என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • உத்தரகாசி மாவட்டத்தின் தராலி பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது.
    • இதையடுத்து அங்கு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் தராலி பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

    இதுதொடர்பாக முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
    • மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்.

    சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது "நான் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியது. சுதா கொங்கரா கூறிய கதை மிகவும் நன்றாக இருந்தது. சிவகார்த்திகேயனும் "பிரதர் நீங்க வாங்க என்னைய நம்புங்க கண்டிப்பா நல்லா இருக்கும்ன்னு சொன்னாரு"  கூலி திரைப்படத்தை இயக்கி வந்ததனால் அந்த காலக்கட்டத்தில் என்னால் நடிக்க முடியவில்லை" என கூறியுள்ளார்.

    இந்த காம்போ விரைவில் நடக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார்.
    • இலங்கையை சேர்ந்த முரளீதரன் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.

    ஓவல்:

    இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    ஓவல் டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார். அவர் 5 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    இந்த தொடரில் சிராஜ் மொத்தம் 23 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் பும்ராவின் சாதனையை சமன் செய்தார். பும்ரா 2021-22 இங்கிலாந்தில் தொடரில் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருவரும் இருக்கிறார்கள்.

    இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை சிராஜ் படைத்தார். அவர் 7-வது முறையாக 4 விக்கெட்டுக்கு மேல் (11 போட்டி) எடுத்துள்ளார்.

    இலங்கையை சேர்ந்த முரளீதரன் (6 டெஸ்ட்), பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸ் (10 போட்டி) ஆகியோர் தலா 6 முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்து இருந்தனர். இவர்களை சிராஜ் முந்தினார். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 5 தடவையும், இஷாந்த் சர்மா 4 முறையும் 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

    சிராஜ் 3-வது முறையாக ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார். 2023 ஆண்டு வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டிலும், 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டிலும் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைத்தது.

    • சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

    நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகர் சூரி மதுரை அருகே ராஜாக்கூர் கிராமத்தில் தனது சொந்த ஊரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் ஊர் மக்களோடு சேர்ந்து கும்மி அடித்து உற்சாக நடனம் ஆடியுள்ளார்.

    ஊர்த்திருவிழாவில் பெண்களுடன் சேர்ந்து சூரி கும்மி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும்.
    • தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22671) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும். அதே போல, மதுரையில் இருந்து தாம்பரம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) இனி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும். அதே போல, புதுச்சேரியில் இருந்து வந்த பயணிகள் ரெயில் இனி தாம்பரத்திற்கு பதிலாக எழும்பூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4வது இடத்தில உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற மாடலை விற்பனை செய்கிறது.
    • 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி உள்ளது.

    உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

    மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தற்போது தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமைத் திறக்க உள்ளது.

    இந்த புதிய ஷோரூம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி டெல்லியின் ஏரோசிட்டியில் உள்ள விலையுயர்ந்த வேர்ல்ட்மார்க் 3 வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.

    தற்போது, டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற ஒரே ஒரு மாடலை மட்டுமே விற்பனை செய்கிறது.இதன் ஷோரூம் விலை ரூ. 59.89 லட்சத்தில் தொடங்குகிறது.

    இந்த கார் 500 கி.மீ வரை பயணிக்க கூடிய 60 kWh பேட்டரி மற்றும் 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.   

    • ரஷிய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து இந்தியாவுக்கு கவலை இல்லை.
    • இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர்.

    "இந்தியா ரஷியாவிடம் இருந்து ரஷியா பணத்திற்கு அதிக அளவில் கச்சாய் எண்ணெய் மட்டும் வாங்கவில்லை. அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்து, அதிக லாபத்திற்கு ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது.

    ரஷிய தாக்குதலில் உக்ரைனில் எவ்வளவு மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது  பற்றி இந்தியாவுக்கு கவலை இல்லை. இதன் காரணமாக நான் இந்தியாவுக்கு எதிராக வரி விதிப்பை கணிசமான அளவில் உயர்த்த இருக்கிறேன் .

    ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு வரிகளை மேலும் அதிகரிக்க போகிறேன்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். 

    இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசுகையில், இந்தியாவின் எரிசக்தி கொள்கை அதன் தேசிய நலன் மற்றும் உலக சந்தையின் நிர்ப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது.

    இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது அவசியமான நடவடிக்கை.

    உக்ரைன் போர் தொடங்கியபோது, இந்தியாவின் வழக்கமான எண்ணெய் சப்ளையர்கள் தங்கள் விநியோகங்களை ஐரோப்பாவிற்கு திருப்பிவிட்டனர்.

    அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவுக்கு குறைந்த வாய்ப்புகள் இருந்தன. எனவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது லாபம் ஈட்டும் உத்தி அல்ல, மாறாக பொதுவான இந்திய நுகர்வோருக்கு மலிவான மற்றும் தடையற்ற விநியோகத்தை வழங்குவதற்கான முன்னுரிமையாகும்.

    இந்தியாவை விமர்சிக்கும் நாடுகள் தாங்களே ரஷியாவிடம் வணிகம் செய்கின்றன. அவர்களுக்கு அப்படி செய்வது கட்டாயம் அல்ல. ஆனால் அவர்கள் லாபத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம். மற்றவர்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன், அவர்கள் தங்கள் சொந்த நடத்தையைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார். 

    • இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.
    • தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் சுதா எம்பிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

    டெல்லியில் நடைபயிற்சி சென்றபோது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் 4 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள, உச்சகட்ட பாதுகாப்பு மிகுந்த சாணக்யாபுரி பகுதியில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் செயினை பறித்துச் சென்றதாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் எம்.பி. சுதா புகாரளித்துள்ளார். அந்த புகாரில் தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் சுதா எம்பிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், சல்வார் கிழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாய்னா 2023-ல் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றுள்ளார்.

    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

    ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் 1 வெள்ளி, 1 வெண்கலம் என பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ம் ஆண்டு சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சாய்னா அறிவித்தார்.

    இதற்கிடையே, சாய்னா நேவாலுக்கும் முன்னாள் இந்திய பேட்மிண்டன் வீரரான பருபுல்லி காஷ்யப் என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில், 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்தார்.

    இதுதொடர்பாக சாய்னா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் செய்தியில், இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவுசெய்து பிரிகிறோம் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கணவரை விட்டுப் பிரிவதாக அறிவித்திருந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,

    அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

    கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த சாய்னா நேவால், "சில நேரங்களில் நம்முடன் இருப்பவர்களின் மதிப்பு அவர்கள் தூரமாக இருக்கும்போது தான் தெரிகிறது. மீண்டும் தங்களது உறவை கட்டமைக்க முயற்சிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம்.
    • சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி வழங்கக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

    இந்த போராட்டத்துக்கு வனத்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், வனத்துறை மற்றும் போலீசார் முந்தல் அடவுப்பாறை பகுதியில் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.

    தடையை மீறி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது கட்சியினர் அங்கு இருந்த தடுப்புகளை அகற்றினர். இதனால் போலீசாருக்கும், அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அதன்பிறகு மாடுகளையும் தடையை மீறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். மாடு மேய்க்கும் போராட்டத்துக்காக சீமான் கையில் கம்புடன் மலையேறினார். அங்கு போராட்டத்தை நடத்திவிட்டு பின்னர் அவர் திரும்பி வந்தார்.

    அப்போது பேசிய சீமான் கூறுகையில்,

    தேனி மாவட்டத்தில் மலைகளில் கற்குவாரிகள் நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால், பாரம்பரிய மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதிப்பது இல்லை. வனத்துறையினர் இதற்கு தடை விதித்ததால் 1 லட்சம் மாடுகள் இருந்த இடத்தில், தற்போது 5 ஆயிரம் மாடுகள் தான் உள்ளன. மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம் என்று கூறினார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்த்ததால் சீமான் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×