search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை பாத யாத்திரையை மணிப்பூரில் நடத்தி இருக்க வேண்டும்- முத்தரசன் பேட்டி
    X

    அண்ணாமலை பாத யாத்திரையை மணிப்பூரில் நடத்தி இருக்க வேண்டும்- முத்தரசன் பேட்டி

    • உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர மறுக்கிறார்.
    • நாட்டில் 22 மொழிகளும் தேசிய மொழிகளாக கருதப்பட வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் சுற்றி வரும் பிரதமர் மோடி பாராளுமன்றத்திற்கு வர மறுக்கிறார். மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் மிக கொடூரமான சம்பவம். கலவரத்தின் மூலம் 2024 தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலமாக மோடியை அவைக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    அவருக்கு நிர்ப்பந்தம் கொடுத்து அவரை பாராளுமன்றத்திற்கு வரவழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தின் மூலமாக ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் 3-வது முறையாக வெற்றி பெறவும் முயற்சி செய்கிறார்கள். குஜராத்தில் கற்ற பாடத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    நாட்டில் 22 மொழிகளும் தேசிய மொழிகளாக கருதப்பட வேண்டும். அனைத்து மொழிகளுக்குமான வளர்ச்சிக்குரிய நிதியை மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ஆனால் மிகக் குறைவான அளவு பேசக்கூடிய சமஸ்கிருதத்திற்கு மிக அதிகபட்ச நிதியை ஒதுக்குகிறார்கள். தமிழ் மொழிக்கு மிக குறைவான நிதி ஒதுக்கப்படுகிறது.

    இந்தி மொழியை காலப்போக்கில் அனைவரும் ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் வலுக்கட்டாயமான முறையில் திணிக்க முயற்சி செய்கிறார். ஒரு பக்கம் கலவரத்தின் மூலமாகவும், மத மோதல்கள் மூலமாகவும் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றனர்.

    இந்தியை திணித்து மொழியின் மூலமாகவும் மொழி மோதலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. மத்திய அரசு ஜனநாயகத்தை சீரழித்து விட்டு ஒரு சர்வதிகார பாசிச பாதையில் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கம் மட்டுமல்ல அடுத்த 8 ஆண்டு காலத்திற்கு தேர்தலுக்கு வரக்கூடாது என்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உச்ச நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகும் இன்னும் அவருடைய பதவி நீக்கத்தை விலக்க மறுக்கிறது.

    அமலாக்கத்துறையை இந்த அரசு தவறாக பயன்படுத்துகிறது. அரசியல் ரீதியாக பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கக்கூடிய அரசுகளையும், கட்சிகளையும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலமாக அடி பணி வைக்கக்கூடிய அப்பட்டமான ஜனநாயக விரோத செயலில் மத்திய அரசு ஈடுபடுத்தி வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆபத்தானது.

    மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு நாடாக இருக்காது. சர்வாதிகாரி கையில் ஆட்சி சென்று விடும். அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக 26 கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளது கர்நாடகத்தில் தோல்வி அடைய வைத்தது போல் நாடும் முழுவதும் மோடியை பா.ஜ.க.வை தோல்வியடைய வைக்க மக்கள் தயாராக உள்ளனர்.

    அண்ணாமலை நல்ல விளம்பர பிரியர், ஆனால் பாதயாத்திரையை அவர் மணிப்பூரில் நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தை தடுத்து அமைதியை நிலை நாட்ட மணிப்பூரில் அவர் நடைபயணம் நடத்தியிருந்தால் நல்லது. ஆனால் இங்கு நடை பயணம் என்ற பெயரால் வாகன பயணம் செய்து நாடகம் நடத்தி வருகிறார். மக்கள் பெரும் திரளாக வந்து கூடுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் மக்கள் கூடவில்லை. இது அப்பட்டமான நாடகம்.

    தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு வர இது போன்று முயற்சிக்கிறார். அ.தி.மு.க. ஊழலையும், தி.மு.க. ஊழலையும் பேசுவேன் என்றார், ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றார், ஆனால் ஜெயலலிதாவை பற்றி பெரிய தலைவர் என்கிறார், தற்போது அதை பற்றி பேச மறுக்கிறார், பாதயாத்திரை துவக்க விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை, அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை, மோடி அமித்ஷாவுடன் தான் கூட்டணி என அறிவித்திருக்கிறார்.

    இந்த நிலையில் பி.ஜே.பி. தலைமையில் இருக்கக்கூடிய அணி ஒன்று சேரக்கூடிய முடியாத ஒரு அணியாக உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் இந்த முறை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள், விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனை, இந்தி திணைப்பு முயற்சி இவைகளை கண்டித்து வருகிற செப்டம்பர் 12 13, 14 ஆகிய மூன்று நாட்களில், தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தொடர் மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ள முடிவு செய்து இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×