search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவேந்திர பட்னாவிஸ்"

    • பதவி ஏற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு வாழ்த்து கூறினார்.
    • அமித்ஷா எங்களுக்கு பின்னால் ஒரு பாறையை போல நின்று ஆதரவளிப்பதாக கூறினார்.

    சிவசேனாவுக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் அந்த கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதனால் நடந்த அரசியல் திருப்பங்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பா.ஜனதா மழுப்பலாக பதில் கூறி வந்தது. தேவேந்திர பட்னாவிசும், ஏக்நாத் ஷிண்டேயும் குஜராத்தில் சந்தித்து பேசியதாக தகவல்களும் பரவின. இந்த நிலையில் நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற கையோடு திறந்த புத்தகம் போல, திரைக்கு பின்னால் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே படம் போட்டு காட்டினார்.

    இதுபற்றி ஏக்நாத் ஷிண்டே நேற்று சட்டசபையில் பேசியதாவது:- 20-ந் தேதி எம்.எல்.சி. தேர்தலில் கட்சியால் எனக்கு கிடைத்த அவமரியாதை என்னை கட்சிக்கு எதிராக தூண்டியது. இனி கட்சி பக்கம் திரும்ப கூடாது என்று தீர்மானித்தேன். எம்.எல்.ஏ.க்களுடன் போலீஸ் சோதனை சாவடிகளை தாண்டி எப்படி செல்வது என்பது எனக்கு தெரியும். செல்போன் டவர்களைக் கண்டறிவது மற்றும் ஒரு நபரை கண்காணிப்பது எப்படி என்று எனக்குத் தெரியும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய கலைஞர் இவர் தான் (இவ்வாறு கூறியபடி தனது வலது பக்கம் அமர்ந்திருந்த பட்னாவிசை சுட்டிக்காட்டினார்). கவுகாத்தி ஓட்டலில் எனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அயர்ந்து தூங்கிய பிறகு நான் குஜராத் செல்வேன். அங்கு பட்னாவிசை சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்கள் எழுந்திருக்கும் முன்பே அதிகாலையில் கவுகாத்தி ஓட்டலுக்கு திரும்பி விடுவேன். எல்லாவற்றையும் ஒருக்கிணைத்தவர் இங்கே இருக்கிறார். இவர் என்ன செய்வார், எப்படி செய்வார் என்று யாருக்கும் தெரியாது.

    இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே பேசினார்.

    இந்த ரகசியங்களை ஏக்நாத் ஷண்டே போட்டுடைத்தபோது பட்னாவிஸ் தர்மசங்கடமான நிலையில் இருந்ததை காண முடிந்தது. மேலும் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, "எங்கள் எண்ணிக்கை பா.ஜனதாவை விட குறைவாக இருந்தது. ஆனாலும் பதவி ஏற்கும் முன் பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும் தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக என்னிடம் தெரிவித்தார். மத்திய மந்திரி அமித்ஷா எங்களுக்கு பின்னால் ஒரு பாறையை போல நின்று ஆதரவளிப்பதாக கூறினார்" என்றார்.

    • சபாநாயகர் தேர்தலில் ராகுல் நர்வேக்கர் வெற்றி பெற்றார்.
    • மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்த பலம் 287 ஆகும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார்.

    இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே ராஜினாமா செய்ததால், கடந்த 1½ ஆண்டுகளாக காலியாக உள்ள சபாநாயகர் பதவி தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்கவும் 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணிக்கு எதிராக சிவசேனா வேட்பாளரை நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு போட்டியாக சிவசேனா அதிருப்தி அணியும் கட்சியினருக்கு கொறடா உத்தரவு பிறப்பித்தது.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு மகாராஷ்டிரா சட்டசபை முதல் முறையாக நேற்று காலை 11 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரயிஸ்சேக், அபு ஆஸ்மி, எம்.ஐ.எம். கட்சியின் ஷா பரூக், முப்தி முகமது, பா.ஜனதாவின் லட்சுமண் ஜக்தாப், முக்தா திலக், ஜெயிலில் உள்ள தேசியவாத காங்கிரசை சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த தத்தாரே பாரனே, அன்னா பன்சோதே, நிலேஷ் லங்கே, பாபன்தாதா ஷிண்டே, காங்கிரசை சேர்ந்த பிரனிதி ஷிண்டே, ஜிதேஷ் அன்தாபுர்கர் என சுமார் 13 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை.

    இதையடுத்து நடந்த சபாநாயகர் தேர்தலில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வால் பொறுப்பு சபாநாயகராக இருந்து புதிய சபாநாயகர் தேர்தலை நடத்தினார். முடிவில் சபாநாயகர் தேர்தலில் 271 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதில் பா.ஜனதாவின் ராகுல் நர்வேக்கர் 164 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் ராஜன் சால்விக்கு 107 ஓட்டுக்களே கிடைத்தன.

    மகாராஷ்டிரா சட்டசபையின் மொத்த பலம் 288 ஆகும். ஒரு உறுப்பினர் இறந்துவிட்டதால் தற்போதைய பலம் 287. மெஜாரிட்டிக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சிவசேனா அதிருப்தி- பா.ஜனதா கூட்டணி அரசு மெஜாரிட்டிக்கு கூடுதலாக 20 ஓட்டுகள் பெற்று சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற்ற 45 வயது ராகுல் நர்வேக்கருக்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து கூறினார்.

    அப்போது அவர், 'நாட்டின் இளம் சபாநாயகர் ராகுல் நர்வேக்கர்' என பெருமிதத்துடன் தெரிவித்தார். இதற்கிடையே சட்டசபை வளாகத்தில் உள்ள சிவசேனா சட்டமன்ற கட்சி அலுவலகம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் சீல் வைக்கப்பட்டது. அலுவலக வாசலில், 'சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் உத்தரவின் பேரில் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.' என எழுதப்பட்ட வாசகம் தொங்கவிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. சபாநாயகர் தேர்தலில் பெற்றிபெற்றதால் நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஏக்நாத் ஷிண்டே அரசு எளிதில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதை தடுக்க மும்பையில் உள்ள ஓட்டலுக்கு மீண்டும் அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

    • பாஜகவை சேர்ந்த நர்வேகர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் உறுப்பினராக இருந்தவர்.
    • தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.

    \முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர்.

    வாக்கெடுப்பில் நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், சால்விக்கு ஆதரவாக 107 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து புதிய சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், நர்வேக்கரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    அப்போது பேசிய பட்னாவிஸ், ராகுல் நர்வேகர் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இளம் வயது சபாநாயகராக உள்ளார் என தெரிவித்தார். 45 வயதான நார்வேக்கரின் முதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் அதில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர்.

    பின்னர் 2014 ஆம் ஆண்டில் சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் அவர் இணைந்தார். தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக அவர் உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ராகுல் நர்வேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜே.பி. நட்டா தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
    • சிவசோவை உடைத்து மீண்டும் மாநிலத்தில் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்ற தீவிரமாக ஈடுபட்டவர் பட்னாவிஸ்.

    மும்பை :

    ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆதரவுடன் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்து உள்ளனர். நேற்று ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பொறுப்பேற்று கொண்டனர். முன்னதாக ஏக்நாத் ஷிண்டேயை புதிய முதல்-மந்திரி என அறிவித்த போது, தேவேந்திர பட்னாவிஸ் மாநில அரசில் அங்கம் வகிக்க மாட்டேன் என கூறினார்.

    பின்னர் பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பதவியேற்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

    சிவசோவை உடைத்து மீண்டும் மாநிலத்தில் பா.ஜனதா அதிகாரத்தை கைப்பற்ற தீவிரமாக ஈடுபட்டவர் தேவேந்திர பட்னாவிஸ். எனவே முதல்-மந்திரி பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தநிலையில் மும்பை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதற்காக கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை.

    இந்தநிலையில் 3-ந் தேதி, 4 ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு சட்டபேரவை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் தேவேந்திர பட்னாவிஸ் மும்ரமாக இருப்பதால் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

    • மகாராஷ்டிர முதல் மந்திரியாக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்தார்.
    • துணை முதல் மந்திரியாக பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே நேற்று பதவியேற்றார். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. ஆதரவுடன் பதவியேற்றார் ஷிண்டே. ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    துணை முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துகள். தேர்ந்த அரசியல் அனுபவம் கொண்ட அவர், மாநிலத்தைப் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    • தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது.
    • கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு பிறகு இன்று புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

    அதன்பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கினர். பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.


    துணை முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்

    துணை முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்

    ஆனால், கடைசி நேரத்தில் திருப்பம் ஏற்பட்டது. இன்று மாலையில், தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என பட்னாவிஸ் அறிவித்தார். அதேசமயம் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறினார். அதன்பின்னர் கட்சி தலைமை கேட்டுக்கொண்டதையடுத்து, அமைச்சரவையில் சேர பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்தார்.

    அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    • பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
    • தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்த நிலையில், பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.

    பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா அதிருப்தி குழுவின் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ளார் என்று இன்று மதியம் வரை தகவல் வெளியானது.

    ஆனால், இன்று மாலையில், திடீர் திருப்பம் ஏற்பட்டது. தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இன்று இரவு 7.30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பட்னாவிஸ் கூறினார். புதிய அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன், ஷிண்டேவின் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பேன் என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.

    • பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது.
    • ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    சிவசேனா கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்த நிலையில் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பட்னாவிஸ் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பட்னாவிஸ் 3-வது முறையாக மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கு முன்பு 2014 முதல் 2019 வரை 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தனர்.
    • 2019 தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் 5 நாட்கள் பதவி வகித்தார். பெரும்பான்மை இல்லாததால் பொறுப்பு ஏற்ற 5-வது நாளில் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கி இருந்து நெருக்கடி அளித்து வந்தனர்.

    மொத்தம் உள்ள 56 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சென்றதால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த சிவசேனா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து ஆட்சியை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டு உத்தரவு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக இருந்தது. ஜூலை 31-ந்தேதி வரை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிஸ் கவர்னர் பகத்சிங் கோஷியா ரியை நேற்று முன்தினம் இரவு சந்தித்தார். அப்போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரே அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஏக்நாத் ஷிண்டே அணியில் 39 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது என்றும் பட்னாவிஸ் கூறினார்.

    இதையடுத்து மகாராஷ்டிரா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் உத்தரவிட்டார். சிறப்பு சட்டசபையை இன்று காலை 11 மணிக்கு கூட்டி மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கவர்னர் தனது உத்தரவில் தெரிவித்தார்.

    சட்டசபை முதன்மை செயலாளர் ராஜேஷ் பாகவத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனா தரப்பில் சுப்ரீம் கோட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பிர்தி வானே ஆகியோர் அடங்கிய கோடைக்கால அமர்வு நேற்று மாலை 5 மணிக்கு விசாரணை நடத்தியது. இரவு 9 மணியளவில் விசாரணையை முடித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க போவதில்லை. அதே நேரம் இந்த மனு மீது பதில் அளிக்குமாறு சட்டசபை செயலாளர் மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். இதற்கு 5 நாட்களில் பதில் அளிக்கலாம்.

    அந்த பதில் மனுவின் தகுதியின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பான மற்ற வழக்குகள் சேர்த்து ஜூலை 11-ந்தேதி விசாரிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த மனுக்கள் மீதான விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி முடிவுக்கு உட்பட்டது.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, "சட்டசபையில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பம் இல்லை. முதல்-மந்திரி பதவியையும், சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றார்.

    பெரும்பான்மை இல்லாததால் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே இரவு 11.44 மணியளவில் கவர்னர் மாளிகை சென்று கோஷியாரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவருடன் அவரது மகன்கள் ஆதித்ய தாக்கரே, தேஜாஸ், சிவசேனா தலைவர்கள் நீலம் கோர்கே அரவிந்த் சாவந்த் ஆகியோர் உடன் சென்றனர்.

    ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட கவர்னர் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். உத்தவ் தாக்கரே பதவி விலகியதால் இன்று நடைபெற இருந்த மகாராஷ்டிரா சிறப்பு சட்டசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    உததவ் தாக்கரே பதவி விலகியதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டு உள்ளது.

    அந்த கட்சிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 39 சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 11 சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.

    மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி என்று மாநில பா.ஜனதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இன்று காலையில் ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜனதா மேலிட பார்வையாளர் டி.ரவி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுகிறார்.

    முன்னதாக அவர் மும்பை திரும்பிய சிவசேனா அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டேயும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பா.ஜனதா ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு கவர்னரை தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கவர்னர் கோஷியாரை இன்று மாலை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள். தங்களுக்கு 156 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு (பா.ஜனதா 106, சிவசேனா அதிருப்தி 40, சுயேட்சை 10) இருக்கும் கடிதத்தை கவர்னரிடம் அளிக்கிறார்.

    இதை தொடர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுவார். தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். இதைத்தொடர்ந்து அவர் நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்னாவிஸ் 3-வது முறையாக மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கு முன்பு 2014 முதல் 2019 வரை 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தனர்.

    2019 தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் 5 நாட்கள் பதவி வகித்தார். பெரும்பான்மை இல்லாததால் பொறுப்பு ஏற்ற 5-வது நாளில் முதல்-மந்திரி பதவியை விட்டு விலகினார்.

    தற்போது சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து அதிருப்தி குழுவின் ஆதரவுடன் பட்னாவிஸ் 3-வது தடவை முதல்-மந்திரியாகிறார்.

    • ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார் உத்தவ் தாக்கரே.
    • பதவியேற்பு நாளில் மும்பை வருமாறு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு பாஜக வலியுறுத்தல்.

    மும்பை:

    மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில்.உத்தவ் தாக்கரே தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக ராஜ்பவன் சென்ற அவர், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக தொடருமாறு கேட்டுக் கொண்டார். 


    இந்நிலையில், மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து, ஆட்சி அமைப்பது குறித்து இன்று முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், முதலமைச்சர் பதவியை உத்தவ் ராஜிமானா செய்ததால், சட்டசபையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது.

    இதையடுத்து ஆளுநரை இன்று சந்திக்கும் பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும், தமக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. ஆளுநர் அழைப்பு விடுக்கும் நிலையில் நாளை அவர் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பதவியேற்பு நாளில் மும்பைக்கு வருமாறு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே முடிவு செய்வார்கள் என்றும்,பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    • ஏக்நாத் ஷிண்டே, தனக்கு சுமார் 50 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • உத்தவ் தாக்கரே தரப்பு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 39 சிவசேனா எம்எல்ஏக்கள் அம்மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ்,  நேற்று மாலை டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மும்பை திரும்பிய அவர் ஆளுநர் மாளிகைக்கு 8 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் சென்று மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், சிவசேனாவின் 39 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ்-என்.சி.பி.யுடன் கூட்டணியில் இருக்க விரும்பவில்லை என்று பலமுறை கூறியுள்ளதாக தெரிவித்தார்.

    எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆளுநரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பட்னாவிஸ் கோரிக்கையை அடுத்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு ஆளுநர் உத்தரவிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக எதிர்ப்பு எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் விவகாரத்தில் தீர்வு காணும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்குமாறு உத்தவ் தாக்கரே விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

    இதனிடையே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்திற்கு தலைமை தாங்கி வரும் ஏக்நாத் ஷிண்டே, கவுகாத்தியில் இருந்து விரைவில் மும்பை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

    சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தனக்கு சுமார் 50 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • தேவேந்திர பட்னாவிசுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது 2-வது முறையாகும்.

    மும்பை :

    மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே மாநில அரசு பொதுமக்கள் கூட்ட நெரிசலான பகுதிகளில் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அதில், "எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் உள்ளேன். டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து மற்றும் சிகிச்சை எடுத்து கொள்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

    தேவேந்திர பட்னாவிசுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது 2-வது முறையாகும். ஏற்கனவே 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×