search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Producers"

    • தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது.
    • புளி கிலோ 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் தரிசு நிலங்களிலும், வரப்புகளிலும், ரோட்டோரங்களிலும் புளியமரங்கள் அதிக அளவு பராமரிக்கப்படுகிறது. கோடை காலம் துவங்கியதும் புளியம் பழங்கள் அறுவடையை மேற்கொள்கின்றனர். ரோட்டோரத்திலுள்ள மரங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் தரிசு நிலங்களிலுள்ள மரங்களில் புளியம்பழம் பறிக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரும் ஏலம் விடுகின்றனர்.

    இவ்வாறு பறிக்கப்படும் புளியம்பழங்களில் இருந்த ஓடு மற்றும் விதைகளை பிரித்து சுத்தியலில் தட்டி மதிப்பு கூட்டி விற்பனை செய்கின்றனர்.தளி பகுதியில் இப்பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபடுகின்றனர். இந்தாண்டு அறுவடை முடிந்துள்ள நிலையில் புளியின் விலை சரிந்துள்ளது.

    இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில், வழக்கமாக, புளி கிலோவுக்கு 100 ரூபாய் வரை விலை கிடைக்கும். தற்போது 70 ரூபாய்க்கே கொள்முதல் செய்கின்றனர். பிற மாநில வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை குறைந்துள்ளது என்றனர்.

    • நெல் விதைக்கு பாதுகாப்பான ஈரப்பதம் என்பது 13 சதவீதமாகும்.
    • மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை, விதையை உலர வைக்க கூடாது.

    உடுமலை :

    நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதையை உலர வைப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் தெரிவித்தார். இது குறித்து கோவை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிக்கை வருமாறு:- ஆனைமலை தாலுகாவில் நெல் ரகங்களான கோ 51, ஏடிடீ -37, ஏடிடீ - 39, ஏடிடீ (ஆர்) 45, ஆர்.என்.ஆர்., 15048 போன்றவை விதைக்காக அதிகளவில் பயிரிடப்பட்டது. தற்போது, அறுவடை முடியும் நிலையில் உள்ளது. அறுவடை சமயத்தில் விதைகளின் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். அறுவடை செய்த விதைகளை சரியான முறையில் உலர வைப்பது அவசியம்.

    விதை ஒரு உயிருள்ள இடுபொருளாகும். விதையின் ஈரப்பதத்தை, பாதுகாப்பான ஈரப்பதம் வரும் வரை உலர வைப்பதாகும். நெல் விதைக்கு பாதுகாப்பான ஈரப்பதம் என்பது 13 சதவீதமாகும். விதையை உலர வைப்பது, விதை உயிருடனும், நல்ல வீரியத்துடணும் சேமிக்க உதவும்.இல்லையேல், பூஞ்சாணங்களினாலும், நுண்ணுயிர் தாக்குதலினாலும் விதைகள் பாதிக்கப்பட்டு, முளைப்பு த்திறன் பெருமளவில் பாதிக்கப்படும். அறுவடை முடிந்தவுடன் விதையை உலர வைத்து பாதுகாப்பான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். ஓரிரு மாதம் கழித்து உலர வைக்கும் போது அறுவடை சூட்டுடன் சேமித்து வைக்கும் போது விதைகள் வெட்டியாகி அடைகளாக மாறியிருக்கும். மேலும் நிறம் மங்கி முளைப்புத்திறனும் குறைந்து விடும்.

    விதையை உலர வைக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். ஈரமான சுகாதாரமற்ற களத்தில் விதையை உலர வைக்க கூடாது. களத்தில் ஒரே வயலில் இருந்து பெறப்பட்ட ஒரே பயிர், ஒரே ரகத்தைத்தான் ஒரே நேரத்தில் கையாள வேண்டும்.அதாவது மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை, விதையை உலர வைக்க கூடாது. உச்சி வெயிலில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அது விதைகளின் முளைப்பு த்திறனை பாதிக்கும். விதையை அதிகமாகவும் உலர வைக்க கூடாது.ஏனெனில் அதிகமாக உலரும்போது விதை மண்ணில் வெடிப்பு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டு முளைப்புத்திறன் பாதிக்கும்.

    உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறு வகை பயிர்களின் விதையை 9 சதவீத ஈரப்பதத்திற்கும், சோளம், கம்பு போன்ற பயிர்களின் விதையை 12 சதவீத ஈரப்பதத்திற்கும் உலர வைக்க வேண்டும்.எனவே விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் விதையை உலர வைப்பதில் தனி அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    • மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக கலெக்டர் கிருஷ்ண னுண்ணி ரூ.10 லட்சத்துக் கான காசோலையை வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கிராம பகுதிகளில் வறுமை ஒழிப்பையும் தாண்டி தொழில் நிறு வனங்களை உருவாக்குதல்,

    நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருதல் மூலமாக நிரந்தர வளர்ச்சி மற்றும் வளமான வாழ்வு பெற்று கிராமபுற மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துதலை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்திய மங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரங்களில் 77 ஊராட்சி களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி பவானி மகளிர் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திற்கு வணிக விரிவாக்க மானிய நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் தாமோதரன், செயல் அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார அணி த்தலைவர்கள், திட்ட நிர்வாகிகள், நிறுவன இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது.
    • பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    திருப்பூர் :

    கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாகவே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். தரமான பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது. சுமாரான தரம் உள்ள கூடு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனையானது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இப்போது வரை விலை குறையவில்லை.மார்க்கெட்டில் பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதனால் பட்டு நூலுக்கான தேவை அதிகரித்துள்ளது. பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சூலூர்,சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக பலர் பட்டுக்கூடு உற்பத்தியை துவக்கியுள்ளனர் என்றனர்.

    • சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சித்தோடு:

    சித்தோடு ஆவின் பால் பண்ணை முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒரு லிட்டர் பசும் பாலுக்கு விலை ரூ. 42 ஆகவும், எருமைப் பாலுக்கு ரூ. 51 ஆகவும் ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்வு வழங்கிட வேண்டும்.

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

    2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பால் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.கொரோனா காலத்தில் போராட்டம் நடத்த எங்களால் முடியவில்லை.

    எங்களின் கோரிக்கைகளை புதிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.அதன் அடிப்படையில் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    பால் கொள்முதல் செய்யும் இடத்தில் சங்கங்களின் சங்க பணியாளர்கள் ஒப்புகை சீட்டு வழங்கி தான் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    பால் கொள்முதல் செய்யும் பொழுது பாலின் தரம் அளவு ஆகியவை அளவீடு செய்யப்படுகிறது. ஆனால் பாலின் அளவு மற்றும் தரம் குறைவதாக காரணம் கூறி பால் பணம் குறைத்து தருகின்றனர்.

    2016 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி சங்கங்களில் பரிசோதிக்கப்பட்ட பாலின் தரம் மற்றும் அளவுகள் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கவனர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும், பாடலுக்கு உரிமை கோருவது சட்டவிரோதம் என்று இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். #Ilaiyaraaja #Royalty
    திரைப்பட தயாரிப்பாளர் செல்வகுமார், அன்பு செல்வன், ஜெபஜோன்ஸ், மீராகதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏதேனும் திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கும் போது இயக்குனரை தீர்மானிக்கின்றனர். இயக்குனரின் அறிவுரைப்படி நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுனர்கள் முடிவு செய்யப்படும். கடந்த 80 ஆண்டுகளாக இந்த நடைமுறை தான் சினிமா துறையில் நடந்து வருகின்றது.

    ஊதியம் பெற்று கொண்டு பணியாற்றும் இசைமைப்பாளர்கள் தங்கள் பணிக்கு எந்த உரிமையும் கோர முடியாது. படத்தில் அவர்களின் பங்களிப்புக்கு முதல் உரிமையாளர் தயாரிப்பாளர் தான். இந்த உரிமையை இந்திய காப்புரிமைச் சட்டம் வழங்கியுள்ளது.

    ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இசையமைப்பாளர் இளையராஜா, தான் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற பாடல்களின் காப்புரிமை தனக்கே சொந்தம் என கூறி வருகிறார்.

    இளையராஜாவை இசையமைப்பாளராக நியமித்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் காப்புரிமையை அவருக்கு வழங்கி, எந்த ஒப்பந்தமும் போடப்படாத நிலையில் அவர் இசையமைத்த பாடல்கள் மீது உரிமை கோருவது சட்டவிரோதமானது.



    இதை அனுமதித்தால் படத்தின் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், இயக்குனர் ஆகியோரும் காப்புரிமை கோர கூடும். பெரும் தொகையை முதலீடு செய்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இறுதியில் எதுவும் கிடைக்காத நிலை உருவாகும்.

    எனவே திரைப்படத்தை தயாரிப்பாளர்களே அப்படத்தின் இடம்பெற்றிருக்கும் காட்சி, பாடல், என அனைத்திற்கும் முழுமையான உரிமையானவர்கள் என அறிவிக்க வேண்டும்.

    தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். தங்களது படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மூலம் இளையராஜா சம்பாதித்த பணம் குறித்த கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Ilaiyaraaja #Royalty #Producers

    தயாரிப்பாளர்களை விமர்சித்து ட்விட் பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார். #SanthoshSivan #Producers
    பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ரோஜா, தளபதி, இருவர், உயிரே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘‘செக்கச் சிவந்த வானம்’’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

    சந்தோஷ் சிவனின் சமீபத்திய ட்விட் பதிவு தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டை மீம்ஸ் வடிவில் பதிவிட்டிருக்கிறார். அதில் இரண்டு நாய்கள் இடம்பெற்றுள்ளதோடு நடிகைகளின் சம்பளத்தை சந்தோ‌ஷமாக கொடுக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கடுகடுவென கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.



    இதற்குத் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் பதிவிட்டனர். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இது குறித்து கடுமையாக விமர்சித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார். தயாரிப்பாளர் சங்கம் வரை இந்த பிரச்சினை சென்றது.

    தயாரிப்பாளர் தேனப்பன் இதுபற்றி கூறும்போது ‘‘எனக்கு இப்படியொரு மீம்சை பார்த்தவுடன் மிகவும் கோபம் வந்தது. ஏனென்றால், திரையில் பி.சி.ஸ்ரீராமுக்கு பிறகு, வியந்து ரசிக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அவர் இப்படியொரு மீம்சை வெளியிட்டாரா என்று ஆதங்கப்பட்டேன்.

    அவர், அதிகமாக மணிரத்னம் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் படங்களிலும் வேலை பார்த்திருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் எந்த மொழியைச் சேர்ந்த தயாரிப்பாளரை குறிப்பிடுகிறார் என்ற சந்தேகம் இருந்தது.

    யாரைச் சொல்லியிருந்தாலும் தயாரிப்பாளரை சொல்லி இருக்கிறாரே என்று எண்ணி வருத்தப்பட்டேன். இதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்பதைவிட சந்தோஷ் சிவனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடம் பேசினேன். ‘’நான் எந்தப் போஸ்டையும் போடவில்லை. ரீ ட்விட் மட்டுமே செய்தேன். என்ன வென்று தெரியவில்லை. நிறைய நண்பர்கள் போன் செய்தார்கள். உடனே நீக்கிவிடுகிறேன்’’என்று சொன்னார். அவருடைய பதில் என்னை ஆறுதல் படுத்தியது’’ என்று தெரிவித்தார்.



    ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நேற்று தனது சர்ச்சைக்குரிய ட்விட்டை நீக்கி உள்ளார். தனது ட்விட்டை நீக்கிய அவர், ‘‘நல்ல தயாரிப்பாளர்கள் பலருக்கு அந்தக் கருத்து ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் இருந்ததால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன். நான் முன்பு தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார். #SanthoshSivan #Producers

    ×