search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லைப்பெரியாறு அணை"

    • புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வராது.
    • தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த ம.தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

    கம்பத்துக்கும் எனக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. 678 கிராமங்களில் தான் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு எடுத்த முயற்சிகளை தடுப்பதற்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி உள்ளேன்.

    முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்காக இடைவிடாது உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், நடைபயணம் உள்ளிட்ட கம்பம் மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக பாடுபட்டுள்ளேன். மேலும் தற்போது கேரளாவைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கருத்தினை கூறி வருகிறார்.

    அவ்வாறு புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீர் வராது. 5 மாவட்டங்கள் பாலைவனமாகும். அதேபோன்று தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதனை தடுப்பதற்கு தென்மாவட்டம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன்.

    இந்த நியூட்ரினோத் திட்டம் செயல்பட்டால் அம்பரப்பர் மலைக்கு மட்டும் ஆபத்தல்ல. அருகில் உள்ள இடுக்கி அணைக்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும்.

    எனவே நியூட்ரினோ பிரச்சினைக்காகவும், முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கவும் நான் மீண்டும் வருவேன். மக்களை சந்திப்பேன். விவசாயிகளுடன் சேர்ந்து அதனை தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
    • மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    152 அடிஉயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்து வந்தது. இன்று காலை அது முற்றிலுமாக நின்றுவிட்டது. வரத்து இல்லாத நிலையில் 644 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 121.70 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.61 அடியாக உள்ளது. 415 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது. 23 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 62.16 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 16 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • கேரளாவில் ஒருசிலர் அரசியலுக்காக முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகின்றனர்.
    • பாலார்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் பொங்கல் வைத்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 182-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர்.

    தமிழக அரசின் சார்பில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன்பிறகு அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப்பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக்கிற்கு லண்டனில் சிலை வைத்து உலகறிய செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம். கேரள அரசிடம் நட்பான முறையில் தமிழக அரசு பேசி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

    மேலும் பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். கேரளாவில் ஒருசிலர் அரசியலுக்காக முல்லைப்பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என பேசி வருகின்றனர். இது ஒருபோதும் நடக்காது. எந்த சூழ்நிலையிலும் அணைக்கான உரிமை மற்றும் கண்ணகி கோவிலின் உரிமையை தமிழக அரசு விட்டு கொடுக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.ஜக்கையன், பெரியாறு-வைகை பாசன ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர், பாரதீய கிஷான் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ்பாபு மற்றும் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், கூடலூர் நீரிணைப் பயன்படுத்துவோர் சங்கம் நாம் தமிழர் கட்சி, பா.ஜ.கவினர், விவசாயிகள் விடுதலை முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சியினர் உள்பட ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    பாலார்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் பொங்கல் வைத்து பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. இந்த அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையிலும் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. ஆனால் பாசனத்துக்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் 142 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு மழையும் நின்றதால் எதிர்பார்த்தபடி 142 அடியை நெருங்காமல் தாமதமானது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 141.95 அடியாக உள்ளது. வரத்து 762 கன அடி. திறப்பு 750 கன அடி. இருப்பு 7653 மி.கன அடி. அணையின் நீர்மட்டம் 142 அடியை இன்று மதியத்திற்குள் எட்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு இடுக்கி மாவட்டத்துக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படும். இதனை தவிர்க்க தற்போதே அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் வரையிலும் அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலேயே நிலைநிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு மீண்டும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதே போல 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 63.40 அடியாக உள்ளது. வரத்து 506 கன அடியாக உள்ளது. நேற்று வரை 1769 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 500 கன அடி குறைக்கப்பட்டு 1269 கன அடியாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4296 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 80 கன அடி. திறப்பு 30 கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 125.78 அடி. வரத்து 24 கன அடி. திறப்பு 27 கன அடி.

    பெரியாறு 1.4, தேக்கடி 13, கூடலூர் 2.4, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 2.6, ஆண்டிபட்டி 17, வீரபாண்டி 2.7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • 152 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிவரை தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளியணை, அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது.

    கூடலூர்:

    கேரளா மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றனர்.

    அணையின் அமைவிடம் கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணிகள் முழுவதையும் தமிழகமே மேற்கொண்டு வருகிறது. 152 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிவரை தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தொடங்கியது.

    நீர்மட்டம் 140 அடியை எட்டியபோது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

    முல்லை பெரியாறு அணைக்கு வினாடிக்கு 1166 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7396 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளியணை, அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.19 அடியாக உள்ளது. வரத்து 940 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 4673 மி.கனஅடி, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி, வரத்து 100 கனஅடி, திறப்பு 40 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.30 அடி, வரத்து 60 கனஅடி, திறப்பு 30 கனஅடி.

    • வைகை அணையின் நீர் மட்டம் 65.35 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.57 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    பேபி அணையை பலப்படுத்தி முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்க அறிவுறுத்தியுள்ளது. ரூல் கர்வ் முறைப்படி மே மாதம் 31-ந் தேதி வரை 142 அடி தண்ணீர் தேக்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 142 அடியை எட்ட வாய்ப்பு உள்ளது.

    நேற்று மாலை 140 அடியை எட்டியதும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டி பெரியாறு, வல்லக்கடவு, உப்புத்துறை, சப்பாத்து உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை தமிழக நீர் வளத்துறை அதிகாரிகள் இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பினர். 141 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன் பின்னர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 65.35 அடியாக உள்ளது. 1076 கன அடி நீர் வருகிறது. 1719 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.57 அடியாக உள்ளது. 146 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 0.4, தேக்கடி 1.4, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 1, போடி 7.2, வைகை அணை 2.2., சோத்துப்பாறை 6, பெரியகுளம் 3, வீரபாண்டி 3, அரண்மனைப்புதூர் 0.8, ஆண்டிபட்டி 4.2, சண்முகாநதி அணை 7.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • பேபி அணையை பலப்படுத்த 15 மரங்களை வெட்ட கேரளத்தின் அனுமதியை மீண்டும் அளிக்க உத்தரவிட வேண்டும்.
    • பெரியாறு ஏரியில் புதிய படகுகளை இயக்க தமிழக அரசுக்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்

    புதுடெல்லி:

    முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு தமிழகத்துக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவது இல்லை. இது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்ல வல்லக்கடவு-முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை பயன்படுத்த அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு, அணையை பலப்படுத்துவதற்கான நிலுவைப் பணிகளை நிறைவு செய்ய மேற்பார்வைக்குழுவுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச்செல்ல வல்லக்கடவு-முல்லைப் பெரியாறு காட்டுச்சாலையை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    பேபி அணையை பலப்படுத்த 15 மரங்களை வெட்ட கேரளத்தின் அனுமதியை மீண்டும் அளிக்க உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து, வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பாக கருவிகளை பொருத்தி, அவற்றை இணையத்தில் வெளியிட கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். பெரியாறு ஏரியில் புதிய படகுகளை இயக்க தமிழக அரசுக்கு அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது.
    • 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.93 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. 152 அடி உயரமுள்ள அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து இடுக்கி மாவட்டத்தின் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிபெரியாறு ஆகிய கிராம மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2274 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6181 மி.கன அடியாக உள்ளது.

    ரூல்கர்வ் முறைப்படி முல்லைப்பெரியாறு அணையில் வருகிற 10-ந் தேதி வரை 139.50 அடி வரை தேக்கிக் கொள்ளலாம். இதேபோல் நவம்பர் 20-ந் தேதி வரை 141 அடி வரையிலும், நவம்பர் 30-ந் தேதி வரை 142 அடி வரையிலும் தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதாலும், வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும் ரூல் கர்வ் விதிப்படி 142 அடி வரை தேக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    அதே வேளையில் 136 அடியை எட்டியபோதே முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது ஏன்? எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது மட்டுமின்றி கடந்த வருடம் அணையின் நீர் மட்டம் உயர்ந்தபோது கேரள மந்திரி மற்றும் அதிகாரிகள் தன்னிச்சையாக அணை பகுதிக்கு சென்று அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி விட்ட சம்பவம் போல் இந்த முறை நடைபெறக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அணை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.93 அடியாக உள்ளது. வரத்து 1151 கன அடி. திறப்பு 1269 கன அடி. இருப்பு 5808 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 435.32 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.60 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 160 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • லண்டனை சேர்ந்த பொறியாளர் பென்னிகுக் தனது அயராத முயற்சியால் 9 வருடங்களாக பல்வேறு சிரமங்களை சந்தித்து இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டார்.
    • கேரளாவுக்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    கூடலூர்:

    மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதார முக்கியத்துவத்தில் அங்கமாக உள்ளது முல்லைபெரியாறு அணை. இந்த அணை கேரள மாநில எல்லைக்குள் இருந்தாலும் அணை முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானதாகும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1886-ம் ஆண்டு பெரியாறு குறுக்கே 8000 ஏக்கர் பரப்பளவில் இந்த அணை கட்டப்பட்டது.

    லண்டனை சேர்ந்த பொறியாளர் பென்னிகுக் தனது அயராத முயற்சியால் 9 வருடங்களாக பல்வேறு சிரமங்களை சந்தித்து இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டார். 1895-ல் இதன் பணிகள் முடிவடைந்தது. பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதற்காக 1886-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஸ்ரீ மூலம் முன்னிலையில் திவான் ராமையங்கார், சென்னை மகாணத்தின் சார்பில் கொச்சி-திருவிதாங்கூர் பொறுப்பில் இருந்த ஜான்சைல்டு காலிங்டன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    999 வருடங்களுக்கு இந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அதுவரை இந்த அணை தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். கேரளாவுக்கு குத்தகை பணமாக ஏக்கருக்கு ரூ.5 வழங்க வேண்டும் என்பது உள்பட 7 நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தம் 1970-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அப்போது குத்தகை பணம் ஏக்கருக்கு ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டது. முல்லைபெரியாறு நீரை பயன்படுத்தி தமிழ்நாடு தயாரிக்கும் மின்சாரத்திற்காக ஒரு கிலோவாட்டுக்கு ரூ.12 கேரளாவுக்கு கொடுக்க வேண்டும். 30 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.

    முல்லைபெரியாறு அணை ஒப்பந்தம் போடப்பட்டு நாளை 136 வருடங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டத்தின் முதல் 2 பகுதிகள் 100 சதவீதம் முடிந்துள்ளது.
    • நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மூடி இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டம் வந்துள்ளார். நேற்று 10 மாவட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் திடீயூர் பகுதியில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் மற்றும் பச்சையாறு அணைக்கட்டு பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்ட பணி தாமிரபரணி ஆறு-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டம். நான் இதற்கு முன்னர் அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்ததை நானே திறக்க வேண்டும் என விட்டுவிட்டார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டத்தின் முதல் 2 பகுதிகள் 100 சதவீதம் முடிந்துள்ளது. 3-ம் பகுதி 99 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 4-ம் பகுதி 58 சதவீதம் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் பெருமளவு நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் மொத்தமாக மார்ச் 2023-ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.

    முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

    நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மூடி இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான அபராதம் விதித்து கல்குவாரிகளை திறப்பதற்காக மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டது.

    ஆனால் அவர்கள் அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள். கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்கு தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள், அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்கள் குறித்து பேசி வருவது குறித்து கேட்டனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் சிரிப்பை பதிலாக தெரிவித்து சென்றார்.

    • பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழகம் வலியுறுத்தல்.
    • வள்ளக்கடவு வழியாக 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்.

    முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவின் 16-வது கூட்டம் குழுவின் அதன் தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கண்காணிப்புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கேரள அரசு சார்பிலும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணையை ஒட்டிய பேபி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், பேபி அணையின் கீழ் பகுதியில் இடையூராக உள்ள 15 மரங்களை வெட்டி அகற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

    அதைப்போல அணைப்பகுதிக்கு வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவை கணக்கிட்டு, தமிழகத்துக்கு உரிய நீரை பகிர வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள 13 மரங்களை அகற்ற கேரள வனத்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது
    • மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் சார்பில் ஆய்வு நடத்தி மரங்களை அகற்றவும், வல்லக்கடவு சாலையை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் பாரதிய கிசான் சங்க தலைவர் சதீஸ்பாபு, முல்லைச்சாரல் விவசாய சங்க நிர்வாகிகள் கொடியரசன், ஜெயபால், ராஜா உள்ளிட்டோர் தேக்கடியில் யானைகள் தின விழாவில் கலந்துகொண்ட மத்திய மந்திரி பூபேந்திரயாதவ், அஸ்வின் குமாரை சந்தித்தனர்.

    மேலும் அவர்களிடம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்ததாவது:-

    கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு பேபி அணையில் பராமரிப்பு பணிகள் செய்து 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்றும், பின்னர் 2 அணைகளையும் பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.

    ஆனால் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள 13 மரங்களை அகற்ற கேரள வனத்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. வல்லக்கடவு தொடர்பு சாலையையும் பராமரிக்க அனுமதிக்கவில்லை.

    மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் சார்பில் ஆய்வு நடத்தி மரங்களை அகற்றவும், வல்லக்கடவு சாலையை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

    ×