search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு பருவமழை"

    • 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
    • தூத்துக்குடியில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அரையாண்டு தேர்வுகள் மற்ற மாவட்டங்களில் முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்றும், பள்ளிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    இதையடுத்து 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 11-ந்தேதி வரையிலும், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 10-ந்தேதி வரையிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் அறிவியல், 6-ந்தேதி கணிதம் தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல், 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடக்கிறது.

    இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்தும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. மேலும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. வெள்ள நீர் புகுந்த பள்ளிகளில் தேங்கி கிடந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. சேறும் சகதியுமாக இருந்த இடங்களில் மண் கொட்டப்பட்டிருந்தன.

    தொடர்ந்து இன்று காலை மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்றனர். நெல்லை, தூத்துக்குடியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் புத்தகங்கள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    நெல்லை மாநகரில் 46 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாவட்டத்தில் சில பள்ளிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாலும், சில பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதம் அடைந்திருப்பதாலும் அதனை பயன்படுத்த வேண்டாம் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து அந்த பள்ளிகள் இன்று செயல்படவில்லை. அவர்களுக்கு மாற்று பள்ளி கட்டிடங்களில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தென்காசி மாவட்டத்திலும் விடுமுறைக்கு பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். நாளை மறுநாள் தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. 

    • தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
    • மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18-ந்தேதி பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கனமழை பாதிப்பை கருத்தில் கொண்டு அந்த 3 மாவட்டங்களில் மட்டும் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
    • ரேசன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல்-வெள்ளப் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வெள்ள நிவாரணமாக டோக்கன் கொடுத்து ரேசன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக ரேசன் கடைகளில் விண்ணப்பித்த பொது மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

    5.55 லட்சம் பேர் நிவாரண நிதிக்காக விண்ணப்பித்துள்ள நிலையில் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்களது வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது அவர்களது உடைமைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

    இதன் அடிப்படையில் அரசு இப்போது புதிதாக ஒரு செயலியை (ஆப்) உருவாக்கி உள்ளது. அதில் விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேசன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    அதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண்களை பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேசன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுத்தவர்களை வீட்டு அருகே நிறுத்தி போட்டோ எடுக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணியில் கிராம நிர்வாக அதிகாரி, அவரது உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த பிறகுதான் அவரவர் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட உள்ளது. அப்போது தான் யார்-யாருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்கும் என்பது தெரியவரும்.

    • கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    • குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து, தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    அதன்படி, கனமழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

    தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 7000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

    • பாதிக்கப்பட்ட வணிகர்களை கணக்கெடுத்து உதவி கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
    • மாவட்ட பொருளாளர் சத்திய ரீகன் நன்றி கூறினார்.

    சென்னை:

    சென்னையில் மிச்சாங் புயல் மழையால் பெரும் பாதிப்பு அடைந்த சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு கைகொடுக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் அல்லது ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானித்து செயல்பட்டு வருகிறது.

    மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட வணிகர்களை கணக்கெடுத்து உதவி கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி அயனாவரத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் அயனாவரம் எஸ். சாமுவேல் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு உதவித் தொகையை வழங்கினார். முதற்கட்டமாக மத்திய சென்னை மாவட்டத்தில் உள்ள வணிகர்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் 100 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

    பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் ஜோதி லிங்கம், தலைமை நிலைய செயலாளர் ராஜ்குமார் மாநில இணைச்செயலாளர் பால சண்முகம், அயன்புரம் வியாபாரிகள் ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் அருள்குமார் பொருளாளர் சுயம்பு, இளம் தொழில் முனைவோர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கேவி கதிரவன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஷேக் முகைதீன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் சத்திய ரீகன் நன்றி கூறினார்.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.

    தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் ஜன.1ந்தேதி முதல் 5-ந்தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இன்றும் நாளையும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மழை அதிகரிக்கும்போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி திருச்செந்தூரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட பிரதான அணைகளில் இருந்து சுமார் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏராளமான குடியிருப்புகள் மூழ்கியது. கடுமையான சேதத்தை விளைவித்த இந்த வெள்ள பாதிப்பில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது அவ்வப்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. ஏற்கனவே அணைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்மழையால் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை 10,100 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து சற்று குறைந்தது.

    இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 9,400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்றும் அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாபநாசத்தில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறில் 6.8 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 3425 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 5,890 கனஅடியும் இன்று காலை நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் நேற்று கனமழை பெய்த நிலையில் இன்றும் காலை வரையிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    இதற்கிடையே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மழை அதிகரிக்கும்போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம். எனவே நீர்வரத்து அதிகரித்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் வெள்ளம் ஏற்பட இல்லை என்றாலும், முன்எச்சரிக்கையாக மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, அந்த பகுதிக்கு செல்லவோ வேண்டாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி அந்த மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி எச்சரித்துள்ளார்.

    மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி திருச்செந்தூரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டங்களில் மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை என்றாலும், மழை எச்சரிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 11 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்திய பெருங்கடலில் காற்று சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தூத்துக்குடிக்கு இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    • அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் வடியவில்லை. அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழை) மதியம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசான மழை பெய்யும்.

    நாளை (30-ந் தேதி) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் தகவலை தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், முன் எச்சரிக்கை நட வடிக்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் நிலவுகிறது. ஆனால் அத்தகைய நிலை ஏற்படுமானால் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
    • முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களது வீடுகள் மற்றும் உடைமைகள் முழுவதும் சேதமானது. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் சேதமான ஆவணங்களுக்கு மாற்று ஆவணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதமான ஆவணங்களை பெறுவதற்கு இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வட்டத்தில் தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களிலும், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பழைய தாசில்தார் அலுவலகம், தாசிதார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏரல் வட்டத்தில் பழையகாயல் மரிய அன்னை மேல்நிலைப்பள்ளி, நாசரேத் கிராம நிர்வாக அலுவலகம், ஆழ்வார்திருநகரி கிராம நிர்வாக அலுவலகம், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சாயர்புரம் கிராம நிர்வாக அலுவலகம், ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    திருச்செந்தூர் வட்டத்தில் ஆத்தூர் சமுதாயநலக்கூடம், புன்னைக்காயல் புனித வளனார் திருமணமண்டபம், சுகந்தலை சமுதாய நலக்கூடம், திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகம், மெஞ்ஞானபுரம், பரமன் குறிச்சி, மானாடு தண்டு பத்துக்கு வெள்ளாளன் விளை சர்ச் மகால், நங்கைமொழி, லெட்சுமி புரம், செட்டியா பத்து, உடன்குடிக்கு உடன்குடி வருவாய் அலுவலகம், சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. சாதிச்சான்று, இருப்பிச்சான்று, வருமானச்சான்று, வாரிசுச்சான்று, விதவை, ஆதரவற்றோர் சான்று உள்ளிட்டவைகள் வருவாய்த்துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, பட்டா நகல்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்.கார்டு, டிரைவிங் லைசென்சு, பத்திர ஆவணங்கள் மற்றும் சிலிண்டர் இணைப்பு புத்தகம் ஆகியவைகள் சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    எனவே இன்றும், நாளையும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று, தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
    • கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்து பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16, 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பேய் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் அந்த பகுதிகளை பெருமளவில் பாதித்தது.

    இந்தநிலையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, அந்த பகுதியில் மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று, தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை ஊராட்சியில் கனிமொழி எம்.பி. நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்து பேசினார். அப்போது அந்த சிறுமி 'தனக்கு கண் பார்வையில் பிரச்சனை இருக்கிறது என்றும், அதற்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்' என்றும் வேண்டுகோள் வைத்தார். சிறுமியின் அந்த வார்த்தையை கேட்டதும், உடனடியாக கண் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்..

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
    • சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாமண்டூர் பாலத்திலும் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு மழையால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலைகளை மழைநீர் அடித்து சென்றது. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக, பள்ளமாக உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் மழை நின்று பல வாரங்கள் கடந்த நிலையிலும் இந்த சாலை இன்னும் சீரமைக்கப்பட வில்லை. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சாலையில் வாகனம் ஓட்டவே திணறுகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் வேதனையுடன் கூறியதாவது:-

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் தொடங்கி செங்கல்பட்டு பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை வரை 4 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த 4 சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல நூற்றுக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறார்கள். ஆனால் சுங்க கட்டணம் செலுத்தி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சீரமைக்கப்படாத குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகனங்களில் பழுது ஏற்படுகிறது.

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழை நின்ற பகுதிகளிலாவது போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களால் விபத்து நிகழும் ஆபத்து உள்ளது. அதனை கவனத்தில் கொண்டு சாலை பள்ளங்களை விரைந்து சரி செய்ய வேண்டும்.

    சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை பராமரிப்பதிலும், சீரமைப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

    எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாமண்டூர் பாலத்திலும் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது. இதனால் இந்த பகுதியில் 10 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிகிறது. எனவே தமிழக அரசு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அழுத்தம் கொடுத்து பணிகளை உடனே தொடங்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×