search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்தவர்களை வீட்டு முன்பு போட்டோ எடுக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
    X

    ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பித்தவர்களை வீட்டு முன்பு போட்டோ எடுக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
    • ரேசன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல்-வெள்ளப் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வெள்ள நிவாரணமாக டோக்கன் கொடுத்து ரேசன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்டமாக ரேசன் கடைகளில் விண்ணப்பித்த பொது மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.

    5.55 லட்சம் பேர் நிவாரண நிதிக்காக விண்ணப்பித்துள்ள நிலையில் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்களது வீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அல்லது அவர்களது உடைமைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

    இதன் அடிப்படையில் அரசு இப்போது புதிதாக ஒரு செயலியை (ஆப்) உருவாக்கி உள்ளது. அதில் விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களையும் ரேசன் கடை ஊழியர்களுடன் இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.

    அதில் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண்களை பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ரேசன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுத்தவர்களை வீட்டு அருகே நிறுத்தி போட்டோ எடுக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணியில் கிராம நிர்வாக அதிகாரி, அவரது உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ரேசன் கடை ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்த பிறகுதான் அவரவர் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட உள்ளது. அப்போது தான் யார்-யாருக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்கும் என்பது தெரியவரும்.

    Next Story
    ×