search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரந்தூர் விமான நிலைய விவகாரம்- கிராம மக்களுடன் 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
    X

    அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு ஆகியோருடன் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    பரந்தூர் விமான நிலைய விவகாரம்- கிராம மக்களுடன் 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

    • விமான நிலையம் அமைந்தால் விளைநிலங்கள் பறிபோவதுடன் தங்கள் வாழ்க்கையும் தொலைந்து போகும் என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
    • அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேலேரி, நெல்வாய், வனத்தூர், நாகப்பட்டு, பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கிராம மக்களின் இந்த போராட்டம் 80 நாட்களாக நீடித்தது. அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    விமான நிலையம் அமைந்தால் விளைநிலங்கள் பறிபோவதுடன் தங்கள் வாழ்க்கையும் தொலைந்து போகும் என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் போராட்டம் நீடித்து வந்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையத்தால் தங்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளை விரிவாக எடுத்து கூறினர். அப்போது அமைச்சர்கள் தரப்பில் உங்களது வாழ்வாதார பிரச்சினைகளை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம்.

    நீங்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து 80 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கிராம மக்கள் அறிவித்தனர்.

    அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம குடியிருப்பு மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதைத் தொடர்ந்து ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

    (17-ந்தேதி) கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்ல கிராம மக்கள் திட்டமிட்டு இருந்தனர். அதுவும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×