search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயம்"

    • கீழப்பாவூரில் வீடுகள் தோறும் கொழு பொம்மைகள் அலங்கரித்து வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
    • ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு கலைகளை பறைசாற்றும் வகையில் அமைந்தது.

    தென்காசி:

    தசராவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய வகையாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் வீடுகள் தோறும் கொழு பொம்மைகள் அலங்கரித்து வைத்து தினமும் பூஜை செய்து வருகின்றனர். கொலு பொம்மைகளில் முக்கிய சாமி சிலைகள் மற்றும் முனிவர்கள், தலைவர்கள் சிலைகள்,கலைகளை பறைசாற்றும் வண்ணம் மேள தாளங்களுடன் இசை இசைக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட சிலைகள் வனவிலங்குகள், கண்ணன் ராதையுடன் தொட்டிலில் நிற்கும் வண்ணம் அமைக்கப்பட்ட சிலைகள் என ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு கலைகளை பறைசாற்றும் வகையில் அமைந்தது. குறிப்பாக இந்த ஆண்டு விவசாயம் தென் மாவட்டங்களில் போதிய அளவில் இல்லாததன் காரணமாக விவசாயம் செழிக்க வேண்டி அதனை எடுத்துரைக்கும் வண்ணம் மாடுகளுடன் விவசாயி செல்வது போன்று அமைக்கப்பட்ட கொலு சிலையானது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    • வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடைபெற்று வரும் சேமிப்பு கிடங்கு பணிகளை ஆய்வு செய்தார்.
    • மின் இணைப்பு பெறப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் அமைத்து பழ மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா்

    காங்கயம்:

    காங்கயம் ஒன்றியம், பொத்தியபாளையம் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் ஆய்வு செய்தாா்.

    இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடைபெற்று வரும் சேமிப்பு கிடங்கு பணிகளையும், மின் இணைப்பு பெறப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் அமைத்து பழ மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா்.

    ஆய்வின்போது, காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தாமணி, தோட்டக்கலை உதவி இயக்குநா் சதீஷ்குமாா், காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

    • புதுக்கோட்டையில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது
    • வேளாண்மை இணை இயக்குநர் வழங்கினார்

    புதுக்கோட்டை,

    அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு நெல் நுண்சத்து, சூடோமோனாஸ், திரவ அசோபைரில்லம், திரவ பாக்டீரியா முதலிய உயிர் உரங்கள், வரப்பு பயிராக சாகுபடி செய்திட உளுந்து, விதைகள் முதலிய இடுபொருட்களை புதுக்கோட்டை மாவட்டவேளாண்மை இணை இயக்குநர், மா.பெரியசாமி, வழங்கினார். மேலும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை களஆய்வுகள் செய்து அதிகபட்ச மகசூல் எடுத்திட தொழில் நுட்பஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.இது குறித்து அவர் பேசும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் பருவ மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்யப்பட்ட நிலத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு வருகிறது. அறந்தாங்கி வட்டாரத்தில் 6623 ஹெக்டரும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 5313 ஹெக்டரிலும், நேரடி நெல்விதைப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஒரு ஹெக்டருக்கு ரூ.7500/- மானியத்தில் நேரடி நெல் விதைப்பு விவசாயிகளுக்கு அறந்தாங்கி வட்டாரத்தில் 24 ஹெக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 24 ஹெக்ட ரிலும், மணமேல்குடி வட்டாரத்தில் 24 ஹெக்டரிலும், அரிமளம் வட்டாரத்தில் 8 ஹெக்டரி லும், மொத்தம் புது க்கோட்டை மாவட்டத்தில் 80 ஹெக்டரில் உயர் தொழில்நுட்ப வழிமுறை களை கடைபிடித்து விவசாயிகள் அதிக மகசூல்பெற விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கங் கள்அமைக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

    வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்)மா.ஆதிசாமி, தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் திட்ட ஆலோசகர்என்.சர்புதீன், தொழில் நுட்ப உதவியாளர், கார்த்திக், ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்சவிதா, அறந்தாங்கி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்பத்மப்ரியா, மணமேல்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவிவேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 66.60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

    உடுமலை

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர்இருப்பும் உயர்ந்தது. இதனால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள பாசன நிலங்களுக்கு உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    தென்மேற்கு பருவமழையும் கைவிட்டதால் அணையில் நீர்இருப்பும் குறைவாக காணப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஆகஸ்டு் மாதம் 10 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவதால் வறட்சி அதிகரித்து உள்ளது. அதைத்தொடர்ந்து பழைய மற்றும் புதிய பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் தேவையை சமாளிப்பதற்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். வருகிற 12-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 66.60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுக்க வேண்டும்.
    • இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜெயகணபதி தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் இளம் தொழில் வல்லுனர் சிவலிங்கம், மன்னார்குடி ஹெச்.டி.எப்.சி. வங்கியின் கிளை மேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் லட்சுமி வரவு செலவு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டமைப்பின் துணை தலைவர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    திட்டத்தின் நோக்கம் குறித்து கூத்தாநல்லூர் நிர்வாக இயக்குனர் முருகையன், முதன்மை செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் இயக்குனர் இடையூர் மாலா, விளக்குடி உஷா, கமலாபுரம் ஆரோக்யராஜ், சாந்தா, நீடாமங்கலம் சங்கீதா உள்பட 600-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆடு வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அஸ்வின் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் திருவாரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அறிவழகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தொழில் முனைவோரை உருவா க்குவது, பாரதி மூலங்குடி, தில்லைவிளாகம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவது, ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுப்பது, இயற்கை விவசா யம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • புதுக்கோட்டை பகுதி நெற்பயிரில் குலைநோய், புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்
    • கட்டுப்படுத்திட வேளாண்மை துணை இயக்குனர் ஆலோசனை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் மேற்கொள்ளும் சம்பா நெற்பயிரில் குலைநோய் மற்றும் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்திட புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.குலைநோய் தாக்கப்பட்டால், . இலை களின்மேல் பழுப்பு நிறத்தில் சாம்பல் நிற மையப்பகுதியுடனும் காய்ந்த ஓரங்களுடன்கூடிய கண்வடிவப் புள்ளிகள் காணப்படும்.இந்நோய் தீவிரமாகத் தாக்கும்போது பயிர் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிப்பதால் குலைநோய் எனப்படுகிறது.குலைநோயைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைப்பிடித்தல் வேண்டும்.இந்நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 120 கிராம் அல்லது அசோஸ்க்சிட்ரோபின் 23 எஸ்.சி. என்ற மருந்து 200 மி.லி. இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.புகையான் என்பது ஒரு தத்துப்பூச்சி. சாம்பல் நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற சிறிய இறக்கைகளைக் கொண்டி ருக்கும். இப்பூச்சியானது நெற்பயிரின் தூர்களில் இருந்துகொண்டு நெற்பயிரின் சாற்றை உறிஞ்சுகிறது.

    வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்போதும் இதன் பாதிப்பு அதிகமாகும். மேலும், நெருக்கி நடப்பட்ட வயல்களிலும், தழைச்சத்து அதிகமாக இடப்பட்ட வயல்களிலும் இதன் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.விவசாயிகள் வயல் வரப்புகளைத் தூய்மையாக வைத்திருப்பதோடு,நெற்பயிரை நெருக்கமாக நடுவதைத் தவிர்த்து செம்மை நெல் சாகுபடி முறையில் நட வேண்டும்.அல்லது, எட்டடிக்கு ஓர் அடி இடைவெளியில் பட்டம் விட்டு நடவு செய்ய வேண்டும்.வயலில் நீர் மறைய நீர் கட்ட வேண்டும். மேலும், யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை மேலுரமாக இடும்பொழுது பிரித்துப்பிரித்து இட வேண்டும். இவ்வாறு புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.புகையானின் தாக்குதல் அதிகமாகும்பொழுது ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 எஸ்.சி. 300 மி.லி. அல்லது தையோமீத்தாக்சம் 25 டபிள்யு.ஜி. 40 கிராம் அல்லது இமிடாகுளோபிரிடு 17.8 எஸ்.எல். 40 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிரின் தூர்ப் பகுதியில் நன்கு படும்படி தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பாறை துகள்கள் பயிர்கள் மீது படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
    • கல்குவாரியால் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள குறிச்சாம்பட்டி கரையாளனூர் கிராமத்தில் கிணற்று பாசனங்கள் மூலம் விவசாய பணிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் ராட்சத எந்திரம் மூலம் கல் அரவை மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும், பயிர்கள் மீதும் படிந்து காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஏமையா, திரவியம் உள்ளிட்ட விவசாயிகள் கூறும் போது, கல் அரவை பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து வரும் பாறை துகள்கள் எங்களது பயிர்கள் மீது படிந்து அவற்றை கருக செய்கிறது. இதுகுறித்து நாங்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. மேலும் இந்த கல்குவாரியால் வேளாண்மைக்கு பயன்படுத்தி வரும் எங்கள் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி, வறட்சி நிலைக்கு சென்று விட்டது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்த கல்குவாரியால் கரையாளனூர் பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் கணினி திறனுடன் இருத்தல் அவசியம்.

    திருப்பூர்:

    வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வங்கிக்கடன் உதவி பெற்று வேளாண் சார்ந்த தொழில் துவங்கும் பட்டதாரிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    தகுதிகளானது வேளாண்மை , தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் முடித்திருக்க வேண்டும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம் அல்லது வங்கி கடன் உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 21 முதல் 40 வயதுடையவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினி திறன் பெற்றிருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிகின்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும்.

    தேவையான ஆவணங்களாவன 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, துவங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகியவை ஆகும்.

    2023-24 ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 52 கிராம பஞ்சாயத்துகளில் தொழில் துவங்க விண்ணப்பிக்கும் வேளாண் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லதுவேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நிதி உதவி பெற்று வங்கி கடனுடன் வேளாண் சார்ந்த தொழிலை துவங்க முன்வரும் வேளாண் பட்டதாரிகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேற்கண்ட திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி உதவி,வட்டி மானியம் போக கூடுதல் மானியமாக விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த திட்ட மதிப்பீட்டில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூபாய் ஒரு லட்சம் வரை, வங்கி கடன்ஒப்புதல் பெற்ற பிறகு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.இத்திட்டத்தில் பதிவு செய்ய விருப்பம் உள்ள பட்டதாரிகள் அக்ரிஸ்நெட் இணைய முகப்பில் பதிவு செய்ய வேண்டும்.

    தங்களின் விரிவான திட்டஅறிக்கையை சம்மந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்கவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநர்அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
    • தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்து வாங்க முடியும்.

    உடுமலை,செப்.19-

    குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    குடிமங்கலம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து மக்காச்சோளம், உளுந்து, பாசிபயறு, கம்பு, சோளம், நிலக்கடலை, கொண்டைக்கடலை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தயாராக உள்ளனர்.

    வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய தேவையான அளவு விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மக்காச்சோளம் - 2,112 கிலோ, சோளம் (சி.ஓ.,32) - 1,300 கிலோ, சோளம் (கே-12) -492 கிலோ, உளுந்து (வி.பி.என்.,8) - 750 கிலோ, உளுந்து (வி.பி.என்.,9) - 217 கிலோ, உளுந்து (வி.பி.என்.,11) - 1,500 கிலோ, கொண்டைக்கடலை - 600 கிலோ, நிலக்கடலை (தரணி) - 1,260 கிலோ ஆகிய ரக விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் நுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவையும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பயிர்களுக்கு நுண்ணூட்ட உரங்களான பயறு வகை நுண்ணூட்டம், தானிய வகை நுண்ணூட்டம் மற்றும் தென்னை நுண்ணூட்ட உரங்களும், உயிரியல் பூச்சி மற்றும் பூஞ்சான கொல்லிகளான மெட்டாரைசியம் அனிசோபிலே, டிரைகோடெர்மா விரிடி, சூடோ மேனாஸ் ஆகியவையும் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளது.

    நடப்பாண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, கம்பு மற்றும் ராகி செயல்விளக்க திடல் அமைக்க, விதைகள், நுண்ணூட்ட உரங்கள், நுண்ணூட்ட சத்து உரங்கள் ஆகியவை அடங்கிய தொகுப்புகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.விவசாயிகள், தங்களுக்கு தேவையான இடு பொருட்களை உழவன் செயலி வாயிலாக பதிவு செய்தும், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டும் பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.   

    • தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம்.
    • இதுவரை 37 லட்சத்து 83 ஆயிரத்து 98 மரங்கள் நடப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே அத்தியூர் கிராமத்தில் சுமார் 5ஏக்கர் பரப்பளவில் 2ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    மரம் தங்கசாமி நினைவுதினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 605 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.

    அதன்படி அத்தியூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமேஷ் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

    இந்த ஆண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 37லட்சத்து 83ஆயிரத்து 98 மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை காவேரி கூக்குரல் ஊக்குவித்து வருவதாக அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது.
    • நிலக்கடலைகளை தார்பாய்களில் கொட்டி காய வைத்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி, ஆவுடை யானூர், சிவசை லனூர், அரியப்பபுரம், திரவிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசா யிகள் அதிக அளவில் நிலக்கட லை பயிரிட்டு இருந்தனர்.

    நிலக்கடலை விளைச்சல் அடைந்துள்ளதால் அதனை எடுக்கும் பணியில் தீவிர மாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் கடலை விளைச்சல் குறைந்துள்ளதாகவும், வெள்ளை குட்டம் எனும் நோயும் தாக்கி உள்ளதால் நிலக்கடலை பருப்புகள் முழுமையான வளர்ச்சியை அடைய வில்லை. மேலும் கடந்த ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.3 ஆயிரம் வரையில் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 600 முதல் 2 ஆயிரத்து 800 வரையே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    வயலில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கடலைகளை வெயிலில் காய வைப்பதற்காக வயலுக்குள்ளேயே தார் பாய்களில் கொட்டி காய வைத்து வருகின்றனர். நிலக்கடலை அறுவடை செய்யப்பட்ட செடிகளை கட்டுகளாக கட்டி மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

    • தக்காளி விலை அதிகரிப்பானது நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
    • விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தமிழகத்தில் தக்காளி விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் அதன் விலையானது கடந்த 1½ மாதத்திற்கு முன்பு வரை வரலாறு காணாத அளவில் ஏற்றத்துடன் காணப்பட்டு வந்ததால் குடும்பப் பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

    தக்காளி விலை அதிகரிப்பானது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் பேசு பொருளாக மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளாக விளங்கி வரும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் அதன் விலையானது அதிகரித்த வண்ணமே இருந்தது. காரணம் உள்ளூர் விவசாயிகளிடம் அதிக அளவில் தக்காளி விளைச்சல் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

    தக்காளி விலையேற்றத்தை அறிந்து பாவூர்சத்திரம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட தொடங்கினர். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வீரகேரளம்புதூர் பகுதியில் அதிகளவில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டதன் காரணமாக தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது.

    பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகளவில் இருப்பதால் அதன் விலையானது கிலோ ரூ.10 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் மேலும் இதன் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

    எனவே விளைச்சல் அதிகம் இருக்கும் வேளாண்மை பொருட்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

    ×