search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சூடு"

    • விவசாய கூலித் தொழிலாளியான ஈஸ்வரன் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.
    • உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் வனக்காப்பகம், கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புக்காடு பகுதிகள் உள்ளன. இங்குள்ள வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் வனவர் திருமுருகன் தலைமையில் வனத்துறையினர் இன்று காலை ரோந்து சென்றனர்.

    அப்போது சிலர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? என விசாரணை நடத்தப்பட்டது. இதில் இறந்தநபர் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என தெரிய வந்தது. அவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    விவசாய கூலித் தொழிலாளியான அவர் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். அத்துமீறி காப்புக்காட்டுக்குள் நுழைந்ததால் வேட்டைக்கு வந்தாரா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் லோயர் கேம்ப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஈஸ்வரனின் உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொழிலாளி ஈஸ்வரன் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தார். மேலும் வனத்துறையினரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றார். இதனால் வனத்துறையினர் தங்களின் பாதுகாப்புக்காக அவரை சுட்டுக் கொன்றனர். அவருடன் வந்த சிலரையும் தேடி வருகின்றோம். காப்புக்காட்டுக்குள் பொதுமக்கள் வர அனுமதி இல்லை. வேட்டையாடும் கும்பல் அதிகளவில் வருவதால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே இது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    வனப்பகுதியில் நுழைந்த தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    லூயிஸ்டன்:

    அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார்.

    அந்நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நுழைந்து அந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அவர் அங்குள்ள மதுபான விடுதி, ஓட்டல், பவுலிங் விளையாட்டு மையம், வணிக வளாகத்தின் பொருட்கள் வினியோக மையம் ஆகியவற்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூடு காரணமாக லூயிஸ்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

    பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர். அவர்களை போலீசார் ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். அதில் அந்த நபர் துப்பாக்கியால் சுட தயாராகுவது இடம் பெற்று இருந்தது.

    அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்படியும் லூயிஸ்டன் நகரில் கடைகளை மூடவும் போலீசார் அறிவுறுத்தினர். தாக்குதல் நடத்தியவரை பிடிக்க லூயிஸ்டன் நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    அந்த நபர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே போலீசுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் நடந்தால் போலீசுக்கு தகவல் கொடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர்.

    இது தொடர்பாக மைனே மாகாண கவர்னர் ஜேனட் மில்ஸ் கூறும்போது, லூயிஸ்டனில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மாகாணம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு அப்பகுதியில் உள்ள மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் இச்சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ராபர்ட் கார்டு என்றும், மைனேவில் உள்ள அமெரிக்க ராணுவ ரிசர்வ் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவித்தனர்.

    • அமெரிக்காவில் நேற்று நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
    • இதில் 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் உள்ள நேற்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. துப்பாக்கி ஏந்திய இருவர் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டனர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைத் தேடி வருகின்றனர்.

    காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். நகரின் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளும், உயிரிழப்புகளும் அந்நாட்டு மக்களை பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்காவில் கொள்ளை கும்பல் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.
    • இதில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ஜோகனஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் கொள்ளை கும்பலைச் சேர்ந்த 16 ஆண்கள், 2 பெண்கள் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் தங்கள் துப்பாக்கியை காட்டி, கோலை மிரட்டி கைது செய்ய முற்பட்டனர்
    • பெண் அதிகாரி மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுமா என்பதை மாவட்ட நீதித்துறை முடிவு செய்யும்

    அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ளது டென்வர். டென்வர் பகுதியை சேர்ந்தவர் பிராண்டன் கோல் (36).

    இவர் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் மனைவி சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் எங்கும் செல்ல முடியும்.

    அவர்களுக்குள் ஏதோ தகராறு நடைபெறுவதாகவும் அதில் கோல் தனது மனைவியை சக்கர நாற்காலியிலிருந்து கீழே தள்ளி விட்டு விட்டதாகவும், டென்வர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

    கோல் மது போதையில் இருப்பது போல் தெரிகிறது என்று கூறிய தகவல் தெரிவித்தவர், கோல் கையில் ஏதும் ஆயுதம் உள்ளதா, கோலின் மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என கூறினார். இதனையடுத்து அந்த வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

    அங்கு கோல் மனைவியை கீழே தள்ளி விட்டதனால் அவர் தரையில் சக்கர நாற்காலிக்கு அருகே உட்கார்ந்திருந்தார். மனைவி மீது தாக்குதலில் ஈடுபட முயன்ற கோலை, காவல்துறை அதிகாரிகள் தங்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கைது செய்ய முற்பட்டனர்.

    கைகளை மார்பளவு உயர்த்தியபடி கோல் அவர்களின் காரில் ஏற முயற்சித்தார். அந்த நேரத்தில் அவர் கையில் ஏதோ பொருளை எடுப்பதை அவர் பின்புறம் நின்றிருந்த ஒரு பெண் காவல் அதிகாரி கண்டார்.

    அதனை ஒரு கத்தி என நினைத்த அந்த அதிகாரி உடனடியாக கோலை சுட்டார். இதில் கோல் உயிரிழந்தார். பிறகு, அவரை பரிசோதித்த போது கோல் கையில் இருந்தது கத்தி அல்ல, ஒரு கருப்பு மார்க்கர் பேனா என தெரிய வந்தது.

    "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்" என இது குறித்து டென்வர் காவல்துறை ஆணையர் ரான் தாமஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அந்த பெண் அதிகாரி மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுமா இல்லையா என்பதை டென்வர் மாவட்ட நீதித்துறைதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு இது போன்ற சம்பவங்களில் காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பதை காவல்துறை ஆய்வு செய்யும் என தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது
    • துப்பாக்கிச்சூட்டில் துணை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் உயிரிழப்பு

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பைக்கு தினமும் ஜெய்ப்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று மதியம் 2 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்டது. ரட்லம், வதோதரா, சூரத் வழியாக அந்த ரெயில் மும்பைக்கு வந்து கொண்டு இருந்தது. 17 மணி நேர பயணத்தை நிறைவு செய்ய நெருங்கி கொண்டு இருந்த நிலையில் அதிகாலை 5.20 மணிக்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அந்த ரெயில் வாபி-சூரத் ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது. பல்கர் எனும் ரெயில் நிலையத்தை கடந்தபோது பி-5 ரெயில் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்காரர் சேத்தன் சிங்கிற்கும், அவரது உயர் அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் திக்ராம் மீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இன்று அதிகாலை ஏற்பட்ட மோதலில் சேத்தன் சிங் கண் இமைக்கும் நேரத்துக்குள் தனது துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கினார். தானியங்கி துப்பாக்கி வகையை சேர்ந்த அந்த துப்பாக்கியில் இருந்து சரமாரியாக குண்டுகள் பாய்ந்தன.

    இதில் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் திக்ராம் மீனா மீது குண்டுகள் பாய்ந்தன. அவர் பயங்கர அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

    துப்பாக்கிச்சூடு சத்தம் மற்றும் அலறல் சத்தம் கேட்டு பி.5 பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். அதற்குள் போலீஸ்காரர் சேத்தன் சிங் அந்த பெட்டியில் இருந்து வெளியேறி தப்பி ஓடினார். அருகில் இருந்த பெட்டிக்குள் சென்ற அவரை பயணிகள் மடக்கினார்கள்.

    இதையடுத்து துப்பாக்கியை காட்டி போலீஸ்காரர் சேத்தன் சிங் மிரட்டினார். ஒரு பயணியை அவர் பிணை கைதி போல் பிடித்துக்கொண்டு, "அருகில் வந்தால் இவரை சுட்டுக்கொன்று விடுவேன்" என்றும் மிரட்டினார். இதனால் பயணிகள் ஒரு நிமிடம் செய்வது அறியாமல் திகைத்தனர்.

    இதற்கிடையே அவரை பயணிகள் பிடிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மீண்டும் தனது தானியங்கி ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

    என்றாலும் 3 பயணிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவர்களும் ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க சரிந்தனர். ஓடும் ரெயில் பெட்டிக்குள்ளேயே அந்த 3 பயணிகளும் இறந்தனர். இதனால் அந்த ரெயில் பெட்டி முழுவதும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    கண் இமைக்கும் நேரத்துக்குள் 4 பேரை அடுத்தடுத்து அந்த ரெயில்வே பாதுகாப்பு வீரர் சுட்டுக் கொன்றதால் மற்ற பயணிகள் உதவி கேட்டு அலறினார்கள். இதனால் அருகில் உள்ள பெட்டிகளில் இருந்த பயணிகளும் ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் ஓடும் ரெயில் முழுவதும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

    இதையடுத்து போலீஸ்காரர் சேத்தன் சிங் தப்பி செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டார். பல்கர் ரெயில் நிலையத்தை கடந்து தகிசர் ரெயில் நிலையம் அருகில் அந்த ரெயில் மெல்ல சென்று கொண்டிருந்தபோது சேத்தன் சிங் ரெயில் பெட்டிக்குள் இருந்த சங்கிலியை பிடித்து இழுத்தார்.

    ரெயில் நின்றதும் அவர் துப்பாக்கியுடன் ரெயிலில் இருந்து இறங்கி மீரா சாலையில் ஓட்டம் பிடித்தார். ஆனால் அதற்குள் மற்ற ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். சாமர்த்தியமாக அவரை பிடித்து கைது செய்தனர். அவர் வைத்து இருந்த துப்பாக்கி உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

    துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி போலீஸ்காரர் சேத்தன் சிங்கிடம் எந்த பதட்டமும் இல்லாமல் காணப்பட்டார். அவரை போலீசார் போரிவலி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் போலீஸ்காரர் சேத்தன் சிங் கடந்த சில தினங்களாக மனநல பாதிப்புடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

    மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் பல்கர் ரெயில் நிலையம் அருகே ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போதுதான் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் பீதியுடன் அதே ரெயிலில் மும்பை வந்து சேர்ந்தனர்.

    ரெயிலுக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கண்டிவலி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு வீரரே பயணிகளை சுட்டுக்கொன்று இருப்பது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை ரெயில்வே போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் காவலில் வைத்தனர்.
    • பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதலில் அந்த பெண் நெடுஞ்சாலையின் நடுவே கத்தியுடன் காரில் இருந்து இறங்கி கத்த ஆரம்பித்துள்ளார். பின்னர், அந்த பெண் மீண்டும் காரில் ஏறி சிறிது தூரம் சுங்கச்சாவடி அருகே நிர்வாணமாகி துப்பாக்கியுடன் மீண்டும் காரில் இருந்து இறங்கி அவ்வழியாக சென்ற கார்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தகவல் அறிந்த கலிப்போர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, பெண் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை போலீஸ் காவலில் வைத்தனர்.

    மேலும், அந்த பெண் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கிருந்து வெளிவந்தவுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஒரு கட்டிடத்தை நோக்கி மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் இருவர் உயிரிழப்பு
    • பிரபலமான ஓட்டல்கள், மால்கள் அந்த பகுதியில் இருந்ததால் பரபரப்பு

    நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துப்பாக்கிச்சூடு முக்கியமான ரெயில்நிலையம் அருகே கட்டுமான வேலை நடந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பிரபலான ஓட்டல்கள், மால்கள் உள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இன்று தொடங்கும். நாங்கள் பிஃபா உடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை'' என்றார்.

    • அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் பலியாகினர்.
    • துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர் தலைமறைவாக உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அட்லாண்டாவின் தெற்கே ஒரு சிறிய சமூகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் என ஜார்ஜியாவில் உள்ள மாவட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஹென்றி கவுண்டி அதிகாரிகளின் அறிக்கையின்படி, அட்லாண்டாவிற்கு தெற்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ப்டனில் உள்ள ஒரு துணைப்பிரிவில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

    துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்துவிட்டார்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என மாவட்ட அரசாங்க செய்தித் தொடர்பாளர் மெலிசா ராபின்சன் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    • இரு குழந்தைகள் உள்பட பலர் மீது துப்பாக்கிச்சூடு
    • முதற்கட்ட விசாரணையில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

    அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாநிலத்தின் பெரிய நகரம் பிலடெல்பியா. அங்கு நேற்று மாலை நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என கூறியுள்ள பிலடெல்பியா காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அடையாளங்களோ அல்லது வேறு கூடுதல் விவரங்களோ எதுவும் வெளியிடவில்லை.

    உள்ளூர் நேரப்படி, நேற்றிரவு இரவு 08:30 மணியளவில் பிலடெல்பியாவின் கிங்ஸெஸிங் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாரிங்டன் அவென்யூவில் உள்ள 5700-வது பிளாக்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    குறைந்தது 8 பேர் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் நிலை குறித்தும் எந்த தகவலும் இல்லை. பாதிக்கப்பட்ட 6 பேர் பென் பிரெஸ்பிடேரியன் மருத்துவ மையத்திற்கும், 2 பேர் பிலடெல்பியாவின் குழந்தைகள் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பலியான 4 பேரின் உடல்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டதாக மற்றுமொரு செய்தி தெரிவிக்கிறது.

    இச்சம்பவம் குறித்து காவல்துறை செய்தித்தொடர்பாளர் மிகெல் டோரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் ஃப்ரேஸியர் (South Frazier) தெருவில் உள்ள 1600-வது பிளாக்கிற்குப் பின்னால் உள்ள சந்துப் பாதையில், அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய ஒரு நபரை காவலில் எடுத்து அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் கூடுதல் வெடிமருந்துகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர் என தெரிவித்தார்.

    உள்ளூர் செய்திகளின்படி, சுடப்பட்டவர்களில் குறைந்தது 2 சிறுவர்களும் அடங்குவர்.

    துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பகம் (Gun Violence Archive) அளிக்கும் தகவல்கள்படி, 4 நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் மட்டுமே இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் குறைந்தது 339 முறை நடந்திருக்கிறது.

    இதுகுறித்து டுவிட்டரில் பிலடெல்பியா மேயர் ஜிம் கென்னி, "தென்மேற்கு பிலடெல்பியாவில் நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச் சூடு குறித்த செய்தி திகிலூட்டுகிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயம்அடைந்தவர்களின் குடும்பத்தினருடன் என் இதயம் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறேன். இந்த அபாயகரமான வன்முறை நிறுத்தப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

    இதற்கிடையில், கைது நடவடிக்கையின்போது தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். சமீபகாலமாக அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்கர்களிடையே பெரும் கவலையை தோற்றுவித்திருக்கிறது.

    • காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
    • தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய கோரிக்கை.

    உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். இவர், தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில், இரண்டு தோட்டாக்கள் கார் மீது பாய்ந்தது. முதல் தோட்டா காரின் இருக்கை மீது பாய்ந்தது. மற்றொரு தோட்டா கதவு வழியாக சென்றபோது ஆசாத்தின் இடுப்பை உரசியது. பின்னர் மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.

    சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி விபின் தடா கூறுகையில், "சந்திர சேகர் ஆசாத்தின் கான்வாய் மீது காரில் வந்த ஆயுதம் ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு தோட்டா அவரைத் தாண்டிச் சென்றது. அவர் நலமாக உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்" என்றார்.

    காயமடைந்த ஆசாத் மற்றும் அவரது சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களை பீம் ஆர்மி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

    மேலும், பீம் ஆர்மி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,"சஹாரன்பூரில் உள்ள தியோபந்தில் பீம் ஆர்மி தலைவரும் தேசியத் தலைவருமான பாய் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியத் தலைவர் பாய் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தது.

    • மாகாண துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

    வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திருமணம் தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் மலகாண்ட் மாவட்டத்தின் பட்கேலா தாலுகாவில் நிகழ்ந்துள்ளது. அவர்களது வீட்டிற்குள் நுழைந்த உறவினர்கள் சிலர் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

    திருமண தகராறே இந்த கொடூர கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும், மாகாண துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக பத்கேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், கொலையாளிகளை கைது செய்ய மாவட்டத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களும் சீல் வைக்கப்பட்டன.

    குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு காபந்து முதல்வர் முகமது ஆசம் கான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவர், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும்" என்று கூறினார்.

    ×