search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய கம்பூயின்ஸ்ட் கட்சி"

    • இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை இல்லா கால ஊதியம் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.
    • கல்விக்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தி வங்கிகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்கே எனது வேலை? என்ற தொடர் பரப்புரை பயண எழுச்சி மாநாடு திருச்சியில் வரும் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. நாட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்து உள்ளது. தனியார் மயத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அவுட் சோர்சிங் செய்யும் முறையை தேர்ந்தெடுத்து குறைவான ஊதியத்தில் ஆட்களை பணிக்கு அமர்த்தியிருக்கின்றனர்.

    மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். அனைத்து துறைகளிலும் உள்ள ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்தையும் இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை தொடர் பரப்புரை பயணம் எழுச்சி மாநாடு திருச்சி புத்தூரில் 2-ந்தேதி நடைபெறுகிறது.

    முன்பு இருந்த பிரதமர்கள் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் பல உருவாக்கப்பட்டு வந்தன. ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்கவில்லை. 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட்டார்.

    தனியாரை ஊக்குவிக்கும் வகையிலேயே 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அதானிக்கு தனியார் முதலீடு அதிகம் வழங்கப்படுகிறது. இது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதுதான் எதிர்கட்சிகள் கோரிக்கை.

    அதானிக்கு ஏஜெண்டாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்பது தான் அவமானமாக, வெட்கக்கேடாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வேலை இல்லா கால ஊதியம் மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும்.

    கல்விக்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தி வங்கிகள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மிரட்டல் விடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அதேபோன்று கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு எந்தஒரு பதிலும் அளிக்கவில்லை.

    ராகுல் காந்தி எம்.பி. மோடி சமூகம் பற்றி அவதூறாக பேசியதான வழக்கில் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு, அவரது வீட்டை காலி செய்வது என்பது ஜனநாயக விரோதம். எதிர்க்கட்சிகளே இல்லாத சர்வாதிகார ஆட்சி முறையை கொண்டு வரும் முன்னோட்டம் தான் இது. இந்திய ஜனநாயகத்திற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சம்மட்டி அடிதான் இது. தேர்தலின் போது பா.ஜ.க. அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

    தி.மு.க. அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்த முடியாது, நடத்தவும் மாட்டோம். ஏனென்றால் கடந்த எடப்பாடி ஆட்சியை விட தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×