search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணீஷ் சிசோடியா"

    • மணீஷ் சிசோடியாவை சிறையின் விபாசனா அறையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
    • மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார்.

    முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூத்த குடிமகன் என்ற முறையில் ஒரு தனி நபருக்கான சிறை எண்-1க்குள் மணீஷ் சிசோடியா அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சிறைக்கு பகவத் கீதை, கண்ணாடி மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல மணீஷ் சிசோடியாவிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், விபாசனா தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறும் திகார் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு 'விபாசனா' சிறை மறுக்கப்படுவதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து பரத்வாஜ் மேலும் கூறுகையில்," மணீஷ் சிசோடியாவை சிறையின் விபாசனா அறையில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது. நீதிமன்றத்தின் அனுமதி இருந்தபோதிலும், சிறை எண் 1ல் குற்றவாளிகளுடன் சிசோடியா வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்" என்றார்.

    • இட்டுக்கட்டிய புகாரில் மணீஷ் சிசோடியாவை கைது செய்து, தனிநபர் சுதந்திரத்தை மீறி உள்ளது வேதனை தருகிறது.
    • விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது மட்டுமே ஏவப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு அவரை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவை விடுவிக்க வேண்டும் என கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    'டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய புகாரில் கைது செய்து, தனிநபர் சுதந்திரத்தை மீறி உள்ளது வேதனை தருகிறது. அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிடப்பட்டு வழக்கமான சட்ட நடைமுறைகள், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் தனிப்பட்ட மனநிறைவுக்காக மீறப்பட்டிருக்கின்றன. விசாரணை அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஆயுதமாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மீது மட்டுமே ஏவப்பட்டு வருகின்றன.

    சட்ட நடைமுறை, அரசியல் சட்ட அடிப்படை கொள்கைகளை கொச்சைப்படுத்தி கைது செயய்ப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்', என முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் முடிந்த நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) கைது செய்தது.

    மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் முடிந்த நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்.
    • ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா இல்லாமல் டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    டெல்லி:

    டெல்லி சட்டசபையின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடங்குகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்.

    டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டுக்கான புதிய மதுபான கொள்கை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும் கூறி சி.பி.ஐ. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. சி.பி.ஐ. நடவடிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் தான் வகித்து வந்த துறை முதல்-மந்திரி பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்தார். மேலும் மந்திரிசபையில் அங்கம் வகித்து வந்த சத்யேந்திர ஜெயின் பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பொறுப்பு வகித்து வந்த இலாகா மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு இருந்தது.

    இதனால் சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத மந்திரியாக தொடர்ந்தார். இந்த நிலையில் இருவரின் ராஜினாமாவையடுத்து மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள் ஆம் ஆத்மியை சேர்ந்த வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் மற்றும் சமூக நலத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா இல்லாமல் டெல்லி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    புதிதாக ஒதுக்கப்பட்ட துறைகளை பொறுப்பேற்ற ஆம் ஆத்மி மந்திரி கைலாஷ் கெலாட் இந்த முறை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவருக்கு நிதி, திட்டமிடல், பொதுப்பணி, மின்சாரம், உள்துறை, நகர்ப்புற மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, மற்றும் நீர் துறைகள் உள்ளிட்ட துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    • கைது செய்யப்பட்டதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • சிசோடியாவின் விசாரணைக் காவலை 6-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டதையடுத்து சிசோடியா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில் சிசோடியாவின் சிபிஐ விசாரணைக் காவல் முடிந்த நிலையில் அவரை இன்று டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மேலும் விசாரிக்க வேண்டியிருப்பதால் விசாரணைக் காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கும்படி சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அப்போது சிசோடியா கோர்ட்டில் கூறும்போது, என்னை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் 9 முதல் 10 மணிநேரம் வரை அமர வைத்து, கேட்ட கேள்விகளையே திரும்ப, திரும்ப கேட்டனர். அது மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் இருந்தது, என குற்றம்சாட்டினார். சிசோடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணன், கோர்ட்டில் கூறும்போது, சிசோடியாவின் சி.பி.ஐ. காவலை நீட்டிக்க கோருவதற்கான விசயங்களை அவர்கள் நியாயப்படுத்தவில்லை என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் சிசோடியாவின் விசாரணைக் காவலை 6ம் தேதி வரை (திங்கட்கிழமை) நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், கேட்ட கேள்விகளை சிசோடியாவிடம் திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என சிபிஐ-யிடம் நீதிபதி கேட்டுக்கொண்டார். சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை 10ம் தேதி நடைபெற உள்ளது.

    • சிபிஐ தரப்பில், சிசோடியாவின் காவலை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
    • மதுபான கொள்கை முறைகேடு புகார் வழக்கில் காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார்.

    தொடர்ந்து, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிபிஐ காவலில் உள்ள மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் அனைத்து மீட்டெடுப்புகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதால், அவரை காவலில் வைத்திருப்பது எந்தப் பலனையும் அளிக்காது என்று மணிஷ் சிசோடியா தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி, மணீஷ் சிசோடியா இன்று மதியம் 2 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. மேலும், சிபிஐ தரப்பில், சிசோடியாவின் காவலை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • 'ஐ லவ் மணீஷ் சிசோடியா' என்ற பெயரில் பிரசார இயக்கத்தை உருவாக்கியிருப்பதாக பாஜக குற்றச்சாட்டு
    • வாட்ஸ்அப் பார்வேர்டு தகவல்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் எழுதிய கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார். கைது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவு திரட்டும் விதமாக டெல்லி அரசுப் பள்ளிகளில் 'ஐ லவ் மணீஷ் சிசோடியா' என்ற பெயரில் பிரசார இயக்கத்தை உருவாக்கி வருவதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. சிசோடியாவை கைது செய்தபிறகும், டெல்லி அரசு கல்வி என்ற பெயரில் தனது மோசமான அரசியலை நிறுத்தாமல், பள்ளிக் குழந்தைகளை அதில் ஈடுபடுத்தும் அளவிற்கு சென்றுள்ளது. இது வருத்தமளிக்கும் விஷயம் என பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் விமர்சித்துள்ளார்.

    அரசுப் பள்ளிகளில் மணீஷ் சிசோடியாவுக்கு ஆதரவாக பிரசார இயக்கம் நடைபெறுவதாக கூறி புகைப்படங்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் எழுதிய கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இதை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

    இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற செயல்களில் எந்த ஒரு அரசு துறையும், அரசு ஊழியர்க்கும் ஈடுபடவில்லை. அது பாஜகவின் வேலை, என கூறப்பட்டுள்ளது.

    • சி.பி.ஐ. தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் ஆம் ஆத்மி நிர்வாகி விஜய் நாயர், மனோஜ் ராய் உள்ளிட்ட 4 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.
    • மதுபான தொழில் அதிபர் அமன்தீப் தாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்த எப்.ஐ.ஆரில் ஆம் ஆத்மி நிர்வாகி விஜய் நாயர், மனோஜ் ராய் உள்ளிட்ட 4 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதாகி இருந்தார்.

    இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேட்டில் பணபரிவர்த்தனை குற்றச்சாட்டில் மதுபான தொழில் அதிபர் அமன்தீப் தாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார்.

    • மணீஷ் சிசோடியா ராஜினாமா கடிதத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பி உள்ளார்.
    • அமைச்சர்கள் செய்யும் நல்ல பணிகளை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பி உள்ளார். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான அரசியலுக்கு பயந்த கோழைகள் மற்றும் பலவீனமான நபர்களின் சதி என கூறி உள்ளார். மேலும், அவர்களின் இலக்கு நான் அல்ல, நீங்கள் (கெஜ்ரிவால்) அவர்களின் இலக்கு என்றும் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்ததன் மூலம், சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் எங்கள் அரசாங்கத்தின் பணிகளை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது.

    மதுபான கொள்கை ஊழல் என்பது அவர்களுக்கு ஒரு சாக்குப்போக்கு. அதேசமயம் மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால், நாளைக்கே அவர் விடுதலையாகிவிடுவார். பிரச்சனை ஊழல் அல்ல, அமைச்சர்கள் செய்யும் நல்ல பணிகளை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியை தடுக்க பாஜக விரும்புகிறது. நாங்கள் பஞ்சாப் மாநிலத்தில் வென்றதிலிருந்து, அவர்களால் தாங்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம் ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த குற்றப் பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகரராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 23-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் சி.பி.ஐ. தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் காலை முதலே சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு மாலையில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சி.பி.ஐ. இன்று கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் (மார்ச் 4 வரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    • மதுபான கொள்ளை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
    • எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றார்.

    மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் நேற்று முன்தினம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

    மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை.

    அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்

    இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு பாஜக ஆட்சியில் மத்திய அரசின் துறைகளை எப்படி தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இத்தகைய அடக்குமுறைகள் நமது தேசத்தின் அடித்தளத்தையே குலைத்துவிடும். அதை எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
    • ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆம்ஆத்மி தலைவர்கள் முறைகேடுகள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    மதுபான வியாபாரிகளில் சிலருக்கு மட்டும் உரிமம் வழங்குவதற்காக ஆம்ஆத்மி தலைவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் அந்த பணத்தை ஆம்ஆத்மி தலைவர்கள் கோவா சட்டசபை தேர்தலில் செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த குற்றப்பத்திரிகைகளில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம்ஆத்மி மூத்த தலைவர்கள், சந்திரசேகர ராவ் மகள் கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 23-ந்தேதி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர். மதுபானக் கொள்கையை வெளியிட்ட கலால் துறை மந்திரி என்பதால் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியமாக கருதப்பட்டது.

    ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவிடம் நேற்று மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மதியம் 12 மணிக்கு தொடங்கி சுமார் 8 மணிநேரம் விசாரணை நீடித்தது.

    பெரும்பாலான கேள்விகளுக்கு மணீஷ் சிசோடியா பதில் அளிக்கவில்லை. அவர் 90 சதவீத கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் கூறினார். இதைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அறிவித்தனர்.

    இரவு முழுக்க அவர் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டார். இரவு உணவும் அவருக்கு அங்கேயே வழங்கப்பட்டது. இன்று காலை அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் சான்றிதழ் வழங்கினார்கள்.

    இதையடுத்து மணீஷ் சிசோடியா மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவரை இன்று பிற்பகல் சி.பி.ஐ. கோர்ட்டில் அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.

    மணீஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று பிற்பகல் அவர்கள் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். எனவே மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்த எத்தனை நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது இன்று பிற்பகல் தெரியும்.

    மணீஷ் சிசோடியா மதுபானக்கொள்கையில் திருத்தம் செய்து பலகோடி ரூபாய் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் தகவல்கள், செல்போன் உரையாடல் பதிவுகள், இ-மெயில்கள் மற்றும் செயலாளர் அரவிந்த் வாக்குமூலம் ஆகியவை மணீஷ் சிசோடியா ஊழல் செய்ததற்கு ஆதாரங்களாக உள்ளன என்று சிபி.ஐ. தெரிவித்துள்ளது.

    மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஆத்மி கட்சி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    சி.பி.ஐ. அலுவலகம் முன்பும், பா.ஜ.க. அலுவலகம் முன்பும் ஆம்ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்த திரண்டனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர் போராட்டம் நடத்த பா.ஜ.க. தொண்டர்களும் குவிந்தனர்.

    இதனால் டெல்லியின் பல பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அலுவலகம், பா.ஜ.க. அலுவலகம் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ×