search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரந்தூர் விமான நிலையம்"

    • விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர்.

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விமான நிலையம் அமைய உள்ள பகுதிக்கு மஞ்ச நாதன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று காலை ஆய்வு செய்ய வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமக்கள் அம்பேத்கர் சிலையில் இருந்து மதுரமங்கலம் செல்லும் சாலையில் கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தனர். திடீரென சிலர் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    • கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

    ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சுமார் 4700 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்த திட்டத்தை கைவிடக்கோரி ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ள இடங்களில் நீர் நிலைத் தன்மை குறித்து அறிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதைத் தெடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், பருவமழையின் போது வெள்ளம் மற்றும் புவியியல் நிலைத்தன்மை பற்றிய விரிவான ஆய்வறிக்கையை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) நீர்வளத்துறையிடம் கேட்டு வந்தது. இதனை 6 மாதத்தில் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    எனவே பரந்தூரை சுற்றி உள்ள பகுதிகளில் நீர்நிலை தன்மை தொடர்பாக விரைவில் ஆய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டாலும் அதன் எல்லைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நீர்நிலைத்தன்மை குறித்து ஆய்வறிக்கையை நீர்வளத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இது 6 மாதத்தில் முடிவடையும். கடந்த 10 ஆண்டுகளில் மழைப்பொழிவு, வெள்ளம், நிலத்தடி நீர் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    புதிய விமானநிலைய திட்டத்திற்கான பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க டிட்கோ விரைவில் ஒரு ஆலோசகரை நியமிக்கும் என்றார்.

    • புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
    • புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு 13 கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    விவசாய நிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கிராமசபை கூட்டத்தின் போது தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

    புதிய விமானநிலையம் அறிவிப்பு வந்த நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்கள் மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை ஏகனாபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மொட்டை அடித்தனர். மேலும் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது புதிய விமான நிலையத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட் டம் நடத்தினர். இதனால் ஏகனாபுரம் கிராமம் பரபரப்பாக காணப்படுகிறது.

    புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 264-வது நாளாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
    • போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் 250 நாட்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி ஏகனாபுரம் கிராம மக்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதையடுத்து கிராம மக்களின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகிறார்கள்.

    • கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    சென்னையில் 2-விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.

    இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் குடியிருப்புகள் பாசன கால்வாய் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் மாலையில் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஏகனாபுரம் கிராமமக்களை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் நேற்று 250- வது நாளை எட்டியது. இதையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வன்னியரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். ஏகனாபுரம் கிராம மக்களின் போராட் டம் 250 நாளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.

    • பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விளைநிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கு அதை சுற்றியுள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது.

    பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏகனாபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் புதிய விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
    • 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2-வது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இன்று 200-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகானாபுரம் கிராம மக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளையும், நிலம் எடுக்கும் பணிகளையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஏற்கனவே கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினார்கள்.

    ஏகானாபுரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன முழக்கங்களோடு பேரணியில் சென்றவர்கள் 500 மீட்டர் தூரத்தில் அம்பேத்கர் திடல் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதை தொடர்ந்து போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்தனர். அதை தொடர்ந்து தங்கள் கிராமத்திற்கு வந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

    பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு போராட்டத்தில் சட்டம் ஒழுங்கை காக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி.க்கள், 28 டிஎஸ்பிக்கள், 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 81 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பரந்தூரில் புதிய விமான நிலைய கட்டுமானப்பணி மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை தொடர்பான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டது.
    • விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிறுவனத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,750 ஏக்கரில் அமைய உள்ளது.

    இந்த புதிய விமான நிலையத்தில் 2 ஓடுபாதைகள், 2 பயணிகள் முனையங்கள், சரக்குகள் கையாளும் முனையம் மற்றும் பராமரிப்பு, பழுதுபார்க்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுகிறது.

    இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் புதிய விமான நிலைய கட்டுமான பணிக்கு விவசாய நிலங்கள், நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே பரந்தூரில் புதிய விமான நிலைய கட்டுமானப்பணி மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை தொடர்பான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக அரசு திட்டமிட்டது.

    இதுகுறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க நிறுவனத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் நிறுவனத்தினர் கூடுதல் அவகாசம் கேட்டதால் கடந்த திங்கட்கிழமை (6-ந்தேதி) இறுதி செய்யப்பட இருந்த டெண்டர் முடிவு செய்யப்படவில்லை. இதற்கு முன்பும் ஏற்கனவே ஒருமுறை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்க போதுமான அவகாசம் இல்லை என்று கூறப்பட்டதால் இந்த மாத இறுதி (27-ந்தேதி) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'புதிய விமான நிலையம் அமைய உள்ள கிராம மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. எனவே திட்டத்தில் எந்த பாதிப்பும் வராது. விமான நிலையம் கட்டுவதற்கான விரிவான தொழில்நுட்ப-பொருளாதார அறிக்கையை மேற்கொள்ள ஆலோசகரை முடிவு செய்யும் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட இருந்தது. திட்டத்தை உருவாக்கி விண்ணப்பிக்க போதுமான நேரம் இல்லை என்று அவகாசம் கேட்டதை அடுத்து வருகிற 27-ந்தேதி வரை டெண்டர் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் உள்ள சுமார் 10 ஷரத்துகளில் அரசு சிறிய திருத்தங்களைச் செய்துள்ளது என்றனர்.

    • விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்காக குடியிருப்பு நிலம், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரப்பதிவு துறையின் சார்பில் வெளியிட்ட தகவலில், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ளதால் சுற்றி உள்ள 13 கிராம பகுதிகளில் உள்ள இடங்களை வாங்கவோ, விற்கவோ, தான செட்டில்மென், அடமானம் போன்ற பத்திரபதிவுக்கு தடையில்லா சான்று பெற்ற பின்னரே பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏகனாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகனாபுரம் கிராம பகுதிக்குட்ட நன்செய், புன்செய், கிராம நத்தம் ஆகியவற்றில் அடங்கியிருக்ககூடிய சர்வே எண்கள் கொண்ட எந்த நிலத்தையும் கிரையமோ, தான செட்டில்மென்ட்டோ, பாகப்பிரிவினை, அடமானம் போன்ற எல்லாவித பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எதற்காக? அந்த உத்தரவை பிறப்பித்த அரசு அதிகாரியின் விவரம், அதற்கான நகல், எந்த தேதியில் இருந்து ஏகனாபுரம் பகுதியில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை கேட்டு இருந்தார்.

    இதற்கு அதிகாரிகள் அளித்து உள்ள பதிலில், ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை. எந்த அதிகாரிகளிடம் இருந்தும் அந்த உத்தரவானது வரவில்லை.1.09.22 முதல் 28.12.022 வரை மூன்று ஆவணங்கள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 152-வது நாளாக இன்று அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
    • 152-வது நாளாக கடும் குளிரிரையும் பொருட்படுத்தாமல் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் வரை அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.

    விமான நிலையம் அமைப்பதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வா தாரமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

    மேலும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 152-வது நாளாக இன்று அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    152-வது நாளாக கடும் குளிரிரையும் பொருட்படுத்தாமல் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் வரை அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    இந்த நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.

    விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

    மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 150-வது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி கைகளில் மெழுகுவர்த்தியினை ஏந்தியவாறு, விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தினை கைவிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    150-வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலையில் துண்டு கட்டிக்கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கிராமத்தில் உள்ள குழந்தைகள், இளைஞர்கள் முதியவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் போராட்டக் குழு பிரதிநிதிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
    • காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    பரந்தூர் விமான நிலையம் அமைக்க நிலம் எடுப்பதற்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நாளை (20-ந்தேதி) ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 13 கிராம மக்களின் எதிர்ப்பு குறித்த விவரம், நிலம் கையகப்படுத்தும் பணி, இழப்பீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கின்றனர்.

    விமான நிலையம் அமைக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.

    இக்கூட்டத்தில் போராட்டக் குழு பிரதிநிதிகள் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    ×