search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து துறை"

    • குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை கமிஷனர் கூறினார்.
    • சுமை ஏற்றுவது மோசமான சாலை போக்கு வரத்துக்கு வழிவகுக்கிறது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உயிர் இழப்பும் ஏற்படுவதால் மத்திய மோட்டார் வாகன விதிகளை கடுமையாக அமல் படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள், மினி வேன்களில் அதிகளவில் சரக்குகளை ஏற்றிச் செல்வதை தடுக்கும் வகையில் போக்கு வரத்துத் துறை, வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதிக பாரம் ஏற்றிய குற்றத்திற்காக சரக்குதாரர், வாகன உரிமையாளர் மற்றும் வாகனங்கள் மீது மத்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் அதிக பட்ச அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கடிதத்தை சுட்டிக்காட்டி போக்கு வரத்து கமிஷனர் சண்முக சுந்தரம் சமீபத்தில் அனைத்து வட்டார போக்கு வரத்து அதிகாரிகளுக்கும் பிரிவு 113, பிரிவு 114, பிரிவு 194 விதிகளின்படி "ஓவர் லோடு" வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

    அதிக சுமை ஏற்றிய வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதேபோல அந்த வாகனத்தின் டிரைவர், அதிக சுமையை மதிப்பிடுவதற்கு எடை அளவு செய்ய கொண்டு செல்ல வேண்டும். அதிக சுமை இருப்பது கண்டறியப்பட்டால் அதிக எடையை வாகனத்தில் இருந்து இறக்க வேண்டும். இதை செய்ய தவறினால் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம்.

    மேலும் வாகனங்களில் அதிக சுமை ஏற்றியதற்காக சரக்கு அனுப்புபவர், வாகன உரிமையாளர் மற்றும் வாகனங்கள் மீது வழக்குகளை பதிவு செய்ய ஆய்வாளர் அல்லது காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை கமிஷனர் கூறினார்.

    இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.யுவராஜ் கூறும்போது, "அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதிக சுமை ஏற்றுவது மோசமான சாலை போக்கு வரத்துக்கு வழிவகுக்கிறது.

    போலீசாரோ, ஆர்.டி.ஓவோ அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை சோதனைக்காக நிறுத்தும் போது அதிகமாக ஏற்றிய சுமையை இறக்கி விட வேண்டும். மாறாக அதிகாரிகள் அபராதம் விதித்து வாகனத்தை பயணிக்க அனுமதிக்கின்ற நடைமுறைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்" என்றார்.

    • நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.

    கடலூர்:

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டலம் சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று நேரடியாக போட்டோ ஒட்டி விண்ணப்பங்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மண்டலத்தில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க பள்ளி, கல்லூரிகளிலிருந்து உரிய படிவங்களை உரிய நேரத்தில் கிடைக்கப் பெறதாததால், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவிப் பொறியாளர் (இயக்கம்) பரிமளம் மற்றும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க, அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று மாணவ, மாணவிகளிடம் போட்டோ ஓட்டி விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர். மேலும் விண்ணப்பங்களை பெற்று அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ் பாஸ் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப் பொறியாளர் தெரிவித்தார்.

    • போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற 8 ஆயிரம் பேர் பண பலன் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
    • அவர்களுக்கு உடனே தமிழக அரசு பண பலன்களை வழங்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் தலைவர் சையத் மொய்னுதீன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் உயர்த்தி வழங்க வேண்டும், காலி பணியிடங்களுக்கு இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பின்னர் மாநில தலைவர் கதிரேசன் நிருபர்களிடம் கூறுகையில், பிற துறைகளைப் போன்று ஓய்வு பெறும் நாளில் போக்குவரத்து துறையினருக்கும் பணபலன்கள் வழங்க வேண்டும்.

    கடந்த 8 மாதங்களில் 8 ஆயிரம் பேர் பண பலன் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடனே தமிழக அரசு பண பலன்களை வழங்க வேண்டும் என்றார்.

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
    • ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.

    கோவை:

    கோவையில் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் எப்போது பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலாகவே காணப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    இந்த சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துக்களும், இந்த விபத்துக்களில் உயிரிழப்புகளும் நடப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாநகர போலீசார், இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின் முடிவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்கவும், 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று ஒருசிலர் போலீசாரின் உத்தரவை கடைபிடித்து, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்களும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

    இந்த திட்டம் அமலானதை அடுத்து முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநகர போலீசார் முக்கியமான சாலைகளில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலைகளில் வந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என கண்காணித்தனர். அப்படி அணியவில்லை என்றால், அந்த வாகன ஓட்டிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களை போக்குவரத்து பூங்காவுக்கு அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கோவை மாநகரில் இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தாலும், ஒரு சிலர் மட்டுமே இதனை கடைபிடித்தனர். ஆனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் அதனை யாரும் கடைபிடித்த மாதிரி தெரியவில்லை.

    வழக்கம் போலவே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். ஒரு சில இடங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் காணமுடிந்தது.

    விபத்துக்களை தடுக்கும் நோக்கில் கோவை மாநகரில் இன்று முதல் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக வாகன தணிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறோம். ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு ஒருவார காலத்துக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது.
    • பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    இதையொட்டி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது. மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் 2 நாட்களாக முகாம் நடந்தது.

    முகாமில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள், மினி பஸ்கள், வேன்கள் என 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் வாகனங்களில் ஐகோர்ட்டு வகுத்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? வாகனங்கள் முறையாக பராமரிக்கப் பட்டுள்ளதா? மாணவர்களின் பயணத்துக்கு பாதுகாப்பாக உள்ளதா? என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    2 நாள் ஆய்வில் 273 வாகனங்களுக்கு அனுமதிக்கான மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 185 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி, முதலுதவி பெட்டி மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் அனுமதி அளிக்கப்படவில்லை.

    இந்த வாகனங்களில் குறைகளை நீக்கி மீண்டும் ஒரு வாரத்துக்குள் அனுமதி பெற வேண்டும். இல்லாவிட்டால் அனுமதி பெறாத வாகனங்கள் பெர்மிட் முடக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.
    • எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை பயணிக்க அனுமதித்து, எந்தவித புகாரும் வராத வகையில் பணிபுரிய வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, அதற்கான கட்டணம் அரசிடம் இருந்து நிலுவையின்றி பெறப்படுகிறது.

    மேலும், அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் இருக்கையில் மட்டும் அமர்ந்து பயணிக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்த பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை பயணிக்க அனுமதிப்பதில்லை எனவும் இருக்கை உடனடியாக வழங்கப்படாமல் தாமதப்படுத்துவதாகவும் புகார் பெறப்படுவதாக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பஸ் ஓட்டுநர், நடத்துநர்கள் இடையே தேவையற்ற பிரச்சினை ஏற்படுவதுடன் பொது மக்கள் மத்தியில் நிர்வாகத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்கும் பொருட்டு, விரைவு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு, மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாகவும், தக்க மரியாதையுடனும் கவுரவத்துடனும் பயணிக்க உதவி புரிவது நமது கடமை. இனி வரும் காலங்களில் குளிர்சாதன பேருந்துகள் தவிர்த்து (தமிழகத்துக்குள் மட்டும்) இதர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளரை பயணிக்க அனுமதி அளித்து எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    • ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர்.
    • வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    தங்களது சொந்த கார்களை வாடகைக்கு இயக்குவோர் மீது எடுக்க ப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்துதுறை உத்தரவிட்டுள்ளது.

    பலரும் தங்கள் சொந்த கார்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனர். நேரடியாக உரிமையாளரே இயக்கியும் அல்லது ஆக்டிங் டிரைவர் மூலமும் கார்களை வெளிவாடகைக்கு விடுகின்றனர். இதனால் வாடகை கார் டிரைவர்களுக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்தாலும், வட்டார போக்குவரத்து துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை.இதனால், விதிமீறல் தொடர்கிறது. இதை தடுக்க சொந்த வாகனங்களை பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பாக சிறப்பு சோதனை, தணிக்கை நடத்த வேண்டும். சோதனை மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போக்குவரத்து கமிஷனர் நிர்மல்ராஜ், அனைத்து போக்குவரத்து மண்டல அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியு ள்ளார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ.,க்களுக்கும் விரிவான உத்தரவு அடுத்தடுத்து வர உள்ளது.

    திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறுகையில், வாடகைக்கு இயக்கும் சொந்த வாகனங்கள் குறித்து அவ்வப்போது கண்காணிக்க ப்படுகிறது.பொதுமக்கள் முன்வந்து புகார் தெரிவி த்தால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். போக்கு வரத்து ஆய்வாளர்கள் சிறப்பு தணிக்கையில் கவனம் செலுத்தி அபராதம் விதிக்க அறிவுறுத்தப்படும் என்றார்.

    • அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும்
    • பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

    சட்டசபையில் இன்று அமைச்சர் சிவசங்கர் பேசியபோது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

    அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு பயண சலுகை வழங்கப்படுகிறது. ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்தால், அவர்கள் ஆறாவது பயணம் முதல் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும்.

    அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன்வந்தால் முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    • பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி / இறக்கி செல்லுதல் வேண்டும்.
    • மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சில தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பும், அவப்பெயரும் ஏற்பட்டது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதன் அடிப்படையில் மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இப்போது பஸ் டிரைவர்-கண்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

    மாநகர் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்கள் கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்குதல் வேண்டும். வழித்தடம் மாறி வேறு பகுதிகளில் பேருந்துகளை இயக்க கூடாது.

    அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தினை நிறுத்தி அங்கு காத்திருக்கும் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி/இறக்கி செல்ல வேண்டும்.

    பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி / இறக்கி செல்லுதல் வேண்டும். மாறாக பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிடக் கூடாது.

    சாதாரண, விரைவு, சொகுசு, குளிர்சாதன பேருந்துகளில் அரசாணைப் படி நிர்ணயிக்கப்பட்ட சரியான பயணக் கட்டணங்களையே பயணிகளிடம் உரிய பயணச்சீட்டு அளித்து வசூலித்தல் வேண்டும். குறிப்பாக தவறான பயணக் கட்டணங்களை அதாவது பேருந்தில் ஏறிய பயணிக்கு குறைவான அல்லது அதிகமான பயணக் கட்டணங்களை வசூலித்தல் கூடாது. மேலும், பயணிகள் கொண்டுவரும் சுமைகளுக்கு உரிய சுமைக்கட்டண பயணச்சீட்டுகளை நடத்துநர் வழங்க வேண்டும்.

    ஓட்டுநர், நடத்துநர்கள் தமது பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்துக் கொள்வதை அறவே தவிர்த்து, அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும். மாறாக பணியின் போது வீண் வார்த்தைகள் மற்றும் தவறான பேச்சுக்கள், கைகலப்பு போன்றவற்றினை அறவே தவிர்த்தல் வேண்டும்.

    பேருந்துகளின் சிறிய, பெரிய பழுதுகளை ஒவ்வொரு நாளும் இரவில் சரிசெய்து மறுநாள் காலையில் அதனதன் வழித்தடத்தில் கால அட்டவணைப்படி முறையாக இயக்கிடல் வேண்டும்.

    ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்தினை எத்தகைய விபத்திலும் குறிப்பாக உயிரிழப்பு விபத்து ஏற்படா வண்ணம் தானியங்கி மூடு கதவினை ஒவ்வொரு நிறுத்தத்திலும் சரியாக திறந்து / மூடி பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையிலும் பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்குதல் வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை துணை மேலாளர் மற்றும் முதல்வர் பயிற்சி பள்ளி ஆகியோர் பயிற்சிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு நன்கு விளக்கி கூறி கடைப்பிடிக்க செய்ய வேண்டும்.

    மேலும் அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள் (போ) மற்றும் மண்டல மேலாளர்கள் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை ஓட்டுநர்/நடத்துநர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் நன்கு விளக்கி கூற வேண்டும்.

    இதன் மூலம் போக்குவரத்து கழகத்தின் பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயணச்சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாயினை பெருக்கிட முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது
    • அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என அமைச்சர் பேட்டி

    சென்னை:

    தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஆம்னி பேருந்துகளின் அனைத்து சங்கத்தினரும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளை சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், ஆணையர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பண்டிகை காலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    பின்னா செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இரண்டொரு நாளில் கட்டணம் குறித்த முடிவை அரசிடம் தெரிவிப்பதாக சொல்லியுள்ளனர் என்றார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அரசு பேருந்து கட்டணத்துடன், ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம் என்றும், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிக்கவில்லை என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    • புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி டிரைவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,012 முதல் அதிகபட்சமாக ரூ.7,981 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
    • கண்டக்டர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.

    சென்னை:

    தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    அரசு பஸ் ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி டிரைவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,012 முதல் அதிகபட்சமாக ரூ.7,981 வரையிலும், கண்டக்டர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப பிரிவு தொழிலாளர்களுக்கு ரூ.2,096 முதல் ரூ.9,329 வரையிலும் சம்பள உயர்வு கிடைக்கும்.

    இதேபோல அலுவலக பணியாளர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,585 முதல் ரூ.8,476 வரையிலும், போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,692 முதல் ரூ.7,916 வரையிலும் சம்பள உயர்வு கிடைக்கும்.

    இந்த சம்பள உயர்வு 2022 ஜூலை மாதத்தில் வாங்கிய சம்பளத்துக்கும், 2022 ஆகஸ்டு மாத சம்பளத்துக்கும் இடைப்பட்ட உத்தேச உயர்வு ஆகும்.

    சிறப்பான ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், போக்குவரத்து துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போடப்பட்ட துரோக ஒப்பந்தத்தினால் 7 ஆண்டுகள் தொழிலாளர்கள் ஊதிய இழப்பை சந்தித்து வந்தார்கள்.
    • கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும்போது ஊதிய இழப்பு, சர்வீஸ் குறைப்பு உள்ளிட்ட தண்டனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

    சென்னை:

    ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் 99 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றும் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

    சென்னை குரோம் பேட்டையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு நடத்திய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் கூறியதாவது:-

    2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போடப்பட்ட துரோக ஒப்பந்தத்தினால் 7 ஆண்டுகள் தொழிலாளர்கள் ஊதிய இழப்பை சந்தித்து வந்தார்கள். அந்த ஊதிய இழப்பை சரிகட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று, அனைவருக்கும் 2016-ம் ஆண்டில் வழங்கப்பட்ட அந்த அநீதி நீக்கப்பட்டு நியாயம் கிடைத்துள்ளது. 1.9.2019 முதல் அதனை சரிசெய்ததற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    அதற்கு அடுத்தபடியாக 5 சதவீத ஊதிய உயர்வு 1.9.19 முதல் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும்போது ஊதிய இழப்பு, சர்வீஸ் குறைப்பு உள்ளிட்ட தண்டனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவை அனைத்தையும் சரிசெய்து, அவர்களுக்கு சீனியாரிட்டி கொடுத்து பதவி உயர்வு வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். மகளிர் பஸ்களில் பணிபுரியும் டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கு பிக்சட் பேட்டாவை நாள் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தி தருவதாக கூறியிருக்கிறார்கள். பல்வேறு போக்குவரத்து கழகங்களில் பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த தண்டனைகளுக்கு சீரான முடிவை காண பொதுவான நிலை ஆணை கேட்டிருந்தோம். அதனை நிறைவேற்றி தர ஒரு குழு அமைத்து, அதற்கான அரசாணையும் பிறப்பித்திருக்கிறார்கள்.

    தொழிலாளர்களின் எண்ணிக்கையை மீண்டும் 7.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு குழு அமைத்து விரைவில் செய்து தருவதாக கூறியிருக்கிறார்கள். தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் 1.4.13-க்கு பிறகு வேலைக்கு வந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடையாது, புதிய ஓய்வூதியம் தான் என்று சொன்னதை மாற்றி அமைக்க ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவை விரைந்து முடித்து, அதற்குரிய பரிகாரங்களை செய்வதாக கூறியிருக்கிறார்கள்.

    3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் என்ற நடைமுறையை மாற்றக்கூடாது என்று கேட்டிருக்கிறோம். ஓய்வுபெற்றுள்ள தொழிலாளர்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் பஞ்சப்படி வழங்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறோம். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏறக்குறைய 99 சதவீதம் முன்னேற்றத்தை கண்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×