search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்"

    • ஏக்நாத் ஷிண்டே, தனக்கு சுமார் 50 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • உத்தவ் தாக்கரே தரப்பு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 39 சிவசேனா எம்எல்ஏக்கள் அம்மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ்,  நேற்று மாலை டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மும்பை திரும்பிய அவர் ஆளுநர் மாளிகைக்கு 8 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் சென்று மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்னாவிஸ், சிவசேனாவின் 39 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ்-என்.சி.பி.யுடன் கூட்டணியில் இருக்க விரும்பவில்லை என்று பலமுறை கூறியுள்ளதாக தெரிவித்தார்.

    எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆளுநரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பட்னாவிஸ் கோரிக்கையை அடுத்து பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு ஆளுநர் உத்தரவிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக எதிர்ப்பு எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் விவகாரத்தில் தீர்வு காணும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்குமாறு உத்தவ் தாக்கரே விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

    இதனிடையே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்திற்கு தலைமை தாங்கி வரும் ஏக்நாத் ஷிண்டே, கவுகாத்தியில் இருந்து விரைவில் மும்பை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

    சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தமது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பங்கேற்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தனக்கு சுமார் 50 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×