என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் போர் தொடுத்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.
    • ரஷியாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    மாஸ்கோ:

    உக்ரைனுக்கு எதிராக ரஷிய ராணுவம் போர் தொடுத்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது.

    நான்காவது ஆண்டு நிறைவை குறிக்கும் நாளில், ரஷியாவில் ரோந்து வாகனத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்நிலையில், ரஷியாவின் மாஸ்கோவில் சவ்யோலேவ்ஸ்கி ரயில் நிலையம் அருகே நள்ளிரவு போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அடையாளம் தெரியாத நபர் போக்குவரத்து போலீசார் வாகனம் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்தச் சம்பவத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரும் இதில் உயிரிழந்தார்.

    இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

    • மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.
    • கேரளாவில் தேர்தல் நெருங்கி வருகிறது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.

    முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.

    பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசின் நிர்வாகம் குறித்து மோகன்லால் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

    இந்த நேர்காணலின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

    கேரளாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த நேர்காணல் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இது அரசின் ஒரு விளம்பர முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    மோகன்லால் ஒரு முதலமைச்சரை நேர்காணல் செய்வது இது முதல் முறையல்ல.

    இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அவர்களையும் அவர் இதேபோல் நேர்காணல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியே காரணம்.
    • ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்

    கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில் கேரளாவிற்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "மாநிலத்தின் பெயர் 'West Bengal' என்று 'W' எழுத்தில் தொடங்குவதால், தேசிய அளவிலான கூட்டங்கள், தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் மேற்கு வங்க மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எப்போதும் கடைசியாகவே அழைக்கப்படுகின்றனர்.

    நானும் கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பையே பெறுகிறேன்.

    மேற்கு வங்க சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை Bangla (வங்காளம்) என மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.

    இருப்பினும், மத்திய அரசு அதனை நிலுவையில் வைத்துவிட்டு, கேரளாவின் கோரிக்கையை மட்டும் விரைவாக நிறைவேற்றியிருப்பது வஞ்சகமானது.

    கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியின் காரணமாகவே, அம்மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு உடனே சம்மதித்துள்ளது.

    பாஜக தேர்தலின் போது மட்டும் 'Bangla' என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற நேரங்களில் பெங்காலிகளை அவமதிக்கிறது.

    ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
    • அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    முன்னாள் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.  புதிய கட்சித் தொடங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் அடங்கிய கட்சியின் கொடியை பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். 

    அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேசியுள்ளார். 

    சசிகலாவின் இந்த வருகை, தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அதிமுக வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

    • இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.

    டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன

    இந்நிலையில் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கி உள்ளது.

    இன்று (பிப்ரவரி 24) இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    ரசிகர்கள் tickets.t20worldcup.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம்.

    முதலாவது அரையிறுதி மார்ச் 4 ஆம் தேதியும் இரண்டாவது அரையிறுதி மார்ச் 5 ஆம் தேதியும், இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

    இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்பதால் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி தகுதி நிலையைப் பொறுத்து மைதானங்கள் மாறும்.

    டிக்கெட் வாங்கிய மைதானத்தில் போட்டி நடைபெறவில்லை என்றால், அதற்கான தொகை உங்கள் கணக்கிற்குத் திருப்பித் தரப்படும்.

    சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா, தனது அடுத்த இரு போட்டிகளில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய  தீவுகள் அணிகளை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். 

    • எல் மென்சோவுடன் சேர்த்து கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.
    • துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடின்னான்

    லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

    அவற்றுள் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற முக்கியமான கும்பலின் தலைவனாக இருந்தவன் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ்.

    கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படும் இவனை, மெக்சிகோ ராணுவம் ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

    எல் மென்சோவுடன் சேர்த்து அவரது கூட்டாளிகள் 7 பேரும் கொல்லப்பட்டனர்.

    இதனால் எல் மென்சோவின் கும்பலை சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம், சாலை மறியல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் எல் மென்சோ எப்படி சிக்கினான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    எல் மென்சோவைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க அரசு 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது.

    இதற்கிடையே அமெரிக்க உளவு அமைப்பான CIA வழங்கிய ரகசியத் தகவல்களின் அடிப்படையில், மெக்சிகோ ராணுவம் ஜலிஸ்கோ மாநிலத்தின் தபால்பா பகுதியில் மாபெரும் தேடுதல் வேட்டையை நடத்தியது.

    எல் மென்சோவின் காதலியின் நடமாட்டத்தை ராணுவம் தீவிரமாகக் கண்காணித்து வந்தது. பிப்ரவரி 20 அன்று, அவரது தோழி ஒருவரைப் பின்தொடர்ந்ததன் மூலம் எல் மென்சோ கிராமப்புறம் ஒன்றில் பதுங்கியிருந்த ரகசிய இடம் கண்டறியப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது எல் மென்சோவின் பாதுகாவலர்கள் ராணுவத்தின் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சேதமடைந்து அவசரமாகத் தரைஇறக்கப்பட்டது.

    துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே காயங்களுடன் காட்டுக்குள் தப்பியோடிய எல் மென்சோவை ராணுவம் துரத்திப் பிடித்தது. சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்குக் கொண்டு செல்லும் வழியில் எல் மென்சோவின் உயிர் பிரிந்தது.

    மென்சோவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ள நிலையில் இதில் 25 பாதுகாப்புப் படையினர் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    மெக்சிகோவில் நிலவும் இந்த உள்நாட்டுக் கலவரம் மற்றும் வன்முறை, அங்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.   

    • டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
    • இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.

    டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்தபோதிலும், பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று தெரிவித்தது.

    இதனைத்தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜெனீவாவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்நிலையில், அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் பிப்.26ம் தேதி 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

    பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

    • எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி- தாம்பரம் ரெயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த 10வது, 11வது நடைமேடையில் பணிகள் தொடங்கி இருப்பதால் கடந்த 20-ந்தேதியில் இருந்து 5 மற்றும் 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதன் காரணமாக சேவைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. புறநகர் மின்சார ரெயில் பயணிகள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்து கழகம் கூடுதலாக பஸ் சேவை அளிக்கிறது. குறிப்பாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் காரணமாக 204-ஆக இருந்த ரெயில் சேவைகள் 164-ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 115-ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, எழும்பூர்- பரங்கிமலை, எழும்பூர்- கூடுவாஞ்சேரி, எழும்பூர்- செங்கல்பட்டு இடையே கட் சர்வீஸ் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் ரெயில்வே அறிவித்துள்ளது. எழும்பூரில் இருந்து செல்லும் ரெயில்கள் சேத்துபட்டு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் நிற்காது. எழும்பூருக்கு வரும் போது பல்லாவரம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துபட்டில் நிற்காது. வார நாட்களில் இயக்கப்படும் கும்மிடிப்பூண்டி- தாம்பரம் ரெயில் செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மும்பையில் தரையிறங்கும் அவர், அங்கு இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களை சந்திப்பார்.
    • மார்க் கார்னி பிரதமராக இந்தியா வரும் முதல் பயணம் இது.

    கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    முதற்கட்டமாக பிப்ரவரி 26 அன்று அவர் இந்தியா வருகை தர உள்ளார். அன்றைய தினம் முதலில் மும்பையில் தரையிறங்கும் அவர், அங்கு இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களைச் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துவார்.

    அங்கிருந்து டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    மார்க் கார்னி பிரதமராக இந்தியா வரும் முதல் பயணம் இது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சமீபகாலமாக நிலவிய கசப்பான சூழலைச் சரிசெய்து, உறவை மீண்டும் வலுப்படுத்துவதே இந்த வருகையின் முக்கிய நோக்கமாகும்.

    பொருளாதார உறவு, எரிசக்தி மற்றும் யுரேனியம் விநியோகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு பற்றி அவர்கள் விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.

    இந்தியப் பயணத்திற்குப் பிறகு, மார்க் கார்னி ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனீஸைச் சந்திக்கவுள்ளார்.  

    • ஸ்மார்ட்போன்கள் நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாக உருவெடுத்துள்ளன.
    • 5 ஐபோன் அசெம்பிளி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் ஐபோன் முதலிடம் பிடித்துள்ளது.

    தொழில்துறை தரவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 23 பில்லியன் டாலர் (ரூ.1.90 லட்சம் கோடி) மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

    இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, முதலிடத்தில் இருந்து வந்த ஆட்டோமோட்டிவ் டீசல் ஏற்றுமதியைப் பின்னுக்குத் தள்ளி, ஸ்மார்ட்போன்கள் நாட்டின் முதன்மை ஏற்றுமதிப் பொருளாக உருவெடுத்துள்ளன.

    2025ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 30.13 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் 76 சதவீதம் ஆப்பிள் ஐபோன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களில் பெரும்பகுதி அமெரிக்காவிற்குச் செல்கிறது.

    அதேபோல், உள்நாட்டிலும் 2025ல் அதிக விற்பனையான போனாக ஐபோன் 16 இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    தற்போது இந்தியாவில் டாடா குழுமத்தின் கீழ் 3 ஆலைகளும், பாக்ஸ்கான் கீழ் 2 ஆலைகளும் என மொத்தம் 5 ஐபோன் அசெம்பிளி ஆலைகள் இயங்கி வருகின்றன.

    ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், "இந்தியாவில் டிசம்பர் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சாதனை அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது. ஐபோன், மேக், ஐபேட் போன்ற சாதனங்களுடன் சேவைகள் பிரிவிலும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் வளர்ந்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி மும்பையில் மற்றொரு புதிய ஆப்பிள் ஸ்டோரைத் திறக்க உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.    

    தமிழில், 'நான் உன் அழகினிலே', 'அடடா என்ன அழகு' உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.

    இந்தி திரைத்துறையின் முன்னணி பாடகராக இருந்து வருபவர் அர்ஜித் சிங்.

    38 வயதே ஆகும் அர்ஜித் சிங் கடந்த 15 ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பாடி வருகிறார். இந்தியில் ஆஷிக் 2 படத்தின் 'தும் ஹி ஹோ' பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார்.

    தமிழில், 'நான் உன் அழகினிலே', 'அடடா என்ன அழகு' உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.

    கடந்த ஆண்டு இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவித்தது.

    ஆனால் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அர்ஜித் சிங் அண்மையில் அறிவித்தார்.

    அப்போது அவர் வெளியிட்ட பதிவில், "உண்மையைச் சொல்லப்போனால், எனக்குத் திரையிசைப் பாடல்களில் ஒருவித சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

    எனது வளர்ச்சிக்கு புதிய வகை இசையை ஆராய வேண்டிய தேவை உள்ளது. ஒரே மாதிரியான இசையில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது.

    பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விலகினாலும், இசையைத் நான் கைவிடவில்லை.

    இனி ஒரு இண்டிபெண்டண்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக இசையை உருவாக்குவதிலும், இந்திய கிளாசிகல் இசையில் கவனம் செலுத்தவும் விருபுகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அமீர் கானுக்காக அர்ஜித் சிங் தனது முடிவை மாற்றியுள்ளார்.

    ஆமீர் கான் தன் தயாரிப்பில் உருவாகும் 'ஏக் தின்' என்கிற திரைப்படத்தின் அறிமுக பாடலைப் பாட மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்று அங்கு சொந்த கிராமத்திலிருந்த அரிஜித் சிங்கைச் சந்தித்தார்.

    சந்திப்பின்போது, தொடர்ந்து பாடுங்கள் என கோரிக்கை வைத்ததுடன் தன் படத்திற்காக பாட வைத்துள்ளார். அவர்கள் சந்தித்துக்கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    • நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
    • மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்.

    தினமும் 3 கப் காபி அல்லது இரண்டு கப் டீ குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் அவர்கள் தினசரி காபின் கொண்ட சூடான பானங்களை (தேநீர், காபி) எவ்வளவு அருந்தினர் என்பதையும், அவர்களின் நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

    ஆய்வின் முடிவில் தினமும் இரண்டு முதல் 3 சுப் காபின் கொண்ட டீ அல்லது காபி குடிப்பவர்களுக்கு, அதை குடிக்காதவர்களை விட 15 முதல் 20 சதவீதம் வரை டிமென்ஷியா அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் 3 கப்புகளுக்கு மேல் டீ, காபி குடிப்பதால் கூடுதல் பலன் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "டிமென்ஷியாவைத் தடுக்கும் வழிகளை ஆராய்ந்தபோது, காபி போன்ற அனைவரும் பயன்படுத்தும் பானம் நல்ல உணவுமுறை தீர்வாக இருக்கலாம் என்று நினைத்தோம்" என்று இந்த ஆய்வின் ஆசிரியரும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான டாக்டர் டேனியல் வாங் தெரிவித்துள்ளார். "மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.

    டீ மற்றும் காபியில் உள்ள பாலிபினால்கள் போன்ற பொருட்களே இந்த நன்மைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவை வீக்கம் மற்றும் செல் சேதத்தை குறைத்து, நினைவுத்திறன் சரிவைத் தடுக்க உதவக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

    ×