என் மலர்tooltip icon
    • உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது.
    • கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய ஊரக வேலை திட்ட மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    20 ஆண்டுகால மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) நேற்று ஒரே இரவில் மோடி அரசாங்கம் தகர்த்துவிட்டது.

    விபி - ஜி ராம் ஜி என்பது எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ திட்டத்தின் மறுசீரமைப்பு அல்ல. உரிமைகள் அடிப்படையிலான, தேவைக்கேற்ப வழங்கப்படும் உத்தரவாதங்களை அழித்து, மத்திய அரசிடம் இருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு பங்கீட்டுத் திட்டமாக மாற்றுகிறது. இது அடிப்படையிலேயே மாநிலங்களுக்கும், கிராமங்களுக்கும் எதிரானது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெண்களுக்குத்தான் அதிகம் உதவியது. இந்த திட்டத்தை மாநில அரசுடன் நிதிப்பங்கீடு செய்யும்போது பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், நிலமற்ற தொழிலாளர்கள், ஏழ்மையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும்தான் முதலில் வெளியேற்றப்படுவார்கள்.

    விபி-ஜி ராம் ஜி மசோதா எவ்வித ஆய்வுமின்றி பாராளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது. மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    கோடிக்கணக்கான தொழிலாளர்களைப் பாதிக்கும் ஒரு சட்டத்தை ஆய்வு செய்யாமல், நிபுணர் ஆலோசனை பெறாமல் மற்றும் பொது மக்கள் கருத்து கேட்காமல் ஒரு போதும் திணிக்கப்பட்டிருக்கக் கூடாது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டமானது உலகின் மிகவும் வெற்றிகரமான வறுமை ஒழிப்பு மற்றும் அதிகாரமளிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.

    கிராமப்புற ஏழைகளின் கடைசிப் பாதுகாப்பு அரணை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த நடவடிக்கையைத் தோற்கடிக்கவும், சட்டத்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யவும், தொழிலாளர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் மாநிலங்களுடன் நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு ராகுல்காந்தி கூறி உள்ளார்.

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன.
    • மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

    கோவை:

    'சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு' கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்றைய மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும், சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரிகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது.

    சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்தபோதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும், ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும், பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளது. குறிப்பாக தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்களும் உள்ளன.

    இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும் அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகத்திற்கே அந்த கருத்துக்கள், தத்துவங்கள் இன்று தேவைப்படுகின்றன. இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும்.

    உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகிறது. மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தத்தால் தற்கொலை அதிகரித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளின் தலைநகராக தமிழகம் உள்ளது.

    அந்த வகையில் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    அதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியோடு இழந்த நமது கலாச்சாரத்தையும் மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புது சக்தியை கொடுத்து வருகிறது. நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல தடைகளையும் கடந்து வளர்ந்து வருகிறது.

    ஆரியம், திராவிடம் என பலரும் பிரிக்க நினைத்தாலும் அவர்கள் தோற்றுப் போவார்கள். காரணம் அவர்களிடம் இருப்பது பொய்யான கருத்துக்கள் தான். அந்த வகையில் சரஸ்வதி நதி நாகரிகம் மற்றும் அதன் சிறப்பை இது போன்ற மாநாட்டின் மூலம் எடுத்துரைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார்.
    • அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.

    ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆகியோரிடம் கட்சியின் நிலவரங்களை கேட்டு அறிகிறார். அதில் கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டி தேர்தல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும், உள்கட்சி விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து வருகிறார்.

    கடந்த ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலசப்பாக்கம், அரக்கோணம், சோளிங்கர் ஆகிய 3 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியாக (ஒன் டூ ஒன்) வரவழைத்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசின் சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

    இதுவரை 49 நாட்களில் 112 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கள நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.

    • தமிழ் சினிமா வெற்றிக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது.
    • ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் பங்களிப்பு மிக முக்கியமானது.

    ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோர் தமிழ் திரையுலகின் தூண்களாக விளங்கிய தயாரிப்பாளர்கள்

    தமிழ் சினிமா என்பது உணர்ச்சிகள், கதைகள் மற்றும் பொழுதுபோக்கின் அற்புத கலவை. இதன் வெற்றிக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களில் ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    சரவணன் ஏ.வி.எம். ஸ்டுடியோஸின் மூலம் தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றார் என்றால், நடராஜன் தனது தயாரிப்பு நிறுவனங்களான ஆனந்தி பிலிம்ஸ் மூலம் பல கிளாசிக் படங்களை வழங்கினார். இவர்களின் திரைப்பயணம், தமிழ் திரையுலகின் பொன்னான காலகட்டங்களை பிரதிபலிக்கிறது.

    இக்கட்டுரையில் அவர்களின் வாழ்க்கை, திரையுலக சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து பார்ப்போம்.

    ஏ.வி.எம். சரவணன்:

    தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர்ஏ.வி.எம். சரவணன் (முழுப்பெயர் சரவணன் சூர்யா மணி) 1940ஆம் ஆண்டு பிறந்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னோடியான ஏ.வி. மெய்யப்பன் அவர்களின் மகனான இவர், ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் என்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது சகோதரர் எம். பாலசுப்ரமணியனுடன் இணைந்து நடத்தினார்.

    ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவின் முதல் ஸ்டுடியோக்களில் ஒன்றாக, 1947இல் தொடங்கப்பட்டது மற்றும் பல மொழிகளில் படங்களை தயாரித்துள்ளது.

    சரவணனின் திரைப்பயணம் 1958 ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது, அப்போது அவர் 'மாமியார் மெச்சின மருமகள்' (1959) மற்றும் 'தெய்வப்பிரவி' (1960) போன்ற படங்களில் புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவாக பணியாற்றினார். பின்னர், அவர் தயாரிப்பாளராக உருவெடுத்து, ஏ.வி.எம். நிறுவனத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார்.

    அவரது தலைமையின் கீழ் தயாரிக்கப்பட்ட களத்தூர் கண்ணம்மா (1960), சம்சாரம் அது மின்சாரம் (1986), முந்தானை முடிச்சு (1983), சகலகலா வல்லவன் (1982), சிவாஜி தி பாஸ் (2007), அயன் (2009) ஆகிய படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன.

    இது தவிர, ஏ.வி.எம். நிறுவனம் 170க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது, அவற்றில் பல கிளாசிக் ஹிட்கள்.சரவணன் ஒரு தயாரிப்பாளராக மட்டுமின்றி, இயக்குநர், எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

    அவரது தலைமையில் ஏ.வி.எம். ஸ்டுடியோஸ், தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது. துரதிர்ஷ்டவசமாக, 2025 டிசம்பர் 4ஆம் தேதி, 86 வயதில் அவர் காலமானார், தமிழ் திரையுலகுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினார். அவரது பாரம்பரியம், இன்றும் ஏ.வி.எம். நிறுவனத்தின் மூலம் தொடர்கிறது.

    ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன்:

    தஞ்சாவூர் மாவட்டத்தின் வலுத்தூர் கிராமத்தில் பிறந்தார் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன். இவர், கே. பாலசந்தரின் நாடகக் குழுவில் பணியாற்றிய பின்னர், ஜெமினி பிலிம்ஸில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக தொழிலைத் தொடங்கினார்.

    பின்னர் நடராஜன், ஆனந்தி பிலிம்ஸ்என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் கீழ் அவர் தயாரித்த 'முள்ளும் மலரும்' (1978, ரஜினிகாந்த் நடித்தது), 'சின்ன கவுண்டர்' (1992, விஜயகாந்த்), 'ராஜா கைய வெச்சா' (1990, பிரபு), 'பங்காளி' (1992, சத்யராஜ்), 'பசும்பொன்' (1995, பிரபு) ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களாகக் கருதப்படுகின்றன.

    உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடராஜன் இந்தாண்டு காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த தயாரிப்பாளர் நடராஜனுக்கு ஜோதி என்ற மனைவியும், செந்தில், விக்னேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    முடிவுரை:

    ஏ.வி.எம். சரவணன் மற்றும் ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் ஆகியோரின் திரைப்பயணம், தமிழ் சினிமாவின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. சரவணன் ஸ்டுடியோக்களின் மூலம் தொழில்நுட்பத்தையும், நடராஜன் தனது படங்களின் மூலம் உணர்ச்சிகரமான கதைகளையும் வழங்கினர். அவர்களின் படைப்புகள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. தமிழ் திரையுலகின் எதிர்காலத்துக்கு இவர்களின் பங்களிப்பு உத்வேகமாக அமையும்....

    • கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
    • கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

    திருச்சி:

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அறை வசதிகள், தங்கும் விடுதிகள், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டது.

    இன்று ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 21 நாட்களும் கண்டுகளிக்கும் வகையில் இந்த யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி (65) ஆகியோர் தங்களது 2 மகள்களுடன் கடந்த 10-ந்தேதி ஸ்ரீரங்கம் வருகை தந்தனர்.

    பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தும் வகையில் அவர்கள் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து நிவாஸ் ஊழியர்கள் அந்த அறைக்கு முன்பாக நின்றுகொண்டு பலமுறை கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அத்துடன் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.

    உணவில் விஷம் கலந்து அவர்கள் தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    • 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
    • புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லை ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள பாறையில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

    அருங்காட்சியகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள், பெயிண்ட் மூலம் பாறையில் இந்தியில் ராம் என எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ள நிலையில் புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வடமாநிலத்தவர்களை வைத்தே அரசு அதிகாரிகள் இந்தி எழுத்துகளை அழித்தனர்.

    • ஹெட் 142 ரன்னிலும் அலெக்ஸ் 52 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    • 99 ரன்னில் ஹெட்டுக்கு கேட்ச் மிஸ் செய்யப்பட்டது.

    அடிலெய்டு:

    ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 3- வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன் குவித்தது. அலெக்ஸ் கேரி 106 ரன்னும், உஸ்மான் கவாஜா 82 ரன்னும், ஸ்டார்க் 54 ரன்னும் எடுத்தனர். ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டும், கார்ஸ், வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டும், ஜோஷ் டங் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 213 ரன் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 45 ரன்னும், ஆர்ச்சர் 30 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 158 ரன்கள் பின்தங்கி, கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது. அந்த அணி மேலும் 73 ரன் எடுத்தது. இங்கிலாந்து 87.2 ஓவரில் 286 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 85 ரன் குறைவாகும்.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அவருக்கு ஆர்ச்சர் உறுதுணையாக இருந்தார். பென் ஸ்டோக்ஸ் 37-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 83 ரன் எடுத்தார். 18-வது டெஸ்டில் ஆடும் ஆர்ச்சர் முதல் அரை சதம் அடித்தார். அவர் 51 ரன் எடுத்தார். 9-வது விக்கெட் ஜோடி 106 ரன் எடுத்தது.

    கம்மின்ஸ், ஸ்காட் போலண்டுக்கு தலா 3 விக்கெட்டும், நாதன் லயனுக்கு 2 விக்கெட்டும், ஸ்டார்க், கேமரூன் கிரீனுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.

    85 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது ஓவரில் தொடக்க ஜோடி பிரிந்தது. ஜேக் வெதரால்ட் 1 ரன்னில் கார்ஸ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த லெபுசென் 12 ரன்னிலும் கவாஜா 40, கிரீன் 7 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

    இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஹெட் சதமும் அலெக்ஸ் கேரி அரை சதமும் கடந்தனர். இதனால் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 271 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹெட் 142 ரன்னிலும் அலெக்ஸ் 52 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து தர்ப்பில் ஜோஸ் டங் 2 விக்கெட்டும் வில் ஜக் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
    • நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது.

    கமல் ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கமல் ஹாசன் அக்கூட்டணியால் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்நிலையில் கமல் ஹாசன் எம்.பியாக தான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய முதல் கேள்வி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பெட்ரோலுடன் வழக்கமான 10 சதவீதத்திற்கு பதிலாக 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் E20 திட்டம் குறித்து கமல் ஹாசன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதற்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.  

    கமல் ஹாசனின் கேள்விகள்:

    1)E20 எரிபொருளால் வாகனத்தின் மைலேஜ் மற்றும் எஞ்சின் பாகங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா?

    2) பழைய வாகனங்களுக்கு ஏற்ற E10 பெட்ரோல் நாடு முழுவதும் கிடைப்பது நிறுத்தப்பட்டது ஏன்? அதனை மீண்டும் கொண்டுவரும் திட்டம் உள்ளதா?

    3) E20 பயன்பாட்டால் எஞ்சின் சேதமடைந்தால் அதற்கான உத்தரவாதம் அல்லது காப்பீடு குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளனவா?

    நிதின் கட்கரி எழுத்துபூர்வமாக அளித்த பதில்:

    நிறுவனங்களுடன் இணைந்து அரசு விரிவான ஆய்வுகளை நடத்தியுள்ளது. E20 எரிபொருள் குறித்து நடத்தப்பட்ட கள சோதனைகளில் வாகனங்களின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் கண்டறியப்படவில்லை.

    பழைய வாகனங்களில் கூட, E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் எஞ்சின் தேய்மானமோ அல்லது செயல்திறன் குறைவோ ஏற்படவில்லை என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருளை மட்டும் சார்ந்தது அல்ல. முறையான பராமரிப்பு, டயர் காற்றழுத்தம் மற்றும் ஏசி பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது.

    எத்தனால் கலப்பு அதிகரிப்பது நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • கேப்டன் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை.
    • பயிற்சியாளர் அல்லது கேப்டனின் பணியே அணிக்கு நம்பிக்கை தருவது மட்டும்தான்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் இந்திய அணி விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக பயிற்சியாளர் கம்பீர் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    இந்த நிலையில் கம்பீருக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    என்னை பொறுத்தவரை தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் பயிற்சியாளர் என்ற பொறுப்பே இல்லை என்று நினைக்கிறேன். காம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க முடியாது. அவர் அணியின் மேலாளராக வேண்டுமென்றால் இருக்கலாம்.

    நான் பயிற்சியாளர் பற்றி பேச வேண்டும் என்றால் பள்ளிகல்லூரியில் எங்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்த நபர்களைப் பற்றி தான் பேச வேண்டும். அவர்கள் தான் உண்மையில் பயிற்சியாளர்கள்.

    ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கோ அல்லது விக்கெட் கீப்பருக்கோ காம்பீர் எவ்வாறு சொல்லித்தர முடியும்? எனவே வீரர்களை நிர்வகிப்பது தான் மிகவும் முக்கியம். அணியின் மேலாளராக நீங்கள் வீரர்களை ஊக்கப்படுத்தி உங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு வர வேண்டும்.

    இதன் மூலம் இளம் வீரர்கள் உங்களைப் பார்த்து பின் தொடர்வார்கள். பயிற்சியாளர் அல்லது கேப்டனின் பணியே அணிக்கு நம்பிக்கை தருவது மட்டும்தான். இன்னும் உன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறி, அதன் பின் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    கேப்டன் என்பவர் ஒரு வீரர் சதம் அடித்து விட்டால், அவரை அழைத்து விருந்து கொடுக்க தேவையில்லை. அதற்கு பதிலாக யார் சரியாக விளையாடவில்லையோ அவர்களுடன் விருந்துக்கு செல்ல வேண்டும்.

    அவர்களுக்கு நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். ஒரு கேப்டனாக நாம் நமது செயல்பாடுகளை மட்டும் கவனிக்கக்கூடாது. ஒட்டுமொட்ட அணியும் ஒருங்கிணைத்து செயல்பட வைக்க வேண்டும்.

    இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

    • இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.
    • காற்று மாசு குறித்து விவாதிக்கப்படாமலேயே கூட்டத்தொடர் முடிந்தது/

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 3-ந் தேதி முதல் கூட்டத் தொடரின் அலுவல்கள் நடந்தன.

    இதில் வந்தே மாதரம் பாடல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. அணுசக்தித் துறையில் தனி யாரை அனுமதிப்பது உள்பட முக்கிய மசோதாக்கள் இரு அவையிலும் நிறை வேற்றப்பட்டன.

    மக்களவையில் நேற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமான விக்சித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகாமிஷன் (விபி-ஜி ராம் ஜி) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நிறைவேறியது.

    இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடிய தும் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்போது இந்தக் கூட்டத்தொடரின் போது சபையின் செயல்பாடு 111 சதவீதமாக இருந்தது என்று ஓம் பிர்லா கூறினார்.

    மேல்சபை இன்று காலை கூடியதும் அவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், 15 நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட சட்ட மியற்றும் மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த சுருக்கத்தை வாசித்தார்.  

    பின்னர் மேல்-சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் அறிவித்தார். இதையடுத்து மேல் சபையிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுபெற்றது. இரு அவைகளின் நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. இன்று டெல்லி காற்று மாசு குறித்து விவாதிக்கப்பட இருந்த நிலையில் அது குறித்து விவாதிக்கப்படாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது. 

    ×