search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன
    X

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்த மாணவிகளை, ஆசிரியைகள் பூக்கள் கொடுத்து வரவேற்ற காட்சி.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன

    • 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
    • தூத்துக்குடியில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அரையாண்டு தேர்வுகள் மற்ற மாவட்டங்களில் முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்றும், பள்ளிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    இதையடுத்து 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 11-ந்தேதி வரையிலும், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 10-ந்தேதி வரையிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் அறிவியல், 6-ந்தேதி கணிதம் தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல், 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடக்கிறது.

    இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்தும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. மேலும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. வெள்ள நீர் புகுந்த பள்ளிகளில் தேங்கி கிடந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. சேறும் சகதியுமாக இருந்த இடங்களில் மண் கொட்டப்பட்டிருந்தன.

    தொடர்ந்து இன்று காலை மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்றனர். நெல்லை, தூத்துக்குடியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் புத்தகங்கள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    நெல்லை மாநகரில் 46 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாவட்டத்தில் சில பள்ளிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாலும், சில பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதம் அடைந்திருப்பதாலும் அதனை பயன்படுத்த வேண்டாம் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து அந்த பள்ளிகள் இன்று செயல்படவில்லை. அவர்களுக்கு மாற்று பள்ளி கட்டிடங்களில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தென்காசி மாவட்டத்திலும் விடுமுறைக்கு பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். நாளை மறுநாள் தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

    Next Story
    ×