search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை நீதிபதி"

    • புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
    • புதிய தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியான என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

    தொடர்ந்து, புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.

    இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நாளை பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

    • டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்.
    • பொருளாதாரத்தை அழிக்கக் கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டும்.

    தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிப்பதை முறைப்படுத்த கோரி அஸ்வினி குமார் உபாத்யாயா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் இலவசங்களுக்கு ஆதரவாக உள்ளன. அதனால் தான் இதில் தலையிடுகிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இன்றைய விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது:-

    தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம். அல்லது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கலாம்.

    பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். இலவசங்கள் தொடர்பாக ஒரு முடிவு எட்டுவதற்கு முன் ஒரு ஆழமான விவாதம் தேவை.

    நாங்கள் குழு அமைப்பதற்கு ஏற்கனவே மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் இலவசங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கலாம்.

    இவ்வாறு தலைமை நீதிபதி தனது யோசனையை தெரிவித்துள்ளார்.

    • இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என தலைமை நீதிபதி கருத்து
    • இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.

    புதுடெல்லி:

    தேர்தல் காலங்களில் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுப்பதற்கு எதிராகவும், அதனை கட்டுப்படுத்தவும் வேண்டி அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடந்தபோது, இந்த வழக்கை அவர் தாக்கல் செய்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது பொதுமக்களுக்கு பல்வேறு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிக்கின்றன. இது ஓட்டு போடுவதற்காக மக்களுக்கு தரப்படும் லஞ்சமாகவே பார்க்க வேண்டும். இது நம் ஜனநாயக தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதாக உள்ளது.

    மேலும், இந்த இலவசங்கள் பொது நிதியில் இருந்தே தரப்படுகின்றன. இதனால், மக்களின் தலையில் அதிக சுமை ஏறுகிறது. இவ்வாறு இலவச அறிவிப்புகளை வெளியிடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, கட்சி சின்னத்தை முடக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு தேவையான சட்டத்தை உருவாக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு,சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹீமா கோஹ்லி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னர் நடந்த விசாரணைகளின்போது, இது மிகப்பெரும் பிரச்சினை என அமர்வு பலமுறை கூறியிருந்தது. கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தேர்தல் கமிஷன் கூறியது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என அமர்வு கேட்டிருந்தது.

    கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இலவச அறிவிப்புகள், இலவச பொருட்கள் வினியோகம் ஆகியவை, நாட்டின் எதிர்கால பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    மேலும் தங்களுடைய தேர்வை சுயமாக முடிவு செய்யும் வாக்காளர்களின் உரிமையும் பறிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறுகையில், பல மாநிலங்கள் கடும் கடனில் உள்ள நிலையிலும், ஆட்சியை பிடிக்க அல்லது தக்கவைக்க இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்காகும் செலவு மக்கள் மீதே சுமத்தப்படுகிறது என்று இங்கு தெரிவிக்கப்பட்டது.

    கட்சிகள் இலவசப் பொருட்களை அறிவிப்பது, மிகப் பெரிய பொருளாதார பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரச்னை குறித்து, எந்த அரசியல் கட்சியும் பாராளுமன்றத்தில் பேசாது. அனைவருக்கும் இலவசங்கள் தேவை. இந்த விவகாரத்தில் ஒரு சரியான முடிவு எடுக்க வேண்டியது அவசியமாகும். இலவசங்களை எப்படி தவிர்ப்பது, தடுப்பது என்பது குறித்து, மத்திய அரசு, நிதி ஆயோக், நிதி கமிஷன் ஆகியவை ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும். அவை பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

    இதில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் ஒதுங்கி கொள்ளக்கூடாது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில், மத்திய அரசு, நிதி ஆயோக், தேர்தல் கமிஷன், நிதி கமிஷன், ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் தங்களுடைய கருத்தை, ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை உருவாக்க, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்க உத்தரவிடப்படும் என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா இருதரப்பு வாதங்களை கேட்டார். பின்னர் அவர் கூறுகையில், இலவசங்களுக்கான நிதியை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை. தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையா? இலவச திட்ட அறிவிப்புகள் தீவிரமான பிரச்சினை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இலவச அறிவிப்புகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

    பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவளிக்க மத்திய அரசும் சில திட்டங்களை வைத்துள்ளது. இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது.இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம்.

    ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்த மாநிலத்தின் பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக்கூடாது. இலவச தேர்தல் வாக்குறுதிகளால் மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றார்.

    • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.
    • உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ல் நிறைவடைகிறது. எனவே, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் ஆகஸ்ட் 27ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித்துக்கு, தற்போதைய தலைமை நீதிபதி ரமணா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதி யு.யு.லலித், முத்தலாக் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றவர். அயோத்தியில் சர்ச்சைகள் நிறைந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

    • தலைமை நீதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை தலைமை நீதிபதி வழிபட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அத்திவரதர் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்னை தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திடீர் வருகை புரிந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி மற்றும் அவரது மனைவி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முனிரத்தினம் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் அருள்மிகு வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை  தலைமை நீதிபதி வணங்கி வழிபட்டார். அவருக்கு அர்ச்சகர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் அவர் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் ஸ்தானிகர் சியாமா சாஸ்திரிகள் பிரசாதங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வங்காளதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே. சின்ஹாவுக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
    வங்காளதேச நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா. இவர் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவி வகித்தார். சின்ஹா வங்காளதேச நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முதல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

    வங்காளதேச அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், வலுக்கட்டாயமாக தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் மீது பணமோசடி மற்றும் நம்பிக்கை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பண மோசடியில் ஆதாயம் பெற்ற முதல் நபராக சின்ஹா உள்ளதாக டாக்கா சிறப்பு நீதிமன்றம் 11 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
    சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகாய், அவசர வழக்குகள் விசாரிக்கும் முன் வழிமுறைகள், தகுதிகள் ஆகியவற்றை வகுக்க வேண்டும் என கூறியுள்ளார். #CJIRanjanGogoi
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோட்டின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

    நீதிபதி ரஞ்சன் கோகாயிடம், வழக்கறிஞர்கள் அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்கக் கோரி முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், இப்போது ஏதும் முறையிடாதீர்கள். நாம் குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்துவிட்டு, எவ்வாறு, எந்த வகையில் முறையிடலாம் என்பதை முடிவு செய்யலாம்.

    யாராவது ஒருவர் நாளைத் தூக்கிலிடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது நாளை யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்றால் விசாரிக்கலாம். ஆதலால், அவசர வழக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவகையில் அவசர வழக்காக எதையும் முறையிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

    மேலும், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும் ரஞ்சன் கோகாய் மரியாதை செலுத்தினார். தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
    சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். #RanjanGogoi #CJI
    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பதை அறிவித்து பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது. 

    அதன்படி தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில், தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்திருந்தார்.

    இந்நிலையில், ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 3- தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொள்ள உள்ளார்.

    வடகிழக்கு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்படும் முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.
    சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடந்த விழாவில் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்றுக்கொண்டார். #Tahilramani #HighCourt
    சென்னை:

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த விஜய் கம்லேஷ் தஹில் ரமணி சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தஹில் ரமணி பதவியேற்பு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தஹில் ரமணிக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். 
    தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
    சென்னை:

    சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வை வருகிற 9-ந்தேதி நடத்துகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், பெண் வக்கீல்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தியது. இந்த பயிற்சி வகுப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

    இந்த பயிற்சி நிறைவு விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நான் 16 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி பதவி வகிக்கிறேன். நான் சிறந்த தீர்ப்பு வழங்கினேன் என்றால் அது என்னுடைய தீர்ப்பு என்று மட்டும் சொல்லமுடியாது. அந்த வழக்கில் ஆஜரான வக்கீல்களின் திறமையான வாதமும் காரணம் என்று கூறவேண்டும். வக்கீல்கள் பல தரப்பட்ட தீர்ப்புகளின் விவரங்களையும், சட்டங்களை எடுத்துரைத்து சிறப்பாக வாதம் செய்தால்தான் சிறப்பான தீர்ப்பை ஒரு நீதிபதியால் பிறப்பிக்க முடியும்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளின் மூலமாக பேசவேண்டும். தீர்ப்புகள் தான் நீதிபதிகளை எடைபோடும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை பார்க்கும்போது, நீதி வழங்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவேண்டும். நீதிபதியாக அமர்ந்துவிட்டாலே யாருக்கும் ஆதரவாகவோ, சாதகமாகவோ செயல்படக்கூடாது. ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்கவேண்டும். விமர்சனங்களை தாங்கக்கூடிய பாறைகளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தின் நிர்வாக அறங்காவலர் வெற்றி துரைசாமி நினைவு பரிசு வழங்கினார்.

    இயக்குனர் எம்.கார்த்திகேயன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
    ×