search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைப்பெரியாறு கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    முல்லைப்பெரியாறு கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    • 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது.
    • 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.93 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. 152 அடி உயரமுள்ள அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 136.25 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து இடுக்கி மாவட்டத்தின் வல்லக்கடவு, சப்பாத்து, வண்டிபெரியாறு ஆகிய கிராம மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 2274 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 6181 மி.கன அடியாக உள்ளது.

    ரூல்கர்வ் முறைப்படி முல்லைப்பெரியாறு அணையில் வருகிற 10-ந் தேதி வரை 139.50 அடி வரை தேக்கிக் கொள்ளலாம். இதேபோல் நவம்பர் 20-ந் தேதி வரை 141 அடி வரையிலும், நவம்பர் 30-ந் தேதி வரை 142 அடி வரையிலும் தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதாலும், வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும் ரூல் கர்வ் விதிப்படி 142 அடி வரை தேக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    அதே வேளையில் 136 அடியை எட்டியபோதே முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது ஏன்? எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது மட்டுமின்றி கடந்த வருடம் அணையின் நீர் மட்டம் உயர்ந்தபோது கேரள மந்திரி மற்றும் அதிகாரிகள் தன்னிச்சையாக அணை பகுதிக்கு சென்று அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி விட்ட சம்பவம் போல் இந்த முறை நடைபெறக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர். அது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அணை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.93 அடியாக உள்ளது. வரத்து 1151 கன அடி. திறப்பு 1269 கன அடி. இருப்பு 5808 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 435.32 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.60 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 160 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    Next Story
    ×