என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற மாடலை விற்பனை செய்கிறது.
    • 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி உள்ளது.

    உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

    மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தற்போது தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமைத் திறக்க உள்ளது.

    இந்த புதிய ஷோரூம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி டெல்லியின் ஏரோசிட்டியில் உள்ள விலையுயர்ந்த வேர்ல்ட்மார்க் 3 வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.

    தற்போது, டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற ஒரே ஒரு மாடலை மட்டுமே விற்பனை செய்கிறது.இதன் ஷோரூம் விலை ரூ. 59.89 லட்சத்தில் தொடங்குகிறது.

    இந்த கார் 500 கி.மீ வரை பயணிக்க கூடிய 60 kWh பேட்டரி மற்றும் 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.   

    • ரஷிய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து இந்தியாவுக்கு கவலை இல்லை.
    • இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர்.

    "இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

    ரஷிய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது  பற்றி இந்தியாவுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் .

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு வரிகளை மேலும் அதிகரிக்க போகிறேன்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். 

    இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், இந்தியாவின் எரிசக்தி கொள்கை அதன் தேசிய நலன் மற்றும் உலக சந்தையின் நிர்ப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது.

    இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை.

    உக்ரைன் போர் தொடங்கியபோது, இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர்.

    அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுக்கு குறைந்த வாய்ப்புகள் இருந்தன. எனவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது லாபம் ஈட்டும் உத்தி அல்ல, மாறாக பொதுவான இந்திய நுகர்வோருக்கு மலிவான மற்றும் தடையற்ற விநியோகத்தை வழங்குவதற்கான முன்னுரிமையாகும்.

    இந்தியாவை விமர்சிக்கும் நாடுகள் தாங்களே ரஷியாவிடம் வணிகம் செய்கின்றன. அவர்களுக்கு அப்படி செய்வது கட்டாயம் அல்ல. ஆனால் அவர்கள் லாபத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன், அவர்கள் தங்கள் சொந்த நடத்தையைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார். 

    • இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
    • தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் சுதா எம்பிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

    டெல்லியில் நடைபயிற்சி சென்றபோது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் 4 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள, உச்சகட்ட பாதுகாப்பு மிகுந்த சாணக்யாபுரி பகுதியில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் செயினை பறித்துச் சென்றதாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் எம்.பி. சுதா புகாரளித்துள்ளார். அந்த புகாரில் தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் சுதா எம்பிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், சல்வார் கிழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாய்னா 2023-ல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார்.

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

    இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்தார்.

    இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கணவரை விட்டுப் பிரிவதாக அறிவித்திருந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,

    அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

    கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த சாய்னா நேவால், "சில நேரங்களில் நம்முடன் இருப்பவர்களின் மதிப்பு அவர்கள் தூரமாக இருக்கும்போது தான் தெரிகிறது. மீண்டும் தங்களது உறவை கட்டமைக்க முயற்சிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம்.
    • சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி வழங்கக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

    இந்த போராட்டத்துக்கு வனத்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், வனத்துறை மற்றும் போலீசார் முந்தல் அடவுப்பாறை பகுதியில் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.

    தடையை மீறி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது கட்சியினர் அங்கு இருந்த தடுப்புகளை அகற்றினர். இதனால் போலீசாருக்கும், அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அதன்பிறகு மாடுகளையும் தடையை மீறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். மாடு மேய்க்கும் போராட்டத்துக்காக சீமான் கையில் கம்புடன் மலையேறினார். அங்கு போராட்டத்தை நடத்திவிட்டு பின்னர் அவர் திரும்பி வந்தார்.

    அப்போது பேசிய சீமான் கூறுகையில்,

    தேனி மாவட்டத்தில் மலைகளில் கற்குவாரிகள் நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால், பாரம்பரிய மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதிப்பது இல்லை. வனத்துறையினர் இதற்கு தடை விதித்ததால் 1 லட்சம் மாடுகள் இருந்த இடத்தில், தற்போது 5 ஆயிரம் மாடுகள் தான் உள்ளன. மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம் என்று கூறினார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்த்ததால் சீமான் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சமீரா ரெட்டி 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
    • மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்.

    'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

    இந்தத் திட்டத்திலன் கீழ் ரத்தப் பரிசோதனைகள், சர்க்கரை நோய், இருதய நோய் என எல்லாவிதமான பரிசோதனையும் அனைத்து தரப்பு மக்களும் இலவசமாக செய்து கொள்ள முடியும். இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டி 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "9 வருடங்களுக்கு முன்பு எனக்கு முடி உதிர்தல் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்பட்ட பின்புதான் எனது உடல்நலம் குறித்து நான் கவலைப்பட ஆரம்பித்தேன்.

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள், நோய் பாதிப்புகள் அதிகமான பின்புதான் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆரம்பகட்டத்திலேயே நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது. இதன்மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக, 1256 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இது பல உயிர்களைக் காக்கும்.

    குறிப்பாக கிராமப்புற மக்களிடமும் நவீன மருத்துவ சேவை சென்றடையும் வகையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பொருளாதார தடையின்றி அனைத்துத்தரப்பு மக்களும் இலவசமாக பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டக்கூடியது" என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

    • அமெரிக்காவில் 4 இந்தியர்கள் மாயமானதாக தேடப்பட்டு வந்தனர்.
    • அந்த 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து பென்சில்வேனியா சென்ற இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாயமாகினர். உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    விசாரணையில், காணாமல் போன 4 இந்தியர்களும் ஜூலை 29-ம் தேதி பென்சில்வேனியாவில் உள்ள ஒரு கடைக்குச் சென்றதும், அதன்பின் அவர்கள் மாயமானதும் தெரிய வந்தது.

    காணாமல் போனவர்கள் டாக்டர் கிஷோர் திவான் (89), ஆஷா திவான் (85), ஷைலேஷ் திவான் (86), கீதா திவான் (84) ஆகியோர் என தெரியவந்தது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது.

    இந்நிலையில், காணாமல் போன 4 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த மேற்கு விர்ஜினியா நகர ஷெரிப் விசாரணை முடிந்த பிறகு கூடுதல் தகவல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    • சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான்.
    • சினிமா பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

    திரைப்படத் துறையில் தனது 33வது ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை.

    சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

    இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு ஈந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன் காயங்கள், மீண்டு வருதல், தோல்லி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை முயற்சி செய்தேன். மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்!

    ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் சினிமாவில் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புநான் என்னை மீண்டு வர செய்துள்ளது.

    இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன் இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன். ஆனால் என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை.

    மோட்டார் ரேசிங் உலகில் வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டேன். அந்த டிராக் நீங்கள் யார் என்பதை பொருட்படுத்தாது, மன்னிக்காது.

    அதற்கு தேவை Respect, Focus & Goti அந்த டிராக்கில் பல முறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்து ஏற்பட்டது என்னை பலமுறை தூக்கி மறிந்திருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கிறேன். இந்த பயணம் விருதுகளுக்காகவோ அல்லது தலைப்பு செய்திகளுக்காகவோ அல்ல.

    ஒழுக்கம், துணிவு மற்றும் ஒரு குறிக்கோளுக்காக ஏற்படும் வலி என இவற்றின் மூலம் என்னை எனக்கே நிரூபிக்க பயணிக்கிறேன் வீரம் மிக்க நாட்டின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.

    அஜித்குமார் மோட்டார் ரேசிங்' என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் நுழையவில்லை. வயது வரம்பு அச்சம் தடைகள் இதைப்பார்த்து தங்கள் மீதே சந்தேகம் கொள்பவர்களுக்கு கொடுக்கவும்தான் விளையாட்டுத் துறைக்குள் மீண்டும் வந்தேன்.

    உத்வேகம் நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான் நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.

    சினிமாவில் எனக்கான பாதையை வடிவமைத்து, வழிநடத்தி என்னை நம்பி என் வளர்ச்சிக்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், சாட்டிலைட் மற்றும் சமூக ஊடகங்கள், விமர்சர்கள் அனைவருக்கும் நன்றி!

    பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு அன்பாக இருந்த அதிகாரிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

    எனக்கு மதிப்புமிக்க பத்ம பூஷண் விருது வழங்கி. எனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியதற்காக இந்திய ஜனாதிபதி மேடம் திரௌபதி முர்மு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன்.

    என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள்.

    சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மையுடன் என்னை வளர்த்த மறைந்த என் தந்தை பி.எஸ். மணி மற்றும் என் அம்மா மோகினி மணி என் சகோதரர் மற்றும் என் குடும்பத்தினர் அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி.

    நான் பல சமயங்களில் அதிகம் வெளியே வராமலும் பேசமாலும் இருக்கலாம் ஆனால் சினிமா மட்டுமல்ல மோட்டார் பந்தயத்திலும் முழு கவனம் செலுந்தி உங்களை மகிழ்விக்க தவறியது இல்லை.

    என் நிறை குறைகள் அனைத்தையும் இந்த 33 வருடங்கள் ஏற்றுக் கொண்டு என் மீது அன்பு வைத்து கொண்டாடியதற்கு நன்றி) உங்களுக்கும் எனக்கும் என்றென்றும் உண்மையாக இருக்க முயற்சிப்பேன் என் மோட்டார் ரேசிங் கரியருக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை.

    உங்களையும் நம் நாட்டையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன். வாழு, வாழ விடு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
    • ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

    தேமுதிகவும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.

    தொடர்ந்து ஆகஸ்ட் 4ல் ஆவடி, ஆகஸ்ட் 5ல் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 6ல் வேலூர், ஆகஸ்ட் 7ல் திருப்பத்தூர், ஆகஸ்ட் 8ல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 9ல் தருமபுரி, ஆகஸ்ட் 11ல் சேலம், ஆகஸ்ட் 13ல் கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட் 14ல் நாமக்கல், ஆகஸ்ட் 16ல் கரூர், ஆகஸ்ட் 17ல் பெரம்பலூர், ஆகஸ்ட் 18ல் அரியலூர், ஆகஸ்ட் 19ல் மயிலாடுதுறை, ஆகஸ்ட் 20ல் கடலூர் மற்றும் ஆகஸ்ட் 22ல் விழுப்புரம் பகுதிகளில் பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.

    ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

    அதன்படி, தேமுதிக சார்பில் 'இல்லம் தேடி.. உள்ளம் நாடி..' என்ற பெயரில் பிரசார சுற்றுப் பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் விஜய பிரபாகரனும் பிரசாரப் பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

    • 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.
    • இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது.

    தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் இன்று நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மேலும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதன் மூலம், இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. ஹசன் நவாஸ் 23 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் சல்மான் ஆஹர் 33 பந்தில் 38 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஜேசன் ஹோல்டர் 19 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 134 ரன் இலக்கை கடைசி பந்தில் எடுத்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 14 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

    • பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட் டோம்.
    • நிவாரண உதவி வினியோக மையங்கள் அருகே இஸ்ரேல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது.

    இப்போரில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

    இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எட்டப்பட வில்லை. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்து உள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப் தெரிவித்தார். ஆனால் அதை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-

    பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம். ஜெருசலேமை தலைநகராக கொண்ட ஒரு சுயாதீனமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட் டோம். எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    காசாவில் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. இதற்கிடையே நிவாரண உதவி வினியோக மையங்கள் அருகே இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    ×