search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரந்தூர் விமான நிலையம்"

    • பரந்தூரைச் சுற்றி உள்ள 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
    • விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

    சென்னை:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.

    பசுமை விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரெயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும், விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும், 2069-70 ம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெறவேண்டும் எனவும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அரசு தீவிரம்.
    • விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட கோரி கிராம மக்கள் போராட்டம்.

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையும் என்று மத்திய அரசு அறிவித்தது. பரந்தூர் விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள விமான நிலையத்திற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து விளை நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

    இந்நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஏகனாபுரம், நெல்வாய் கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 117வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஏர் ஓட்டும் நிலத்தில் ஏர்போர்ட் தேவையா எனவும், விமான நிலையம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கூறி முழக்கமிட்டனர்.

    • தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம்.
    • பரந்தூர் விமான நிலையத்தில் பெரிய ரக ஜெட் விமானங்களைத் தரையிறக்க முடியும்.

    தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

    அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஏறக்குறைய 24 ஆண்டுகளாக இரண்டாவது உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்ட போதிலும், தற்போதுதான் விமான நிலையம் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

    தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர். ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலையம் எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றை 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சமாளிக்கப் போதுமானதாக இருக்கும்.

    இத்திட்டத்துக்கு ரூ.100 செலவு செய்வதன் மூலம் மாநிலத்துக்கு வருமானமாக ரூ. 325 கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். சென்னை தொழில் வர்த்தக சபை (எம்சிசிஐ) பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தொழில்துறை வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதே அவர்களது கருத்தாக இருந்தது.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக இங்கிருந்து அனுப்ப வேண்டிய சரக்குகள் பெங்களூர் விமான நிலையத்துக்கு மாறியுள்ளன. அதேபோல ஹைதராபாத் விமான நிலையமும் தமிழக வாய்ப்புகளை தட்டிப் பறித்துள்ளது.

    இவ்விரு விமான நிலையங்களின் ஆண்டு வளர்ச்சி 17 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ள சென்னை விமானநிலையம் பின்தங்கியதற்குக் காரணம் புதிய விமான நிலையத்தை உருவாக்காததே ஆகும். நிலையில், ஏற்கெனவே இயங்கிவரும் சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த முயற்சிக்கும்போது அதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.

    குறிப்பாக விரிவுபடுத்த போதிய நிலம் சுற்றுப் பகுதிகளில் கிடையாது. ஏனெனில் ஒருபக்கம் அதிக அளவில் வளர்ந்துவிட்ட குடியிருப்பு பகுதிகள், மற்றொரு பகுதியில் ராணுவ பயிற்சிக் கல்லூரி வளாகம். மேலும் இன்னொரு பக்கமுள்ள அடையாறு கால்வாய் பகுதியிலும் விரிவுபடுத்த இயலாது. இதனால் விரிவாக்கப் பணிகள் ஓரளவோடு நின்று போனது.

    இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் அதிக பயணிகள் போக்குவரத்து உள்ள விமான நிலையங்களில் 6-வது இடத்தில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளது. ஒரு நாளைக்கு 400 விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன. இதன்படி ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளைக் கையாளும் அளவுக்குத்தான் இந்த விமான நிலையம் உள்ளது. தற்போது இங்கு மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகளால் அதிகபட்சம் 3.5 கோடி பயணிகளைக் கையாளும் அளவுக்கே அது விரிவடையும்.

    இந்தப் பணிகள் முடிவடைய 7 ஆண்டுகளாகும். அப்போது அதிகரிக்கும் பயணிகள் போக்குவரத்தைக் கையாள இந்த விமான நிலையம் போதுமானதாக நிச்சயம் இருக்காது. புதிதாக அமைக்கத் திட்டமிட்டுள்ள பரந்தூர் விமான நிலையத்தில் அதிக பயணிகள் பயணிக்கும் பெரிய ரக ஜெட் விமானங்களைத் தரையிறக்க முடியும்.

    600 பயணிகள் பயணிக்கும் பெரிய ரக விமானங்களைக் கையாளும் திறன் பெறும்போது சர்வதேச அளவிலான பயணிகள் வரத்து அதிகரிக்கும். பிற நாடுகளிலிருந்து சென்னைக்கு வர விரும்பும் பயணிகள் தற்போது பெங்களூருக்கு நேரடியாக அல்லது டெல்லியிலிருந்து சென்னைக்கோ மாறி வர வேண்டிய சூழல் உள்ளது. இதைத் தவிர்க்க முடியும்.

    சென்னை நகரிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கான பயண தூரம் அதிகபட்சம் 54 நிமிடமாக உள்ளது, அதுவே பரந்தூராக இருப்பின் 73 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்ற கருத்தை புறந்தள்ள முடியாது. இதற்காக மெட்ரோ ரயில் தடமும் விரிவுபடுத்தப்படும். அப்போது பயண நேரம் 1 மணி நேரமாகக் குறையும்.

    அனைத்துக்கும் மேலாக சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும்போது தொழில்துறையினருக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகும். வேலை வாய்ப்புகள் பெருகும். தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விமான நிலையம் அமைந்தால் விளைநிலங்கள் பறிபோவதுடன் தங்கள் வாழ்க்கையும் தொலைந்து போகும் என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
    • அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேலேரி, நெல்வாய், வனத்தூர், நாகப்பட்டு, பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிராம மக்களின் இந்த போராட்டம் 80 நாட்களாக நீடித்தது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    விமான நிலையம் அமைந்தால் விளைநிலங்கள் பறிபோவதுடன் தங்கள் வாழ்க்கையும் தொலைந்து போகும் என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் போராட்டம் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையத்தால் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை விரிவாக எடுத்து கூறினர். அப்போது அமைச்சர்கள் தரப்பில் உங்களது வாழ்வாதார பிரச்சினைகளை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.

    நீங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து 80 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.

    அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம குடியிருப்பு மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

    (17-ந்தேதி) கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல கிராம மக்கள் திட்டமிட்டு இருந்தனர். அதுவும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • மொத்தம் 7 கிராமங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1159 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    சென்னையின் 2-வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஏகனாபுரம் கிராமமக்கள் இன்று 67-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் காந்தி ஜெயந்தியையொட்டி பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஏகனாபுரத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    ஊராட்சி தலைவர் சுமதி தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் கோபி, ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆவேசம் அடைந்த கிராமமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் விமான நிலையம் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அங்கிருந்த கிராம மக்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அந்த தீர்மானத்தில், "ஏகனாபுரம் ஊராட்சியில் வர இருக்கின்ற பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்ப்பது எங்கள் கிராமத்தின் நோக்கம் அல்ல. அதே நேரத்தில் எங்கள் கிராமத்தில் குயிருப்பு பகுதிகளையும் விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு எங்களை அப்புறப்படுத்துகின்ற இந்த பசுமை விமான நிலைய திட்டத்தை இந்த கிராம சபை கூட்டத்தின் மூலமாக எங்கள் கிராம பகுதிக்கு முழுமையாக வேண்டாம் என்று ஏகமனதாக எதிர்க்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

    கிராம சபை கூட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மேலேறி, நெல்வாய், வளத்தூர், பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் புதிதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றினர். மொத்தம் 7 கிராமங்களில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.

    கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் வரவு செலவு அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இதேபோல் கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தலைவர் ரமேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, பட்டா வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தெரிவித்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

    • மக்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
    • விமான நிலையத்துக்காக பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் என்ற இடத்தில் அமைப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    விமான நிலையத்திற்கு பரந்தூர் அருகே ஏகனாபுரம் கிராமத்தை மையமாக வைத்து 13 கிராமங்களில் நிலம் எடுப்பதாக தகவல் பரவியது. அதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

    53வது நாளான இன்று 600க்கும் மேற்பட்ட மக்கள் ஏகனாபுரம் பகுதியில் விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது .

    இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாநில விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஏகனாபுரம் கிராமத்தை நோக்கி வந்த பொழுது செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு சுங்கசாவடி அருகே கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    இருந்தாலும் இந்த உண்ணாவிரதத்தை அமைதியான முறையில் வழிநடத்தி செல்ல இந்த மக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து இந்த கிராம மக்கள் கூறுகையில், பசுமையான எங்கள் கிராமத்தை அழிக்க வேண்டாம். குடியிருப்பு பகுதிகளையும், விவசாய நிலங்களையும், நீர் நிலைகளையும் எடுக்கக் கூடாது. அதற்காக ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் ஒரு குழு அமைத்து எங்களிடம் கருத்து கேட்டு 80 சதவீத மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நிலம் எடுக்க அரசு முன்வர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் விமான நிலையம் அமைவதற்கு எங்கள் கிராமத்தை தேர்வு செய்யாமல் மாற்று இடத்தை அரசு முன்வந்து தேர்வு செய்ய வேண்டும், என வேண்டுகோள் விடுத்தனர்.

    • விமான நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படும் ஏழை-எளிய மக்களை, விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும்.
    • ஏழை-எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவதுதான் முறையாக இருக்கும்.

    சென்னை:

    முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்து இருக்கிறது. இதன்படி, வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலி பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களும், குடியிருப்புகளும் தி.மு.க. அரசால் கையகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தி அப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விமான நிலையத் திட்டத்தின் காரணமாக, 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் இழந்து, அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு அரசின் நடவடிக்கையையும், அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆராய்ந்து பார்த்தால், பெயரளவிற்கு கருத்துக் கேட்பு கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு துவங்க உள்ளது தெள்ளத்தெளிவாகிறது. இந்த நடைமுறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

    விமான நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படும் ஏழை-எளிய மக்களை, விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவதுதான் முறையாக இருக்கும். இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

    ஆனால், இதை செய்வதாகத் தெரியவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட கிராமங்களில் காவல்துறை முகாம்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற நடவடிக்கை அங்குள்ள ஏழை-எளிய மக்களை அச்சுறுத்துவதாக அமையும்.

    எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய முழு ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை என்றால் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    இதற்கு மாறாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தினை புறந்தள்ளி விட்டு, தன்னிச்சையாக அரசு செயல்படும் பட்சத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. களத்தில் குதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்.

    நெல்லை:

    நெல்லை கால்வாய் தூர்வாரும் பணியை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பருவ காலங்களில் மழை பெய்தாலே அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்கிறது. நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள கால்வாய்களில் மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி ஊருக்குள் புகுந்துவிடுவதை தடுக்க ரூ.68.21 லட்சம் மதிப்பில் கால்வாய் தூர்வரப்பட்டு வருகிறது.

    சுத்தமல்லி அணைக்கட்டில் இருந்து நயினார்குளம் வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும்.

    பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். வைகோ இப்படி பேசுவது தேவையில்லாத விஷயம். இந்தியை திணிப்போம் என மத்திய அரசு எங்கும் இதுவரை சொல்லவில்லை.

    இந்தியை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். கட்டமைப்பு வசதிகளை கொண்டு வருவது பாரதிய ஜனதா கட்சி அரசு. தங்க நாற்கர சாலை திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்துள்ளார்.

    நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்த கட்டமைப்பு மேம்பாட்டு வசதியும் காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை. பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும். அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகளவில் கையாளலாம்.
    • பரந்தூர் மக்களின் வாழ்வாதாரத்தை கேட்டால், நிலத்துக்கு பணம் கொடுப்பதால் நிலம் வாங்கிக்கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை அருகே பரந்தூரில் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையத்துக்கான நில எடுப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அந்த திட்டத்துக்கு அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ட்டி அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நில எடுப்பு பணியில் அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே நானும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோரும் அங்குள்ள 13 கிராமங்களின் விவசாயிகள், குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசினோம்.

    அவர்களில் பெரும்பான்மையானவர்கள், எடுக்கப்படும் நிலத்துக்கு அரசின் வழிகாட்டி மதிப்பைவிட அதிகமான தொகை வழங்க வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்றனர். ஏகநாதபுரம், பரந்தூரில் வசிப்பவர்கள், விமான ஓடுபாதையை மாற்றி அமைத்தால் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதை தவிர்க்கலாம் என்றனர். எனவே அதுபற்றி விரிவான திட்ட அறிக்கை தயாரித்தவர்களிடம் தெரிவித்து, அது முறையாக இருக்கும் என்றால் அதன்படி மாற்றலாம் என்று கூறினோம்.

    மேலும் பெரும்பான்மை மக்கள், நிலத்தின் விலையை அதிகமாக தரவேண்டும், மாற்று வீடுகள் தரவேண்டும் என்றனர். அரசுத் திட்டங்களை கொண்டுவரும்போது எந்த இடமானாலும் விவசாய நிலங்களை எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

    தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வருகிற 2029-ம் ஆண்டுடன் அதன் முழு கட்டுப்பாடும் முடிந்து விடுகிறது. சரக்கு கையாளுதல், தற்போதுள்ள ஓடுதளத்தை பயன்படுத்துதல் போன்றவற்றை அதற்கு மேல் செயல்படுத்த முடியாது. பெங்களூரு மற்றும் ஐதராபாத்தின் வளர்ச்சி, மும்பையில் 2 விமான நிலையங்கள் உருவாக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் சென்னைக்கு இன்னொரு விமான நிலையம் தேவைப்படுகிறது.

    அதற்காக முதலில் 11 இடங்களை ஆய்வு செய்தோம். அதில் படாளம், திருப்போரூர், பரந்தூர், பன்னூர் ஆகிய 4 இடங்களை தேர்வு செய்தோம். திருப்போரூர், படாளம் அருகில் கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காது. பரந்தூரைவிட பன்னூரில் அதிகமான குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்பதால் இறுதியில் பரந்தூர் முடிவு செய்யப்பட்டது.

    அங்கு நிலத்துக்கு அதிக தொகை தரவேண்டும் என்று கேட்டுள்ளதால், தற்போதுள்ள நில மதிப்பீட்டில் மூன்றரை மடங்கு அதிக தொகை கொடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. விமான நிலையம் அமையும் பகுதியின் சுற்றுவட்டாரத்திலேயே அரசு அடையாளம் கண்டுள்ள இடங்களில் அவர்களுக்கு நிலமும், அதில் வீடு கட்ட பணமும் தரப்போகிறோம். அதாவது, எடுக்கும் நிலத்துக்கான தொகை, புதிய இடத்தில் நிலம் மற்றும் அங்கு வீடுகட்ட பணம் ஆகியவை தரப்படவுள்ளன. குறிப்பாக, மாடப்புறம் பகுதி மக்கள் அனைவருக்கும் ஒரே பகுதியில் இடம் தரப்போகிறோம்.

    புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் சரக்கு போக்குவரத்தை அதிகளவில் கையாளலாம். வாகனங்கள் அதிகளவில் வந்து செல்ல முடியும். சென்னைக்குள் வரும் நெரிசலைக் குறைக்க முடியும். இதன் மூலம் அன்னியச் செலாவணி, பொருளாதார உயர்வு போன்றவை தமிழகத்துக்கு வரும்.

    கடந்த ஆட்சியில் சேலம் 8 வழிச்சாலை நிலம் கையகப்படுத்த தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலத்தை கையகப்படுத்த அரசு தீவிரம் காட்டுவது ஏன் என்று கேட்டால், அது தவறு. சாலை போடுவதை தி.மு.க. எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்துப் பேசி பிரச்சினையை தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள். இல்லையேல் மாற்றுவழியைக் காணுங்கள் என்றுதான் தி.மு.க. சார்பில் சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

    பரந்தூர் மக்களின் வாழ்வாதாரத்தை கேட்டால், நிலத்துக்கு பணம் கொடுப்பதால் நிலம் வாங்கிக்கொள்ளலாம். வீடு கட்டவும் பணம் முழுமையாக கொடுக்கிறோம். இடத்தையும் இலவசமாக கொடுக்கிறோம். 13 கிராமத்தில் தகுதி அடிப்படையில் வீட்டில் படித்தவர்களுக்கு அத்தனை பேருக்கும் அரசு வேலை வழங்கப்படும். நில எடுப்புக்காக மொத்தம் 13 கிராமங்களில் 1,005 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2013-ம் ஆண்டு நில எடுப்பு சட்டப்படி நிலங்களை எடுக்கிறோம்.

    இழப்பீட்டை கணக்கிடுவதில் 2 வகைகள் உள்ளன. அரசின் வழிகாட்டி மதிப்பீட்டை (வேறுபடக்கூடியது) வைத்து செட்டில் செய்வது ஒரு வகை. சந்தை மதிப்பை வைத்து செட்டில் செய்வது மற்றொரு வகை. நேரடியாக பேசும்போது அதை முடிவு செய்வோம்.

    வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் அரசு பணம் கொடுத்துவிடும் என்று சிலர் பயந்தனர். ஆனால், நிலத்தின் சந்தை மதிப்பை கணக்கிட்டு பணம் தருவோம் என்று கூறியிருக்கிறோம். நீர்நிலைகள் அதிகமாக இருப்பதால் அதுபற்றி சென்னை ஐ.ஐ.டி.யுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். இந்த திட்டத்தால் காவேரிப்பாக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் வரை வரும் ஓடைக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விமான நிலையத்துக்கான பணிகளை முடிக்க குறைந்தபட்சம் 8 ஆண்டுகளாகும். பரந்தூர் விவகாரத்தில் மற்ற கட்சியி னரால் மக்கள் தூண்டப்படுவதாக அரசு நினைக்கவில்லை.

    இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

    • சென்னையில் ஒரு விமான நிலையம் இருக்கும்போது, இந்த புதிய நடவடிக்கை அவசியமற்றது.
    • சென்னையில் மழை காலத்தின்போது வெள்ளநீர் வழிந்தோடுகிறது.

    சென்னை :

    சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான நிலம் விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்பட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

    அவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பரந்தூர் அருகேயுள்ள ஏகனாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்றார். போராட்ட களத்தில் இருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். நிலம் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சீமானை பார்த்ததும் கண்ணீருடன் புலம்ப தொடங்கினார்கள்.

    'எங்களுக்கு எங்க ஊர் வேணும்பா... சொந்த பூமியை விட்டு நாங்க எங்கே போகமுடியும்? இந்த மண்ண விட்டு எங்களால போகமுடியாதுப்பா... ஏதாவது செஞ்சு எங்களை காப்பாத்துப்பா...' என்று மூதாட்டிகள் சிலர் கதற தொடங்கினார்கள்.

    பின்னர் யாருமே எதிர்பார்க்காதபடி சீமான் காலில் விழுந்து அழ தொடங்கினார்கள். இதனால் சீமான் பதறி போனார். உடனடியாக அவர்களை தூக்கி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். ஒருகட்டத்தில் சீமானும் துக்கம் தாங்காமல் அழ தொடங்கினார். அவரை நிர்வாகிகள் தேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து போராட்டக்களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக தனது கருத்துகளை சீமான் வெளிப்படுத்தினார். அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டார்.

    முன்னதாக பொதுமக்களை சந்தித்த பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிதாக விமான நிலையம் அமைக்க என்ன தேவை வந்துவிட்டது? ஏற்கனவே உள்ள விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினையா? புதிய விமான நிலையம் வேண்டும் என மக்கள் வீதிக்கு வந்து போராடினார்களா? மக்களின் வாழ்விடங்களையும், விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் கட்டுவதால் என்ன வளர்ச்சி கிடைத்துவிட போகிறது?

    சென்னையில் மழை காலத்தின்போது வெள்ளநீர் வழிந்தோடுகிறது. கழிவுநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சாலைகள் சரியல்ல. இதனை போக்க ஏதாவது தொலைநோக்கு திட்டங்களை அரசு கொண்டுவந்ததா?

    இதுபோன்ற திட்டங்களால் சுற்றியுள்ள நில முதலாளிகள் வளரமுடியுமே தவிர, அடித்தட்டு மக்கள் வளரமுடியாது. விளைநிலங்களை அழித்து ஒரு விமான நிலையம் அமைய வேண்டுமா? அதுதான் வளர்ச்சியா?

    ஏற்கனவே சென்னையில் ஒரு விமான நிலையம் இருக்கும்போது, இந்த புதிய நடவடிக்கை அவசியமற்றது. அதனால் தான் மக்கள் 'புதிய விமான நிலையம் வேண்டாம்' என்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், 3-ல் ஒரு பங்கு தான் மக்கள் நிலங்கள் வருகின்றன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.

    அப்படி என்றால் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நில எல்லைக்குள்ளாக மட்டும் உள்ளூர் விமான நிலையத்தை கட்டிக்கொள்ளட்டுமே... எதற்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கேட்கிறீர்கள்? இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த துடிப்பதின் அவசியம் என்ன?

    இவ்வாறு சீமான் கூறினார்.

    • விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • பாமக சார்பில் பரந்தூர் விமான நிலையம் குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கருத்து கேட்பு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி கலந்து கொண்டு கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    • சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும்.
    • புதிய விமான நிலையத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை விலையைவிட கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும்

    சென்னை:

    தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பயணிகள் போக்குவரத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம் (CAGR) (2009-2019 காலத்தில்), சராசரியாக 9 விழுக்காடு ஆகும். இவ்வளர்ச்சி விகிதத்தின்படி, தற்போதைய விமான நிலையம் அதன் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகும், 2028 ஆம் ஆண்டில் அதன் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் என்ற எண்ணிக்கையை எட்டும்.

    தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சுற்றுப்புற பகுதிகளில், பொது மக்கள் வசிக்கும் நிறைய குடியிருப்புகளும் கட்டடங்களும் நிறைந்திருப்பதாலும், நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அவசியம் தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும். மேலும், ஏற்கனவே அமைந்துள்ள மூன்று விமான நிலைய முனையங்கள் (Terminals) மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் நான்காவது முனையம் ஆகியவை இணையாக அமைந்துள்ளதால், முனையங்களுக்கு அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்தினை தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைப்பது கடினமாகும்.

    சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மட்டுமின்றி, தென்னிந்திய மாநிலங்களின் வளர்ந்து வரும் வணிகம், வர்த்தகம், தொழில்கள், சுற்றுலா, விமான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சென்னைக்கு அருகில் ஒரு புதிய விமான நிலையம் அமைப்பது மிகவும் இன்றியமையாததாகும். மேலும், சென்னையுடன் தமிழ்நாட்டின் இதர நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைப்பதற்கும், உலக வளர்ச்சியுடன் இணைந்து செயல்படுவதற்கும், புதிய விமான நிலையத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    இந்திய விமானப் பயணிகள் போக்குவரத்தில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், 2008ம் ஆண்டில் மூன்றாவது இடத்தை வகித்தது. தற்போது, 5வது இடத்தினை வகிக்கிறது. 2008ம் ஆண்டில், 5வது இடம் வகித்த அப்போதைய பெங்களூர் விமான நிலையம், புதிய விமான நிலையம் அமைத்தப் பின், சென்னை விமான நிலையத்தை விட அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை முறையே 14 விழுக்காடு மற்றும் 12 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. அதே வேளையில், சென்னை விமான நிலையத்தின் வளர்ச்சி 9 விழுக்காடு மட்டுமே.

    2028ற்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லையெனில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின், தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கமடையும். மேலும், விமானப் போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    எனவே தான் பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையம், அடுத்த 30-35 வருடங்களுக்கான எதிர்கால விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படவுள்ளது. மேலும், தற்போதுள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்துவதற்கும், விமான நிலைய முனையம் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு அமைப்பதற்கும், சுமார் 4700 ஏக்கர் தொடர்ச்சியான நிலங்கள் தேவைப்படுகின்றது. பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தொடர்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு மற்றும் சமூக பொருளாதார காரணிகளை கருத்திற்கொண்டு, பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

    பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி (360 ஏக்கர்) திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளே இருந்தாலும், அதனை ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும்.

    புதிய விமான நிலைய திட்ட பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியின் நீர்நிலைகள், விவசாய நிலங்களின் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள நீர்நிலைகள் தேவைப்படும் இடங்களில் ஆழப்படுத்தப்படும். விமான நிலைய திட்டப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், வடிகால் மூலம் சுற்றியுள்ள நீர்நிலைகளுடன் இணைக்கப்படும். இந்நீர் சுற்றுப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் முதலில் நிரம்பும் வகையிலும், பின்பு அதிகப்படியான நீர் கால்வாயில் வெளியேறும்படியும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

    புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்வதற்கும், அதனை தொடர்ந்து பராமரிப்பதற்கும் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் மாற்று திட்டங்களை பரிந்துரைக்கவும், ஒரு உயர்மட்ட தொழில் நுட்ப குழு அமைக்கப்படும். இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் காக்கப்படும். மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததான இப்புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு, விவசாயிகளின் நலனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்திற்கும் சந்தை விலையைவிட கூடுதலாக மிகவும் திருப்திகரமான இழப்பீட்டை வழங்கும்.

    சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் (ICAO) ஆய்வின்படி, விமான போக்குவரத்திற்கு செலவழிக்கப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 325 ரூபாய் அளவிற்கு பொருளாதார பலன்கள் கிடைக்கும் (3.25 மடங்கு) மற்றும் ஒவ்வொரு 100 நேரடி வேலை வாய்ப்புக்கும் 610 நபர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    இப்புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் தமிழ்நாடு பல மடங்கு அதிகமாக தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடையும். இதன் மூலம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமின்றி, விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்து பொருளாதார பலன்களையும் அவர்கள் கிடைக்கப் பெறுவர்.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    ×