவாக அடையாளம் காணப்படுகின்றன.

    • SIR நடைமுறை நாளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது.
    • தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    SIR நடைமுறை நாளை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை திமுக நாடியது.

    SIR நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது என்று திமுக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பண்டிகை காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், பீகார் SIR தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் SIR நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வங்கதேச அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • இது தொடர்பான வரைவில் கையெழுத்திட அரசியல் கட்சிகள் மறுப்பு தெரிவிக்கின்றன.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இளைஞர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் மாதம் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

    முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 30-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்துகளுடன் வங்கதேசத்தின் அரசியலமைப்பு, வாக்குமறை, நிர்வாகம் ஆகியவற்றில் பல திருத்தங்கள் கொண்டுவர முடிவு செய்தது.

    இது தொடர்பாக இடைக்கால அரசு ஒரு வரைவு திட்டத்தை உருவாக்கியது. அதில் கையெழுத்திட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆவணங்களில் கையெழுத்திட கடந்த மாதம் 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சீரமைப்பு செயல்படுத்தும் செயல்பாட்டில் வேறுபாடுகள் வெளிபட்டன. முக்கிய கட்சிகள் வாக்கெடுப்பை தேர்தல் நாளில் அல்லது அதற்கு முன்னதாக நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தது. சில கட்சிகள் நவம்பர் மாதம் (இந்தமாதம்) நடத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

    இதனால் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த நிலையில் ஒரு வாரத்திற்குள் ஒருமித்த கருத்துக்கு வாருங்கள் என அனைத்து கட்சிகளையும் இடைக்கால அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லையென்றால், அரசு தனது சொந்த முடிவை எடுக்கும் என அறிவித்துள்ளது.

    • மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

    2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 55ஆவது திரைப்பட விருது பட்டியலை கலாசார விவகாரத்துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார்.

    மம்மூட்டி சிறந்த நடிகராகவும், ஷாம்லா ஹம்சா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராகவும், பெமினிசி பாத்திமா படத்தில் நடித்ததற்காக புதுமுகமான ஷாம்லா ஹம்சா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை விருதை வென்றுள்ளார். மொத்தமாக 9 விருதுகளை வென்றுள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கோப்பையை கையில் வாங்கி மகிழ்ச்சியில் கொண்டாடினார்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதனையடுத்து கோப்பையுடன் இந்திய அணி வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன்பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கோப்பையை கையில் வாங்கி மகிழ்ச்சியில் கொண்டாடினார்.

    மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 2005, 2017 என 2 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அவரால் கோப்பையை வெல்லமுடியவில்லை. அப்போது கைநழுவி போன கோப்பை கனவு இப்போது நனவாகியுள்ளது.

    மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என்று போற்றப்படும் மிதாலி ராஜ், 23 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடியுள்ளார். குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் (232 ஆட்டத்தில் 7,805 ரன்) என்ற சாதனையை இப்போது அவர் தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.

    ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவிலான நிலடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும், நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனிடையே, சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.

    ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    • மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், மகளிர் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக 2024 டி20 உலக கோப்பை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மத்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக ஸ்வச் சர்வேக்ஷன், 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை இந்தியாவின் தூய்மையான நகரங்களாக உருவெடுத்துள்ளன.

    நாட்டின் மிகவும் அசுத்தமான நகரங்களின் முதல் 10 பட்டியலில் தென்னிந்தியாவின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிடும் மத்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக ஸ்வச் சர்வேக்ஷன், 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பட்டியலின்படி, தமிழ்நாட்டின் மதுரை 4,823 புள்ளிகளுடன் நாட்டின் மிகவும் அசுத்தமான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை 6,822 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூரு 6,842 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

    கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பட்டியலில் 2வது இடத்தில் லூதியானா, 4வது இடத்தில ராஞ்சி, 6,842 புள்ளிகளுடன் 5வது இடத்தில் பெங்களூரு, 6வது இடத்தில் தன்பாத், 7இல் பரிதாபத், 8வது இடத்தில் 7,419 புள்ளிகளுடன் மும்பை, 9வது இடத்தில் ஸ்ரீ நகர், 10 வது இடத்தில் 7,920 புள்ளிகளுடன் தலைநகர் டெல்லி இடம்பெற்றுள்ளது.

    திட்டமிடப்படாத நகர்ப்புற மேம்பாடு, கழிவுகளை அகற்றுதலில் திறமையின்மை மற்றும் குடிமக்களின் அலட்சியம் ஆகியவைமுக்கிய சவால்களாக இந்த ஆண்டு பட்டியலில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இதற்கிடையில், இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை இந்தியாவின் தூய்மையான நகரங்களாக உருவெடுத்துள்ளன. அகமதாபாத், போபால், லக்னோ, ராய்ப்பூர் மற்றும் ஜபல்பூர் போன்ற நகரங்களும் தூய்மையானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.      

    • ஒவ்வொரு பிறந்த நாளும் மன்னத் வீட்டில் ரசிகர்களை பார்ப்பார்.
    • பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்களை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தனர்.

    பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.

    இதற்கான இன்று காலை முதலே, மன்னத் வீடு முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். வழக்கமாக பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துகளை பெறுவார்.

    ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் உங்களை மிஸ்சிங் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை, நான் வெளியே வந்து வரவேற்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    உங்கள் அனைவரிடம் எனது ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாக அனைவரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புரிந்து கொண்டதற்கு நன்றி, என்னை நம்புங்கள்... உங்களை விட அதிகமாக உங்களைப் பார்ப்பதை நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்க்கவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருந்தேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

    இவ்வாறு ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.

    ×