search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஸ்களில் மாற்று திறனாளிகள் பயணத்தில் புகார் வரக்கூடாது- போக்குவரத்து துறை அறிவுறுத்தல்
    X

    பஸ்களில் மாற்று திறனாளிகள் பயணத்தில் புகார் வரக்கூடாது- போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

    • மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும்.
    • எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    பஸ்களில் மாற்றுத் திறனாளிகளை பயணிக்க அனுமதித்து, எந்தவித புகாரும் வராத வகையில் பணிபுரிய வேண்டும் என நடத்துநர், ஓட்டுநர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளருக்கு 75 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டு, அதற்கான கட்டணம் அரசிடம் இருந்து நிலுவையின்றி பெறப்படுகிறது.

    மேலும், அதிநவீன சொகுசு பேருந்து மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் இருக்கையில் மட்டும் அமர்ந்து பயணிக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்த பஸ்களில் மாற்றுத்திறனாளிகளை பயணிக்க அனுமதிப்பதில்லை எனவும் இருக்கை உடனடியாக வழங்கப்படாமல் தாமதப்படுத்துவதாகவும் புகார் பெறப்படுவதாக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பஸ் ஓட்டுநர், நடத்துநர்கள் இடையே தேவையற்ற பிரச்சினை ஏற்படுவதுடன் பொது மக்கள் மத்தியில் நிர்வாகத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதாகவும், இதைத் தவிர்க்கும் பொருட்டு, விரைவு பஸ்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு, மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பஸ் நிலைய பொறுப்பாளர் அல்லது நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்றும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாகவும், தக்க மரியாதையுடனும் கவுரவத்துடனும் பயணிக்க உதவி புரிவது நமது கடமை. இனி வரும் காலங்களில் குளிர்சாதன பேருந்துகள் தவிர்த்து (தமிழகத்துக்குள் மட்டும்) இதர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளரை பயணிக்க அனுமதி அளித்து எந்தவித புகாரும் வராத வண்ணம் பணிபுரிய அனைத்து நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×