search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முத்தரசன்"

    • உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர மறுக்கிறார்.
    • நாட்டில் 22 மொழிகளும் தேசிய மொழிகளாக கருதப்பட வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் மிக கொடூரமான சம்பவம். கலவரத்தின் மூலம் 2024 தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலமாக மோடியை அவைக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அவருக்கு நிர்ப்பந்தம் கொடுத்து அவரை பாராளுமன்றத்திற்கு வரவழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் 3-வது முறையாக வெற்றி பெறவும் முயற்சி செய்கிறார்கள். குஜராத்தில் கற்ற பாடத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    நாட்டில் 22 மொழிகளும் தேசிய மொழிகளாக கருதப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்குமான வளர்ச்சிக்குரிய நிதியை மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் மிகக் குறைவான அளவு பேசக்கூடிய சமஸ்கிருதத்திற்கு மிக அதிகபட்ச நிதியை ஒதுக்குகிறார்கள். தமிழ் மொழிக்கு மிக குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது.

    இந்தி மொழியை காலப்போக்கில் அனைவரும் ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வலுக்கட்டாயமான முறையில் திணிக்க முயற்சி செய்கிறார். ஒரு பக்கம் கலவரத்தின் மூலமாகவும், மத மோதல்கள் மூலமாகவும் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர்.

    இந்தியை திணித்து மொழியின் மூலமாகவும் மொழி மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசு ஜனநாயகத்தை சீரழித்து விட்டு ஒரு சர்வதிகார பாசிச பாதையில் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கம் மட்டுமல்ல அடுத்த 8 ஆண்டு காலத்திற்கு தேர்தலுக்கு வரக்கூடாது என்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் இன்னும் அவருடைய பதவி நீக்கத்தை விலக்க மறுக்கிறது.

    அமலாக்கத்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் ரீதியாக பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கக்கூடிய அரசுகளையும், கட்சிகளையும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலமாக அடி பணி வைக்கக்கூடிய அப்பட்டமான ஜனநாயக விரோத செயலில் மத்திய அரசு ஈடுபடுத்தி வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆபத்தானது.

    மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு நாடாக இருக்காது. சர்வாதிகாரி கையில் ஆட்சி சென்று விடும். அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக 26 கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளது கர்நாடகத்தில் தோல்வி அடைய வைத்தது போல் நாடும் முழுவதும் மோடியை பா.ஜ.க.வை தோல்வியடைய வைக்க மக்கள் தயாராக உள்ளனர்.

    அண்ணாமலை நல்ல விளம்பர பிரியர், ஆனால் பாதயாத்திரையை அவர் மணிப்பூரில் நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்ட மணிப்பூரில் அவர் நடைபயணம் நடத்தியிருந்தால் நல்லது. ஆனால் இங்கு நடை பயணம் என்ற பெயரால் வாகன பயணம் செய்து நாடகம் நடத்தி வருகிறார். மக்கள் பெரும் திரளாக வந்து கூடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் மக்கள் கூடவில்லை. இது அப்பட்டமான நாடகம்.

    தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு வர இது போன்று முயற்சிக்கிறார். அ.தி.மு.க. ஊழலையும், தி.மு.க. ஊழலையும் பேசுவேன் என்றார், ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றார், ஆனால் ஜெயலலிதாவை பற்றி பெரிய தலைவர் என்கிறார், தற்போது அதை பற்றி பேச மறுக்கிறார், பாதயாத்திரை துவக்க விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை, அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை, மோடி அமித்ஷாவுடன் தான் கூட்டணி என அறிவித்திருக்கிறார்.

    இந்த நிலையில் பி.ஜே.பி. தலைமையில் இருக்கக்கூடிய அணி ஒன்று சேரக்கூடிய முடியாத ஒரு அணியாக உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனை, இந்தி திணைப்பு முயற்சி இவைகளை கண்டித்து வருகிற செப்டம்பர் 12 13, 14 ஆகிய மூன்று நாட்களில், தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தொடர் மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ள முடிவு செய்து இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது என்று முத்தரசன் பேசினார்.
    • எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சேது ராமன் நினைவு திடலில் விவசாய தொழிலாளர்கள் சங்க 13-வது மாநில மாநாடு நிறைவு விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை வகித்தார்.

    இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்க தேசிய பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் முன்னிலை வகித்தனர்.

    மாநாட்டில் தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள விவசாய தொழி லாளர்களின் சமூக பொருளாதார நிலைமை களை ஆய்வு செய்ய உயர்மட்ட ஆய்வு குழு அமைக்க வேண்டும், 100 நாள் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது. பின்னர் முத்தரசன் பேசியதாவது:-

    விவசாய தொழிலா ளர்கள் அமைப்பு ரீதியாக அணி திரண்டால் எத்தகைய அரசியல் சூழலையும் எதிர்கொள்ள முடியும். 9 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.830 உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீது 260 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயருகிறது.

    மத்திய அரசின் தவறான கொள்கைகளால் முடிவால் விலைவாசி உயர்ந்துள்ளது. மாமன்னரிடம் குறுநில மன்னர்கள் பிச்சை கேட்பது போல அனைத்து மாநில முதல்வர்களும், பிரதமரிடம் சென்று நிதி தாருங்கள் என கெஞ்ச வேண்டிய நிலைமை உள்ளது.

    இவை எல்லாவற்றையும் எதிர்த்து, நாட்டின் நலனுக் காக நாம் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த நாளான ஆகஸ்டு 9-ந்தேதி 'மோடியே வெளியேறு' என்ற போராட் டம் தொழிற்சங்கள் சார்பில் நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் நடைபெற உள்ளது.

    ஆகஸ்ட் 20-ல் இளைஞர் மற்றும் மாணவர் பெரு மன்றம் சார்பில் சென்னை யில் பேரணியும், அக்டோபர் 1, 2 தேதிகளில் மாதர் சங்க பேரணி நடைபெறுகிறது. விலைவாசி உயர்வு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்து செப்டம்பர் 12,13,14 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவகங்கள் முன் தொடர் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.பி.க்கள் சுப்பராயன், செல்வராஜ், சி.பி.ஐ. மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ராமச் சந்திரன், மாரிமுத்து, முன்னாள் எம்.பி.க்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர். தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது.
    • மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தது. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பாக வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜ்பவனை கமலாலயம் ஆக்க உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது.
    • பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் திமிர்த்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்ட பொறுப்பானது மதிக்கத் தக்க கண்ணியமான ஒரு பொறுப்பு. ஆனால் தொடர்ந்து அந்த பொறுப்புக்கு அவர் களங்கம் ஏற்படுத்தி வருகிறார். சட்டப்பேரவையில் கவர்னர் உரை என்பது அமைச்சரவையால் தயாரிக்கப்பட்டு அவரது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு முதல் நாள் இரவு 12 மணிக்கு தான் அச்சடிக்கப்படும்.

    அதனை அப்படியே வாசிக்க வேண்டும் என்பது மரபு. அதில் ஒரு பகுதியை நீக்குவதும், இன்னொரு பகுதியை சேர்ப்பதற்கும் அவருக்கு உரிமை கிடையாது. மேலும் அந்த கொள்கை, திட்டத்தின் மீது கருத்துக்களை சொல்லும் உரிமை என்பது சட்டமன்ற உறுப்பினர்களுக்குதான் இருக்கிறது. உரை பொய்யானது என்று கவர்னர் கூறுவது அபத்தமானது, கண்டனத்திற்குரியது. கவர்னர் இவ்வாறு பேசுவது அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு யோக்கியமான அரசாக இருந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசும் அவரை இந்த நேரம் டிஸ்மிஸ் செய்து, கைது செய்திருக்க வேண்டும். ஆனால் யோக்கியமற்ற அரசாக இருக்கின்ற காரணத்தால் அவரது இஷ்டத்துக்கு கருத்து சொல்கிறார். சனாதனத்தை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார். சனாதனம் தான் நாட்டின் சீரழிவுக்கு காரணம்.

    நாங்கள் ரவியை கேட்டுக் கொள்வதெல்லாம் நீங்கள் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். தொண்டனாக, பா.ஜ.க. தொண்டனாக இருந்து என்ன வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு பேசலாம். ராஜ்பவனை கமலாலயம் ஆக்க உங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது. ராஜ்பவன் மாநில அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. உங்களுக்கு சம்பளத்தை மக்களின் வரிப்பணத்தில் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

    பிரதமர் மோடியும், உள்துறை மந்திரியும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் திமிர்த்தனமாக பேசிக்கொண்டிருக்கிறார். தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மைக்கு புறம்பான மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் கருத்துக்கள் உள்ள படமாக கேரளா அரசு தெரிவித்துள்ளது. உளவுத்துறையும் கடுமையாக எச்சரித்துள்ளது. மக்களிடையே மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் ஒற்றுமையை எதிர்பார்க்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை இல்லா கால ஊதியம் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.
    • கல்விக்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தி வங்கிகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கே எனது வேலை? என்ற தொடர் பரப்புரை பயண எழுச்சி மாநாடு திருச்சியில் வரும் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்து உள்ளது. தனியார் மயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அவுட் சோர்சிங் செய்யும் முறையை தேர்ந்தெடுத்து குறைவான ஊதியத்தில் ஆட்களை பணிக்கு அமர்த்தியிருக்கின்றனர்.

    மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். அனைத்து துறைகளிலும் உள்ள ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்தையும் இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை தொடர் பரப்புரை பயணம் எழுச்சி மாநாடு திருச்சி புத்தூரில் 2-ந்தேதி நடைபெறுகிறது.

    முன்பு இருந்த பிரதமர்கள் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்கவில்லை. 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டார்.

    தனியாரை ஊக்குவிக்கும் வகையிலேயே 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அதானிக்கு தனியார் முதலீடு அதிகம் வழங்கப்படுகிறது. இது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதுதான் எதிர்கட்சிகள் கோரிக்கை.

    அதானிக்கு ஏஜெண்டாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்பது தான் அவமானமாக, வெட்கக்கேடாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை இல்லா கால ஊதியம் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

    கல்விக்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தி வங்கிகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அதேபோன்று கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு எந்தஒரு பதிலும் அளிக்கவில்லை.

    ராகுல் காந்தி எம்.பி. மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதான வழக்கில் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, அவரது வீட்டை காலி செய்வது என்பது ஜனநாயக விரோதம். எதிர்க்கட்சிகளே இல்லாத சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வரும் முன்னோட்டம் தான் இது. இந்திய ஜனநாயகத்திற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சம்மட்டி அடிதான் இது. தேர்தலின் போது பா.ஜ.க. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

    தி.மு.க. அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்த முடியாது, நடத்தவும் மாட்டோம். ஏனென்றால் கடந்த எடப்பாடி ஆட்சியை விட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் எல்லாவற்றையும் பட்ஜெட்டில் நிறைவேற்றி இருக்கீங்க.
    • தனியார் மயம் என்பது கம்யூனிஸ்டுகளால் ஏற்றுக் கொள்ள முடியாது.

    தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் எல்லாவற்றையும் பட்ஜெட்டில் நிறைவேற்றி இருக்கீங்க. ரொம்ப சந்தோசம். 62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை 30 ஆயிரம் கோடியாக குறைந்து இருப்பதும் முதலமைச்சரின் நிர்வாக திறமை தான் என்று புகழ்ந்து தள்ளிய இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஒரே ஒரு விஷயம் தான் பிடிக்கவில்லை. அதை மட்டும் கொஞ்சம் மறு பரிசீலனை செய்தால் நல்லா இருக்கும் என்று கூறி உள்ளார்.

    அதாவது தனியார் மயம் என்பது கம்யூனிஸ்டுகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. மின் தேவை அதிகரிப்பால் தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை தான் ஏற்க முடியவில்லை. அதையும் கொஞ்சம் மறு பரிசீலனை செய்தால் நல்லாயிருக்கும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

    • விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார்.
    • சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் மீண்டும் போடப்படுவதாக இருந்தால் எதிர்ப்போம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது.

    ஒன்றிய அரசின் 2023-24 நிதி நிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை காப்பதற்கான அறிக்கை. ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அறிக்கை. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாலை முதல் எம்.பி. சுப்புராயனும், நானும் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

    மகாத்மா காந்தி திட்டத்திற்கு நிதி குறைப்பை கண்டித்து வரும் மார்ச் மாதம் 7-ந் தேதி அனைத்து இடங்களிலும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெறும். தொடர்ந்து டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும்

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் மீண்டும் போடப்படுவதாக இருந்தால் எதிர்ப்போம். இல்லாததை சொல்லி எடப்பாடி பழனிசாமி பிரச்சினைகளை திசை திருப்ப முயல்கிறார்.

    தி.மு.க.வில் உள்ள தோழமை கட்சிகளும், இடது சாரி கட்சிகளும் தி.மு.க. செய்யும் தவறுகளை சுட்டி காட்டவில்லை. வாய்மூடி மவுனியாக இருப்பதாக எடப்பாடி சொல்கிறார்.

    அவர் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவரும், அவருடைய கட்சியும் வாய்மூடி மவுனியாகத்தான் இருக்கிறது. பா.ஜ.க.வின் கொத்தடிமையிலும், கொத்தடிமையாக அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி இருக்கிறார். வேட்பாளரையே பா.ஜ.க.வை கேட்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறது.இப்படிப்பட்டவர் எங்களை பற்றி விமர்சிக்க உரிமை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை.
    • ஆளுநர் பதவியை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும்.

    ராயபுரம்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் பா. ஜீவானந்தம் 60 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை, காசிமேட்டில் உள்ள நினைவிடத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் நல்லகண்ணு, மறைந்த பா. ஜீவானந்தத்தின் பெருமைகளை எடுத்துரைத்தார்.

    அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இலக்கிய பேராசிரியர் ஜீவானந்தம் பற்றி தமிழகம் நன்கு அறிந்த ஒரு தலைவர் என்றும், மிகப்பெரிய புரட்சியாளராகவும் நாட்டின் விடுதலைக்காக போராடினார்.

    அதற்காக பல ஆண்டுகள் சிறை தண்டனைகளை அனுபவித்தார் என்றும் தெரிவித்தார்.மேலும் தந்தை பெரியாருடைய நினைவு பகுத்தறிவு பிரச்சாரத்தையும் செய்தார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு இவரும் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தவர்.

    இலக்கியத்தில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற இருந்தவர் எனவும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலைஞர்களோடும் கலைஞர், எம்ஜிஆர் அவர்களுடன் நட்போடு இருந்தவர். ராஜாஜி, பெரியார், அண்ணா, கலைஞர் என அனைத்து தலைவர்களுடனும் பணியாற்றியவர், தனது வாழ்க்கை முழுவதும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பணியாற்றினார். மேலும் நாட்டில் பரப்புவாதம் தலை தூக்கி நிற்கிறது நாட்டையே தலைகீழாக திருப்ப முயற்சி நடந்து கொண்டிருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மதத்தின் பெயரால்

    கடவுளின் பெயரால் நாட்டு மக்களை பிளவு படுத்தி தங்களது சுயநலக் கொள்கையை பயன்படுத்தி மக்களை பிரிக்க நினைக்கின்றனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியாவில் அதிபர் ஆட்சியை கொண்டு வர பா.ஜ.க. முயலுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை 2024-ம் ஆண்டு சட்டசபையோடு சேர்ந்து தேர்தல் வந்தால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று குறுகிய ஆசையை அ.தி.மு.க. வைத்துள்ளார்.

    ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது இதை ஏற்கவில்லை. இதை யாராலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அ.தி.மு.க. கொள்கைக்கு இது எதிரானது என்றும் தெரிவித்தார். ஒரு கட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கை அதை கொஞ்சம் கொஞ்சமாக பிஜேபி செய்து வருகிறது. மதவாததிற்கும் தமிழ்நாடு என்ற பெயருக்கும் தமிழர்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.

    ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டாம். ஆளுநர் பதவியை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும்.

    மேலும் ஒரு ஒப்புக்காக ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்றுக் கொள்வதாக வைத்திருந்தாலும் 2024 -ம் ஆண்டு வெற்றி பெற்றால் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்பதற்கு என்ன சாட்சி.

    ஒன்றிய அரசை கலைத்து விட்டு திரும்பத் திரும்பத் தேர்தல் நடத்த நமது நாடு தயாராக இருக்கும் எனவும் கூறினார்.

    • ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
    • நாளை விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள சுதந்திரமான அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அந்த அமைப்புகள் ஒன்றிய அரசின் உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றன.

    அரசியல் சட்டத்தை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது என்பதை நிரூபிக்கும் விதமாக தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் நடந்துள்ளது. இந்த அவசர நியமனம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டை சனாதனம் ஒற்றுமைப்படுத்தியது என ஆளுநர் பேசிவருகிறார். உண்மையில் சனாதனம் மக்களை பிளவுபடுத்தியது. ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ்.சில் இணைந்து அவர் செயல்படட்டும். ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

    ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29-ந்தேதி ஆளுநர் மாளிகைக்கு முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும். நாளை (26-ந்தேதி) விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்பட உள்ளது.

    மின்வாரிய கணக்கெடுப்பு அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு காலக்கெடு வழங்க வேண்டும். அதுவரை மின் கட்டணம் வசூலிக்க மாட்டோம், மின் இணைப்பை துண்டிப்போம் என்ற முடிவை மின்வாரியம் கைவிட வேண்டும். தி.மு.க. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது.

    தமிழ்நாட்டில் காவல் துறையால் தேடப்படும் நபர்கள் பா.ஜ.க.வில் அடைக்கலம் பெற்றுள்ளனர். அங்கு அவர்கள் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • முத்தரசனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து உள்ளார்.

    அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • இந்து மத கடவுள்களை இழிவுப்படுத்தி பேசியதாக புகார்
    • சக்தி சேனா அமைப்பினர் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்

    கோவை, செப்.9-

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சக்தி சேனா அமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வாரம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இந்து மத கடவுள்களை கொச்சைப்படுத்தி இழிவு படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

    அவரது இந்த பேச்சு இந்து மதத்தினரை அவமதிப்பதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என இந்து அமைப்புகள் கூறுகிறது.
    • வாழ்த்து ஏன் சொல்ல வேண்டும் சட்டமா இருக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் நிர்வாகிகள் டில்லி பாபு, கமல் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மீது புகார் அளித்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    கங்கை ஆற்றில் குளிக்க செல்வதற்காக பாதுகாப்பு அரணாக இருப்பதற்காக சந்தன கொலுவை கொண்டு பிள்ளையாரை உருவாக்கி நான் குளித்துவிட்டு வரும் வரை யாரையும் இங்கு அனுமதிக்க கூடாது என்று பார்வதி தாயார் உத்தரவிட்டு சென்றார்.

    எம்பெருமான் சிவன் வருகை புரிந்த போது பிள்ளையார் சிவனை அனுமதிக்கவில்லை. ஆத்திரம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை துண்டித்தார். நான் உருவாக்கிய எனது பிள்ளையை சிவன் கொன்று விட்டாரே என்று ஆக்ரோஷம் கொண்டு காளி தேவியாக உருவெடுத்து வேகமாக புறப்பட்டார் தாய் பராசக்தி. பராசக்தியின் கோபத்தை அடக்குவதற்கு உடனடியாக சிவன் ஒரு தலையை கொண்டு வாருங்கள் என்று ரிஷிகளுக்கு உத்தரவிடுகிறார். காடுகளில் தேடிச் செல்லும்போது முதலில் தென்பட்டது யானையின் தலை. அதை கொண்டு வந்து பொருத்தி விட்டனர்.

    ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று இந்நிகழ்வு நடைபெற்றது. அன்று முதல் பிள்ளையார் சதுர்த்தி விழா அந்த திதியிலேயே இன்றும் பல ஆயிரம் ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்து மதத்தின் வரலாறு தெரியாமல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்லவில்லை என இந்து அமைப்புகள் கூறுகிறது. வாழ்த்து ஏன் சொல்ல வேண்டும் சட்டமா இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    அத்துடன் பார்வதி அம்மா கங்கையில் குளிக்க சென்றுள்ளார். அவர் ஆண்டு முழுவதும் பல மாதகாலமாக குளிக்கவில்லை என்றால் உடலில் அழுக்கு தானே வரும். அந்த அழுக்கை முழுவதும் ஒன்று திரட்டி ஒரு பொம்மை செய்தார்.

    அந்த பொம்மை விநாயகராக மாறிவிட்டது. அந்த அழுக்கை நாங்கள் ஏன் கும்பிட வேண்டும். அந்த அழுக்குக்கு நாங்கள் ஏன் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று கூறி இந்துக்கள் மனதை விநாயகர் பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மிகவும் கேவலமாக பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×