search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்: கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை
    X

    141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்: கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

    • 152 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிவரை தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளியணை, அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது.

    கூடலூர்:

    கேரளா மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றனர்.

    அணையின் அமைவிடம் கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணிகள் முழுவதையும் தமிழகமே மேற்கொண்டு வருகிறது. 152 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிவரை தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தொடங்கியது.

    நீர்மட்டம் 140 அடியை எட்டியபோது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

    முல்லை பெரியாறு அணைக்கு வினாடிக்கு 1166 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 511 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 7396 மி.கனஅடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வெள்ளியணை, அரசரடி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.19 அடியாக உள்ளது. வரத்து 940 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 4673 மி.கனஅடி, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி, வரத்து 100 கனஅடி, திறப்பு 40 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.30 அடி, வரத்து 60 கனஅடி, திறப்பு 30 கனஅடி.

    Next Story
    ×