search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா?: சீமான் கேள்வி
    X

    பரந்தூரில் விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா?: சீமான் கேள்வி

    • சென்னையில் ஒரு விமான நிலையம் இருக்கும்போது, இந்த புதிய நடவடிக்கை அவசியமற்றது.
    • சென்னையில் மழை காலத்தின்போது வெள்ளநீர் வழிந்தோடுகிறது.

    சென்னை :

    சென்னையின் 2-வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான நிலம் விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்பட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

    அவர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் பரந்தூர் அருகேயுள்ள ஏகனாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்றார். போராட்ட களத்தில் இருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். நிலம் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் சீமானை பார்த்ததும் கண்ணீருடன் புலம்ப தொடங்கினார்கள்.

    'எங்களுக்கு எங்க ஊர் வேணும்பா... சொந்த பூமியை விட்டு நாங்க எங்கே போகமுடியும்? இந்த மண்ண விட்டு எங்களால போகமுடியாதுப்பா... ஏதாவது செஞ்சு எங்களை காப்பாத்துப்பா...' என்று மூதாட்டிகள் சிலர் கதற தொடங்கினார்கள்.

    பின்னர் யாருமே எதிர்பார்க்காதபடி சீமான் காலில் விழுந்து அழ தொடங்கினார்கள். இதனால் சீமான் பதறி போனார். உடனடியாக அவர்களை தூக்கி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். ஒருகட்டத்தில் சீமானும் துக்கம் தாங்காமல் அழ தொடங்கினார். அவரை நிர்வாகிகள் தேற்றினார்கள். அதனைத் தொடர்ந்து போராட்டக்களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக தனது கருத்துகளை சீமான் வெளிப்படுத்தினார். அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தெரிவித்து, அங்கிருந்து புறப்பட்டார்.

    முன்னதாக பொதுமக்களை சந்தித்த பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிதாக விமான நிலையம் அமைக்க என்ன தேவை வந்துவிட்டது? ஏற்கனவே உள்ள விமான நிலையத்தில் ஏதாவது பிரச்சினையா? புதிய விமான நிலையம் வேண்டும் என மக்கள் வீதிக்கு வந்து போராடினார்களா? மக்களின் வாழ்விடங்களையும், விளைநிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்து விமான நிலையம் கட்டுவதால் என்ன வளர்ச்சி கிடைத்துவிட போகிறது?

    சென்னையில் மழை காலத்தின்போது வெள்ளநீர் வழிந்தோடுகிறது. கழிவுநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. சாலைகள் சரியல்ல. இதனை போக்க ஏதாவது தொலைநோக்கு திட்டங்களை அரசு கொண்டுவந்ததா?

    இதுபோன்ற திட்டங்களால் சுற்றியுள்ள நில முதலாளிகள் வளரமுடியுமே தவிர, அடித்தட்டு மக்கள் வளரமுடியாது. விளைநிலங்களை அழித்து ஒரு விமான நிலையம் அமைய வேண்டுமா? அதுதான் வளர்ச்சியா?

    ஏற்கனவே சென்னையில் ஒரு விமான நிலையம் இருக்கும்போது, இந்த புதிய நடவடிக்கை அவசியமற்றது. அதனால் தான் மக்கள் 'புதிய விமான நிலையம் வேண்டாம்' என்று வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், 3-ல் ஒரு பங்கு தான் மக்கள் நிலங்கள் வருகின்றன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.

    அப்படி என்றால் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நில எல்லைக்குள்ளாக மட்டும் உள்ளூர் விமான நிலையத்தை கட்டிக்கொள்ளட்டுமே... எதற்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கேட்கிறீர்கள்? இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த துடிப்பதின் அவசியம் என்ன?

    இவ்வாறு சீமான் கூறினார்.

    Next Story
    ×