என் மலர்
ஆசிரியர் தேர்வு
- மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள்தொகை குறைவாக உள்ளது.
- 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.
புதுடெல்லி:
தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.
இந்தநிலையில் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த நிராகரிப்புக்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசுக்கு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான தமிழக அரசின் பரிந்துரையை தெரிவித்து வந்த கடிதங்கள் சரிபார்க்கப்பட்டன. இந்தத் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
அந்த ஆய்வில் சில விஷயங்கள் கவனிக்கப்பட்டன.
கோவையில் 34 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு ஏற்கனவே உள்ள சாலைப்போக்குவரத்தின் பயண நேரம் மெட்ரோ ரெயிலின் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது. மேலும் மக்கள்தொகையை கணக்கிடும்போது சென்னை 1- ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை விட 4 லட்சம் பேர் மட்டுமே அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தின் அடிப்படையில் மக்கள் மெட்ரோவுக்கு மாற வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.
மதுரையைப் பொறுத்தவரை அங்கு மக்கள்தொகை குறைவாக உள்ளது. மெட்ரோ ரெயில் இயக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள் இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் 2011- ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரையின் மக்கள்தொகை 15 லட்சம் மட்டுமே.
இந்த காரணங்கள் தவிர மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக பல கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும். பல கட்டிடங்கள் மிக விலை உயர்ந்ததாக இருக்கலாம். இதனால் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். கோவையின் மக்கள்தொகை 15.84 லட்சம் உள்ளது. எனவே 20 லட்சம் மக்கள்தொகைக்கு மேற்பட்ட நகரங்களிலேயே மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தென் ஆப்பிரிக்காவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா செல்கிறார்.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 21 முதல் 23ம் தேதி வரை ஜி20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 69 பந்துகளில் 109 ரன் குவித்தார்.
நேப்பியர்:
வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஷாய் ஹோப் நேற்று அடித்த சதம் 19-வது ஒருநாள் சதமாகும். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் பிரையன் லாராவின் (19 சதங்கள்) சாதனையை ஷாய் ஹோப் சமன் செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் (25 சதங்கள்) முதலிடத்தில் உள்ளார்.
15 வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் திரைத்துறையில் அறிமுகமாகினர்.
மீண்டும் 15 வருடங்கள் கழித்து தற்போது நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இணைந்து சர்வம் மாயா என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர். இது இவர்கள் இணைந்து நடிக்கும் 10-வது திரைப்படமாகும். இப்படத்தின் போஸ்டரை படக்குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் இருவரும் சிரித்துக் கொண்டு இருப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இப்படத்தை பஞ்சுவம் அதுபுத விளக்கும் படத்தை இயக்கிய அகில் சத்யன் இயக்குகிறார். ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். இது மியூசிகள் ரொமாண்டிக் டிராமாவாக உருவாகி இருக்கிறதுது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 'சர்வம் மாயா' திரைப்படம் வரும் டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

- சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும் பக்தர்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்தது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கூட்டம் காரணமாக நேற்று 30 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்ட ஸ்பாட் புக்கிங்கில் இனி தினமும் 20 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இனி 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் மறுநாளில்தான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சபரிமலையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வரும் 24ம் தேதி வரை, 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
20,000 பேருக்கு ஸ்பாட் புக்கிங் அனுமதிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த வழியில்லாததால் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
- 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டுவிஸ்ட் வைக்கும் விதமாக 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பென் டக்கெட், ஜாக் கிராலி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த 12 பேர் கொண்ட அணியில் எந்த வீரர் லெவனில் இடம் பெற மாட்டார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. அதற்கான தேர்வை ரசிகர்களிடமும் ஆஸ்திரேலிய அணியிடமும் இங்கிலாந்து அணி விட்டுவிட்டது போல இந்த அணி விவரத்தை அறிவித்துள்ளது.
இறுதி லெவனில் ஆடுகள நிலைமைகளைப் பொறுத்து அனைத்தும் வேகப்பந்து வீச்சு அட்டாக் அல்லது சுழற்பந்து வீச்சாளார் பஷீர் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
- செவ்வாய்க்கிழமை இரவு அகதிகள் முகாம் மீது தாக்குதால் நடத்தப்பட்டது.
- இன்று காலை கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
தெற்கு லெபனானில் உள்ள டிரி கிராமம் அருகே இன்று காலை இஸ்ரேல், கார்மீது வான்தாக்குதல் நடத்தியது. இதில் காரில் சென்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. அந்த கார் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் மாணவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு பாலஸ்தீன அகதிகள் முகாம் (ஐன்-எல்-ஹல்வே) மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது. காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்ததால், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
அதேவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் இல்லை என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
- விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது.
- இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது.
கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-
இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் வேளாண் துறயைில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.
விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது.
இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது.
இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் விவசாயிகள் ஆதாயங்கள் கிடைத்துள்ளன.
தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் முருகப்பொருமானுக்கு தேனும் தினை மாவையும் பிரசாதமாக படைக்கிறோம். கேரளா, கர்நாடகாவிலும் சிறுதானயங்கள் தான் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.
இயற்கை வேளாண்மை நமது பாரதத்தின் சொந்த சுதேசி கருத்து, அது நமது பாரம்பரியத்திற்கு கொண்டு செல்கிறது.
நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.4 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் விவசாய நிலத்தின் வளம் குறைகிறது. இயற்கை வேளாண்மை பாதையில் நாம் முன்னேற வேண்டும் என்பதே அத்தியாவசிய தேவை.
இயற்கை வேளாண்மை நோக்கி நகர மத்திய அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது.
நமது அரசாங்கம் இயற்கை வேளாண்மை மேற்கொள்ள நிறைய ஊக்கம் அளித்து வருகிறது.
இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் சிறுகுறு தானியங்களை பயிரிட வேண்டும். ஒற்றைப் பயிர் மட்டும் சார்ந்து இருக்காமல், பல வகைப் பயிர்களை நமது நிலத்தில் நாம் பயிரிட வேண்டும். இயற்கை வேளாண்மை, ரசாயனம் இல்லாத வேளாண்மைக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நமது சூப்பர் உணவு உலகளாவிய சந்தைகளை சென்றுசேர வேண்டும்.
தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம்.
- கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை:
மதுரை, கோவை மாநகரங்களில் போதிய எண்ணிக்கையில் மக்கள் தொகை இல்லாததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து உள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம் என உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
கோவில் நகர் 'மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம்!
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
- பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
- எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான்.
கூகுள் உடைய தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து எச்சரித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ உடைய புழக்கம் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பிசிசிக்கு அவர் அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு பிழைகளை செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவை சொல்லும் அனைத்தையும் கண்ணை மூடித்தனமாகக் நம்பிவிடக் கூடாது. பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் முழு பலன்களையும் மக்கள் பெற வேண்டுமானால், ஏஐ தரும் தகவல்களுடன் மற்ற நம்பகமான தகவல் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், இந்த ஏஐ முதலீட்டு குமிழி வெடித்தால் எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான். இணையதளம் அறிமுகமானபோது அதில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அதன் தாக்கம் ஆழமானது. அது போல தான் ஏஐ துறையும்" என்று தெரிவித்தார்.
மேலும் ஏஐ அடிப்படையிலான சூப்பர் சிப்களை தாங்கள் உருவாக்கி வருவதாகவும், ஓபன் ஏஐ உடைய சாட்ஜிபிடி போட்டியை எதிர்கொள்ள ஆல்பாபெட் தனது முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது.
- அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மாணவர் இயக்கத்தின் போது போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிட்டது போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் திங்கள்கிழமை ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது. முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தஸ்லிமா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், "நாசவேலையில் ஈடுபட்டவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனாவை குற்றவாளி என அறிவிக்கும் யூனுஸ் அரசு, அதே செயல்களைச் தாங்கள் செய்யும்போது அவற்றை நீதியானவை என்று அழைக்கிறார்கள்.
யாராவது நாவேலைச் செயல்களைச் செய்தால் தற்போதைய அரசாங்கம் அவர்களைச் சுட உத்தரவிடும்போது, அரசாங்கம் தன்னை ஒரு குற்றவாளி என்று கூறுவதில்லை.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசவேலைச் செயல்களைச் செய்தவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனா ஏன் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்?
ஜூலை மாதம் நாசவேலைச் செய்த பயங்கரவாதிகள், மெட்ரோவுக்கு தீ வைத்தவர்கள், மக்களைக் கொன்றவர்கள், காவல்துறை அதிகாரிகளைக் கொன்றவர்கள் ஏன் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை?வங்கதேசத்தில் நீதியின் பெயரால் நடக்கும் கேலிக்கூத்து எப்போது முடிவுக்கு வரும்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மாணவர் போராட்டங்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வங்க தேசம் அழுத்தம் கொடுத்து வருகிறது. தனது மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்று ஹசீனா குற்றம் சாட்டினார்.
அதேநேரம், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று முகமது யூனுஸ் கருத்து தெரிவித்தார்.
அடுத்த வருடம் பிப்ரவரியில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக வந்த இந்தத் தீர்ப்பு, வங்கதேச அரசியலில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
முகமது யூனுஸ் ஆட்சியில் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினராக இந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் யூனுஸ் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
- சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்புக்குக் காரணமான டாக்டர் உமர் உன் நபி உட்படப் கைது செய்ப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய அரியானாவின் அல்பலா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்தன.
இந்நிலையில் டெல்லி போலீசார் பதிந்த எப்ஐஆரின் அடிப்படையில் நேற்று அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதன்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது என்றும் அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.






