search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழையால் ஏற்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் திணறல்
    X

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழையால் ஏற்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் திணறல்

    • தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
    • சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாமண்டூர் பாலத்திலும் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு மழையால் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் முதல் உளுந்தூர்பேட்டை வரை சாலைகளை மழைநீர் அடித்து சென்றது. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக, பள்ளமாக உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் மழை நின்று பல வாரங்கள் கடந்த நிலையிலும் இந்த சாலை இன்னும் சீரமைக்கப்பட வில்லை. இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சாலையில் வாகனம் ஓட்டவே திணறுகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் வேதனையுடன் கூறியதாவது:-

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் தொடங்கி செங்கல்பட்டு பரனூர், ஆத்தூர், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை வரை 4 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த 4 சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல நூற்றுக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறார்கள். ஆனால் சுங்க கட்டணம் செலுத்தி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், சீரமைக்கப்படாத குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகனங்களில் பழுது ஏற்படுகிறது.

    சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவில் விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழை நின்ற பகுதிகளிலாவது போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலைகளில் உள்ள பள்ளங்களால் விபத்து நிகழும் ஆபத்து உள்ளது. அதனை கவனத்தில் கொண்டு சாலை பள்ளங்களை விரைந்து சரி செய்ய வேண்டும்.

    சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை பராமரிப்பதிலும், சீரமைப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டு கொள்ளாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

    எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாமண்டூர் பாலத்திலும் சாலை குண்டும் குழியுமாகவே உள்ளது. இதனால் இந்த பகுதியில் 10 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல முடிகிறது. எனவே தமிழக அரசு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அழுத்தம் கொடுத்து பணிகளை உடனே தொடங்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×