search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவரை தேடும் பணி தீவிரம்
    X

    துப்பாக்கி சூடு நடத்திய நபர்

    துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு: தாக்குதல் நடத்தியவரை தேடும் பணி தீவிரம்

    • துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    லூயிஸ்டன்:

    அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார்.

    அந்நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நுழைந்து அந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அவர் அங்குள்ள மதுபான விடுதி, ஓட்டல், பவுலிங் விளையாட்டு மையம், வணிக வளாகத்தின் பொருட்கள் வினியோக மையம் ஆகியவற்றுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார்.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூடு காரணமாக லூயிஸ்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

    பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்டனர். அவர்களை போலீசார் ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். அதில் அந்த நபர் துப்பாக்கியால் சுட தயாராகுவது இடம் பெற்று இருந்தது.

    அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்படியும் லூயிஸ்டன் நகரில் கடைகளை மூடவும் போலீசார் அறிவுறுத்தினர். தாக்குதல் நடத்தியவரை பிடிக்க லூயிஸ்டன் நகர் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

    அந்த நபர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே போலீசுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் அருகில் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகள் நடந்தால் போலீசுக்கு தகவல் கொடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர்.

    இது தொடர்பாக மைனே மாகாண கவர்னர் ஜேனட் மில்ஸ் கூறும்போது, லூயிஸ்டனில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மாகாணம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதலை பின்பற்றுமாறு அப்பகுதியில் உள்ள மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் இச்சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ராபர்ட் கார்டு என்றும், மைனேவில் உள்ள அமெரிக்க ராணுவ ரிசர்வ் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவித்தனர்.

    Next Story
    ×