என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
- 3வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
துரின்:
உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் 16-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.
ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில், இன்று நடந்த 3-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
- வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தவேண்டும்.
- வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.
SIR படிவத்தில் நிரப்ப 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முந்தைய தீவிர திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது.
இவ்வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் (www.voters.eci.gov.in) "Search your name in the last SIR" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதில் மாநிலத்தின் பெயரை (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் "தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் "பெயர் மூலம் தேடுதல்" அல்லது "EPIC எண் மூலம் தேடுதல்" என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களை மீட்டெடுக்கலாம். " பெயர் மூலம் தேடுதல்" என்ற விருப்பத்தின் மூலம் தேடும்போது மாவட்டத்தின் பெயர், சட்டமன்ற தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து வாக்காளர் தங்களது விவரங்களைப் பெறலாம்.
இணையதளம் மூலம் (online) கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள்
வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in இல் கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் (online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி இணையதளம் மூலம் (online) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் "Fill Enumeration Form" என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
- நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
121 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும், 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.8 சதவீத வாக்குகளும் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கூறப்படுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், `தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.
இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
- எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.
- சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று எம்.எஸ்.தோனியும் தெரிவித்து இருந்தார்.
இருப்பினும் எம்.எஸ்.தோனி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாட மாட்டார் என்று வதந்தி பரவி வருகிறது.
இந்த நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக சி.எஸ்.கே. அணி வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் கேட்கின்றனர். அதற்கு ONE LAST TIME என்று பதில் கொடுத்து தோனி ரசிகர்களை சி.எஸ்.கே. அணி உற்சாகப்படுத்தியுள்ளது.
- தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
- நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டது.
இன்று நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி நாளை நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.
கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
- அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டது.
- இந்த திட்டத்துக்கு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் காட்சி மாணவர் போராட்டங்களால் கவிழ்ந்தது. இதன்பின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் அண்மையில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை, உடற்பயற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என முகமது யூனுஸ் அறிவித்தார்.
கல்வி அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அரசு இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் பதவிகளை இடைக்கால அரசு ரத்து செய்தது. இதன்மூலம் ஆரம்ப பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில், வங்கதேச பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை ரத்து செய்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கண்டித்து அந்நாட்டில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் வழக்குகளை கண்டித்து அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் வங்கதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
- இலங்கை அணி அங்கு தொடர்ந்து விளையாடுமா? என்ற சந்தேகம் நிலவியது.
பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 293 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (பிற்பகல் 3 மணி) நடக்கிறது.
இதற்கிடையே, இஸ்லாமாபாத்தில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதனால் இலங்கை அணி அங்கு தொடர்ந்து விளையாடுமா? என்ற சந்தேகம் நிலவியது.
இதனை தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு கவலை இருப்பதாகவும், உடனடியாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் 8 இலங்கை வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
பதற்றமான சூழலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர் பிரெட் செனவிரத்னே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியை சந்தித்து பாதுகாப்பு பிரச்சனை குறித்து ஆலோசித்தார். அப்போது அவர் இலங்கை வீரர்களுக்கு அரசு விருந்தினர்கள் போல் உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.
பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மொசின் நக்வி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவ படையினரை பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க அறிவுறுத்தி இருக்கிறார்.
சில இலங்கை வீரர்கள் தாயகம் திரும்ப விரும்புவதாக தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் கூறினர். அவர்களை சந்தித்து பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் என்று மொசின் நக்வி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்ப கோரிக்கை வைத்த இலங்கை வீரர்களை அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. தொடரில் இருந்து பாதியில் வெளியேறக் கூடாது எனவும், விலகினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அணி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- டெல்லியில் வெடிக்க வைக்கப்பட்ட காரை உமர் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் வாங்கினான்.
- கடந்த மாதம் 29-ந்தேதி காரை வாங்கிய அவன் பரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக் கழகத்திற்குள் நிறுத்தி இருந்தான்.
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ20 கார் மாலை 6.48 மணியளவில் சிக்னல் அருகே மெதுவாக நகர்த்தப்பட்டு வெடித்து சிதறியது. வெடிக்கும் முன் அந்த காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.
அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது விசாரணையில் தெரியவந்தது. உமர் முகமது ஓர் தீவிரவாதி என்பதும் அரியானாவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைதான மருத்துவர் ஷகீரின் கூட்டாளி என்பதும் அம்பலமானது.
தீவிரவாதி உமர் முகமது ஜம்மு- காஷ்மீர் புல்வாமில் 1980-ம் ஆண்டு பிறந்துள்ளான். பரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா மருத்துவ கல்லூரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தான்.
ஜம்மு-காஷ்மீர் அரியானா போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளான டாக்டர் அதில்அகமது ராதர் மற்றும் டாக்டர் முஜம்மில் ஷகீல் ஆகியோரின் நெருங்கிய உதவியாளராக இருந்தான். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து 2900 கிலோ வெடி பொருட்களை கைப்பற்றியதை அறிந்ததும் பரிதாபாத்தில் இருந்து ஒருவர் தப்பி சென்றான். 2 பேர் கைது செய்யப்பட்டதால் உமர் முகமது இந்த குண்டு வெடிப்பை நடத்த தூண்டியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் வெடிக்க வைக்கப்பட்ட காரை உமர் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் வாங்கினான். கடந்த மாதம் 29-ந்தேதி காரை வாங்கிய அவன் பரிதாபாத்தில் உள்ள அல்-பலா பல்கலைக் கழகத்திற்குள் நிறுத்தி இருந்தான். கடந்த 10-ந்தேதி வரை கார் அங்கேயேதான் நின்றது. காரை வாங்கி கொண்டு வந்த போது அந்த காரில் ஆண்கள் 3 பேர் இருந்து உள்ளனர். 10-ந்தேதி உமர் அந்த காரை ஓட்டி சென்று வெடிக்க செய்தார்.
குண்டு வெடிப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி விட்டு குண்டு வெடிக்கும் வரை காரை விட்டு கீழே இறங்காமல் காத்திருந்துள்ளான். உமர் முகமது அவனது கூட்டாளிகள் 2 பேர் வருவதற்காக அங்கே காத்திருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால் கார் குண்டு வெடிப்பில் உமர் முகமது இறந்தாரா? அல்லது தப்பித்தாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உமர் முகமது தான் என்று டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உமர் முகமது தாயிடம் எடுக்கப்பட்ட மாதிரியும் கார் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட காரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துபோயுள்ளது. குண்டுவெடிப்புக்குப் பிறகு, உமர் முகமது கால் ஸ்டீயரிங் மற்றும் ஆக்ஸிலேட்டருக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
- த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
- கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.
த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
* த.வெ.க. தலைவர் விஜயின் சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
* தலைவர் விஜய்க்கு மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி அதிகரித்துள்ளது.
* பா.ஜ.க., தி.மு.க.-வை தவிர எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்.
* த.வெ.க. தலைமையை ஏற்று வரக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்.
* கூட்டணி குறித்த முடிவை விஜய் எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது.
- கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டு, தமிழ்நாட்டில் மழை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்தாலும், பருவமழை அளவுக்கு இல்லை. இந்த இடைவெளிக்கு பிறகு, வடகிழக்கு பருவகாற்று தமிழ்நாட்டில் முழுவதுமாக நேற்று முன்தினம் முதல் வீசத் தொடங்கியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் 16-ந் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதன்படி, வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16-ந் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும்.
17, 18-ந் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும் எனவும், 18, 19-ந் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து லட்சத்தீவு நோக்கி செல்கிறது. இருப்பினும் கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.
இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை கொடுக்கும் என்றும், இதன் மூலம் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், பெரிய அளவில் வெள்ளப்பாதிப்பு இருக்காது என்றாலும், நீர்நிலைகள் நிரம்பும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதனையடுத்து 3-வது நிகழ்வாக தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அடுத்தடுத்த நிலைகளை கடந்து, புயலாக வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் இருக்கிறது. இது முந்தைய 2 நிகழ்வுகள் நிறைவுபெற்றதும், இந்த புயல் எப்படி இருக்கும்? எங்கு கரையை கடக்கும்? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.
- தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது.
- மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இருநாடுகளிடையே ராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது. மேலும் தைவான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், டோக்கியோவில் நாடாளுமன்ற கூட்டத்தில் சனே தகைச்சி பேசினார். அப்போது, தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது
ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு மன்னிப்பு கோரி சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
- முதலமைச்சர் அங்கே இருப்பதில் என்ன தவறு?. அவர் இருக்கட்டும்.
- நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா மாற்றப்பட்டு, துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் முதல்வராவார் என்ற பேச்சு கர்நாடாக மாநில காங்கிரஸ் தலைவர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள்தான் இது குறித்து முடிவு செய்வார்கள். அவர்கள் முடிவே இறுதியானது என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அம்மாநில மந்திரி பி.இசட். ஜமீர் அகமது கான் சமீபத்தில் சித்தராமையாக 2028-ல் ஐந்து வருடம் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்த பின்னர் டி.கே. சிவக்குமாரால் முதல்வராக முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டி.கே. சிவகுமாரிடம் காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்டதே, சிலர் நவம்பர் புரட்சி என்கிறார்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்ததாவது:-
மிகவும் மகிழ்ச்சி. முதலமைச்சர் அங்கே இருப்பதில் என்ன தவறு?. அவர் இருக்கட்டும். நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தொடர்ந்து ஒற்றுமையாக இருப்போம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.






