என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.

    ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 1.59 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டர் அளவிலான நிலடுக்கத்தால் 4 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    மஸார்-இ-ஷெரிஃப் நகரத்துக்கு 28 கி.மீ.க்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும், நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மஸார்-இ-ஷெரிஃப் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனிடையே, சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்ததாக தகவல் வெளியான நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.

    ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    • மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கைதான செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், மகளிர் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக 2024 டி20 உலக கோப்பை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மத்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக ஸ்வச் சர்வேக்ஷன், 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை இந்தியாவின் தூய்மையான நகரங்களாக உருவெடுத்துள்ளன.

    நாட்டின் மிகவும் அசுத்தமான நகரங்களின் முதல் 10 பட்டியலில் தென்னிந்தியாவின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிடும் மத்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக ஸ்வச் சர்வேக்ஷன், 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பட்டியலின்படி, தமிழ்நாட்டின் மதுரை 4,823 புள்ளிகளுடன் நாட்டின் மிகவும் அசுத்தமான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை 6,822 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூரு 6,842 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

    கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பட்டியலில் 2வது இடத்தில் லூதியானா, 4வது இடத்தில ராஞ்சி, 6,842 புள்ளிகளுடன் 5வது இடத்தில் பெங்களூரு, 6வது இடத்தில் தன்பாத், 7இல் பரிதாபத், 8வது இடத்தில் 7,419 புள்ளிகளுடன் மும்பை, 9வது இடத்தில் ஸ்ரீ நகர், 10 வது இடத்தில் 7,920 புள்ளிகளுடன் தலைநகர் டெல்லி இடம்பெற்றுள்ளது.

    திட்டமிடப்படாத நகர்ப்புற மேம்பாடு, கழிவுகளை அகற்றுதலில் திறமையின்மை மற்றும் குடிமக்களின் அலட்சியம் ஆகியவைமுக்கிய சவால்களாக இந்த ஆண்டு பட்டியலில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இதற்கிடையில், இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை இந்தியாவின் தூய்மையான நகரங்களாக உருவெடுத்துள்ளன. அகமதாபாத், போபால், லக்னோ, ராய்ப்பூர் மற்றும் ஜபல்பூர் போன்ற நகரங்களும் தூய்மையானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.      

    • ஒவ்வொரு பிறந்த நாளும் மன்னத் வீட்டில் ரசிகர்களை பார்ப்பார்.
    • பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்களை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தனர்.

    பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளும் கடற்கரையை ஒட்டியுள்ள மன்னத் பங்களாவில் ரசிகர்களை பார்த்து, வாழ்த்துகளை பெறுவார்.

    இதற்கான இன்று காலை முதலே, மன்னத் வீடு முன்பு ரசிகர்கள் குவியத் தொடங்கினர். வழக்கமாக பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துகளை பெறுவார்.

    ஆனால், இன்று அவர் மன்னத் பங்களாவில் இருந்து ரசிகர்களை பார்க்கவில்லை. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களை சந்திக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் உங்களை மிஸ்சிங் செய்கிறேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்காக காத்திருந்த அன்பான ரசிகர்களை, நான் வெளியே வந்து வரவேற்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    உங்கள் அனைவரிடம் எனது ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் கூட்டக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் காரணமாக அனைவரின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புரிந்து கொண்டதற்கு நன்றி, என்னை நம்புங்கள்... உங்களை விட அதிகமாக உங்களைப் பார்ப்பதை நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் பார்க்கவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் இருந்தேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

    இவ்வாறு ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்.

    கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து பாராட்டினார்.

    பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.

    இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.

    தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு தமிழக அரசு ரூ.10 கோடி பரிசுத்தொகையும், வீடும் வழங்க வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்நிலையில், ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவை நடிகர் மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டியுள்ளார்.

    பின்னர் கார்த்திகாவிடம் பேசிய அவர்," ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சா உன் கல்யாணத்துக்கு 100 பவுன் நகை போடறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    • பாதுகாப்பு பணி மற்றும் கடலோர எல்லைகளை கண்காணிக்க எல்.வி.எம்-3 ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
    • ரூ.1600 கோடியில் தயாரான நவீன செயற்கைக்கோளை நிலை நிறுத்துகிறது.

    நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

    அந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்-7 (ருக்மணி) செயற்கைக் கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் அதிநவீன சி.எம்.எஸ்.-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக் கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.

    இந்த செயற்கைக்கோள் எல்.வி.எம்.3 (ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் ஏவுதளத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இதற்கான கவுன்டவுன் நேற்று மாலை தொடங்கியது.

    சி.எம்.எஸ்.-03 செயற் கைக்கோள் 4,410 கிலோ எடை கொண்டது. இதுவரை புவிவட்டப் பாதைக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவே அதிக எடை கொண்டதாகும். இதில் விரிவுபடுத்தப்பட்ட மல்டி பேண்ட் தொழில்நுட்ப வசதிகள் உள்பட பல்வேறு நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய பாதுகாப்பு துறையின் கண்காணிப்புப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்திய கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதுடன், போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்தவும் இது உதவும்.

    அதற்கு ஏற்ப இந்த செயற்கைகோள் விண்ணில் குறைந்தபட்சம் 170 கி.மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 29,970 கி.மீட்டர் தொலைவிலும் புவி வட்டப்பாதையில் குறிப்பிட்ட இடத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியா இதுவரை புவி வட்ட சுற்றுப்பாதைக்கு அனுப்பியுள்ள செயற்கைகோள்களில் இந்த செயற்கைகோள்தான் அதிக எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் எல்.வி.எம்.-3 ராக்கெட்டின் 7-வது ஏவுதல் திட்டம் இது. இதற்கு முன்பு சந்திர யான்-3 விண்கலம் இந்த ராக்கெட் மூலமாக வெற்றி கரமாக விண்ணில் செலுத் தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    எல்.வி.எம்.-3 ராக்கெட் அதிநவீன கருவிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்மூலம் பாதுகாப்பு துறைக்கு தேவையான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். எல்.வி.எம்- ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி உள்ளனர்.

    • சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்கள் அடித்தார்.
    • திலக் வர்மா 29 ரன்களும், அபிஷேக் சர்மா 25 ரன்களும் சேர்த்தனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

    முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா டிம் டேவிட், ஸ்டோய்னிஸ் அரைசதத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. டிம் டேவிட் 38 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 39 பந்தில் 8 பவுண்டிரி, 2 சிக்சருடன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா தலா 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 25 ரன்கள் அடித்து எல்லீஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 12 பந்தில் 15 ரன்கள் எடுத்து எல்லீஸ் பந்தில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24 ரன்களும், திலக் வர்மா 26 பந்தில் 29 ரன்களும் சேர்த்தனர். அக்சர் படேல் 12 பந்தில் 17 எடுத்தார்.

    அடுத்து வாஷிங்கடன் சுந்தர் களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்தியா எளிதாக இலக்கை நெருங்கியது.

    18.3 ஓவரில் 188 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 23 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜித்தேஷ் சர்மா 13 பந்தில் 22 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

    • மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம்.
    • தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

    மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் மு.க.ஸ்டாலின்

    அவர்கள், தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம் என்று!

    ஜனநாயக தேசத்தில் குடிமக்களின் வாக்குரிமையைக் காக்கும் பொருட்டு பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, ஏதோ அந்நியமானது போல, பிரதானமாகக் காட்சிபடுத்தி, மழைவெள்ள பாதிப்பு, ஊழல், விவசாயிகள் படும் அல்லல் ஆகியவற்றை மறைத்து, குளிர்காய முயற்சிப்பது இனியும் செல்லாது.

    திமுகவின் திசைதிருப்பு நாடகத்தை நன்கு அறிந்து, பல கட்சிகள் கூட்டத்தினை புறக்கணித்துள்ள நிலையில், தோல்வி பயத்தில் உள்ள கட்சிகள் மட்டுமே இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.

    திமுக அரசின் தொடர் திசைதிருப்பு நாடகத்தையும் வெற்று விளம்பரத்தையும் பார்த்துப் பார்த்து சலித்துப்போன தமிழக மக்கள், இந்த SIR எதிர்ப்பு நாடகத்தையும் புறக்கணிப்பர்!

    ஜனநாயகத்தின் மீது சிறிதும் அக்கறை இருந்தால், முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்ப்பதைவிடுத்து, எஞ்சியிருக்கும் நாட்களில் தங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளைத் தீருங்கள் முதல்வரே!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்துக்குச் சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இரங்கல் தெரிவித்தார்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் வடமேற்கே அமைந்துள்ள சொனோரா மாகாணத்தில் ஹெர்மோசில்லோ நகரில் உள்ள கடை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பரவியதில் பலர் சிக்கி கொண்டனர். கரும் புகை சூழ்ந்து அவர்களால் தப்பி வெளியே வர முடியவில்லை. இந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 11 பேர் காயமடைந்தனர்.

    தீ விபத்து சம்பவம் பற்றி அறிந்த ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.

    தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக, குழுக்களை அனுப்பும்படி உள்துறை மந்திரிக்கு கிளாடியா உத்தரவிட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று, பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான், அதில் அவசரம் ஏன்?
    • தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

    தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்கான அட்டவணையை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி 4-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது.

    தமிழ்நாட்டில் நவம்பர் 4-ந் தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

    அனைத்து கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:

    * மக்களாட்சியின் தலைமையே வாக்குரிமைதான்.

    * வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான், அதில் அவசரம் ஏன்?

    * தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டுமே சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளை மேற்கொள்வதின் உள்நோக்கம் உண்மையில் வாக்காளர் பட்டியலை சரி செய்வதா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா?

    * இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டது.

    * கர்நாடகா, மகாராஷ்டிராவில் வாக்கு திருட்டு சம்பவங்கள் தொடர்பாக எழுந்த நியாயமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

    * தகுதி உள்ள ஒருவரின் பெயரைக்கூட பட்டியலில் இருந்து நீக்கி விடக்கூடாது.

    * சிறப்பு தீவிர திருத்தப்பணி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை தீர்க்க வேண்டும். மேலும் புதிய பிரச்சனைகளை கொண்டுவந்து விடக்கூடாது.

    * தேர்தல் ஆணையம் மீதான அவநம்பிக்கை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

    * நடுநிலைமையுடன் செயல்படுகிறோம் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு தேர்தர் ஆணையத்திற்கு உள்ளது.

    * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
    • சுப்மன் கில் வருகையால் சஞ்சு சாம்சனின் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் (கான்பெரா) மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இப்போட்டியில் சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சுப்மன் கில் வருகையால் மிடில் ஆர்டர் பினிஷிங் என மாறி மாறி களமிறக்கப்பட்டார். இப்போது அணியில் இருந்தும் டிராப் செய்யப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் டி20 கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி மாறியுள்ளது.

    ×